
பெப்ரவரி
14 ஆம் திகதி நடந்த இத்தாக்குதலில் சுமார் 40 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, உத்தரபிரதேசம்,
பஞ்சாப், தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம், மஹாரஷ்ட்ரா, உத்தரகாண்ட், ஒரிஸா,
பீகார், கேரளா, கர்னாடகா, மத்தியபிரதேசம், ஹிமாச்சல், ஜம்மு - காஷ்மீர்
பிரதேசங்களைச்சேர்ந்த இராணுவ வீரர்களே கொல்லப்பட்டனர்.
தமிழ்நாட்டில்
தூத்துக்குடி, அரியலூர் மாவட்டங்களைச்சேர்ந்த வீரர்களும் இதில் அடக்கம்.
இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் படங்கள் இடம்பெற்ற பெரிய சுவரொட்டிகளையும்
பதாதைகளையும் வீதியோரங்களில் காணமுடிந்தது.
சென்னையில்
பார்க்குமிடங்கள்தோறும் சுவரொட்டிகளுக்கு பஞ்சமிருக்காது. கால்நடைகளும் தம்
பசியாறுவதற்கு சுவரொட்டி பிரசுரங்களை நாடுவதையும் பார்த்திருப்பீர்கள்.
ஜெயலலிதா
காலத்தில், " அம்மா, வாழ்த்த
வயதில்லை! வணங்குகிறோம்" என்ற பெரிய எழுத்து சுவொரொட்டிகளையும் மதுரையில்
" அஞ்சா நெஞ்சன் அழகிரி " சுவரொட்டிகளையும் பார்த்திருக்கும்
எனக்கு, தேசத்தின் எல்லைப்
பாதுகாப்பிற்காக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் உறக்கம் இழந்து காவல் காக்கும்
அந்த வீரர்களுக்காக மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தது கவனத்தை ஈர்த்தது.
இந்திய
நாடாளுமன்றத்தின் தேர்தலுக்கு நாள் குறித்திருந்த காலப்பகுதியில் காஷ்மீரில்
புல்வாமா மாவட்டத்தில் நடந்த அதிரடி தற்கொலைத்தாக்குதலின் பின்னணியிலிருந்தவர் அகமது தார் என்ற 20 வயது இளைஞர்
என்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்திருந்தது.
காஷ்மீரில் இயங்கும் ஜெய்ஸ் இ முகமது என்ற இயக்கம் இந்த தாக்குதலுக்கு உரிமைகோரியிருந்தது. இந்த இயக்கம் காஷ்மீரில் இயங்கும் ஏனைய தீவிரவாத இயக்கங்களுக்கு மத்தியில் மிகவும் கடும்போக்கு கொண்ட ஒரு ஜிகாதிய போர்க்குழு எனவும் பேசப்படுகிறது. அந்த தற்கொலைத்தாக்குதலை நடத்தியிருக்கும் அகமது தார், அதற்கு முன்னர் வெளிவந்த காணொளிக்காட்சியில் தோன்றி, " ஒரு வருடத்திற்கு முன்னர் ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தில் இணைந்ததாகவும், நீண்ட காத்திருப்பிற்குப்பின்னர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளேன். இந்த வீடியோவை நீங்கள் காணும்போது நான் சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
சொர்க்கம் செல்லும் முன்னர் வீடியோவில், மார்க்கம் சொல்லாததை சொல்லும் இவர்களை எந்த ரகத்தில்
சேர்ப்பது?
தற்கொலைத்தாரிகள் பெரும்பாலும் இளைஞர்
யுவதிகளாகத்தானிருக்கிறார்கள். விடுதலைப்புலிகளில் இணைந்திருந்த கரும்புலிகள், தமிழ்
இனத்தின் விடுதலைக்கு என்று வேண்டுமானால் சொல்லியிருக்கலாம்.
ஆனால், ஜெய்ஸ் இ முகமது போன்ற இயக்கங்களில்
இணைந்திருந்த தற்கொலைதாரிகள், தாங்கள் தாக்குதலுக்குப்பின்னர் சொர்க்கத்தில் இருப்போம்
எனச்சொல்லியிருக்கிறார்கள். தாங்கள் சொர்க்கம் செல்வதற்கு இப்படியும் ஒரு வழிமுறை இருக்கிறது
என்பதுதானா அவர்களின் செய்தி?
இலங்கையில் ஏப்ரில் 21 ஆம் திகதி உயிர்த்த
ஞாயிறு தினத்தில் தம்மை அழித்து பல உயிர்களை குடித்த தற்கொலைதாரிகளும் சொர்க்கத்திற்கு
சென்றிருந்தால், அவர்களும் அதற்கு முன்னர் அங்கு சென்ற அகமது தார் போன்ற தற்கொலைதாரிகளை அங்கு சந்திக்கலாம்!
எது எப்படியோ அதிதீவிர பயங்கரவாதம் அடக்குமுறைக்குத்தான்
வித்திட்டுள்ளது. அத்துடன், அதனால் பீதியில்
உறைந்திருக்கும் மக்கள் தங்களை இரட்சிக்கக் கூடிய ஆட்சியாளர் யார்? என்ற தெரிவைநோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்
என்பதற்கு சமீபத்திய இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் உதாரணம்.
இச்சந்தர்ப்பத்தில் இந்திய இசைக்குயில் லதா மங்கேஷ்கார் பற்றிய ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. ஒரு சமயம் அவர்
பாகிஸ்தான் சென்றிருந்தபோது, அச்சமயம் பாகிஸ்தான் அதிபராக இருந்த நான்கு நட்சத்திர
இராணுவத்தளபதி ஷியா வுல் ஹக், லதாவின்
இனிய குரலுக்காக இவ்வாறு ஒரு வேண்டுகோள் விடுத்தாராம்:
" நீங்கள் எங்கள் நாட்டுக்கு
நிரந்தரமாக வந்துவிடுங்கள். நான் உங்களுக்கு எங்கள் நாட்டில் குடியுரிமை தருகின்றேன்.
காஷ்மீரை இந்தியாவுக்கு விட்டுக்கொடுத்துவிடுகிறேன். "
காஷ்மீர் பல்லாண்டு காலமாக கொதிநிலையில்தான்
இருக்கிறது. இராணுவத்தளபதிகள் மட்டுமல்ல, கிரிக்கட் ஆட்டக்காரர் அதிபராக வந்தபின்னரும்
இதுதான் நிலை!
காஷ்மீரின் ஜெய்ஸ்
இ முகமது இயக்கம் தாக்குதல் நடத்திய அதே பெப்ரவரி 14 ஆம் திகதிதான் காதலர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது.
நான் சென்னை விமான நிலையத்திற்கு பெப்ரவரி 13
ஆம் திகதி காலையில் ஆறுமணியளவில் சென்றிறங்கினேன். குடிவரவு பகுதியில் வெளிநாட்டினருக்கான
பிரிவில் சில வெள்ளை இனத்தவர்களும் கியூவில்
நின்றனர்.
எமது கடவுச்சீட்டு மாத்திரம் சோதிக்கப்படவில்லை.
எமது கைரேகையையும் பார்த்தார்கள். சோதிடம் கணிப்பதற்கு அல்ல! இரண்டு உள்ளங் கைகளையும்
அழுத்தச்செய்து ஸ்கேன் செய்துகொண்டார்கள். இவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும்
பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்படவில்லை.
வேலூர் காட்பாடியிலிருந்து உறவினர்கள் என்னை அழைத்துச்செல்ல சென்னை விமான நிலையம் வந்திருந்தார்கள். சுமார் இரண்டு மணிநேரப்பயணம். வீதிகளின் இருமருங்கும்
சுவரொட்டிகளை பார்த்து ரசித்துக்கொண்டே பயணித்தேன்.
இரண்டு நாட்களுக்குப்பின்னர் காட்பாடியை
சுற்றிப்பார்க்க வந்தவிடத்தில் ஒரு சுவரொட்டி எனது கவனத்தை ஈர்த்தது. அப்போது காதலர்
தினம் முடிந்துவிட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் (
T.N.T. J) என்ற இயக்கத்தின் பெயரில் அதன் தொலைபேசி தொடர்பிலக்கத்துடன் அந்தச்சுவரொட்டியின்
வாசகங்கள் தமிழகத்தின் சில அரசியல் தலைவர்களின் பேச்சையே உயர்த்தி மதிப்பிடும் அளவுக்கு தாழ்ந்திருந்தது!
" நாக்கை வெட்டுவோம் - நாக்கை அறுப்போம் " என்றெல்லாம் வீராவேச வசனம்
பேசும் தலைவர்களை கண்ட தமிழகம் அல்லவா? வாய்பேசாத சுவரொட்டிகள் காதலர்
தினம் பற்றி என்ன சொல்கின்றன? என்பதை இந்தப்பதிவில்
இணைந்துள்ள சுவரொட்டியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
அங்கிருக்கும் சுவர்கள் மட்டுமல்ல பயணிகள்
பேரூந்துகளும் விளம்பரங்களை தாங்கியிருக்கின்றன. இந்தக்காட்சி உலகநாடுகளில் நாம் காண்பதுதான்.
நான் வதியும் அவுஸ்திரேலியாவில் சுவரோவியங்களுக்கு குறைவிருக்காது.
ரயில் பயணங்களில் அத்தகைய சுவரோவியங்களை
பார்த்து ரசிக்கின்றேன். தமிழ்நாட்டில் சினிமா,
திருமணவிழா, புதுமனை புகுவிழா, மரண அஞ்சலி என்பவற்றுக்கும் கட்அவுட்டுகள் ,
சுவரொட்டிகள் அவசியமாகிவிட்டன.
இவற்றை வடிவமைப்பவர்களுக்கும் ஓவியர்களுக்கும்
இது சிறந்த வருவாய் ஈட்டும் தொழில். சினிமா நட்சத்திரங்களின் கட்அவுட்டுகளுக்கு பால்
வார்க்கும் கலாசாரம் வளர்ந்துள்ள நாட்டில், இந்த சுவரொட்டி விவகாரம் சாதாரணமானதுதான்.
வேலூர் - காட்பாடி , தி.மு.க. பிரமுகர்
துரைமுருகனின் தொகுதி. வழக்கறிஞரான இவர் கழகத்தின் முக்கிய தூண். அத்துடன் பொருளாளர்.
நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தின்போது, " வெற்றிபெற்றால்,
பத்துநாட்களில் தமிழக ஆட்சியை மாற்றிக்காட்டுவேன் " என சூளுரைத்தவர். தேர்தல் முடிவுகள் வந்தசமயம் அவர்
சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காட்பாடி தொகுதியில் ஒரு சிறிய குளம் தூர்வாரப்படாமல் குப்பைக்கிடங்காக மாறியிருக்கிறது.
வேலூர் கோட்டைக்கு அருகிலிருக்கும் இந்த நகரத்தில் அவர் செய்திருக்கவேண்டிய மாற்றங்கள்
நிறைய இருப்பதாகத் தெரிந்தது. இவர் வசம் கல்லூரிகள் இருப்பதாகவும் அறியப்படுகிறது.
இவரது மகன் கதிர் ஆனந்த் போட்டியிடவிருந்த
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ரத்துச்செய்யப்பட்டதற்கான
காரணம் வாசகர் அறிந்ததே!
இம்முறை தமிழகப்பயணத்தின்போது எந்தவொரு எழுத்தாளரையும் சந்திப்பதில்லை என்ற
தீர்மானத்துடன்தான் அங்கு பயணித்தேன். அதற்கு அங்கிருந்த எமது உறவினர்களின் உடல் நலக்குறைவுதான் காரணம். எனது பயணங்களில் நான்
எழுத்தாளர்களையும் பத்திரிகையாளர்களையும் தேடிச்செல்வதனால் குடும்பத்தினருடன் நேரத்தை
செலவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகிவருவதுண்டு! வேலூர் - காட்பாடியில்
நின்ற நாட்களில் கோயம்புத்தூருக்கு மாத்திரம் சென்று திரும்பினேன். அங்கும் எமது உறவினர்கள்
சுகவீனமுற்றிருந்தனர்.
முன்னைய பயணங்களில் சென்னை, கோயம்புத்தூர், சாத்தூர், திருநெல்வேலி , நாமக்கல்,
இடைசெவல் முதலான பிரதேசங்களில் பல எழுத்தாளர்களைச் சந்தித்திருந்தாலும், இம்முறை நான்
தமிழகம் வந்த தகவலைக்கூட அவர்களுக்கு தெரிவிக்காது மௌனம் காத்தேன்.
எனது இந்த மாற்றம் உறவினர்களுக்கு பேராச்சரியமாயிருந்தது!
கோயம்புத்தூருக்கு ரயிலில் சென்று இரண்டு நாட்களில், பேரூந்தில் வேலூர் திரும்பினேன்.
எனது பதிவுகளில் அடிக்கடி வரும் எமது மாமா மகன் முருகானந்தன் கோயம்புத்தூரில் வசிக்கிறார்.
அவர் முன்னர் இலங்கை விமானப்படையில் பணியாற்றியவர். இன்று சாயி பக்தராகிவிட்டார்.
வருடந்தம் புட்டபர்த்திக்கு சென்று தொண்டு செய்பவர். எதற்கெடுத்தாலும் " பகவான்
பார்த்துக்கொள்வார்" எனச்சொல்பவர். அவரில் நேர்ந்த மாற்றம் என்னை வியக்கவைக்கும்.
ஒரு காலத்தில் விமானப்படையில் ஆயுதம் ஏந்தியவர், தற்காலத்தில் ஆன்மீகவாதியாக மாறியதன் காரணத்தை நான் கேட்பதேயில்லை. நதிமூலம், ரிஷிமூலம்
பார்த்தோ கேட்டோ தெரிந்துகொள்ளமுடியாதது!
கோயம்புத்தூர் என்னை பெரிதும் கவர்ந்த பிரதேசம். சுற்றிலும் மலையடிவாரங்கள்.
ஒரு ஊரிலிருந்து மற்றும் ஒரு ஊருக்குள் பிரவேசிக்கும்பொழுது, அந்தச்சுற்றாடலின் மாற்றம்
எம்மை வியக்கவைக்கும்.
கிராமமாக தொடங்கும் ஒரு ஊர் அதன் அந்தத்தில் நகரமாக விரியும். அதே பாதையில் சென்றால் நகரம்,
கிராமமாக மாறும். இந்தக்காட்சியை அவதானித்து ரசித்துக்கொண்டே அவருடன் பயணித்தேன். அவருடைய
அழகிய இல்லத்திற்கு அருகில் அவருடைய ஒரு குடும்ப நண்பர். நான் வந்திருப்பது அறிந்து
வந்து பேசிக்கொண்டிருந்தார்.
அவரது பெயர் ஜீவா. அவரது தந்தையார் முன்னர் இடதுசாரி இயக்கத்திலிருந்தவர். தோழர்
ஜீவானந்தத்தின் நெருங்கிய தோழர். அதனால், தனது மகனுக்கு ஜீவா எனப்பெயர் சூட்டியிருக்கிறார். மச்சான் முருகானந்தனை சுட்டிக்காட்டி,
" இவருடை அப்பா, அதாவது எனது தாய் மாமனார் முருக பக்தர். அதனால் தனது பிள்ளைகளுக்கு ஶ்ரீஸ்கந்தராஜா, முருகானந்தன், குகானந்தன், கிருபானந்தன்,
செந்தில் வேந்தன், தணிகைக்குமரன் எனப்பெயர் சூட்டிவிட்டார்.
முருகனின் அண்ணன் கணேசர் கோபித்துவிடுவார் என்றோ தெரியவில்லை, ஒரு மகனுக்கு கணேசராஜா என்று பெயர் வைத்துவிட்டார்" என்றேன்.
இவர்களில் கணேசராஜா மாத்திரம்தான் தாயகம் - இலங்கையில். மற்ற ஆண் சகோதரர்கள், இவர் முருகானந்தன் உட்பட அனைவரும் நாட்டை விட்டு
வெளியே வந்துவிட்டனர் என்றேன்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட காலத்தில், ஜெயகாந்தன் இடம்பெயர்ந்து தலைமறைவாக ஒரு அரிசிக்கடையில்
வேலை செய்த தகவலையும், தோழர் ஜீவானந்தம் தோணியில் இரகசியமாக கடல் கடந்து இலங்கை வந்து
சிறிது காலம் தலைமறைவாகியிருந்த கதையையும் அவருக்குச்சொன்னேன்.
அவரது நட்பினால் இலங்கையில் ஒரு இடதுசாரித்தோழர் டொமினிக் என்றிருந்த தனது இயற்பெயருடன் ஜீவாவையும் இணைத்துக்கொண்டார்.
அவர்தான் மல்லிகை என்ற மாத இதழை நான்கு
தசாப்தங்களுக்கும் மேல் வெளியிட்ட அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவா எனச்சொன்னேன்.
ஒவ்வொருவர் பெயருக்கும் பின்னால் பல கதைகள் இருப்பதை கோயம்புத்தூர் ஜீவா ஆமோதித்தார்.
வேலூர் - காட்பாடியிலிருந்து கோயம்புத்தூருக்கு ரயிலிலும் பின்னர் அங்கிருந்து
சேலம் வழியாக வேலூருக்கு பேரூந்திலும் பயணித்தபோது கிட்டிய அனுபவங்கள் வெகு சுவாரசியமானவை.
கதை சொல்லிகளான படைப்பாளிகளிடமிருந்துதான் வாசகர்களுக்கு ஏராளமான கதைகள் கிடைக்கின்றன.
அவை பயணங்களினால்தான் சாத்தியமாகின்றன.
எழுத்தும் ஒரு கலை. அதுபோன்று சமையலும் ஒரு கலை! எனக்கு இரண்டு கலைகளும் ஓரளவு
(?!) தெரியும் என்பதை நிரூபிப்பதற்காக அன்று கோயம்புத்தூரில் சமையல்காரனாகி நளபாகம்
பற்றியும் பேசினேன்.
( தொடரும்)
No comments:
Post a Comment