உலகச் செய்திகள்


பிரதமராக 2 ஆவது தடவையாக பதவியேற்கிறார் மோடி ; பாதுகாப்பு தீவிரம் ; மைத்திரியும் பங்கேற்பு !

மீண்டும் பிரதமரானார் மோடி

எங்களின் சிறந்த நட்பு நாடு இந்தியா:ட்ரம்ப்

பாகிஸ்தானில் இந்து வைத்தியர் மீது மத அவமதிப்பு வழக்கு-கடைகளுக்கு தீ வைப்பு

கொங்கோவில் படகு கவிழ்ந்ததில் 45 பேர் பலி ; 200 க்கும் மேற்பட்டோர் மாயம்!

4 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு ; 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ; 11 பேர் பலி, 6 பேர் காயம்

வேர்ஜீனியாவில் 12 பேர் சுட்டுக் கொலை - மேலும் சில தகவல்கள்

அமெரிக்காவிற்கான வடகொரியாவின் விசேட பிரதிநிதிக்கு நடந்த கொடுமை- வெளியாகியது அதிர்ச்சி தகவல்


பிரதமராக 2 ஆவது தடவையாக பதவியேற்கிறார் மோடி ; பாதுகாப்பு தீவிரம் ; மைத்திரியும் பங்கேற்பு !

30/05/2019 இந்தியாவின் 17 ஆவது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க  இடம்பெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது.

பாரதீய ஜனதா மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது. என்றாலும் கடந்த 2014 ஆம் ஆண்டு தனித்து ஆட்சியை பிடித்த போது கூட்டணி கட்சிகளையும் மந்திரிசபையில் சேர்த்துக்கொண்டதை போல், இந்த முறையும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு அமைக்கிறது.
பாராளுமன்ற பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக (பிரதமர்) தேர்ந்து எடுக்கப்பட்ட மோடிக்கு, புதிய பிரதமராக பதவி ஏற்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்து உள்ள நிலையில், மோடி இன்று பதவியேற்கின்றார். 
அதை ஏற்று மோடி இன்று (வியாழக்கிழமை) மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 2 ஆவது முறையாக பிரதமர் ஆகிறார்.
பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள முற்றத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் மோடிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவி பிரமாணமும், சத்தியப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.
மோடியுடன் அமைச்சர்களும் பதவி ஏற்கிறார்கள். பாரதீய ஜனதாவைச் சேர்ந்தவர்களுடன் சிவசேனா, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள்.
ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி, லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் மீண்டும் மந்திரி ஆகிறார்கள்.
பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அழைப்பை ஏற்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
ஆந்திர முதல்-மந்திரியாக வை.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவி ஏற்கிறார். பதவி ஏற்ற பின்னர் அவர் டில்லி சென்று மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கு கொள்கிறார்.
மோடியின் அழைப்பை ஏற்று ‘பிம்ஸ்டெக்’ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளான பங்களாதேஷின் ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீது, இலங்கை ஜனாதிபதி சிறிசேனா, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளி, மியான்மர் ஜனாதிபதி  யூ வின் மையின்ட், பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் ஆகியோரும் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பிகோவ் ஆகியோரும், தாய்லாந்து நாட்டின் பிரதிநிதியும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, ரத்தன் டாடா, அஜய் பிராமல், ஜோன் சேம்பர்ஸ், பில் கேட்ஸ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை, விளையாட்டு பிரபலங்களான பி டி உஷா, ராகுல் டிராவிட், அனில் கும்ளே, ஜவகல் ஸ்ரீநாத், ஹர்பஜன் சிங், சாய்னா நேவால், புல்லேலா கோபிசந்த், தீபா கர்மாகர் உள்ளிட்டோரும் அழைக்கப்பட்டுள்ளனர். 
அதேவேளை, திரைப் பிரபலங்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், கங்கனா ரணாவத், ஷாரூக்கான், சஞ்சய் பன்சாலி, கரண் ஜோஹர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் அரசியல் கலவரத்தில் பலியான 50 பாரதீய ஜனதா தொண்டர்களின் குடும்பத்தினருக்கும் மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
வழக்கமாக புதிய அரசு பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெறும். ஆனால் அந்த மண்டபத்தில் சுமார் 500 பேர் மட்டுமே அமர முடியும்.
ஆனால் இந்த முறை மோடி அரசு பதவி ஏற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் உள்பட சுமார் 8,000 பேர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதனால் இடவசதியை கருத்தில் கொண்டு ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
இந்திய வரலாற்றில் பிரதமர் பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடைபெறுவது இது 6-வது முறை ஆகும். பதவி ஏற்பு விழா ஒன்றரை மணி நேரம் நடைபெறும் விழா முடிந்ததும், அதில் கலந்துகொண்ட வெளிநாட்டு தலைவர்களுக்கு ஜனாதிபதி விருந்து அளிக்கிறார்.
இந்நிலையில், இன்று பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மாகாத்மா காந்தி நினைவிடத்தில், பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். 
தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்திலும் மோடி மரியாதை செலுத்தினார். மோடியுடன் அமித்ஷா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். 
இதற்கிடையே, யார்-யாரை மந்திரிகளாக நியமிக்கலாம்? என்பது குறித்தும், கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை மந்திரி பதவிகள் வழங்கலாம்? என்பது குறித்தும் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷாவுடன் மோடி நேற்று 2 ஆவது நாளாகவும் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், பீகார் முதல்-மந்திரியும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமாரும் நேற்று அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர், தங்கள் கட்சிக்கு 2 மந்திரி பதவிகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே நிதி மந்திரியாக இருந்த அருண் ஜெட்லி, மோடி அரசில் மீண்டும் அதே அமைச்சுக்கு மந்திரியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர், தனக்கு மந்திரி பதவி வேண்டாம் என்று மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கிறது. இதையொட்டி பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 
5 மணிநேரமாக நடைபெற்ற இந்த சந்திப்பில் அமைச்சரவையில் யார் யாரை சேர்ப்பது, ஏற்கனவே அமைச்சர்களாக உள்ளவர்களில் யாருக்கு வாய்ப்பு அளிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
பாஜகவில் ஒரே நபர் இரண்டு பதவிகளில் இருக்கக்கூடாது என்ற விதி உள்ள நிலையில், அமைச்சரவையில் அமித் ஷாவை இம்முறை இடம்பெறச் செய்தால் பாஜகவுக்கு புதிய தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே சமயம் அரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கு வியூகம் வகுத்து தரும் அமித் ஷாவை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றக் கூடாது என பாஜகவில் இருந்து வரும் குரல்கள் பற்றியும் மோடி ஆலோசித்ததாக தெரிகிறது.
மொத்தம் 65 அமைச்சர்கள் மோடி அமைச்சரவையில் இடம் பெறுவர் என தகவல் வெளியாகி உள்ளது.
இன்று 3 ஆவது நாளாக  பா.ஜனதா தலைவர் அமித்ஷா  நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்றது. அப்போது அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்பட்டது.
ஒவ்வொரு கூட்டணி கட்சிகளிலும், ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக அமித் ஷா  இருப்பார். அவர் அமைச்சரவையில் இணைந்தால்  ஜெபி நட்டா, நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங் ஆகியோர் கட்சி தலைவராக வாய்ப்பு உள்ளது. ஆனால் மகாராஷ்டிரா, ஜார்கண்ட், அரியானா முக்கிய மாநிலங்களில் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல்களின் காரணமாக கட்சித் தலைவராக அமித் ஷா தொடர்ந்து இருக்க கட்சி பிரிவுகள்  விரும்புகின்றன.
மத்திய அமைச்சரவையில் அதிக மாற்றம் இருக்காது எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஒடிசா, வங்காளம் மற்றும் வடகிழக்கு மண்டலங்கள் உட்பட பி.ஜே.பி-க்கு புதிதாக வரவேற்பு பெற்ற மாநிலங்களுக்காக சில சிறிய மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவை உத்தேச பட்டியல் : அ.தி.மு.க.  - ரவீந்திரநாத் குமார் அல்லது வைத்திலிங்கம், லோக்ஜன் சக்தி - ராம் விலாஸ் பாஸ்வான், சிவசேனா - அரவிந்த் சாவந்த், ஐக்கிய ஜனதா தளம் - ஆர்சிபி சிங், அகாலிதளம் - ஹர்சிம்ரத் பாதல் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.   நன்றி வீரகேசரி 





மீண்டும் பிரதமரானார் மோடி
30/05/2019 இந்தியாவின்  இரண்டாவது முறையாக மீண்டும் நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்றார். புதுடில்லியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற பதவியேற்பு விழாவில் பல நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
.இந்திய பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.
புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பா.ஜனதாவின் எம்.பி.க்களின் கூட்டத்தில் பாராளுமன்ற கட்சி தலைவராக (பிரதமர்) நரேந்திர மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரும் ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் 30 ஆம் திகதி (இன்று) புதிய அரசு பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டது. 
இதைத் தொடர்ந்து பதவியேற்பு விழாவிற்கான நடைமுறைகள் தொடங்கின. ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதுடெல்லி மாநகராட்சியின் தோட்டக்கலை துறை சார்பில், ஜனாதிபதி மாளிகை வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளிலும் அலங்கரிக்கப்பட்டன.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு 7 மணிக்கு கோலாகலமாக பிரதமரின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதன் போது நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். 
அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மோடியுடன் அவரது புதிய மந்திரிசபையில் இடம்பெற்ற மந்திரிகளும் பதவியேற்றனர்.
இந்நிலையில் மோடயிள் பதவியேற்பு விழாவில் பல உள்நாட்டு அரசியல் தலைவர்ளும் பங்களாதேஷ், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான், கிர்கிஸ்தான், மொரிஷியஸ், கஜகஸ்தான் உள்பட 14 நாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். 
பதவியேற்பு விழாவையொட்டி ஜனாதிபதி மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   நன்றி வீரகேசரி 






எங்களின் சிறந்த நட்பு நாடு இந்தியா:ட்ரம்ப்

29/05/2019 நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் பிரதமராக பதவி ஏற்கவிருக்கும் நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கையில்,
பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவோம். கடந்த காலங்களிலும் செயல்பட்டுள்ளோம். இந்தியாவில் நடந்த தேர்தலின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. 
பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தியாவுடன்,அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியா, எங்களின் சிறந்த நட்புநாடு என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 








பாகிஸ்தானில் இந்து வைத்தியர் மீது மத அவமதிப்பு வழக்கு-கடைகளுக்கு தீ வைப்பு

28/05/2019 பாகிஸ்தானில் அண்மைக் காலங்களில் மத அவமதிப்பு தொடர்பாக பலர் நெருக்கடிகளுக்கு உள்ளாகினர். இதன்போது ஆசியா பீபி என்ற பெண் கூட நாட்டை விட்டு வௌியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்தநிலையில், தற்போது மத அவமதிப்பு மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இந்து வைத்திய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள புலாடியான் நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்ற வைத்தியர் இந்து மதத்தை சேர்ந்தவராவார். இவர் கால்நடை வைத்தியராக பணிப்புரிந்து வருகிறார். இவர் மத அவமதிப்பு செய்வதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
குறித்த பகுதியை சேர்ந்த தலைமை மதகுருவான மவுலவி இசாக் நோக்ரி என்பவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் வைத்தியரான ரமேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில் வைத்தியருக்கு எதிராக புலாடியான் நகரில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
போராட்டக்காரர்கள் இந்துக்களின் வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்து எரித்தனர். பாதைகளில் வாகன சில்லுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்த கலவரங்களுக்கு மத்தியில் வைத்தியரான ரமேஷ்குமார் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடம்க தெரிவித்துள்ளது.    நன்றி வீரகேசரி 







கொங்கோவில் படகு கவிழ்ந்ததில் 45 பேர் பலி ; 200 க்கும் மேற்பட்டோர் மாயம்!

28/05/2019 கொங்கோ நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 200 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கொங்கோ நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மாய் நேடம்போ மாகாணத்தின் தலைநகர் இனான்கோவில் உள்ள மிகப்பெரிய ஏரியில் சென்ற படகொன்றே இவ்வாறு கவிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
183 பேர் மாத்திரம் பயணிக்க கூடியதான படகில் 300 க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டுள்ளதுடன், அளவுக்கு அதிகமாக சரக்குகளையும் ஏற்றிச் சென்றமையினால் பராம் தாங்க முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் படகில் பயணித்த பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 200 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர்.
காணாமல்போனவர்களை தேடும் பணிகளில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  நன்றி வீரகேசரி 









4 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு ; 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்

27/05/2019 நேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் குறைந்த பட்சம் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மூன்று இடங்களில் குறித்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் மேலும் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
‘வெடிமருந்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்களால் இந்த வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக’ நேபாள அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதன் பின்னணியில் மாவோ தீவிரவாதிகள் செயற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இதுவரையில் யாரும் இந்த சம்பவத்துக்கு உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 






அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ; 11 பேர் பலி, 6 பேர் காயம்

01/06/2019 அமெரிக்காவின் வேர்ஜினியா பீச் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் வேர்ஜினியா பீச் பகுதியிலுள்ள மாநாகரசபைக்கு சொந்தமான  அரச கட்டத்திலேயே குறித்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட ஆயுததாரி பொலிஸாரினால் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த 6 பேரும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.











வேர்ஜீனியாவில் 12 பேர் சுட்டுக் கொலை - மேலும் சில தகவல்கள்

01/06/2019 வேர்ஜீனியாவில் 12 பேரை சுட்டுக்கொலை செய்த நபருடன் விசேட படைப்பிரிவொன்றை சேர்ந்தவர்கள் நீண்ட மோதலில் ஈடுபட்டு அவரை கட்டுப்படுத்தியதாலேயே மேலும் பலர் கொல்லப்படுவது தவிர்க்கப்பட்டது என அப்பகுதின் பொலிஸ் தலைமையதிகாரி ஜேம்ஸ் செர்வேரா தெரிவித்துள்ளார்.
அதிருப்தியடைந்த தொழிலாளி ஒருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபரின் பெயர் டீவைன் கிரடுக் என தெரிவித்துள்ள அதிகாரிகள் குறிப்பிட்ட நபர் பொது பயன்பாடுகள் திணைக்களத்தில் பொறியியலாளராக பணியாற்றினார் அதிருப்தியடைந்து காணப்பட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்
வேர்ஜீனியா நகரக் கட்டிடத்தில் ஏறிய நபர் அங்கிருந்து பல தளங்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தார் என அவர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதாக தகவல் கிடைத்ததும் விசேடபடைப்பிரிவை சேர்ந்த நால்வர் அந்த பகுதிக்கு விரைந்தனர் என  செர்வெரோ தெரிவித்துள்ளார்.
அவர்கள் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தனர் துப்பாக்கி பிரயோக சத்தத்தை அடிப்படையாக வைத்து  சந்தேகநபரை கண்டுபிடித்து உடனடியாக அவரை நோக்கி தாக்குதலை மேற்கொண்டனர் என அவர் தெரிவித்துள்ளார்
நீண்டநேரம் மோதல் இடம்பெற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் பலமுறை துப்பாக்கி பிரயோகம் செய்தார் விசேட படைப்பிரிவை சேர்ந்தவர்களும் திருப்பி தாக்கினர் என அவர் குறிப்பிட்டுள்ளார்
ஒரு உத்தியோகத்தர்  மீது துப்பாக்கி தாக்குதலிற்கு இலக்கானார் ஆனால் அவர் குண்டுதுளைக்காத ஆடையை அணிந்திருந்ததன் காரணமாக காப்பாற்றப்பட்டார் எனவும் செர்வெரோ தெரிவித்துள்ளார்.
நீண்ட மோதலால் ஏற்பட்ட காயம் காரணமாக சந்தேகநபர் கொல்லப்பட்டார் எனவும் செர்வெரோ தெரிவித்துள்ளார்
குறிப்பிட்ட கட்டிடத்தில் பணிபுரியும் எட்வேர்ட் வீடன் என்பவர் மாடிப்படியிலிருந்து யாரே விழுந்துள்ளதை அறிந்து அதனை பார்க்க சென்றதாகவும் அங்கு முகம் முழுக்க இரத்தத்துடன் பெண்ணொருவரை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து எனது சகாவொருவர் அடுத்தமாடிக்கு சென்றார் அவர் உடனடியாக கீழே திரும்பி வந்து அங்கு நபர் ஒருவர் துப்பாக்கியுடன் காணப்படுகின்றார்  இங்கிருந்து வெளியேறுங்கள் என தெரிவித்தார் எனவும் வீடன் குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு என்ன செய்வது என உடனடியாக தெரியவில்லை,அங்கிருப்பதாக அங்கிருந்து வெளியேறுவதா என்பது எனக்கு தெரியவில்லைஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட கட்டிடத்திற்கு பலர் சென்றுகொண்டிருந்த நேரத்திலேயே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது என  செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விசேட படைப்பிரிவை சேர்ந்த அதிகாரிகள் அந்த கட்டிடத்தை நோக்கி ஓடியதாகவும் தங்களை உள்ளே செல்லுமாறு கேட்டுக்கொண்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிலர் தாங்கள் மேசைகளிற்கு கீழே மறைந்திருந்தாக தெரிவித்துள்ளனர்



நன்றி வீரகேசரி












அமெரிக்காவிற்கான வடகொரியாவின் விசேட பிரதிநிதிக்கு நடந்த கொடுமை- வெளியாகியது அதிர்ச்சி தகவல்

31/05/2019 அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளிற்கு முக்கிய காரணமான அமெரிக்காவிற்கான வடகொரியாவின் விசேட பிரதிநிதியை வடகொரியா சுட்டுக்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் பின்னர் இவர் கொல்லப்பட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமைக்கு இவரே காரணம் என குற்றம்சாட்டினை முன்வைத்து வடகொரியா அரசாங்கம் இவரை கொலை செய்துள்ளது.
தோல்வியில் முடிவடைந்த டிரம்ப் -கிம் சந்திப்பினை ஏற்பாடு செய்த அமெரிக்காவிற்கான வடகொரியாவின் விசேட பிரதிநிதி கிம்சொல்லும் வெளிவிவகாரஅமைச்சின்  அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர் என தென்கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது.
விசேட பிரதிநிதிக்கு முதல் கடுழீய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது பின்னர் கொள்கைகள் தொடர்பான பாடம் புகட்டப்பட்டது என தென்கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது.
 இதன் பின்னர் விசேட பிரதிநிதியும்  வெளிவிவகார அமைச்சை சேர்ந்த நான்கு அதிகாரிகளும்  மிரிம் விமானநிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர்   என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிற்காக வேவுபார்த்தனர் என்ற குற்றச்சாட்டும் அவர்கள் மீது சுமத்தப்பட்டது எனவும் தென்கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது.
விசேட பிரதிநிதியுடன்  இணைந்து செயற்பட்ட மற்றொரு அதிகாரி சிறைக்கு அனுப்பபட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 



No comments: