யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் இசைத் தென்றல் 2019 - எனது பார்வையில்

.கடந்த ஞாயிற்று கிழமை மாலை Riverside Parramatta வில் நடைபெற்ற யாழ் மத்திய கல்லூரியின் இசைத்தென்றல் 2019 இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். நிகழ்ச்சி சரியாக அறிவித்திருந்த படி மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு யாருமே பிரத்தியேகமாக இந்தியாவில் இருந்து இந்த முறை வருகை தரவில்லை என்பதால், பாடகர் முகேஷ் அவர்களே நிகழ்ச்சியை ஆரம்பித்து தான் ஓர் பாடகன்தான் ஆனால் தன்னை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குமாறு கேட்டுக்கொண்டதால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன் என்று கூறி முதல் பாடலை சோனியா அவர்கள் பாட வருகின்றார் என கூறி சோனியாவை மேடைக்கு வரவேற்றார். புத்தம் புது காளை என்னும் பாடலை மிகவும் அழகாக பாடினார். பின்னர் அவரே அடுத்து பாட வருபவரை அறிமுகம் செய்து வைத்தார். அடுத்ததாக ஸ்ரீகாந்த் ராசாளி என்னும் அச்சம் என்பது மடமையடா திரைப்படப் பாடலை வயலின் வாசித்தபடியே பாடினார். இதுவே அவரின் முதல் ஆஸ்திரேலியா பயணம். அதன் பின் ப்ரியங்கா சின்ன சின்ன வண்ணக்குயில் பாடலை தனது இனிமையான குரலில் பாடி பலரது கைத்தட்டலையும் பெற்றுக்கொண்டார். அவரைத்தொடர்ந்து முகேஷ் தனது வசீகரக் குரலால் ரோஜா ரோஜா என்னும் பாடலை  பாடினார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒருவரும் இல்லாததினால் நிகழ்ச்சி சற்று தொய்வடைந்த மாதிரி இருந்தது. இருந்தாலும் முகேஷ் அப்பப்போ தன்னால் இயலுமானவரை சற்று சுவாரசிகமாக பேசி நிகழ்ச்சியை கொண்டு செல்வதற்கு முயற்சி செய்தார்.
முகேஷும் பிரியங்காவும் இணைந்து அவர்கள் youtube இல் பாடிய காலத்தால் அழியாத மலர்ந்தும் மலராத என்னும் சரோஜாதேவி மற்றும் சிவாஜியின் நடிப்பில் திரையில் மலர்ந்த பாடலை பாடினார்கள். பிரியங்கா மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவராக தென் பட்டார். முகேஷ் அவரை ஏதாவது பேசும்படி கூறிய போது தனக்கு உடனே பேசுவதற்கு கொஞ்சம் தயக்கம் இருப்பதாகவும், போக போக பேசுவேன் என்றும் கூறினார்.

சோனியா இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன எனும் மரியான் திரை பாடலை மிகவும் இனிமையாக ஸ்ரீகாந்துடன் இணைந்து பாடினார்.  பிரியங்கா தனது வசீகரக் குரலால் நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா என்னும் பாடலை மிகவும் இனிமையாக பாடி ரசிகர்களின் பலத்த கரகோஷத்தை பெற்றார்.


ஸ்ரீகாந்த் தனது இனிமையான குரலில் நந்தா என் நிலா, கண்ணான கண்ணே , மறுவார்த்தை பேசாமலே மற்றும் பேட்ட படத்தில் இருந்து உள்ளலா என்னும் பாடல்களை பாடினார். பிரியங்காவுடன் இணைந்து ரவுடி பேபி பாடலையும், அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி,  சோனியாவுடன் இணைந்து முன்பே வா என் அன்பே வா, பிரியங்காவுடன் இணைந்து சுந்தரி கண்ணால்  ஒரு சேதி போன்ற பாடல்களை பாடி இருந்தார்.
சோனியா முகேஷுடன் இணைந்து தென்றல் வந்து தீண்டும் போது, பட்டது ராணி, முகேஷுடன் இணைந்து ஆகாய கங்கை, டம் மருதம் என்னும் ஹிந்தி பாடலை மிகவும் அழகாக பாடி இருந்தார். மற்றும் முகேஷுடன் இணைந்து சின்ன மச்சான் என்னும் பாடலையும் பாடி அசத்தி இருந்தார்.

முகேஷ் கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் அவர் பாடிய கச்சேரி கச்சேரி என்னும் பாடலை ப்ரியங்காவுடன் பாடினார். பாடும் நானே பாடலை மிகவும் திறமையாக பாடி இருந்தார் முகேஷ். ஸ்ரீகாந்துடன் இணைந்து எனக்கு ஒரு காதலி இருக்கின்றாள், where is the party மற்றும் ஸ்ரீகாந்துடன் இணைந்து மழைத்துளி பாடல்களை பாடினார்.

நேயர்களின் தேர்வு என்று ஒரு அரை மணிநேரம் கொடுக்கப்பட்டது. நேயர்கள் ஒரு நேர்த்தி இல்லாமல், கும்பலோடு கோவிந்த போடுவது போல் பலர் ஒரே நேரத்தில் கத்தி தமது விருப்ப பாடல்களை பாடும் படி கேட்டுக்கொண்டார்கள். ஒருவர் ஒருவராக அல்லது ஒரு வரிசையில் ஒருவர் எழுந்து பாடல்களை பாடும்படி கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நேயர் விருப்பத்தில் விரும்பி கேட்ட ப்பாடல்களில் அதிகமான பாடல்களை சோனியாவே ஆரம்பித்திருந்தார். எந்தவித பாடல்களையும் மிகவும் நேர்த்தியாக பாடக்கூடிய குரல் வளம் கொண்டவர் சோனியா என்பது எனது அபிப்பிராயம்.

நான் இந்த நிகழ்வை மிகவும் ஆவலாக எதிர்பார்த்து கார்த்திருந்ததின் காரணம் பிரியங்காவின் வருகையை. அவர் சிறுமியாக இருந்த போது ஸிட்னிக்கு வருகை தந்திருந்த போது மிகவும் அழகாக எல்லாப் பாடல்களையும் பாடி அசத்தி இருந்தார். ஆனால் இந்த தடவை அந்த பிரியங்காவை என்னால் காண முடியவில்லை. சில பாடல்களை எதிர்பார்த்த அளவுக்கு அதனை ரசித்து குரலில் எந்தவொரு உணர்வுமில்லாமல்  பாடி இருந்தார் என்பது எனது கருத்து. அவரால் மெலடி பாடல்களை மட்டுமே பாட முடியும் என்பதை ரவுடி பேபி பாடியவிதத்தில் இருந்து நிரூபித்திருந்தார். இவரை விட இங்கு இருக்கும் ஒரு  சில பாடகர்கள் இந்த பாடலை சிட்னி மேடையில் ஏற்கனவே பாடி அசத்தி இருந்தார்கள்.

மேடைத்தொகுப்பாளர் இல்லாமல் இந்த நிகழ்ச்சி சற்று தொய்வு  அடைந்திருந்தது. இந்தியாயாவில் இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வழமைபோல் தொகுப்பாளினி ப்ரியங்கா வரவில்லை என்றாலும் உள்ளூர் தொகுப்பாளர் ஒருவரை உபயோகப்படுத்தி இருந்திருந்தால் நிகழ்ச்சி இன்னும் ஸ்வாரசிகமாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. ஒரு நிகழ்ச்சி தொய்வடையும் போது அதை தூக்கி நிறுத்தி மீண்டும் ஒரு நல்ல விறு விறுப்பான நிகழ்வுக்கு நிகழ்ச்சியை கொண்டு செல்ல ஒரு அனுபவம் உள்ள தொகுப்பாளருக்கு முடியும்.


மணி பாண்டைப்பற்றி கூறவே தேவையில்லை. தபேலாவில் வெங்கட் பாட்டும் நானே பாடல்களை போன்ற பாடல்களுக்கு தனது கைவரிசையை காட்டியிருந்தார். குமார் saxaphone மற்றும் flute ஐ மிகவும் திறமையாக வாசித்திருந்தார். சுந்தரேசன் lead guitar, மணி base guitar, disckson special effects, ரஞ்சித் drums, கார்த்திக் மற்றும் நவீன் key board இல் தமது சாகசங்களை நிகழ்த்தி இருந்தார்கள். இசைக் கருவிகளின் சங்கமம் ஒன்று இடம் பெற்றது. ரசிக்கக்கூடியதாக இருந்தாலும் சற்று நீண்டுவிட்டது என்பது எனதும் மற்றும் பலரின் கருத்தும் கூட. 

இறுதியாக நான்கு பாடகர்களும் இணைந்து ஊரு கண்ணு உறவு கண்ணு  என்னும் மெர்சல் படப் பாடலை பாடி நிகழ்ச்சியை 10.30 மணிக்கு நிறைவு செய்தனர்.

மண்டபம் நிறைந்த கூட்டம் காணப்பட்டது. இடைவேளை  சரியாக 7.30 மணிக்கு அரம்பமானது. இடைவேளையின் போது கொத்து ரொட்டி மற்றும் மசாலா டி விற்பனை செய்யப்பட்டது. இடைவேளையின் போது பலர் கொத்து ரொட்டி முடிந்து விட்டது என்றும்  சிலர் $10 இக்கு அரை பெட்டி கொத்து ரொட்டியே இருந்தது என்று சலிப்பு கொண்டது காதில் கேட்டது. ஒரு சிலர் இவ்வளவு பணம் செலவு செய்த்து ஏன் இந்தியாவில்  இருந்து பாடகர்களை கொண்டு வரவேண்டும் என்றும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது. என்னை பொறுத்தவரையில் உள்ளூர் பாடகர்களை வைத்து நிகழ்ச்சி ஒன்றை ஒழுங்கு செய்தால் ஒரு சிலர் அந்தக நிகழ்ச்சிக்கு வர மறுக்கின்றார்கள். இந்தியாவில் இருந்து பாடகர்களை கொண்டு நிகழ்ச்சியை செய்தாலே அவர்கள் நிகழ்ச்சியை பார்க்க வருகின்றார்கள். அதனால் எல்லோரினதும் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற மாதிரி நிகழ்ச்சியை செய்வது மிகவும் கஷ்டமானதொன்று. யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் இதனை ஒரு charity நிகழ்வாக நிகழ்த்த வில்லை. அதனால் அவர்கள் எந்தவிதத்தில் பணத்தை விரயம் செய்து நிகழ்ச்சியை நடத்தினாலும் அதனை பற்றி பேசுவதோ கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது என்பது எனது கருத்து.

ஒலியமைப்பை வழங்கிய Alnoor மற்றும் பப்பு எந்தவித இடையூறும் இல்லாது மிகவும் துல்லியமாக ஒலியமைத்திருந்தார்கள்.  வீடியோ திட்டமிடலும் திறமையான முறையில் கையாண்டிருந்தார்கள். நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கியவர்களை திரையில் அவர்களது விளம்பரங்களை போட்டு அவர்களுக்கு நன்றியினையும் தெரிவித்திருந்தார்கள்.

மொத்தத்தில் நல்லதொரு நிகழ்ச்சியை வழங்கிய யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நல்ல பாடல் தேர்வு. நிகழ்ச்சியை தூக்கி நிறுத்தியவர்கள் எனது பார்வையில் சோனியாவும் முகேஷுமே.
நன்றி 
மதுரா மஹாதேவ் 


No comments: