கணாவின் இன்னிசைக் கச்சேரி (நிகழ்ச்சி விமரிசனம்) - உஷா ஜவாகர்


முதலாம் திகதி செப்டெம்பர் மாதம் 2019 அன்று பரமட்டா ரிவர் சைட் அரங்கில்(Parramatta Riverside Theatre) கணாவின் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது.
இது இவர் தனித்து இசையமைத்த முதல் கச்சேரி ஆகும்.
முதலில் கணா என்கிற இந்த அற்புத கலைஞனின் பிறப்பு வளர்ப்பை  பற்றி பார்ப்போம்.
கணாதீபன் கற்பனைத் திறன் மிக்க இசைக்கலைஞன். சின்னஞ் சிறு பாலகனாக 5 வயதில் தன் கையில் கிடைக்கப் பெற்ற கிடாரை வாசிக்கத் தொடங்கினான்.
தாஸ்மேனியாவில் பேர்னி என்ற நகரில் பிறந்த கணா Rockhampton, Young, Orange போன்ற இடங்களில் வளர்ந்திருக்கிறார். அப்போது பியானோ, டிரம்பட் போன்ற வாத்தியங்களை பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
அவர் 17 வயது நிறைவடையும் போது பியானோ, கிடார் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.
James Morrison உடனும் பாடசாலை நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றிய போது  அந்த நிகழ்ச்சி அவரை bass guitar, drums, trombone போன்றவற்றையும் வாசிக்கத் தூண்டியது.
அவர் சிட்னியில் வந்து வாழத் தொடங்கிய போது வெவ்வேறு கலாச்சார இசையையும் கேட்டு அவற்றிலும் தேர்ச்சியடைந்தார். Robert Menzies College கணாவை பெருமைப்படுத்தும் விதமாக " கணா அருணேஸ்வரன் அவார்ட் ஃபார் எக்செலன்ஸ் இன் கிரியேட்டிவ் ஆர்ட்ஸ்" என்ற விருதை வழங்கி வருகிறது! (The Gana Aruneswaran Award for Excellence in Creative Arts)
கர்நாடக இசையையும் கற்க விரும்பிய கணா வீணை, மிருதங்கம் போன்றவற்றையும் கற்றுத் தேர்ந்தார். வீணையை முடிகொண்டோன் S. N. Ramesh என்பவரிடம் கற்றார்.
அவர் இசையமைத்த Ecstasy என்ற இசையை அவர் டெல்லிக்கு சென்ற போது கற்ற புல்புல் தாராவை மையமாக வைத்து உருவாக்கியிருக்கிறார்.

பற்பல வாத்தியங்களை வாசிப்பதில் வல்லவரான கணா fusion bands இலும் வாசித்துள்ளார். இந்த அனுபவங்கள் அவரை ராஜேஷ் வைத்யா மற்றும் பிரகதி குருபிரசாத் அவர்களின் கச்சேரியிலும் இணைந்து வாசிக்க சந்தர்ப்பங்களை வழங்கியுள்ளது.
2017 இல் கணா பெயர் பெற்ற தயாரிப்பாளரும் கலைஞருமான Audius Mtwaririya சந்திக்க நேர்ந்தது. எட்டு வருடங்களுக்கு முன் கணா இசையமைத்த Mandolin Madness இசைத்தட்டை கேட்டுவிட்டு Audius கணாவை உற்சாகப்படுத்தி கணாதிபன் 2019 என்ற இனிய இசைத்தட்டை வெளியிடச் செய்துள்ளார்.
இப்போது நிகழ்ச்சிக்கு வருவோம். பரமட்டா ரிவேர்ஸைட் அரங்கம் ஏறக்குறைய 600 ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. ஆறு மணிக்கு கணா புன்னகையுடன் மேடைக்கு வந்து நிகழ்ச்சியை ஆரம்பித்தார்.
Ecstasy, Mahatma, Modern Carnatic dream, Mandolin Madness, Water Trance, Extrana rapida Bulerias, Mother and Child, Angry Man, Veetu Kuthu, Irelon Stomp போன்ற பாடல்களுக்கு இசையமைத்திருந்தார்.
அக்க்ஷன் வாசவன் டிரம்ஸ், மிருதங்கம் போன்றவற்றையும் அலன் மொக்கி double bass ஐயும் அலெக்ஸ் கிராவோட்டும் அனுஜன் சேனன், கஸ்தூரி முருகவேள் போன்றோர் வயலினையும் பிரணவன் ஜெயராசா மிருதங்கம் டிரம்ஸ் போன்றவற்றையும் கெய்ட்லின் கிளிஸன் பியானோவையும் ரொட்னி கிராஸ் கிடாரையும் வெங்கடேஷ் ஸ்ரீதரன் மற்றும் டேவிட் ஷா புல்லாங்குழலையும் சௌம்யா ஸ்ரீதரன் வீணையையும், ஜேம்ஸ் ஹீலி கீ போர்ட்டையும் கேசவ் ராமச்சந்திரன் சித்தாரையும் லாவண்யா அருணேசன் பியானோ மற்றும் புல்லாங்குழலையும் லோஜன் ஜெயமனோகரன் மிருதங்கத்தையும் மின் பான் கிடாரையும் வாசித்து கலக்கியிருந்தார்கள்.
விழாவின் நாயகன் ஆன கணா பியானோ, புல்லாங்குழல், புல் புல் தாராங், கிடார், டிரம்பட், டிரம்ஸ், மிருதங்கம், கஜோன்(Cajon) வீணை போன்றவற்றை வாசித்து கலக்கியிருந்தார்.
மேடையிலிருந்து வழிந்து ஓடிய இசை வெள்ளத்தை ரசிகர்கள் அள்ளி  அள்ளிப் பருகினார்கள்.
சில பாடல்களுக்கு சிட்னியில் புகழ் பெற்ற நடனக் கலைஞர்கள் நடனமும் ஆடினார்கள்.
எல்லா கலைஞர்களின் முகங்களிலும் அபரிமிதமான மகிழ்ச்சி தென்பட்டது.
கணாவின் நெறியாள்கையில் அத்தனை பாடல்களுக்கான இசையும் அமிர்தமாக இருந்தன.
கணாவின் பெற்றோர் கணாவை ஈன்ற பொழுதை விட நிகழ்ச்சி நடந்த அன்று பெரிதும் உவந்திருப்பார்கள்.
-->
இசைப்புயல் A.R. ரகுமான் மாதிரி கணாவும் புகழ் பெற்ற இசையமைப்பாளராக வருவார் என நிச்சயமாக கூறலாம். அன்றைய பொழுது எல்லா ரசிகர்களுக்கும் ஒரு இனிய பொழுதாக அமைந்திருந்தது.








1 comment:

Anonymous said...

Glad to see you promoting local talent.