தமிழ் சினிமா


சாஹோ திரை விமர்சனம்
பாகுபலி என்றே ஒரே படத்தின் மூலம் ஓவர் நைட்டில் உலக பேமஸ் ஆனவர் பிரபாஸ். ஆனால், அதற்காக அவர் ஏதோ லக்கில் ஜெயித்தார் என்று சொல்ல முடியாது. தன் 5 வருட உழைப்பை பாகுபலிக்காக கொடுத்தார் பிரபாஸ். அப்படி மீண்டும் தன் PAN இந்தியா மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள பிரபாஸ் எடுத்த களமே சாஹோ, இது அவர் முயற்சிக்கு வெற்றியை கொடுத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

ராய்(ஜாக்கி ஷெரப்) உலகின் மிகப்பெரும் கேங்க்ஸ்டர், இவர் இந்தியாவில் காலடி எடுத்து வைக்க முயற்சி செய்யும் நேரத்தில் சிலரால் தாக்கப்பட்டு இறக்கின்றார். இதை தொடர்ந்து அவர்கள் இந்தியாவிற்குள் கொண்டு வந்த பல லட்சம் கோடி பணமும் எரிந்து நாசமாகின்றது.
அதே நேரத்தில் பணம் இன்னும் இருக்கின்றது, அதை எடுக்க வேண்டும் என்றால் ப்ளாக் பாக்ஸ் வேண்டும் என ராய் மகனாக வரும் அருண்விஜய் மற்ற கேங்ஸ்டர்களிடம் சொல்ல, அந்த ப்ளாக்பாக்ஸை எடுக்க பல கேங்ஸ்டர்கள் குறி வைக்கின்றனர், மேலும் அடுத்த ராய் யார் என்ற போட்டியும் தொடங்குகின்றது.அப்போது பிரபாஸ் இந்த கேஸை கையில் எடுக்க, அதிரடியாக ஒரு திட்டத்தை தீட்டி அந்த ப்ளாக்பாக்ஸை பிரபாஸ் கைப்பற்ற, அதன் பின் பல மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க, பிரபாஸ் யார், எதற்காக அந்த ப்ளாக்பாக்ஸை எடுத்தார், அதை வைத்து என்ன செய்யப்போகிறார் என்று கதை நீள்கின்றது.

படத்தை பற்றிய அலசல்

முதலில் பிரபாஸ் 5 வருடமாக இரண்டு படத்தில் நடித்த பிரபாஸ், அடுத்து மீண்டும் 3 வருடம் சாஹோவிற்கு கொடுக்க, அது அவருக்கு எந்த அளவிற்கு பயனை அளித்தது என்பது தான் கேள்விக்குறி, பாகுபலியில் இருந்த கிரேஸ் கொஞ்சம் கூட இதில் பிரபாஸிடம் இல்லை, ஒருவேளை தெலுங்கு ஆடியன்ஸிற்கு புடிக்குமா என்று தெரியவில்லை.
படம் பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என்று மட்டுமே தான் இயக்குனர் சுஜித் நினைத்துள்ளாரே தவிர, படத்தின் திரைக்கதையில் கவனம் செலுத்த மறந்துவிட்டார் போல, அதிலும் படத்தின் முதல் பாதி, அட எப்படா இடைவேளை விடுவீர்கள் என்ற மனநிலைக்கு வந்த பிறகு வரும் ஆக்‌ஷன் காட்சிகள் கொஞ்சம் நிமிர வைக்கின்றது.
அதை விட ஷரதா கபூர் கொஞ்சம் கூட பிரபாஸிற்கு மேட்ச் இல்லை, இருவரின் கெமிஸ்ட்ரியும் நம்மை சோதிக்க தான் செய்கின்றது, குறிப்பாக சேஸிங் டைமில் டூயட் சாங் பாடுவது தியேட்டர் கேண்டினுக்கு நல்ல லாபம். ஒரு ஹீரோ என்றால் ஒரு முறையாவது தோற்க வேண்டும், பிறகு எழுந்து வரும் போது தான் நமக்கே விசில் அடிக்க தோன்றும்.
இதில் பிரபாஸ் 2000 பேரை கொள்கின்றார், அவர் மீது 10 ஆயிரம் புல்லட் சுடப்படுகின்றது, அதில் ஒரு புல்லட் மட்டுமே அவர் மீது படுகின்றது மொத்த படத்தில், இப்படி லாஜிக் பூ சுத்தலாம், ஆனால், இங்கு பூக்கடையே மாட்டியுள்ளனர்.
படத்தின் ஆறுதலான விஷயம் கிளைமேக்ஸ் காட்சிகள், அதன் ஆக்‌ஷன் காட்சிகள், அடுத்தடுத்து வரும் திருப்பம் இது படம் முழுவதும் இல்லாதது பெரிய மைனஸ், மேலும், ஜிப்ரானின் பின்னணி இசை மிரட்டல், மதியின் ஒளிப்பதிவு தனித்துவம்.

க்ளாப்ஸ்

பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு
படத்தின் கிளைமேக்ஸ்

பல்ப்ஸ்

லாஜிக்கே இல்லாமல் சோர்வாக செல்லும் திரைக்கதை.
அருன்விஜய், ஜாக்கி ஷெரப், நீல்நிதின் முகேஷ் என பல பிரபலங்களை பெரியளவில் பயன்படுத்தாது.
மொத்தத்தில் ரூ 300 கோடி பணத்தை ஒரு குழந்தை கையில் கொடுத்தால் என்ன செய்யும் என்பதன் அவுட்புட் தான் இந்த சாஹோ.    நன்றி CineUlagam   











No comments: