அஞ்சலிக்குறிப்பு: நாடகக் கலைஞர் கண்ணன் நினைவுகள் - முருகபூபதி


அவுஸ்திரேலியாவில்  தமிழ்  நாடகக்  கலை சார்ந்த ஈடுபாடுகளில் தனது கவனத்தை தீவிரப்படுத்தியிருந்த நண்பர் கண்ணன் அவர்களின் மறைவு அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் தருகின்றது.
நான் இந்த கங்காரு தேசத்திற்கு புலம்பெயர்ந்து வந்த காலப்பகுதியில்தான் கண்ணனும் தனது குடும்பத்தினர் சகிதம்  வந்து இங்கு மெல்பனில் குடியேறினார்.
1989 ஆம் ஆண்டு நண்பர் இராஜரட்ணம் சிவநாதன்  ஒருங்கணைத்த தமிழ்க்கலை மன்றத்தின் ஏற்பாட்டில் மெல்பன் – பார்க்வில்லில் அமைந்த பல்கலைக்கழக உயர்தரக் கல்லூரியில் நடந்த கலைமகள் விழாவில் இடம்பெற்ற நாடகக் கலைஞர் மாவை நித்தியானந்தனின் கண்டம் மாறியவர்கள் நாடகத்தில்தான் கண்ணனின் நடிப்பை முதல் தடவையாக பார்த்து ரசித்தேன்.
கண்ணன், இலங்கை வடபுலத்தில் மானிப்பாய் சுதுமலை வடக்கில் 1952 ஆம் ஆண்டு  சின்னத்துரை – அன்னபூரணம் தம்பதியரின் நான்காவது பிள்ளையாகப்பிறந்தார்.   தந்தையார் சின்னத்துரை அக்காலப்பகுதியில்  P. W. D.  ஓவஸீயராக எங்கள் நீர்கொழும்பூரிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பாதையில் வரும் சிலாபம்  பிரதேசத்தில் பணியாற்றியவர்.  கண்ணனின் பெற்றோர்கள்   அந்த மாநகரத்திற்கு சமீபமாக இருக்கும் பாடல்பெற்ற திருத்தலமான முன்னேஸ்வரத்தில் வசித்தனர்.
கண்ணன்,  சிலாபம் கத்தோலிக்கப் பாடாலையில் தனது ஆரம்பகல்வியையும்  அதன்பின்னர், மானிப்பாய் இந்துக்கல்லூரியில் மேற்கல்வியையும் தொடர்ந்தவர்.  
இளம்பராயத்திலிருந்தே நாடகக்கலை மீது ஆர்வம்கொண்டிருந்தமையால் தமிழ் மரபார்ந்த நாடகங்களை எழுதியவர். தனது பாடசாலைப் பருவத்தில், தந்தையார் தனது கல்வி சார்ந்த பாடங்களை எழுதுவதற்கு வாங்கித்தரும் பயிற்சிக் கொப்பிகளில் முதல் பக்கங்களில் பாடக் குறிப்புகளையும் இறுதிப் பக்கங்களில் நாடகங்களும் எழுதியவர்.
இதனால் தந்தையாரின் கண்டனங்களுக்கும் பல தடவை ஆளாகியவர்.
மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆண்டு விழாக்கள் மற்றும் பெற்றோர் தின விழாக்கள், மாணவர் கலை இலக்கிய மன்றம் ஆகியவற்றுக்காக நாடகங்கள் எழுதியும் இயக்கியும் தனது கலை ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். இக்கல்லூரியில் வாகீசர் இல்லத்தில் இணைந்திருந்த கண்ணன், இல்லங்களுக்களுக்கிடையிலான நாவன்மைப்போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றிபெற்றிருக்கிறார்.
இவருடைய தம்பி சச்சிதானந்தன் என்ற இயற்பெயர்கொண்ட குருமூர்த்தியும் நாடகக் கலைஞராவார். குருமூர்த்தி 1970  காலப்பகுதியில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகிய சங்கநாதம் என்னும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகளில் பங்குபற்றியவர்.
எனினும் இவரது அண்ணன் கண்ணன் அவர்களும் நாடகக்கலைஞர்தான் என்பதை அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர்தான் அறிந்துகொண்டேன்.
உள்ளார்ந்த கலை, இலக்கிய, ஊடகத்துறை ஆர்வலர்கள் தாங்கள் உலகின் எந்தப்பாகத்தில் வாழநேரிட்டாலும்,  தாம் தமது தாயகத்தில்  ஆர்வத்துடன் ஈடுபட்ட துறைகளில்தான்  தொடர்ச்சியாக பங்காற்றுவதற்கு  விரும்புவார்கள்.
நண்பர் கண்ணன் அவர்களும் மெல்பனுக்கு வந்தபின்னரும் நாடகக்கலையில் தனது ஈடுபாட்டை தொடர்ச்சியாக காண்பித்துவந்தவர்.
தமிழ்க்கலை மன்றம், அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியம், மெல்பன் கலைவட்டம், தமிழ் அகதிகள் கழகம், அவுஸ்திரேலியா திருமறைக்கலாமன்றம் , ஆகியன நடத்திய நாடகங்கள் பலவற்றிலும்  நடித்திருப்பதுடன், அண்ணாவியார் இளைய பத்மநாதனின் ஒரு சில அரங்காற்றுகையில் ஒப்பனைக்கலைஞராகவும் இயங்கியிருப்பவர்.
1990 களில் எமது அவுஸ்திரேலியத்தமிழர் ஒன்றியத்தின்  முத்தமிழ்விழாவை முன்னிட்டு, இளம் தலைமுறையினருக்கும் பெரியவர்களான  மூத்த தலைமுறையினருக்கும் நாவன்மை போட்டிகளை நடத்தினோம்.
இளம் தலைமுறையினர் ஏற்கனவே எழுதிக்கொடுத்த உரைகளை மனனம்செய்து பேசினார்கள்..
மூத்த தலைமுறையினரைப்பொறுத்தமட்டில் முன்னறிவிப்பின்றி, ஏதும்  ஒரு தலைப்பில் பேசவேண்டும் என்று வித்தியாசமான ஒரு நாவன்மைப்போட்டியையும்  நடத்தினோம்.
நண்பர் கண்ணன் எந்தத்  தயக்கமும் இன்றி முன்வந்து சிறந்தபேச்சை நிகழ்த்தி பரிசைத்தட்டிச்சென்றார்.
இன்முகத்துடன் பேசும் இயல்புகொண்டிருந்த கண்ணன், தனது உரையாடல்களின்போது யாழ்ப்பாண இராச்சியம் தொடர்பாக பல கதைகளையும் சொல்வதுண்டு. அவருக்கு சரித்திர நாடகங்களிலும் சமூக நாடகங்களிலும் ஆர்வம் இருந்தது.
நவீன நாடக மரபு தோன்றிய பின்னர் புதிய உத்திகளுடனும் நாடகம் எழுதவேண்டும் நடிக்கவேண்டும் என்ற ஆர்வமிருந்தது. கண்ணனின் நெருங்கிய நண்பரான மெல்பனில் வதியும் மற்றும் ஒரு நாடகக் கலைஞரும் கவிஞரும் எழுத்தாளருமான சட்டத்தரணி பாடும்மீன் ஶ்ரீகந்தராஜா மெல்பனில்  எழுதித் தயாரித்து இயக்கிய எல்லாளன், கன்னிமனம், மெல்பன் கந்தையா, அப்படியோ சங்கதி ( தாளலய நாடகம்) முதலானவற்றில் ஒப்பனைக்கலைஞராகவும் தனது பங்களிப்பினை சிறப்பாக வழங்கியவர்.
விக்ரோரியா ஈழத் தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழ்ப்பாடசாலைகளின் கலை நிகழ்ச்சிகளிலும் தாமாகவே முன்வந்து பங்குபற்றும் பிள்ளைகளுக்கு ஒப்பனை செய்பவர். பெரும்பாலும் ஒப்பனைக்குத் தேவையான சாதனங்களை தனது செலவில் வாங்கிவந்து பயன்படுத்தும் தயாள மனப்பான்மை கொண்டவர் என்று இவர் பற்றி மற்றவர்கள் சொல்லி அறிந்துள்ளேன். மெல்பனில் ஈழத் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ப்பாடசாலைகளில்  இணைப்பாளர்களில் ஒருவராகவும் இயங்கியவர்.
கவிஞர் அம்பி எழுதி, அண்ணாவியார் நெறியாள்கை செய்த யாழ்பாடி, பாடும்மீன் ஶ்ரீகந்தராசா இயக்கிய திருமறைக்கலா மன்றத்தின் தென்மோடிக்கூத்து கடன்பட்டார் நெஞ்சம், மற்றும் 1990 களில் நான் எழுதிய இயக்கிய மகாகவி பாரதி முதலான நாடகங்களிலும் கண்ணன் ஒப்பனைக்கலைஞராக இயங்கியிருக்கிறார்.
( அமரர் ) அருண். விஜயராணி 1990 களில் எழுதி இயக்கிய ஒரு நாடகத்திலும் கண்ணன் நடித்துள்ளார்.
அனைவருடனும் எந்தவொரு விக்கினமும் இன்றி அன்பாக பழகி உறவாடும் கண்ணன் அவர்களின் மறைவு ஆழ்ந்த துயரத்தை தருகின்றது.
சில வருடங்களுக்கு முன்னர்தான் கண்ணனின் அருமைத்துணைவியார் ஜெயலக்‌ஷ்மி அவர்கள் மறைந்தார்கள். அந்த ஈடுசெய்ய முடியாத இழப்பையும் தாங்கிக்கொண்டு, தனது அருமைச்செல்வங்கள் செல்விகள் சுதர்சனா, நிதர்சனா, செல்வன் கஜன் ஆகியோருடன் ஆன்மீகம் சார்ந்த பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தவர்.
தனது தங்கை திருமதி பத்மாதேவி ஞானப்பிரகாசம் அவர்களின் புதல்வி கஜாலினியின் அரங்கேற்றம் முதல் அவரது புதல்வி செல்வி யோத்சனாவின்  அரங்கேற்றம் வரையில் தனது குடும்பத்திலும் தலைமுறை நீட்சியாக கலை சார்ந்த பணிகளுக்கு ஆக்கபூர்வமாக பங்காற்றியிருக்கும் கண்ணனின் கலைத்தாகம் அவரது நிரந்தர மௌனத்துடன் அமைதி காக்கிறது.
கலைஞர் கண்ணனின் திடீர் மறைவால்  ஆழ்ந்த கவலையில் ஆழ்ந்திருக்கும் அருமைச்செல்வங்கள்  மற்றும் குடும்ப உறவுகள், நண்பர்கள்  ஆகியோரின் துயரத்தில் நாமும் பங்கேற்கின்றோம்.
கண்ணன் சம்பந்தமான நினைவுகளுக்கு மரணமில்லை என்றுதான் எழுதுவதற்கு தோன்றுகிறது.
கண்ணனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
-->

No comments: