அவரை முதல் முதலில் நான் சந்தித்த இடம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி
கல்லூரி. அங்கு நான் கற்றவேளையில் அதன் பெயர்
கனகரத்தினம் மத்திய கல்லூரி என மாற்றம் கண்டது.
நீர்கொழும்பிலிருந்து ஆறாம்தர புலமைப்பரிசில் பெற்று அக்கல்லூரி ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து படித்துக்கொண்டிருந்தபோது, ஒருநாள் எங்கள் விடுதியின் சார்பில் அவரை அழைத்து, கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மேடையேற்றி பேசவைத்தார்கள்.
ஒரு துவிச்சக்கர வண்டியில்
வந்து பேசினார். வெள்ளை நிறத்தில் வேட்டியும்
நேஷனலும் அணிந்திருந்தார். எனக்கு யாழ்ப்பாணம் அப்போது புதியது. அங்குதான் முதல் முதலில்
அவரையும் பனைமரத்தையும் பார்த்தேன்.
எனக்குத் தெரியாத சங்கானை
சாதிக்கலவரம் பற்றியும் ஆப்ரகாம் லிங்கன் பற்றியும் அவர் அன்று பேசியது மாத்திரமே இன்றும்
நினைவில் தங்கியிருக்கிறது.
அந்த வருடம் 1963.
அவர் அன்றுசொன்ன சாதிவேற்றுமை
சமூக ஏற்றத்தாழ்வு என்பன பற்றிய புரிதல் அக்காலத்திலேயே அந்தக்கல்லூரி அமைந்திருந்த
அரியாலைப்பிரதேசத்தில் நேரடியாக எனக்கு கிட்டியது. எந்தவொரு சொந்த பந்தங்களும் இல்லாதிருந்த அந்தப்பிரதேச வாழ்க்கை
எனக்கு, எனது பூர்வீக ஊர்மீதும் வீட்டின் மீதும் ஏக்கத்தையே
வளர்த்தது. என்னுடன் படித்த எனது மாமா மகன் முருகானந்தனுக்கும் தனது குடும்பத்தை விட்டு
வந்த ஏக்கமிருந்தது. 1965 இல் அங்கிருந்து விடைபெற்று ஒரு நாள் இரவு புறப்படும்
தபால் ரயிலில் கொழும்பு வந்து எங்கள் ஊர் திரும்பிவிட்டோம்.
அதன்பின்னர் 1975 ஆம் ஆண்டுவரையில் யாழ்ப்பாணத்தையே நான் திரும்பிப்பார்க்கவில்லை. சுமார்
பத்தாண்டுகளின் பின்னர் என்னை யாழ்ப்பாணம் நோக்கி திரும்பிப் பார்க்கவைத்தவர்தான் அவர்.
ஒரு மாணவனாக அங்கு சென்று திரும்பிய என்னை ஒரு படைப்பிலக்கியவாதியாக
மாற்றி மீண்டும் அங்கு அழைத்து எனது முதல் கதைத்தொகுதிக்கு யாழ்.
வீரசிங்கம் மண்டபத்தில் அறிமுகநிகழ்வு நடத்தி பாராட்டியவர்தான் அவர்.
எனது வாழ்வின் திருப்பங்களுக்கு
பலர் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர்தான் அவர்.
1971 ஆம் ஆண்டு வேலை தேடும் படலத்திலிருந்தவேளையில் அவர் எங்கள் ஊருக்கு வந்திருந்தார்.
எழுத்தாளர் நீர்கொழும்பூர் முத்துலிங்கம் வீட்டில் அவரை மீண்டும் சந்தித்தேன். அப்பொழுதும்
அவர் தூய வெள்ளைவேட்டி, வெள்ளை நெஷனல்தான் அணிந்திருந்தார். அவர் பெரும்பாலும் விரும்பி
அணிந்த ஆடைகள்தான் அவை. எவருக்கும் அவர் அந்த ஆடையுடன் தோன்றியதுதான் நினைவிலிருக்கும்.
1971 ஆம் ஆண்டு மீண்டும் அவரை நான் சந்தித்தபோது அவர்
மல்லிகை மாத இதழின் ஆசிரியராகியிருந்தார். அதனை அவர் 1966 இல் ஆரம்பித்தவர். நான் மல்லிகையின் வாசகனாக மாறியிருந்தேன். நீர்கொழும்பு கடற்கரையில்
அவருடன் நீண்டநேரம் இலக்கியம் பேசியிருக்கின்றோம். அவ்வாறு பேசியபொழுதொன்றில்தான் மல்லிகை
நீர்கொழும்பு பிரதேச மலர் பற்றிய யோசனை வந்தது.
1972 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அந்த மலர் வெளிவந்தது.
அந்த இல்லம் எங்களது
பூர்வீக வசிப்பிடம். அவரது பாதம் அங்கு பதிவதற்கு முன்னரும் பின்னரும் பல கலை, இலக்கிய
ஆளுமைகளின் பாதங்கள் பதிந்திருக்கின்றன.
எனது முதலாவது சிறுகதையை
அவரது மல்லிகையில் 1972 ஜூலை மாத இதழில் வெளியிட்டு, என்னை எழுத்தாளனாக வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியவர்
அவர்.
அந்தகதைகக்கு நான் கனவு
எனத்தலைப்பிட்டிருந்தேன். அவர் கனவுகள் ஆயிரம் என மாற்றினார். அவர் எனக்குள்
பல கனவுகளை விதைத்தவர். அவற்றில் ஒன்று 2000 ஆம் ஆண்டு
நாம் வெளியிட்ட மல்லிகை அவுஸ்திரேலிய சிறப்பு மலர்.
மற்றது 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நான்கு நாட்கள் நாம் நடத்திய சர்வதேச தமிழ்
எழுத்தாளர் மாநாடு.
இவ்வாறு அவர் எனக்குள்
பல கனவுகளை விதைத்திருக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு
மாதமும் மல்லிகை அச்சாகி வெளியானதும், அவர்
கொழும்புக்கு புறப்பட்டு வந்துவிடுவார். பெரும்பாலும் இரவு தபால் ரயிலில்தான் வந்து
திரும்புவார்.
வருவதற்கு முன்னர் எனக்கு
ஒரு தபால் அட்டையில் கடிதம் எழுதி அனுப்பிவிடுவார். 1972 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு ஜனவரி வரையில் நான் அவரை மாதந்தோறும் சந்திப்பேன்.
இலக்கிய கூட்டங்களுக்கு பயணிப்போம். 1987 பெப்ரவரியில் நான் அவுஸ்திரேலியாவுக்கு புறப்படும் முன்னர் ஒருநாள் அவரையும் மேலும் சில இலக்கிய நண்பர்களையும்
வீட்டுக்கு அழைத்து மதியபோசன விருந்து வழங்கினேன்.
எனது பயணம் பற்றி தயங்கித்தயங்கி
அவரிடம் சொன்னபோது, அவருக்கு அதிர்ச்சி வந்திருக்கவேண்டும்.
அன்று இரவு அவர் நித்திரையின்றி தவித்துப்போனதாக
பின்னர் எனக்கு எழுதிய கடிதத்தில் சொல்லியிருந்தார்.
அவரது மல்லிகைப்பந்தல்
வெளியீடாக வந்த எனது பாட்டி சொன்ன கதைகள்
நூலின் பதிப்புரையிலும் தனக்கு நேர்ந்த மனவலியைப்பற்றி பதிவுசெய்திருந்தார்.
இலங்கையில் முதல் முதலில்
தமிழுக்கு சாகித்திய விருது கிடைத்ததே அவர் எழுதிய தண்ணீரும் கண்ணீரும் கதைத்
தொகுதிக்குத்தான். அவர் அந்த விருதை வாங்கிக்கொண்டு
யாழ்ப்பாணத்திற்கு ரயிலில் திரும்பியபோது அன்றைய யாழ்நகர மேயர் துரைராஜாவின் தலைமையில்
பெரிய வரவேற்பும் நடந்திருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் நடந்த
தேர்தல் ஒன்றிலும் அவர் போட்டியிட்டவர். இலங்கை எங்கும் நடந்திருக்கும் அவர் சார்ந்த அரசியல் கட்சியின் மாநாடுகளிலும் இலக்கிய
நிகழ்வுகளிலும் உற்சாகம் குன்றாமல் பங்கேற்றவர். சோவியத்தின் அழைப்பிலும் அங்கு சென்று
வந்தார். ஐரோப்பாவில் நடந்த இலக்கிய சந்திப்பிலும் கலந்துகொண்டார்.
தமிழகத்திற்கும் பலதடவைகள்
இலக்கிய சுற்றுலா சென்று திரும்பினார். இலங்கையில் சாகித்திய ரத்னா, மற்றும்
தேசத்தின் கண் முதலான உயரிய விருதுகளும் பெற்றார். கனடா இலக்கியத் தோட்டத்தின்
இயல்விருதும் பெற்றார். அவரது சுயசரிதை
தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்திருக்கின்றன. இலங்கை நாடாளுமன்றிலும் அவர் பற்றிப்பேசப்பட்டு
Hansard இல் பதிவாகியிருக்கிறது.
நீண்ட நெடுங்காலமாக நடத்திய தனது மல்லிகையில் பல இளம் தலைமுறை படைப்பாளிகளை அறிமுகப்படுத்தி
களம் தந்து வளர்த்துவிட்டிருக்கிறார்.
மல்லிகையை மாதாந்தம்
வெளியிட்டவாறே மல்லிகைப்பந்தல் என்ற பெயரில் பதிப்பகம் அமைத்து பல நூல்களின்
வரவுக்கும் வித்திட்டவர்.
1987 இல் அவருக்கு மணிவிழா வந்தபோது நான் மெல்பனில் 3 EA வானொலியில்
அவரது வாழ்வும் பணியும் குறித்து உரை நிகழ்த்தியிருக்கின்றேன். அதுவே வெளிநாட்டில்
நான் நிகழ்த்திய முதலாவது வானொலி உரை. இவ்வாறு
எனது பல முதல் விடயங்களுக்கு அவர் காரணமாக
இருந்திருக்கிறார்.
அவருடன் பலதடவை இலக்கிய
சர்ச்சையிலும் ஈடுபட்டிருக்கின்றேன். அவர்
மேடையில் பேசும்போது நெற்றி நரம்புகள் புடைக்கும். தர்மாவேசத்துடன் பேசுவார்.
அவருக்கென தனித்துவமான
திமிரும் இருந்தது. யாழ்ப்பாணத்தில் அவரது இல்லம், யாழ். ரயில் நிலையத்திற்கு அருகில்
அமைந்திருக்கிறது. தினமும் காலை எழுந்ததும் தனது துவிச்சக்கர வண்டியில் புறப்பட்டு
அவர் வந்து சேரும் முதல் இடம் யாழ். பஸ்நிலையத்தில் அமைந்துள்ள பிரபலமான பூபாலசிங்கம்
புத்தகசாலைதான். அதன் நிறுவனர் ( அமரர்
) பூபாலசிங்கமும் அவரது நெருங்கிய தோழர்தான். பின்னாளில் அதன் அதிபராக திகழும் பூபாலசிங்கம்
ஶ்ரீதரசிங்கும் அவரது உற்ற நண்பர்தான். அவர்களுக்கிடையிலான பந்தம் சாசுவதமானது. நீடித்து
நிலைத்திருப்பது.
ஒருநாள் காலை அவர் வழக்கம்போன்று
பூபாலசிங்கம் புத்தகசாலை வாசலில்
நின்று பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார்.
அந்தத் தெருவுக்கு மறுபக்கம் ஒரு காரில் அமர்ந்திருந்த ஒரு கனவான், கார்கண்ணாடியை
இறக்கியவாறு, அவரை நோக்கி, “ உஷ்… உஷ்…. “ என்று சொல்லி சைகையினால் செல்லப்பிராணியை அழைப்பது போன்று தனது காருக்கு அருகில் வருமாறு அழைத்துள்ளார்.
இதனை அவதானித்த அவருக்கு
கோபம் வந்திருக்கவேண்டும். உடனே, நின்ற இடத்திலிருந்தே, “
உஷ்… உஷ்… “ என திருப்பிச்சொல்லி, தான் நிற்கும்
இடத்திற்கு அந்தக்கனவானை வரவழைத்தார்.
அதனை எதிர்பார்க்காத
அந்தக்கனவானும் காரைவிட்டு இறங்கிவந்து, தான் அழைத்த
காரணத்தை சொன்னார். “ எனது மகள் பல்கலைக்கழகத்தில்
படிக்கிறாள். அவள் தனது பட்டப்படிப்பிற்காக ஆய்வு செய்வதற்கு மல்லிகை இதழ்கள் தேவைப்படுகின்றன. “ என்றார்.
“ ராஜா தியேட்டருக்கு அருகிலிருக்கும் ஒழுங்கையில்
மல்லிகை காரியாலயம் இருக்கிறது. உங்கள் மகளை அங்கு அழைத்துவந்து தேவையானதை தெரிவுசெய்யலாம்.
இவ்வாறு தெருவில் உமது காரிலிருந்துகொண்டு,
“ நாயை அழைப்பது போன்று உஷ்….உஷ்… என கத்தவேண்டாம். “ எனச்சொல்லிவிட்டு, மீண்டும் படித்துக்கொண்டிருந்த பத்திரிகையில் அவர்
மூழ்கினார்.
யாழ்ப்பாணம் மத்திய
கல்லூரிக்கு அருகில் அவர் தனது துவிச்சக்கர வண்டியில் அம்மாதத்திற்குரிய மல்லிகை இதழ்களுடன்
ஒருநாள் வந்துகொண்டிருந்தார். அந்த இதழின் முகப்பில் சிங்கள இலக்கிய மேதை மார்டின்
விக்கிரமசிங்காவின் படம் அச்சகியிருந்ததுடன், அவ்விதழில் அந்த மேதைபற்றிய கட்டுரையும்
பிரசுரமாகியிருந்தது.
தனித்தமிழ் ஈழ கனவுடன்
காசிஆனந்தனுக்கு தங்கள் கையைக்கீறி இரத்தத் திலகம் வைக்கும் கலாசாரம் மேலோங்கியிருந்த
காலப்பகுதி.
ஒரு தமிழ்க்கொழுந்து
அவர் முன்னால் தோன்றி, துவிச்சக்கரவண்யை
நிறுத்தி, “ நீங்கள்தானே
மல்லிகை ஆசிரியர்.? எனக்கு ஒரு மல்லிகை தாருங்கள். “ என்றது.
அவர் அதன் விலையைச்சொன்னார்.
அந்த தமிழ்க்கொழுந்து
அதற்குரிய பணத்தை கொடுத்து மல்லிகையை வாங்கியது. அதிலிருந்த அட்டைப்படத்தை காண்பித்து, “ இது யார்…? “ எனக்கேட்டது.
“ ஒரு பிரபல
எழுத்தாளர். பெயர் மார்டின் விக்கிரமசிங்கா.
“ என்றார் அவர்.
உடனே, அந்த தமிழ்த்தீவிரக் கொழுந்து,
“ இந்த ஆள் சிங்களவன்தானே. நீர் தமிழன்தானே…
எதற்கு இந்த ஆட்களுடைய படத்தை போடுகிறீர். நீர் ஒரு தமிழ்த்துரோகி “ எனச்சொல்லியவாறு, அந்த மல்லிகை இதழை கிழித்து துவம்சம் செய்து அவரது
முகத்தில் விட்டெறிந்துவிட்டுச் சென்றது. கிழிபட்டு
கீழே விழுந்த மல்லிகை இதழை பொறுக்கி எடுத்துக்கொண்டு தனது பயணத்தை அவர் தொடர்ந்தார்.
அதன்பின்னரும் தெருவெங்கும்
சென்று மல்லிகையை விநியோகித்தார்.
காலம் மாறியது. அய்ரோப்பாவில் புகலிடம் பெற்றுள்ள ஈழத்தமிழ் கலை
இலக்கியவாதிகள் தங்களது வருடாந்த இலக்கியச்சந்திப்பிற்காக அவரை அழைத்து
பாரிஸ் மாநகரில் பாராட்டியது.
அவர் தனது ஏற்புரையை
நீண்டநேரம் நிகழ்த்தியபின்னர் சபையிலிருந்த அனைவரும் எழுந்து நின்று சில நிமிடங்கள்
தொடர்ச்சியாக கரகோஷம் எழுப்பி, அவரது உழைப்புக்கு மரியாதை செலுத்தினர்.
அச்சந்தர்ப்பத்தில்
நிகழ்ச்சி முடிந்ததும் அவர் முன்னால் தோன்றிய ஒருவர், “ அய்யா வணக்கம். என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா? நான்தான் பல வருடங்களுக்கு முன்னர் உங்களை தெருவில்
மறித்து நிறுத்தி, உங்கள் மல்லிகை இதழை கிழித்துப்போட்டவன்.
தமிழ்த்தீவிரம் பேசிய நான் இங்கு ஓடிவந்துவிட்டேன். ஆனால், நீங்கள் இன்னமும் எங்கும்
ஓடிச்சென்றுவிடாமல் அங்கிருந்து தமிழையும் இலக்கியத்தையும் வளர்க்கிறீர்கள். என்னை
மன்னியுங்கள் அய்யா “ என்றார்.
அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்ட
அவர், அந்த முன்னாள் தமிழ்க்கொழுந்தின் தோளைத்
தடவி ,
“ எப்படி சுகமாக இருக்கிறீரா? “ எனக்கேட்டார்.
யாழ்ப்பாணத்தில் புத்தகங்கள்
பத்திரிகைகள் விற்கும் ஒரு கடைக்கு மாதாந்தம் பத்து மல்லிகை பிரதிகளை விற்பனைக்காக
அவர் கொடுப்பார். அந்தக்கடையில் தமிழக இதழ்கள் கல்கி, குமுதம், ஆனந்தவிகடன், கலைமகள்,
கல்கண்டு என்பன தொங்கும். ஆனால் அவற்றுக்கு மத்தியில் அவரது மல்லிகையை காணமுடியாது.
அடுத்த மாதம் புதிய
மல்லிகையுடன் அவர் அங்கு செல்வார், மேசைக்கு
அடியிலிருந்து முதல் மாத மல்லிகை இதழ் பத்துப்பிரதிகளையும் அந்தக்கடை முதலாளி பத்திரப்படுத்தி எடுத்துக்கொடுப்பார். எதுவும் விற்பனையாகியிராது. தொடர்ந்து அவர் அவ்வாறு சிலமாதங்கள்
ஏமாற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.
ஒரு நாள் அவருக்கு தர்மாவேசம்
வந்துவிட்டது, “ அய்யா, நாளை நீங்கள்
இறந்துபோனால், தமிழ்நாட்டிலிருந்து கல்கி, குமுதம், ஆனந்தவிகடன், கலைமகள், கல்கண்டு
ஆசிரியர்கள் வரப்போவதில்லை. யாழ்ப்பாணத்திலிருக்கும் நான்தான் வருவேன். “ எனச்சொல்லிவிட்டு அந்தக்கடைக்காரர் பத்திரப்படுத்தி
திருப்பிக்கொடுத்த மல்லிகை பிரதிகளுடன் திரும்பினார்.
அதன்பின்னர் அவர் அந்தக்கடைக்கு
மல்லிகையை விநியோகிக்கவில்லை.
இன்று அந்தக்கடையும் அதன் முதலாளியும் அங்கில்லை. அவரும் அங்கில்லை. விமர்சனத்துக்குரிய அரசியல் அழுத்தங்கள்
அவருக்கு வந்தன. தமிழ்க்கொழுந்துகள் துப்பாக்கித் தீக்கொழுந்துகளாக மாறியிருந்த சூழலில்
அவர் இலங்கைத் தலைநகரத்தில் புகலிடம் பெற்றார்.
மல்லிகையை தொடர்ந்தும் வெளியிட்டார்.
நான்கு தசாப்த காலத்திற்கும்
மேல் மல்லிகை வந்தது. ஒரு கட்டத்தில் அவரால் அதனை தொடர்ந்து நடத்தமுடியாமல்போனது. கொழும்பில் புறநகரத்தில் அவர் ஒதுங்கியிருந்து நனவிடை
தோய்ந்தார். அவருக்கு பிறந்த தினம் வரும் வேளையில் ( ஜூன் 27 ஆம் திகதி) கலை
இலக்கிய நண்பர்கள் அவர் வதிவிடம் சென்று வாழ்த்தி எளிமையாக கொண்டாடுவார்கள்..
நானும் இலங்கை செல்லும்
சந்தர்ப்பங்களில் அவரைக் காணச்செல்வேன். அவர் படிப்படியாக நினைவுகளை மறந்துகொண்டிருப்பது அறிந்து இம்முறை
இலங்கைப்பயணத்திலும் அவரைப்பார்ப்பதற்காக சென்றிருந்தேன். அதற்கு முன்னர் எனக்கு கிடைத்த
செய்தி அதிர்ச்சியானது. வலிநிரம்பியது.
அவருக்கு ஒரே ஒரு ஏகபுதல்வன்
திலீபன். இவரையும் இவரது குழந்தைப்பருவத்திலிருந்து நன்கு அறிவேன். கொழும்பு
ஆமர்வீதியிலிருக்கும் திலீபனின் பிரபல்யமான ஸ்ரூடியோவுக்கு முதலில் சென்று, “ அப்பாவின் சுகம் எப்படி? “ எனக்கேட்டபோதுதான் அந்த அதிர்ச்சியான செய்தியையும்
அறிந்தேன்.
திலீபனின் செல்வமகளின்
கணவர் கடந்த ஏப்ரில் மாதம் 21
ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொச்சிக்கடை
அந்தோனியார் கோயிலில் நடந்த பேரனர்த்தத்தில்
கொல்லப்பட்டுவிட்டார்.
தனது மகன் திலீபனின்
மருமகனின் மறைவும் தெரியாமல் அவர் அமைதியாக
அந்த வதிவிடத்தில் இருக்கிறார். சில மாதங்களுக்கு
முன்னர் அவரது மனைவி புஸ்பராணியும் யாழ்ப்பாணத்தில் மறைந்துவிட்டார். அந்தச்செய்தியும் அவருக்குத் தெரிய
நியாயம் இல்லை.
அவரது பவளவிழாக்காலத்தில்
( 2001 இல் ) அவரது
வாழ்வையும் பணிகளையும் சித்திரித்து எனது நினைவுகளுடன் ஒரு நூலை வெளியிட்டேன். அதனை
அவரது மனைவி புஸ்பராணிக்கும் புதல்விகள் சுவர்ணலதா, பிரேமலதா, புதல்வன் திலீபனுக்கும்தான்
சமர்ப்பணம் செய்திருந்தேன்.
இன்று இந்தத் தகவல்களும் இந்தப்பத்தியின் தொடக்கத்தில் எழுதியிருந்த
கதைகளும் அவருக்கு நினைவில் இருக்குமா ? என்பது
தெரியாது!.
அவருக்கு இந்த ஆண்டு
ஜூன் மாதம் 27 ஆம் திகதி
93 வயது
பிறக்கிறது. நண்பர் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங்குடன்
அவரைப்பார்ப்பதற்காக அவருக்குப்பிடித்தமான
வாழைப்பழமும் வாங்கிச்சென்றேன்.
அவரது மருமகளும் உறவினர்களும்
எம்மைப்பார்த்துவிட்டு, “ உங்களை
அவருக்கு நினைவிருக்குமோ தெரியாது… எதற்கும் அவரை அழைக்கின்றோம் “ என்று உரத்து குரல் எழுப்பினர். சில நிமிடங்களுக்குப்பின்னர் அந்த வீட்டின் பக்கத்து
அறையிலிருந்து அவர் வெளிப்பட்டார்.
நான் எழுந்து அவர் அருகே சென்றேன். அவரது முகம் மலர்ந்து
பிரகாசமாகியது. விரைந்து வந்து எனது நெஞ்சில் ஓங்கி ஒரு அறை தந்து, “ எங்கட நீர்கொழும்பு முருகபூபதி “ என்று உரத்துச்சத்தமிட்டு என்னை ஆரத்தழுவிக்கொண்டார்.
இதில் கவனிக்கவேண்டியது.
நான் கடந்த 32 வருடங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியா கண்டத்தில்
வாழ்கின்றேன். முன்னர் அவரைப்பார்க்கச்செல்லும்போது “ எப்போது ஒஸ்ரேலியாவிலிருந்து வந்தீர்..? “ என்றுதான் அவர் கேட்பார். இம்முறை எங்கள் ஊரைத்தான்
அவர் சொன்னார். அவருக்கு நீர்கொழும்புதான் நினைவிலிருக்கிறது.
அதுபோன்று அவரது நீண்ட
கால நண்பர் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங் அவர் அருகில் வந்ததும் அடையாளம் கண்டு “எங்கட ஶ்ரீதர சிங் “ எனச்சொல்லி
அணைத்துக்கொண்டார்.
எம்மருகில் அமர்ந்து
சில நிமிடங்கள் எம்மையே பார்த்துக்கொண்டிருந்தார். வேறு எதுவும் பேசவில்லை. சற்று நேரத்தில்,
ஒரு குழந்தையைப்போன்று, எனது காதருகில், “ நித்திரை வருகிறது. தூங்கப்போகின்றேன் “ எனச்சொல்லியவாறு எழுந்து சென்றார்.
அவரது வாழ்வை மேற்சொன்ன
பல ஏராளமான செய்திகளுடன் எழுதிக்கொண்டே இருக்கலாம். அவை எழுதித்தீராப்பக்கங்கள். ஆனால், அவையெல்லாம் அவருக்கு நினைவிலிருக்குமா? வலி நிரம்பிய கனத்த மனதுடன் அவர் பற்றிய பசுமையான நினைவுகளை சுமந்தவாறு அந்த
வீட்டிலிருந்து புறப்பட்டோம்.
அவரது வாழ்வு தொடர்ந்தும்
பலரால் எழுதப்படும். அந்தப்பதிவுகளில் ஈழத்து கலை இலக்கிய வரலாறும் இழையோடியிருக்கும்.
தனக்குப்பின்னரும் மல்லிகை வரும் எனச்சொன்னவர் அவர்.
அவரது கனவை யார் நனவாக்குவார்கள்?
----0---
No comments:
Post a Comment