மழைக் காற்று ( தொடர்கதை ) அங்கம் -05 - முருகபூபதிஅந்த வீட்டுக்கு வந்து இருபத்திநான்கு மணிநேரத்துக்குள் அங்கிருக்கும் ஜீவிகா, கற்பகம் ரீச்சர், மஞ்சுளா, சுபாஷினி ஆகியோரின் குணாதிசயங்களை ஓரளவு புரிந்துகொண்ட அபிதா,  அவரவர்க்கு ஏற்றவாறு நடந்துகொள்வதற்கும் தன்னை தயார்படுத்திக்கொண்டாள்.
வீட்டின் எஜமானியாக கருதப்படும் ஜீவிகா கணனியில் மூழ்கியிருக்கிறாள்.
வயதால் மூத்தவளாக இருக்கும் கற்பகம் ரீச்சர், ராசிபலன் பார்க்கும் விரதங்களை தவறாது பின்பற்றும் இயல்புகளை கொண்டிருக்கிறாள்.
மஞ்சுளா, தனக்கென வைத்திருக்கும் உணவுண்ணும் தண்ணீர் , தேநீர், கோப்பி அருந்தும் பாத்திரங்களை வேறு எவரும் தொடக்கூடாதவகையில் சுத்தம் பேணுகிறாள். இவளது காதில் எப்போதும் வெள்ளை நிறத்தில் இயர்ஃபோண் தொங்கிக்கொண்டிருக்கிறது.
சுபாஷினி, எப்பொழுதும் ஏதாவது நகைச்சுவைத்துணுக்குளை உதிர்த்தவாறு வீட்டையே கலகலப்பாக வைத்துக்கொண்டு முகப்புத்தகத்தை அடிக்கடி தடவுகிறாள்.
இந்த நால்வருக்கும் தன்னைப்போன்று ஆண்துணையே  இல்லையா..? என்ற கேள்வி அபிதாவை நெருடிக்கொண்டே இருக்கிறது.
நேரடியாக கேட்கவும் தயக்கம். வந்தன்று சனிக்கிழமை காலை,  கற்பகம் ரீச்சர்,  தான் தயாரித்த  வெந்தயக்குழம்பையும் புட்டையும் ருசிபார்க்காமலேயே, கோயிலுக்கு புறப்பட்டாள்.
ஜீவிகாவுடன் சந்தைக்குச்சென்ற  அபிதா, தெருவில் இறங்கியதும் வேடிக்கை பார்த்தாள்.
 வாகனங்களின் நடமாட்டம் அதிகரித்திருந்தது. அந்த வீட்டுக்கு முன்புறமாக இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு பக்கத்தில் ஒரு பெண் பூமாலை கட்டிக்கொண்டிருந்தாள். சிறிய வண்டிபோன்ற ஒரு பெட்டிக்கடை  அது.  அதனை தள்ளிச்சென்று எங்குவேண்டுமானாலும் தரித்துநிறுத்தி கடை விரிக்கமுடியும்.
பலசரக்குக்கடை, சிறிய தேநீர்க்கடை, காலை ஆகார பலகாரக்கடை, எவர்சில்வர் பாத்திரக்கடை, ஐஸ்கிறீம் பாலர், தொலை தொடர்பு , கணினி கம்யூனிக்கேஷன், பாடசாலை புத்தகங்கள் அப்பியாசகொப்பிகள் விற்கும் கடை, செவ்விளநீர், மரக்கறி விற்கும் கடை, லோண்டறி, உடுபுடவை தைக்கும் தையல் கடை…  இவற்றைக்கடந்தால் சபரிமலை அய்யப்பனுக்கான வழிபாட்டிடம், அதற்கு முன்னால் முத்துமாரியம்மன் கோயில், அதற்கு முன்புறமாக பூசைச்சாமான்கள்,  தேங்காய், ஊதுவத்தி, கற்பூரம் விற்கும் இரண்டு சிறிய கடைகள்,  அருகில் இடப்புறமாக செல்லும் அசரப்பா வீதியில் சென்றால், பிறப்புச்சான்றிதழ் – திருமண சான்றிதழ் மொழபெயர்க்குமிடம் என்ற விளம்பரப்பலகையுடன் காட்சி தரும் ஒரு சிறிய கட்டிடம்.
ஜீவிகாவின் வீட்டருகே இத்தனையும் இருப்பது அபிதாவுக்கு வியப்பாகவிருந்தது.
வவுனியாவிலிருந்து புறப்படும்போது, தான் வந்திறங்கப்போகும் நிகும்பலை,  பெரும்பான்மையினர் செறிந்து வாழும் பிரதேசமாகத்தான் இருக்கப்போகிறது என்ற மனப்பதிவுடன்தான் அபிதா வந்தாள்.
ஜீவிகாவின் வீடு அமைந்துள்ள கடற்கரை வீதியில் இடதுபுறம் அஸரப்பா வீதியும் வலதுபுறம் ஜூம்மா மஸ்ஜித் வீதியும் வருகின்றன. அந்த நாற்சந்தியில் முத்துமாரியம்மன் கோயிலிருந்து மணியோசையும் வலதுபுறம் அமைந்துள்ள மசூதியிலிருந்து பாங்கோசையும், கிழக்குப்பக்கமிருந்து புனித மரியாள் தேவாலயத்தின் மணியோசையும் கேட்கிறது.
இப்படியும் ஒரு பெருநகரம் இங்கிருப்பது அபிதாவை ஆச்சரியப்படவைத்தது.
        “ அபிதா, உனக்கு சிங்களம் பேசத்தெரியுமா…?  “ எனக்கேட்டாள் ஜீவிகா.
  “ தெரியாது. உங்களுக்குத் தெரியுமா..? ‘’
‘’ தெரியும். பத்திரிகையாளராக இருப்பதனால் மூன்றுமொழியும் பேசவும் தெரியும். ஆனால், சிங்களம் வாசிக்கமுடியும் எழுதத்தெரியாது.  ‘’ என்றாள் ஜீவிகா.
 ‘’ என்னை மாரிஸ்டலா கல்லூரிக்கு முன்பாக வைத்து பிடித்துக்கொண்டு வந்த அந்தப்பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு தமிழ் தெரியாது. எனக்கு சிங்களம் தெரியாது. எவ்வளவு பயந்துபோனேன் தெரியுமா…? “
‘’ இரண்டு மொழிகளை வைத்துக்கொண்டு எங்கட நாடு மிகவும் கஷ்டப்படுது.  நீயும் சிங்களத்தை கொஞ்சம் கொஞ்சமாக பேசப்பழகிக்கொள். இரண்டு மொழியும் தெரிந்தால் இந்த ஊரில் சமாளித்துக்கொள்ளமுடியும். இன்றைக்கும் அடுத்த சனிக்கிழமையும் உன்னை நானே சந்தைக்க்கும் கடைத்தெருவுக்கும் அழைத்துவாரன். அதற்குப்பிறகு நீதான் தனியே வந்து இங்கே சாமான்கள் வாங்கப்பழகவேண்டும். சரியா…? 
“ சரியம்மா… “
ஜீவிகா, கையில் வைத்திருந்த காகிதத்தில்  தமிழில் எழுதியிருந்த பொருட்களின் பட்டியலை அபிதா வாங்கிப்பார்த்தாள். ஒரு வீட்டின் சமையலறைக்குத் தேவைப்பட்ட மளிகைச்சாமான்களின் பெயர்களுடன் நீண்ட பட்டியல் இருந்தது. பால்மா, சீனி, தேயிலை, கோப்பி, முட்டை, குளியலறைத் தேவைகள், அந்தப்பட்டியலின் இறுதியிலிருந்தது.
கடைத்தெருவில் அவற்றையும், பிரதான வீதியின் எல்லையிலிருந்த சந்தையில் மரக்கறிவகைகளையும்  பழவர்க்கங்களும் வாங்கியதில் இருவரதும் கையிலிருந்த மூன்று பெரிய பைகளில் அனைத்தும் நிரம்பிவிட்டன.
கைகளை மாற்றி மாற்றி தூக்கிச்சுமந்தார்கள்.
வீட்டிலிருக்கும் மற்றவர்களையும்  உடன் அழைத்து வந்திருக்கலாமோ என்ற யோசனை அபிதாவுக்கு வந்தது.
கற்பகம் ரீச்சர் கோயிலுக்குப்போய்விட்டா. மஞ்சுளா வோஷிங்மெஷினில் தனது உடைகளை மாத்திரம் திணித்துவிட்டு, இயர்ஃபோணில் பாட்டோ, இசையோ கேட்கிறாள்.
சுபாஷினி  கைத்தொலைபேசியில் முகநூலை நோண்டிக்கொண்டிருக்கிறாள்.
ஜீவிகா அழைத்திருந்தாலும் யார்தான் வரப்போகிறார்கள்.
வீட்டில் சமைப்பது பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்வது. வீட்டைப்பெருக்கித்துடைப்பது இடும் கட்டளைகளை நிறைவேற்றுவது, ஜீவிகா சொல்லும் நாட்களில் சந்தைக்கு கடைத்தெருவுக்கு போய்வருவது. இவை அனைத்துக்கும் சேர்த்து கிடைக்கப்போகும் மாதந்த வேதனம் இருபத்தியைந்து ரூபாவில் தனக்குள்ள செலவுகள் என்ன..? அபிதா மனக்கணக்குப்போட்டாள்.
மூன்றுவேளை சாப்பாட்டுடன் மாதவேதனம் தரப்படும் என்ற எழுதாத ஒப்பந்தத்திற்கு இசைந்து பெறப்பட்ட வேலையில்,  தனக்கென இதரசெலவுகள் ஏதும் இருக்கப்போகின்றதா…?
ஒரு ஓட்டோவில் வாங்கிய பொருட்களுடன் வந்த இறங்கினார்கள். ஜீவிகாவுக்கு தெரிந்த ஓட்டோகாரன்தான். அவனை அபிதாவுக்கு அறிமுகப்படுத்தினாள்.
 “ இஸ்மாயில் நானா, இது அபிதா. எங்கட வீட்டுக்கு வந்திருக்கும் புதிய சேவர்ண்ட்.  இனிவரும்நாட்களில் அபிதா கடைத்தெருவுக்கு வந்தா, உங்கட ஓட்டோ தரிப்பிடத்தில் நீங்கள் நின்றால் கூட்டி வாருங்க. “ என்றாள் ஜீவிகா.
அந்த ஓட்டோ சாரதி சிரித்தவாறு தலையசைத்தார்.
“ இப்போது எல்லாம் ஓரளவு கொன்ரோலகிட்டுது இல்லையா இஸ்மாயில் நானா..? “
“ எங்கே மிஸ்… ..? மழைவுட்டாலும் தூவானம் விடாது… வெளியூர் வாடகை கிடைத்தாலும் போகப்பயமாத்தான் இரிக்குது. பேப்பரில் வேலை செய்யிற உங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமே….  “ என்று இஸ்மாயில் நானா சொல்லும் போது வீடு வந்துவிட்டது.
நடந்து செல்லும் தூரத்தில் சந்தையும் கடைத்தெருவும் இருந்தாலும், வாங்கிய பொருட்களின் சுமையினால்தான் ஓட்டோ பிடிக்கநேர்ந்திருப்பதை அபிதா புரிந்துகொண்டாள்.
இஸ்மாயில் நானாவுக்கு ஜீவிகா ஒரு நூறுரூபா தாளை நீட்டினாள். அவர் மிகுதி ஐம்பது ரூபா தாளை ஜீவிகாவிடம் தந்தார்.
அந்த வீட்டிற்கு கடைத்தெருவிலிருந்து வருவதற்கு ஐம்பது ரூபா கொடுத்தால் போதும் என்பதை அபிதா தெரிந்துகொண்டாள்.
கற்பகம் ரீச்சர் கோயிலிலிருந்து திரும்பியிருந்தாள்.
மஞ்சுளா தனது உடைகளை அயர்ன் செய்துகொண்டிருக்கிறாள்.
ஜீவிகாவையும் அபிதாவையுயும் கண்டுவிட்ட சுபாஷினி மாத்திரம் விரைந்துவந்து பைகளில் இருந்த பொருட்களை எடுத்து மேசையில் பரப்பிவிட்டு, எங்கெங்கே அவற்றை வைக்கவேண்டும் என்று அபிதாவுக்கு சொல்லிக்கொடுத்தாள்.
அந்த வீட்டில் நகரும் ஒவ்வொரு மணித்துளிகளின்போதும் அபிதாவை நெருடும் அந்தக்கேள்விக்குத்தான் பதில் கிடைக்கவில்லை.
இவர்கள் நால்வருக்கும் ஆண் துணைகள் இல்லையா…?
எவரது கழுத்திலும் அதற்கான அடையாளம் இல்லை. நெற்றியில் குங்குமத்திலகமும் இல்லை. வயதால் மூத்தவளாகவிருக்கும் கற்பகம் ரீச்சரின் நெற்றியில் திருநீற்றுக்குறி மாத்திரமே தெரிகிறது.
குளியலைறைக்கண்ணாடியில் ஒட்டுத்திலகங்கள் காணப்படுகின்றன. இவர்களில் எவருமே திருமணமாகாதவர்களா..? அல்லது திருமணமாகியும் வாழ்விழந்தவர்களா..?
ஒவ்வொருவருக்கும் பின்னால் தனக்கிருப்பதுபோன்று பல கதைகள் இருக்கலாம். இனிக்கடக்கவிருக்கும் நாட்களில் அவற்றை தான் தெரிந்துகொள்ளமுடியும்.
இவர்களும் தனது கதைகளை தெரிந்துகொள்வார்கள்.
அதுவரையில் அவர்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றவேண்டியதுதான்.
கற்பகம் ரீச்சர் ஒரு மேசையின் அருகில்  அமர்ந்து வெள்ளைக்காகிதங்கள் சகிதம் ஒரு பேனையை நெற்றியில் தடவித்தடவி ஆழ்ந்த யோசனையிலிருந்தாள்.
“ என்ன ரீச்சர் அம்மா பலமான யோசனை…? “ ஜீவிகா கேட்டாள்.
 ‘’  அறநெறிப் பாடசாலைகளுக்கு மத்தியில் பேச்சுப்போட்டி வருது. மாணவர்களுக்கு எழுதிக்கொடுக்கவேணும். இந்து மன்றத்தலைவர் கடந்தமாதமே எழுதித்தருமாறு கேட்டார். நாளைக்குள் எழுதிக்கொடுக்கவேணும். இன்னும் எழுதவில்லை. அதுதான் யோசித்துக்கொண்டிருக்கிறன்.
  என்ன தலைப்புகள்…?  “ – அபிதா குறுக்கிட்டுக் கேட்டாள்.
அதுகேட்டு அனைவரும் சிரித்தனர்.
  ஏய்… முந்திரிக்கொட்டை… உன்னக்கேட்டேனா…?   “ -  கற்பகம் ரீச்சர் முறைத்துச்சிரித்தவாறு சொன்னதும் அபிதாவின் முகம் வாடிவிட்டது.
நெத்தலி… முந்திரிக்கொட்டை…. இன்னும் எத்தனை பெயர்களை இவர்கள் தனக்குச்சூட்டப்போகிறார்கள்…?! அபிதா,  தான் தங்கியிருக்கும் அந்த வீட்டின் களஞ்சிய அறைக்குள் சென்றாள்.
( தொடரும்)
 


-->

No comments: