முகநூலில் முஸ்லீம்களை அவமதிக்கும் பதிவு – பங்களாதேசில் வன்முறை
19 மணிநேரம் தொடர்ந்து பயணித்து நியூயோர்க்கிலிருந்து சிட்னி சென்ற விமானம்
பிறிக்ஸிட் உடன்படிக்கை குறித்து மீண்டும் வாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தல்
மீண்டும் கனடாவின் பிரதமராகின்றார் ஜஸ்டின் ட்ரூடோ
39 சடலங்கள் லொறியொன்றில் மீட்பு- பிரித்தானியாவில் அதிர்ச்சி
பெல்ஜியத்திலிருந்து வந்த குளிரூட்டப்பட்ட கொள்கலன்- பிரிட்டனில் அதனை பொறுப்பேற்ற லொறி சாரதி- உள்ளே உடல்கள் தொடர்கின்றது மர்மம்
பிரிட்டனில் கொள்கலனிற்குள் சடலமாக மீட்கப்பட்டவர்கள் சீன பிரஜைகள்?
எங்கள் மகள் பிரித்தானியா செல்வார் எங்கள் வறுமை மாறும் என நினைத்தோம்- கொள்கலனிற்குள் சிக்கினார் என கருதப்படும் யுவதியின்தந்தை
என்னால் சுவாசிக்க முடியாமல் உள்ளது நான் மரணித்துக்கொண்டிருக்கின்றேன் -வியட்நாமிய பெண் குறுஞ்செய்தி-கொள்கலனிற்குள் மரணித்திருக்கலாம் என அச்சம்
முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கையில் ரஷ்ய – துருக்கி ஜனாதிபதிகள் கைச்சாத்து
முகநூலில் முஸ்லீம்களை அவமதிக்கும் பதிவு – பங்களாதேசில் வன்முறை
21/10/2019 முஸ்லீம்களை சீற்றப்படுத்தும் விதத்தில் வெளியான முகநூல் பதிவினால் ஏற்பட்ட கலவரத்தினால் பங்களாதேசில் நால்வர் பலியாகியுள்ளனர்.
முகமது நபியை விமர்சிக்கும் விதத்தில் வெளியான முகநூல் பதிவே கலவரத்தை தூண்டியுள்ளது.
இந்த பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பங்களாதேசின் போலாமாவட்டத்தில் உள்ள பொர்கானுடின் நகரில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கலவரத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதை தவிர எங்களிற்கு வேறு வழியிருக்கவில்லை என காவல்துறையை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த இந்து ஒருவரின் முகநூல் பதிவின் காரணமாகவே இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது.
தனது முகநூலிற்குள் ஊடுருவியவர்களே இந்த பதிவிற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட முகநூல் பதிவு குறித்த செய்தி பரவத்தொடங்கியதும் காவல்துறையினர் மதத்தலைவர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்துகொண்டிருந்தவேளை கலவரம் வெடித்துள்ளது.
சீற்றத்துடன் பொதுமக்கள் காவல்துறை அலுவலகத்தின் முன்னாள் குழுமி நீதி கோரியுள்ளனர்,அதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் சீற்றமடைந்து காவல்துறையினர் மீது கல்வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை காவல்துறையினர் வீசதொடங்கினர் இதன் பின்னர் அவர்கள் காவல்துறை அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்குதலை மேற்கொள்ள தொடங்கினர் அவர்கள் ஜன்னல்களை உடைத்துக்கொண்டு உள்ளே வரத்தொடங்கினர் இதன் பின்னரே துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டிருக்காவிட்டால் எங்கள் தலைகளை கற்களால் சிதைத்திருப்பார்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே வந்திருந்தால் நாங்கள் அனைவரும் கொல்லப்பட்டிருப்போம் என காவல்துறை உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிலர் தன்னை மிரட்டியதாகவும் தான் கப்பம் தராவிட்டால் முகநூலிற்குள் நுழைந்து ஆபத்தான விடயங்களை பதிவிடப்போவதாகவும் முகநூலிற்கு சொந்தமான இந்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை முகநூலிற்குள் ஊடுருவி குற்றச்சாட்டின் கீழ் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி
19 மணிநேரம் தொடர்ந்து பயணித்து நியூயோர்க்கிலிருந்து சிட்னி சென்ற விமானம்
20/10/2019 உலகில் நீண்ட தொலைவு பறக்கும் விமானம் நியூயோர்க் நகரிலிருந்து புறப்பட்டு அவுதிரேலியாவின் சிட்னி நகருக்கு இன்று காலை சென்றடைந்தது.
நியூயோர்க் நகரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 49 பேருடன் புறப்பட்ட குவான்டாஸ் நிறுவனத்தின் போயிங் 787-9 ரக விமானம் இடை நில்லாமல் பயணிக்கும் அளவுக்கு போதுமான எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது.
ஏறக்குறைய 16 ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவு பறக்கும் அளவுக்கு எரிபொருள் இருந்தது. இந்நிலையில் 19 மணிநேரம் 16 நிமிடங்கள் பறந்து இன்று காலை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை விமானம் சென்றடைந்தது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஆலன் ஜோய்ஸ்,
உண்மையில் 19 மணிநேரத்துக்கும் மேலாக இடைநில்லாமல் விமானம் பறந்துள்ளது வரலாற்று நிகழ்வு. பயணிகளையும், விமானிகளையும் எவ்வாறு மேலாண்மை செய்வது என்பதை இதில் கற்றுக்கொண்டோம்.
விமானம் புறப்பட்டவுடன் பயணிகள் அனைவரும் தங்களின் கைக்கடிகாரத்தின் நேரத்தை சிட்னி நேரத்துக்கு மாற்றிவைத்தனர்.
பயணிகள், விமானியின் உடல்நிலை, மெலோட்டின் அளவு, மூளையின் அதிர்வலை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.
வழக்கமாக இரவு நேரத்தில் விமானம் புறப்பட்டவுடன் இரவு உணவு அளிக்கப்பட்டு பயணிகள் தூங்குவதற்கு அறிவுறுத்தப்படுவார்கள்.
ஆனால், இந்த விமானத்தில் இரவு உணவுக்குப் பதிலாக மதிய உணவு அளித்து, 6 மணிநேரம் விழித்திருக்கச் செய்து, அதன்பின் பயணிகளுக்கு இரவு உணவு அளித்து தூங்க அனுமதிக்கப்பட்டார்.
கிழக்கு அவுஸ்திரேலியாவில் இரவு வரும் அனைவரும் விழித்திருக்க வைத்து உணவு வழங்கப்பட்டது. 6 மணிநேரத்துக்குப்பின் அவர்களுக்கு கார்போ ஹைட்ரேட் உணவுகள் வழங்கப்பட்டு, வெளிச்சமான திரை, விளக்குகளைப் பார்க்காமல் தூங்குமாறு அறிவுறுத்தப்பட்டார்கள்.
விமானத்த இயக்குவதற்காக வழக்கமாக இரு விமானிகள் இருக்கும் நிலையில் இந்த விமானத்தில் 4 விமானிகள் பயணித்தனர். 4 விமானிகளும் மாறி, மாறி தங்கள் பணியைச் செய்தார்கள் என்றார்.
பிறிக்ஸிட் உடன்படிக்கை குறித்து மீண்டும் வாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தல்
22/10/2019 பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்ஸனின் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவது தொடர்பான பிறிக்ஸிட் உடன்படிக்கை குறித்து மீண்டும் வாக்கெடுப்பை நடத்த பிரதமரின் அலுவலகம் அந்நாட்டு பாராளுமன்றத்தை வலியுறுத்தியுள் ளது.
பிறிக்ஸிட் உடன்படிக்கை குறித்து இதற்கு முன்னர் கடந்த சனிக்கிழமை பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பொன்று படுதோல்வியைத் தழுவியிருந்த நிலையிலேயே பிரதமரின் அலுவலகம் மேற்படி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வாக்கெடுப்பிலான தோல்வியையடுத்து போரிஸ் ஜோன்ஸன் சட்ட நிர்ப்பந்தம் காரணமாக பிறிக்ஸிட் செயற்கிர மத்தில் புதிதாக தாமதமொன்றை ஏற்படுத்தக் கோரி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கடிதமொன்றை எழுதி அனுப்ப நேர்ந்தது. ஆனால் அந்தக் கடிதத்தில் அவர் கைச்சாத்திடவில்லை.
இந்நிலையில் பிறிக்ஸிட் உடன் படிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ‘இல்லை’ அல்லது ‘ஆம்’ என தமது முடிவை தெளிவாகக் கூறுவதைத் தான் விரும்புவதாகத் தெரிவித்த போரிஸ் ஜோன் ஸன், பாராளுமன்றத்தின் கடிதம் பாராளுமன்றத்தின் தாமதத்திற்கு வழியேற்படுத்தித் தருவதற்கு நாம் அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் புதிய வாக்கெடுப்பொன்றை நடத்துவதா இல்லையா எனத் தீர்மானிப்பது சபாநாயகர் ஜோன் பெர்கவ்விடமே தங்கியுள்ளது.
போரிஸ் ஜோன்ஸன் கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிறிக் ஸிட் உடன்படிக்கையொன்று தொடர்பில் இணக்கப்பாட்டை எட்டியிருந்தார். ஆனால் அதற்கு பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற வேண்டிய தேவையுள்ளது.
இந்நிலையில் பிறிக்ஸிட் செயற்கிரமத்திலான தாமதம் தொடர்பான கோரிக்கைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தற்போது ஆராய்ந்து வருகிறது. ஆனால் கடந்த சனிக்கி ழமை அந்த உடன்படிக்கை தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஏற்பட்ட தோல்வி அந்த உடன்படிக்கை நிராகரிக்கப் பட்டதாக பொருள்படாது என ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.
அதேசமயம் மேற்படி பிறிக்ஸிட் உடன் படிக்கை குறித்து பிரித்தானிய பாராளு மன்ற பிரதிநிதிகள் சபையில் தமக்கு தற் போதும் போதிய ஆதரவு இருப்பதாக அரசாங்கம் நம்புவதாக அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். நன்றி வீரகேசரி
மீண்டும் கனடாவின் பிரதமராகின்றார் ஜஸ்டின் ட்ரூடோ
22/10/2019 கனடாவின் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றிபெற்றுள்ளது.
எனினும் பிரதமரின் லிபரல் கட்சி நாடாளுமன்ற பெரும்பான்மையை இழந்த நிலையிலேயே இந்த வெற்றியை பெற்றுள்ளது.
நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு 170 ஆசனங்கள் அவசியமாக உள்ள நிலையில் லிபரல் கட்சி 156 ஆசனங்களை பெறும் நிலை காணப்படுகின்றது.
வலதுசாரி பழமைவாத கட்சிக்கு 122 ஆசனங்கள் கிடைத்துள்ளன. கடந்த தேர்தலில் கைப்பற்றிய ஆசனங்களை விட அதிக ஆசனங்களை இந்த கட்சி கைப்பற்றியுள்ளது.
இதன் காரணமாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளபோதிலும் நாடாளுமன்றத்தில் சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு ஏனைய கட்சிகளின் ஆதரவில் தங்கியிருக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.
இதேவேளை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் நாட்டு மக்களிற்கு ஆற்றியுள்ள உரையில் பிரதமர் நாட்டை சரியான திசையில் நகர்த்துவதற்கு எங்கள் மேல நம்பிக்கை வைத்துள்ளமைக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
தனக்கு வாக்களிக்காதவர்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள அவர் நாட்டை தனது கட்சி அனைவருக்காகவும் ஆட்சியை முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
39 சடலங்கள் லொறியொன்றில் மீட்பு- பிரித்தானியாவில் அதிர்ச்சி
23/10/2019 பிரித்தானியாவில் லொறியொன்றின் கொள்கலனிலிருந்து 39 சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
எசெக்சில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வோர்ட்டர் கிளேட் கைத்தொழில் பூங்காவில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றின் கொள்கலனிலிருந்தே 39 சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பல்கேரியாவிலிருந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்த லொறியிலிருந்தே சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
வட அயர்லாந்தை சேர்ந்த லொறிச்சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நன்றி வீரகேசரி
பெல்ஜியத்திலிருந்து வந்த குளிரூட்டப்பட்ட கொள்கலன்- பிரிட்டனில் அதனை பொறுப்பேற்ற லொறி சாரதி- உள்ளே உடல்கள் தொடர்கின்றது மர்மம்
24/10/2019 பிரிட்டனில் 39 உடல்களுடன் மீட்கப்பட்ட கொள்கலன் பெல்ஜியத்திலிருந்து கடல் வழியாக வந்துள்ளது என தெரிவித்துள்ள அதிகாரிகள் குறிப்பிட்ட கொள்கலனை பொறுப்பேற்ற சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட லொறியில் குளிர்சாதனவசதிகள் காணப்பட்டன அது இயங்கிக்கொண்டிருந்தது குடியேற்றவாசிகள் -25சென்டிகிரேட் குளிரில் விறைத்து மரணித்திருக்கலாம் என கார்டியன் தெரிவித்துள்ளது.
லொறி ஆரம்பத்தில் வேல்ஸின் வடபகுதியில் உள்ள ஹொலிஹெட் பகுதி ஊடாக பிரித்தானியாவிற்குள் நுழைந்தது என தெரிவித்த காவல்துறையினர் தற்போது பல்கேரியாவில் பதிவு செய்யப்பட்ட லொறி பெல்ஜியம் ஊடாக கடல்வழியாக பிரித்தானியாவிற்குள் நுழைந்தது என தெரிவித்துள்ளனர்.
குளிரூட்டப்பட்ட கொள்கலனை எசெக்ஸ் துறைமுகத்தில் பொறுப்பேற்ற வாகனச்சாரதியான 25 வயது ரொபின்சன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வடஅயர்லாந்தை சேர்ந்த இவர் துறைமுகத்திற்கு தனது வாகனத்தை செலுத்தி சென்று கொள்கலனை பொறுப்பேற்றுள்ளார்.
பெல்ஜியத்தை சேர்ந்த துறைமுகமொன்றிலிருந்து வந்த கொள்கலன்களையே இவர் பொறுப்பேற்றுள்ளார்.
ரொபின்சன் டிரக்கினை கைத்தொழி;ல் பூங்காவை நோக்கி ஓட்டிச்செல்வதை சிசிடிவி கமராக்கள் காண்பித்துள்ளன.
அதற்கு அரை மணித்தியாலத்தின் பின்னர் காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.
கொள்கலன்களிற்குள் சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவி;ல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொள்கலன்களில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் வட அயர்லாந்தில் இரு வீடுகளை காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர்.
பிரிட்டனிற்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகளை கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குற்றக்கும்பல்களே இந்த உயிரிழப்புகளிற்கு காரணமா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இதேவேளை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டவர்களின் உடல்களை கௌரவமான முறையில் பேணுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
பிரிட்டனில் கொள்கலனிற்குள் சடலமாக மீட்கப்பட்டவர்கள் சீன பிரஜைகள்?
24/10/2019 பிரிட்டனில் கொள்கலன் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 39 பேரும் சீனாபிரஜைகள் என தகவல்கள் வெளியாகின்றன.
பிரிட்டனின் முக்கிய செய்தி ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
காவல்துறையினர் இன்னமும் இதனை உறுதி செய்யாத போதிலும் பிரிட்டனின் முக்கிய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டு வருகின்றன.
இந்ததகவலை தங்களால் உறுதி செய்ய முடியாது என எசெக்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ள அதேவேளை சீனாவின் வெளிவிவகார அமைச்சோ அல்லது பிரித்தானியாவிற்கான சீன தூதரகமோ எந்த தகவலையும் வெளியிடவில்லை.
பிரிட்டனில் நேற்று கொள்கலன் ஒன்றிற்குள் 39 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரிட்டனில் 39 உடல்களுடன் மீட்கப்பட்ட கொள்கலன் பெல்ஜியத்திலிருந்து கடல் வழியாக வந்துள்ளது என தெரிவித்துள்ள அதிகாரிகள் குறிப்பிட்ட கொள்கலனை பொறுப்பேற்ற சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
2000 ம் ஆண்டு பிரிட்டனின் டோவர் துறைமுகத்தில் காணப்பட்ட தக்காளி ஏற்றப்பட்ட வாகனத்திற்குள் 58 சீன பிரஜைகள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது. நன்றி வீரகேசரி
எங்கள் மகள் பிரித்தானியா செல்வார் எங்கள் வறுமை மாறும் என நினைத்தோம்- கொள்கலனிற்குள் சிக்கினார் என கருதப்படும் யுவதியின்தந்தை
26/10/2019 நாங்கள் பணம் வழங்கிய ஆள்கடத்தல்காரர்கள் எங்கள் மகளை எப்படி பிரிட்டனிற்கு கொண்டு போய் சேர்க்கப்போகின்றோம் என்பதை தங்களிற்கு தெரியப்படுத்தவில்லை என பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலனிற்குள் சிக்கி இறந்திருக்கலாம் என கருதப்படும் வியட்நாம் யுவதியின் தந்தை தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் சிஎன்என் மேலும் தெரிவித்துள்ளதாவாது.
வியட்நாமின் ஹாடின் பிராந்தியத்தில் சிறிய வீடொன்றில் அவர்கள் வசிக்கின்றனர் அவர்கள் பொருளாதார வசதியற்றவர்கள்,மாதாந்தம் 400 அமெரிக்க டொலர்கள்வரையே சம்பாதிக்கின்றனர்.
ஆனாலும் நாங்கள் எங்கள் மகள் பம் தி டிரா மையை பிரிட்டனிற்கு அனுப்புவதற்கு அவசியமான பணத்தை சிரமப்பட்டு சேகரித்தனர் என குறிப்பிடுகின்றனர்.
அவர் பிரிட்டன் செல்வார் எங்களது வாழ்க்கை மாறும் என நினைத்தோம் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் அந்த பயணம் துயரத்தில் முடிவடைந்துள்ளது போதோன்றுகின்றது. உடல்களுடன் மீட்கப்பட்ட கொள்கலனிற்குள் அவர்களது மகளும் இருந்திருக்கலாம் என்ற அச்சம் வெளியாகியுள்ளது.
வியாழக்கிழமை இரவு அவர்களின் மகள் குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார், குறிப்பிட்ட கொள்கலன் பிரிட்டனிற்குள் காணப்பட்ட நேரத்திலேயே அவர் அதனை அனுப்பியுள்ளார்.
பாம் தனது தாய்க்கு குறுஞ்செய்திகளை அனுப்பினார்,இறுதியாக அனுப்பிய குறுஞ்செய்தியில் தன்னால் சுவாசிக்கமுடியாமல் உள்ளது என தெரிவித்தார்
அம்மாவும் அப்பாவும் என்னை மன்னிக்கவேண்டும்,நான் வெளிநாட்டு செல்ல முயன்றவிதம் வெற்றியளிக்கவில்லை நான் உங்களை நேசிக்கின்றேன்,என்னால் சுவாசிக்க முடியாததால் நான் மரணித்துக்கொண்டிருக்கின்றேன் என அவர் தனது குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர்களில் அவரும் இருக்கின்றாரா என்பது உறுதியாகவில்லை ஆனால் மோசமான விடயம் இடம்பெற்றிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் அஞ்சுகின்றனர்.
வியட்நாமிய அதிகாரிகளுடன் இணைந்து உடல்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கொள்கலனிற்குள் மீட்கப்பட்டவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதையோ அவர்களது பெயர் விபரங்களையோ அதிகாரிகள் இன்னமும் உறுதி செய்யவில்லை.
வியட்நாமிலிருந்த சிஎன்என்னிற்கு கருத்து தெரிவித்துள்ள யுவதியின் தந்தை குறிப்பிட்ட குறுஞ்செய்தி கிடைத்ததும் தாங்கள் கடும் துயரத்தில் சிக்குண்டோம் என தெரிவித்துள்ளார்.
எனது மகளிற்கு அவர் இறக்கப்போகின்றார் என்பது தெரிந்திருக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் எனது பாசத்துக்குரிய மகளையும் பணத்தையும் இழந்துவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
தாங்கள் பணம் வழங்கிய ஆள்கடத்தல்காரர்கள் தங்கள் மகளை எப்படி பிரிட்டனிற்கு கொண்டு போய் சேர்க்கப்போகின்றோம் என்பதை தங்களிற்கு தெரியப்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் மகன் வியட்நாமிலிருந்து சீனா வழியாக பிரான்ஸ் சென்றுள்ளார்,ஆனால் அதன் பின்னர் அவருடனான தொடர்புதுண்டிக்கப்பட்டது என தந்தை தெரிவிக்கின்றார்.
அதன் பின்னர் தனது மகள் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு செய்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.
ஆள்கடத்தல்காரர்கள் இது பாதுகாப்பான பாதை என தெரிவித்தார்கள் விமானம் மூலமும் கார் மூலமும் ஆட்கள் பயணிப்பார்கள் என தெரிவித்தார்கள் என்கிறார் அவர்.
இது தெரிந்திருந்தால் நான் எனது மகளை அனுமதித்திருக்கமாட்டேன் எனவும் தந்தை தெரிவிக்கின்றார். நன்றி வீரகேசரி
என்னால் சுவாசிக்க முடியாமல் உள்ளது நான் மரணித்துக்கொண்டிருக்கின்றேன் -வியட்நாமிய பெண் குறுஞ்செய்தி-கொள்கலனிற்குள் மரணித்திருக்கலாம் என அச்சம்
26/10/2019 என்னால் சுவாசிக்க முடியாமல் உள்ளது என வியட்நாமிய பெண்ணொருவர் அனுப்பிய குறுஞ்செய்தியை தொடர்ந்து எசெக்ஸ் கொள்கலனிற்குள் வியட்நாமை சேர்ந்தவர்களின் உடல்களும் உள்ளதாக சந்தேகம் வெளியாகியுள்ளது.
தனது 21 வயது மகள் பாம் தி டிரா மையும் கொள்கலனிற்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சுவதாக வியட்நாமை சேர்ந்த நபர் ஒருவர் அந்த நாட்டின் காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
சீனா பிரான்ஸ் ஊடாக பிரிட்டனிற்கு சென்ற தனது மகள் காணாமல்போயுள்ளார் என தந்தை தெரிவித்துள்ளார்.
பாம் தனது தாய்க்கு குறுஞ்செய்திகளை அனுப்பினார்,இறுதியாக அனுப்பிய குறுஞ்செய்தியில் தன்னால் சுவாசிக்கமுடியாமல் உள்ளது என தெரிவித்தார் என தகவல் வெளியாகியுள்ளதுடன் அந்த குறுஞ்செய்தியின் படமும் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட கொள்கலன் பிரிட்டன் துறைமுகத்தில் காணப்பட்டநேரத்திலேயே அவர் அந்த குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.
அம்மாவும் அப்பாவும் என்னை மன்னிக்கவேண்டும்,நான் வெளிநாட்டு செல்ல முயன்றவிதம் வெற்றியளிக்கவில்லை நான் உங்களை நேசிக்கின்றேன்,என்னால் சுவாசிக்க முடியாததால் நான் மரணித்துக்கொண்டிருக்கின்றேன் என அவர் தனது குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வியட்நாமை சேர்ந்த பல குடும்பத்தவர்கள் குறிப்பிட்ட கொள்கலனிற்குள் தங்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள் சிக்குண்டனரா என்பதை அறிவதற்காக பிரிட்டனில் உள்ள தூதரகத்தை தொடர்புகொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன. நன்றி வீரகேசரி
முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கையில் ரஷ்ய – துருக்கி ஜனாதிபதிகள் கைச்சாத்து
24/10/2019 குர்திஷ் படையினரை துருக்கியினுடனான சிரிய எல்லையிலிருந்து வெளியேற்றுவதை நோக்காகக் கொண்ட உடன்படிக்கையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் துருக்கி ஜனாதிபதி தாயிப் எர்டோகனும் கைச்சாத்திட்டுள்ளனர்.
மேற்படி உடன்படிக்கையை வரலாற்று முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கையாக அந்நாடுகள் குறிப்பிட்டுள்ளன.
இரு நாடுகளின் ஜனாதிபதிகளுக் குமிடையே இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளையடுத்தே மேற்படி உடன்படிக்கை எட்டப்பட்டுள் ளது.
துருக்கி இந்த மாத ஆரம்பத்தில் தனது நாட்டின் தெற்கேயுள்ள சிரிய பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள குர்திஷ் படையினரை வெளியேற்றும் முகமாக தாக்குதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்திருந்தது.
சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத்து டன் நட்புறவைப் பேணி வரும் நாடுகளில் ஒன்றாகவுள்ள ரஷ்யாவானது சிரியாவில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து கவலையை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் குறிப்பிட்ட எல்லைப் பிராந்தியத்தில் ரஷ்ய படையினரும் துருக்கி படையின ரும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.
அமெரிக்காவானது எவரும் எதிர்பாராத வகையில் மேற்படி பிராந்தியத்திலிருந்து தனது படையினரை வாபஸ் பெற்றுக்கொண்ட நிலையிலேயே துருக்கிக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
அமெரிக்கா சிரியாவிலிருந்து தனது படையினரை வாபஸ் பெறுவது அந்தப் பிராந்தியத்தில் துருக்கியினதும் ரஷ்யாவினதும் செல்வாக்கு வலுப்பட வழிவகை செய்யும் என அரசியல் அவதானிகள் ஏற்கனவே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி உடன்படிக்கையின் கீழ் துருக்கி குர்திஷ் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களை கைப்பற்றும் அதேசமயம் ரஷ்ய படையினர் எல்லைப் பிராந்தியத்திலுள்ள எஞ்சிய பிரதேசங்களை மேற்பார்வை செய்யவுள்ளனர். அவர்களது செயற்பாடுகள் நேற்று புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது துருக்கியானது தனது நாட்டிலுள்ள 2 மில்லியனுக்கும் அதிகமான சிரிய அகதிகளை மீளக்குடியமர்த் தும் முகமாக பாதுகாப்பு வலயத்தை உருவாக்கும் முகமாக சிரியாவின் ராஸ் அல் அயின் மற்றும் தால் அபியத் நகர்களுக்கிடையில் 120 கிலோமீற்றர் நீள நிலப் பகுதியை கைப்பற்றியுள்ளது.
சிரிய பிராந்தியத்திலான குர்திஷ் படையினரின் தாக்குதல் நடவடிக்கைக்கு ரஷ்யா அனுமதியளித்துள்ளது. இதன் காரணமாக இரு தரப்பு நாடுகளுக்குமிடையில் மோதல் இடம்பெறும் அபாயம் அகன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த உடன்படிக்கையின் கீழ் அந்தப் பிராந்தியத்தில் மீளத் தாக்குதல்களை நடத்துவதற்கான தேவை இல்லை என துருக்கி கூறுகிறது.
இந்நிலையில் ரஷ்யாவாலும் துருக்கியாலும் இணைந்து வெளியிடப்பட்ட அறிக் கையில் பாதுகாப்பு வலயத்தை உருவாக்கு வதற்காக தாக்குதலுக்கு இலக்கு வைக்கப் பட்ட பிராந்தியத்துக்கு அப்பாலுள்ள மன் பிஜ் மற்றும் தால் றிபாத் நகர்களிலிருந்தும் குர்திஷ் படையினர் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி உடன்படிக்கை குறித்து ரஷ்ய ஜனாதிபதிக்கு நன்றியைத் தெரிவித்துள்ள சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத், இது தொடர்பில் முழுமையான ஆதரவை வழங் கத் தான் தயாராக இருப்பதாக கூறினார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment