எங்கே போகின்றோம் ? - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்.... அவுஸ்திரேலியா முன்னாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்

       
       மனித வாழ்வுக்கு ஒரு அர்த்தம் இருக்கின்றது.மனித வாழ்வு ஒரு புனித வாழ்வு.மனிதப் பிறவி ஒரு புனிதப் பிறவி." மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே : என்றார் அப்பர் அவர்கள்." மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் " என்றார் சம்பந்தப் பெருமான். " புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள்நாம் போக்குகின்றோம் அவமே " எனத் தேவர்கள் கவலைப்பட்டுச் சொல்லுவதாக மணிவாசகப் பெருமான் கூறுகின்றார்.இப்படியெல்லாம் சொல் லும் அளவுக்கு .. இந்தப் புவியும் அதில் வாழும் மனிதவாழ்வும் போற்றப்படு கின்றது.அந்தப் போற்றுதலுக்கு ஏற்ப எமது வாழ்வு அமைகின்றதா? அந்தப் போற்றுதலுக்கு உரித்துடையவர்களாக இருக்கின்றோமா ?                      
    எங்கே போகின்றோம்? என்ன செய்கின்றோம்? என்ன சிந்திக்கின்றோம்? எதுவே ஒரு திட்டமில்லாது இருக்கின்றது.கண்டதேகாட்சி!கொண்டதேகோலம்! என்று வாழ்கின்றோம்.அங்கொருகண்ணும் இங்கொருகண்ணுமாக இருக்கின் றோம்.முழங்காலுக்கும் மொட்டத் தலைக்கும்முடிச்சுப் போடமுயல்கின்றோம். கரும்பிருக்க இரும்பைக் கடித்துப் பார்க்கின்றோம்.கனியிருக்க காய் கவர்ந்து உண்ணுகின்றோம்.
     சிங்கத்தைவிட்டு சிறுநரியை பிடிக்கின்றோம்.எங்களுக்குப் புரியவில்லை! தெரியவில்லை! திகைப்பு ! ஒரே மலைப்பு !சாந்தியில்லை.. சமாதானம்இல்லை .... அன்பு ஒளிந்துகொண்டுவிட்டது.அறம் வெளியேவர மறுக்கிறது.அஹிம்சை ஹிம்சையாகி நிற்கிறது.மன்னிக்கும் இயல்பு மறந்தே விட்டது.கல்வி காசாகி விட்டது.குருபக்தி கருகியேவிட்டது.கல்விக்கூடங்கள் காசுக்கூடங்களாகி   விட்டன.பெரியவரைக் காண்பதே பெரிய விஷயமாகிவிட்டது.சின்னத்தனம் எங்கும் சிரித்து நிற்கிறது.மனத்தில் இருட்டு! வழியில்திருட்டு! பார்க்குமிடங்க ளெல்லாம் படுகுழிகள்மயம் ! எங்கே போகின்றோம் ?                               
      கோவில்கள்கட்டப்படுகின்றன.கும்பாவிஷேகங்கள்.மண்டலாபிஷேகங்கள் நடக்கின்றன.இலட்சார்ச்சனை , கோடியார்ச்சனை, மகாயாகம், சாந்திஹோமம், சங்காபிஷேகம், திருவிழாக்கள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின் றன..இவற்றால் பலன் உண்டா? பலன் வந்ததா?இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால்.... எங்கள் வாழ்வில் " சமயம் சமயமாக இல்லாது போய்விட்டமையேயாகும்". சமயத்தை நாங்கள் யாருமே சரிவரஅறியவில்லை.  சமயத்துக்கான மனப்பாங்கை சரியாக வளர்த்துக் கொள்ளவும் இல்லை. ஒருகணம் யோசித்தால் ....... சமயவாழ்வையே வாழவில்லை ! ஆண்டவன் சன்னிதானத்தில் அனைவரும் சமம்தானே? நாம் அப்படி நடக்கின்றோமா? உயர்வு, தாழ்வு, பதவி, அந்தஸ்த்து, காட்டப்படுவது முறைதானா?..........   
" ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் " என்று அப்பர்பாடிய அந்த அருள் வாக்கை மறந்துவிட்டோம். " கண்ணப்ப னொப்பதோர் அன்பின்மை கண்டபின்' என் மணிவாசகர் கண்ணப்பரைப் போற்ரிய அன்பினை உணரவும் காட்டவும் தவறிவிட்டோம்." பட்ட கட்டையிற் பகற்குருடு போகுது " என்ற தத்துவத்தின் தாற்பரியத்தையும் அறவே மறந்து விட்டோம்.

      விளைவு ... சமயம் சமயமாக இல்லை.எங்கள் சமயவாழ்வு சமயவாழ் வாக இல்லை. உண்பது, உடுப்பது ,உறங்குவது ,ல்லாசமாக வாழ்வது சமயவாழ்வா? " ஆடையணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவ தில்லை --- அங்கொருகண்ணும் இங்கொருகண்ணும் ஆலயவழிபாடில்லை ". தன்னல மறுப்பு சமயத்தின் உட்கிடை.பொதுநலம் ஓம்புதல் சமயத்தின் உன்ன தம்.
    நான் வாழ வேண்டும். எனது குடும்பம் வாழ வேண்டும்.எனக்கு எல்லாம் வரவேண்டும்.நானே பெரியவன்.மற்றவன் எக்கேடு கெட்டாலும் அதைப்பற்றி எனக்கென்ன ?பணம்..பதவி..அந்தஸ்த்து..மற்றவனைவிட எனக்கும் எனது        குடும்பத்துக்கும் மட்டுமே வந்துசேரவேண்டும்.இதுதான் சிந்தனை.இதுதான்    இன்றைய வழிபாட்டில் காணப்படுகின்றது.இதுதான் இன்றைய மனிதனின் மனப்பாங்காகவும் இருக்கிறது.        
     இதை எப்படிச் சமயவாழ்வு என்று எடுக்கலாம்? சம்பந்தரும் அப்பரும் யாருக்காக வாழ்ந்தார்கள்? இறைவனிடம் தமது சொந்த சுகத்துக்காகஎதையும் கேட்டனரா? மண்ணில் நல்லவண்ணம் வாழவேண்டும்.அப்படி வாழ்வதற்கு கழுமலத்தில் பெண்ணில் நல்லாளொடு இருக்கின்ற எம்பெருமான் துணை நிற்பார்.அந்தப் பெருமானை வழிபடுவோம் வாருங்கள் என அடியவர்களுக்கு வழிகாட்டி நின்றார்.அப்பர் முதலானோர்... மற்றவர்கள்; சமயவாழ்வு , சைவம் தளைக்க தமது வாழ்க்கையையே தியாகம் செய்து நின்றார்கள்.முதன் மந்திரிப் பதவியியும் அதனால் வரும் ஆடம்பரவாழ்வும் வாய்த்திருந்தபோதும்அவற்றை
உதறிவிடுகிறார் மணிவாசகப் பெருமான்.பெரியபுராணம் காட்டும் அடியார்கள் தமக்காக வாழாத பெரியவர்கள்.சந்தனமாக, மெழுகுவர்த்தியாக வாழ்ந்தவர்கள்.
" கூடும் அன்பினில் கும்பிடலேயன்றி வீடும்வேண்டா விறலினர் " என்று அவர்களை எமக்கெல்லாம் அடையாளம் காட்டுகின்றார் சேக்கிழார் அவர்கள்.
     ஆலயம் என்பது ஆன்மா லயிக்கின்ற இடமாகும்.எல்லா வற்றையும் மறந்து ஆன்மா இறைவனை நினைக்கும் இடமாகும்.அங்கே லயிப்பு இருக்கிறதா? லயிப்பதில் எம் மனம் நாட்டம் கொள்கிறதா? ஆலயத்தில்த்தான் எத்தனை வாக்குவாதங்கள்? ஆலயத்தில்த்தான் எத்தனை அந்தஸ்த்துச் சண்டைகள்.. நீயா..நானா ..பெரியவன்! எனக்கா --- உனக்கா இந்த ஆலயத்தில் முதல் மரியாதை?எனக்குப் பரிவட்டமா? அல்லது உனக்குப் பரிவட்டமா? சுவாமி புறப்படும் முன்னர் நீ தேங்காய் உடைப்பதா? நான் உடைப்பதா? என்று பலரது மண்டைகளே உடைபடுவதைக் காண்கின்றோம்! இவைகள் பொருந்தக் கூடியனவா?இதுதான் சமயவாழ்வா? நாம் எங்கே போகின்றோம்?
       வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் தேவை.நோக்கம் இல்லாத வாழ்வு அர்த்தமற்ற வாழ்வாகும்.வாழ்வுக்கு அர்த்தம் ஊட்டி நிற்பதே சமயவாழ்வுதான்.     சமயத்தை " மதம் " என்ற பெயராலும் அழைக்கின்றோம்.மனிதனிடம் காணப்ப டுகின்ற " மதத்தை ' அகற்ற உதவுங் காரணத்தால்த்தான் இப்படி ஒருபெயர் சூட்டப்பட்டதோ என்று கூட எண்ணத்தோன்றுகின்றது.ஆனால் மதத்தை  அகற் றுவதற்கு ஏற்பட்ட ஒரு அமைப்பானது.. மனிதனிடம் மதத்தை ஊட்டுவதற்குக் காரணியாக்கப் பட்டுவிட்டது.மதவாதிகளால், மதவெறியர்களால் இந்த நிலை தோற்றுவிக்கப்பட்டுவிட்டது.                                                        
        சிலுவை யுத்தம், இந்து முஸ்லீம் கலவரம் , பாபர்மசூதி விவகாரம், அயர்லாந்து இங்கிலாந்துப் பிரச்சினை, யாவும் ..மதவெறிபிடித்தவர்களின் வெறியாட்டங்களையே காட்டிநிற்கின்றது.இது வரலாறாகி நிற்கின்றது. உலகில் பல மதங்கள் காணப்படுகின்றன.மதங்களின் சடங்குகள் ஆசாரங்கள் வேறுபட்டனவாக இருக்கலாம்.ஆனால் .. எந்தச் சமயமாவது; அநீதியை , அறம் அல்லாதவற்றை , ஒழுக்கத்துக்குப் புறம்பானவற்றை செய் என்று சொல்லு    கிறதா என்றால் .. இல்லை என்றுதான் விடை வரும். " அன்புதான் இன்ப ஊற்று- அன்புதான் இதய ஜோதி- அன்புதான் அரவணைக்கும் தாரகமந்திரம் ".
      அன்பின் முக்கியத்துவத்தையே எல்லாச் சமயங்களும் வற்புறுத்து கின்றன.எங்கள் சைவமும் அன்பைப் போற்றுகின்றது."அன்பும் சிவமும் இரண்டல்ல.அன்பும் சிவமும் ஒன்றே" என்பது எங்கள் சமயத்தின் பெருந்த த்துவமாகும்.இறைவன் அன்பு வடிவானவன்.அன்புடையார்க்கு ஆண்டவன் அருகில் வருவான்.அருளைத் தருவான்என்று எங்கள் சமயமும், சமயப் பெரியோரும் கூறுகின்றனர்.இன்று உலகத்தில் அருகிக் காணப்படுவது என்ன வென்றால்; - அதுதான் " அன்பு ".மனித வாழ்வில் அன்புத்தேவை இல்லாமல் போய்விட்டது.அன்புக்காக ஏங்குவோர் அநேகர்.அன்பைக் காட்டுவார் யார்? அவர்கள் அன்புக்காய் ஏங்குகிறார்கள்! அவர்களது தாகம்தான் தணிக்கப் படுவதாகவில்லை.    
      ஏக்கம், ஏமாற்றம், மனக்கவலை, மலிந்துகிடக்கிறது.பாதுகாப்பு, அன்பு, காருண்யம், இரக்கம் ஒறுத்துவிட்டது.எங்கும் ஒரே அந்தகாரம், குழப்பம், பதட்டம், பேராசை, பொறாமை, முரட்டுத்தனம் மலிந்துவிட்டது.உலகாயதம் உருக்கொண்டுவிட்டது.உலகம் அதன் கைப்பொம்மையாகிவிட்டது.விஞ்ஞானம், தொழில்நுட்பம், வளர்ந்து வளர்ந்து வருகிறது என்பது உண்மைதான்.மனித வாழ்வில் பல செளகரியங்கள் ஏற்பட்டுள்ளன என்பதும் உண்மைதான்.
  ஆனால் மனிதமனங்களில் மட்டுந்தான் செளகரியங்களோ செளஜன்யங் களோ ஏற்பட்டதாகத் தெரியவில்ல.வாய்ப்புகள், வசதிகள் மனதில் கூடக்கூட மனங்களில் நல்ல மாற்றங்களும் ஏற்படவேண்டும்.ஆனால் மாறாக உள்ளது. விரிவடைய வேண்டிய மனங்கள் சுருங்கிவிட்டன.நேராக இருக்க வேண்டிய மனங்கள்கோணலாகிவிட்டன.மனங்களில் நிறைவு தோன்ற மறுக்கிறது.கிடை த்ததற்கு மேலாக இன்னும் இன்னும் வேண்டும் என்று மனம் பேராசை கொள்ளு கிறது.மேலும் கிடைப்பதற்கு-- அது ; என்ன வழியானாலும் பரவாயில்லை என்று எண்ணுகிறது.இதனால் செய்யக்கூடாததை எல்லாம் செய்கிறது.மனித மனத்தில் வெறி ஏற்பட்டுவிட்டது.வெறிவந்தால் அங்கே நெறி அழிந்துவிடும்.
நெறி அழிந்தால் அங்கே முறை தவறிவிடும்.முறை தவறிவிட்டாள் வாழ்க்கை வாழ்க்கையாக அமையாது.இதனையே இன்று நாளாந்தம் காண்கின்றோம்.
     இறை நம்பிக்கை குறைந்து தனது செயற்பாடுகளால் முற்றும் முழுதான நம்பிக்கை வந்துவிட்டது.எனவே எதுவும் செய்து எதையும் பெறலாம் என்ற முனைப்பு ஏற்பட்டுவிட்டது.இராவணர்கள், சூரர்கள், ஹம்சர்கள், இரணியர்கள் மலிந்துவிட்டார்கள்.யாரை யார் திருத்துவது?யாருடைய சொல்லை யார் யார் கேட்பது? இறைதியானம் கலைந்துவிட்டது.லெளகீகம் மேலோங்கிவிட்டது.   
" பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை " என்பதைமட்டும் பார்த்தவர்கள்......
" அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை" என்பதை பார்க்க மறந்து விட்டனரோ அல்லது மறுத்துவிட்டனரோ தெரியவில்லை!.
    போதைவஸ்த்து, பொருள்கடத்தல், இலஞ்சம், ஊழல், மோசடி : இவற்றால் பணம் சம்பாதிப்பது இன்று சாதாரணமாகிவிட்டது.பணத்தைச் சம்பாதிக்க   வேண்டும்.உலகாயத வாழ்வைவாழவேண்டும்.பாவமாவது! புண்ணியமாவது! கடவுளா? சாமியா? தானமா? தர்மமா?நீதியா? நியாயமா? உண்மையா? நேர்மமையா? ..... எதைப்பற்றியும் எள்ளளவும் கவலையே இல்லை.பணம் பண்ணுவது ஒன்றே குறிக்கோள்.முடிவில் காண்பது என்ன? விரக்தி! வேதனை! பயங்கரம்!
      பாரததேசத்திலே பல மகான்களும்,துறவிகளும், வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் அளவுக்கு நாங்கள் போகவேண்டும் என்பதில்லை.மனத்தளவிலே ஓரளவுக்காவது துறவுநிலை தேவைதானே?எங்கள் மனவெழுச்சிகள் மாற்றம் உறவேண்டும். மாற்றப்படவேண்டும்!எங்கள் சிந்தனைகள் செல்லும்திசை திருப்பப் படவேண்டும்.எங்களின் செயற்பாடுகளில் தூய்மை துலங்கிட வேண் டும்.இவற்றுக்குச் சமயவாழ்வுதான் துணைபுரியும்.சமய நெறிகள்தான் வழி காட்டும்.இறையுணர்வுதான் நல்வழி இட்டுச்செல்லும்.
      கோவில்கள் சோழர்காலத்தில் சமூக நிறுவனங்களாக விளங்கின. ஆதுரர்சாலையாக, கலைக்கூடமாக, கல்விச்சாலையாக, நீதித்தலமாக, என்று பலநிலைகளில் விளங்கின.ஆன்மீகம் கலந்ததாக நீதி, ஆன்மீகம் கலந்ததாக கலைகள், ஆன்மீகம் கலந்ததாக பொருளாதார நடவடிக்கைகள் இருந்தன.
      அரசன்முதல் ஆண்டிவரை கோவிலையே நினைத்தார்கள்.கோயிற்பணி செய்வதையே தமது வாழ்வின் பெரும்பயன் என எண்ணினார்கள்.ஆண்டவனு க்குச் செய்யும் பணியே பெரியது என்று நினைத்தார்கள்.கனவும் நினைவும் கோவில் பற்றியதும், ஆன்மீகம் பற்றியதுமாகவே இருந்தது.இதனால் சோழ சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்து வளர்ந்தது.கலைகள் வளர்ந்தன.காவியம், ஓவியம், சிற்பம், கட்டிடம்யாவும் உன்னத நிலைக்கு வந்தன.திருமுறைகள் வகுக்கப் பட்டன.திருத்தொண்டர் புராணம் உருப்பெற்றது.
      இன்றோ எங்கள் கோவில்களில் ; உரிமைச் சண்டைகள் ஒருபுறம். நிர்வாகச் சண்டைகள் ஒருபுறம்.திருவிழாச் சண்டைகள் ஒருபுறம்.அந்தஸ்த்துச் சண்டைகளும் ஒரு புறம்.பூசைபண்ணுவதில் கூடச் சண்டைகள் நடக்கின்றன.
இவையெல்லாம் தேவைதானா? கோவில்கள்... பிரச்சினைகளின் கூடமாகமாறி நீதிமன்றம் வரை சென்றுவிட்டதைக் காண்கின்றோம். ஒரு காலத்தில் நீதித் தலமாக விளங்கிய கோவில்கள் எங்களின் போக்கால் எள்ளிநகையாடும் விதத்திற்கு நிலைக்களனாகிவிட்டது.
     இதற்குக் காரணம் என்ன? எங்களது சிந்தனைகள் சமயச்சிந்தனைகளில் இருந்து வேறு நிலைக்குச்சென்றதும்... திருவிழாக்கள் களியாட்டமாக மாற் றப்பட்டதும்... அவசியமான காரியங்கள் கைவிடப்பட்டு ஆடம்பரங்கள் இடம் பிடித்துக்கொண்டதுமே ஆகும்.
     சமயச் சடங்குகள் முக்கியத்துவம் அற்றன என்றொரு மாயை ஏற்பட்டதும், சமயமே அர்த்தமற்றது என்ற நாத்திகவாதம் தலைதூக்கியதும், புராணங்களு க்கும், இதிகாசங்களுக்கும்,வேதங்களுக்கும், ஆகமங்களுக்கும்,வித்தியாசமான அர்த்தங்கள் கற்பித்து மக்கள் மத்தியில் விதைக்கப் பட்டமையுமேயாகும்.
     ராமகிருஷ்ணபரமஹம்சர், சுவாமிவிவேகானந்தர்ரமணமகரிஷி போன்ற வழிகாட்டிகள் இல்லாத நிலையுமாகும்.யாவும் கொம்யூட்டர் மயமாகிவிட்டது. எங்கும்விஞ்ஞானம்.மெஞ்ஞானம் வழிகாட்ட உகந்தது அல்ல என்ற வாதம் கவர்ச்சியாக அமைந்ததும் ஆகும்.ஆன்மீகத்தின் பெயரால் சமயத்தின் பெயரால் கடவுளின் பெயரால் பல போலிகள் நடத்தும் கபட நாடகங்கள் உண்மைச்சமயத்தின் உருவத்தைக் உருக்குலைத்துவிட்டது.
     சமயம் - அரசியல் லாபங்களுக்கு இடமாக்கப்பட்டது.அரசியல் வாதிகள் சமயத்தலைவர்களாக முற்பட்டனர்.புனிதம் கெட்டது.தூய்மை அகன்றது. மக்களுக்கு ..... பாதுகாப்பு - எது எனத்தெரியாத ஒரு நில தோற்றம் பெற்றுவிட்டது.அரசியல் தலைவர்களா? ஆன்மீகத்தலைவர்களா? யார் உயர்ந் தவர்கள் / யார் உண்மையானவர்கள் ? என்னும் அளவுக்குச் சமயவாழ்வை அரசியல் வாழ்வும், ஆடம்பரவாழ்வும் ... உருக்குலைத்துவிட்டன.மக்களும் கவர்ச்சிகளுகுத் தங்களைப் பறிகொடுத்து விட்டனர்.கவர்ச்சியினால் பகுத்தறி வும், பக்குவமும், மக்களைவிட்டு அகலத்தொடங்கிவிட்டது.பகுத்தறிவற்ற தன்மை... படாடோபத்துக்கே வழி சமைத்துவிட்டது. எங்கே போகிறோம் என்று தெரியாத ஒரு மயக்கம் நிலையைத் தோற்றுவித்துவிட்டது.
     இந்த மயக்க நிலையால் சுயநலமே மேலோங்கியது.பிறர்நலம் பேணல் என்பது மறக்கப்பட்டது.மற்றவர் துயர் துடைப்பது என்பது அவசியம் அற்றதாக ப்பட்டது.இறைபக்தி எள்ளி நகையாடப்பட்டது.கோவில் தரிசனமே பெரிதாகக் கொள்ளப்படாத ஒரு நிலை ஏற்பட்டது.இதனால் கண்டது என்ன?அமைதி குலைந்தது.சாந்தி நிலைதடுமாறுகிறது.அன்பு விலை ஏறிவிட்டது.அஹிம்சை யைப் பார்க்கவே முடியாது போய்விட்டது.குடும்ப உறவு சீரற்றதாகிவிட்டது. கல்விக்கூடங்களில் அமைதியில்லை.கலைகளில் காணப்பட்ட தெய்வீகத் தன்மை தரம் இறங்கிவிட்டது. வாழ்க்கை இயந்திர மயமாகிவிட்டது.
     இதனால் எங்கே போகிறோம் என்பதை அறியாது , உணராது, ....... திட்டமிடாது போவதுபோலவே இருக்கின்றது.இந்த நிலை மாற்றப்படவேண்டும்." குறிக்கோள் இலாது கெட்டேன் " என்னும் நிலைக்கு வந்துவிடக்கூடாது.எப்படியும் வாழலாம் என்ற நிலை மாற்றப்பட்டு..  "   '
"இப்படித்தான் வாழவேண்டும் " என்னும் நிலை உருவாகவேண்டும்.அதற்குச் சமயவாழ்வுதான் உகந்தது.எனவே .. எங்கே போகிறோம் என்று உணர்ந்து தெளிந்து அறிந்து எங்கள் வாழ்க்கையை அமைக்கவேண்டும்.அதுவே        
 " மண்ணில் நல்லவண்ணம் வாழும் வாழ்வாகும் ".அதுவே " வையத்துள் வாழ்வாங்கு வாழும் வாழ்வாகும் ".இதனை ஏற்படுத்தும் சக்தி இறைபக்தி யாகும்.இறைபக்தியுடனான சமயவாழ்வை வாழ்ந்து எங்கள் குறிக்கோளை
அடைவோம் வாருங்கள் !
   

No comments: