தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான மியன்மார் ஏர்லைன்ஸ் !
இந்தியாவில் தனது கிளையை தொடங்கிய ஐ.எஸ்...!
இந்தியாவிற்கு மாத்திரமே:அமெரிக்கா உறுதி
பாரிய பொருளாதார சிக்கலை எதிர்நோக்கியுள்ள பாகிஸ்தான்
ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை
அமெரிக்கா தொலைத்தொடர்பு துறையில் அவசர நிலை பிரகடனம்:ட்ரம்ப் அறிவிப்பு
தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான மியன்மார் ஏர்லைன்ஸ் !
13/05/2019 மியான்மர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான யு.பி - 103 என்ற விமானம், தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விமானம் நேற்று அந்த நாட்டு சுற்றுலா நகரமான மாண்டலேவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது.
இதன்போது விமானத்தில் 7 பணியாளர்கள் உள்பட 89 பேர் இருந்தனர்.
அப்போது, அந்த விமானத்தின் முன் பக்க சக்கரங்கள் விரிய மறுத்தன. அதைத் தொடர்ந்து, உடனடியாக பின்பக்க சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி அந்த விமானத்தை விமானி தரையிறக்கினார்.
எனினும், இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. நன்றி வீரகேசரி
இந்தியாவில் தனது கிளையை தொடங்கிய ஐ.எஸ்...!
13/05/2019 இந்தியாவிலும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தனது கிளையை இரகசியமான முறையில், நிறுவியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வழங்கியுள்ளன.
உலகம் முழுவதும் ஐ.எஸ் அமைப்பானது, இரகசியமான முறையில், தமது இலக்குகளை அடைய எத்தணித்து வருகின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் நிகழ்ந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பு முற்றுமுழுதாகப் பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த தாக்குதலில் சுமார் 250 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 300ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ள நிலையில், இது வரையிலும் ஒரு சாதாரணமான நிலையில்லாமல், அசாதாரண சூழ்நிலையே காணப்படுகின்றது.
இந்நிலையில், தற்போது இந்தியாவில் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு மாநிலத்தையே நிறுவியுள்ளதாக ஐ.எஸ். அமைப்பினர் கூறியுள்ளனர். இது இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய கிளைக்கு அரபு பெயர் "ஹிந்த் இன் வாலே" என பெயரிடப்பட்டு உள்ளது. இந்திய ஊடகங்கள் சில இதனை வெளியிட்டுள்ளது. மேலும், இக்கூற்றை ஒரு மூத்த ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரி நிராகரித்தாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன. நன்றி வீரகேசரி
இந்தியாவிற்கு மாத்திரமே:அமெரிக்கா உறுதி
14/05/2019 எப் 21 ரக போர் விமானங்களை இந்தியா வாங்கினால், வேறு எந்த நாட்டுக்கும் விற்பனை செய்ய மாட்டோம் என அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.
அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனத்திடம் எப்.,21 ரக போர் விமானங்கள் வாங்க இந்தியா டெண்டர் கோரியுள்ளது.
18 பில்லியன் டொலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில், 114 விமானங்களை வாங்க இந்திய விமானப்படை டெண்டர் கோரியுள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் போட்டி போடுகின்றன.
இந்த போட்டியில், லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் எப்.21 போயிங் நிறுவனத்தின் 'எப்/ஏ-18', டசால்ட் ஏவியேஷன்ஸ் நிறுவனத்தின் ரபேல், யூரோபைட்டர் டைப்யூன், ரஷ்யாவின் 'மிக்-35' மற்றும் சுவீடனின் 'சாப்-35' கிரிப்பன் விமானங்கள் முன்னணியில் உள்ளன. இந்நிலையில், லாக்ஹீட் மார்டின் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளதாவது,
எப்.,21 ரக போர் விமானங்கள், இந்தியாவில் 60 விமான நிலையங்களில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல உயர்தர அதிநவீன அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியா எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தால், விமானத்தின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வேறு நாடுகளுக்கு விற்பனை செய்ய மாட்டோம். டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தயாரிக்கப்படுவதால், விலையும் குறைவாக கிடைக்கும் என தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
பாரிய பொருளாதார சிக்கலை எதிர்நோக்கியுள்ள பாகிஸ்தான்
14/05/2019 உயர் பணவீக்கம் மற்றும் அதிகப்படியான கடன் போன்ற காரணங்களால் பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியை எதிர்நோக்கி வருகின்றது.
பாகிஸ்தானில் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு வேகமாக பொருளாதாரம் வீழ்சியடைந்து வருகிறது.
இதனால் நாட்டின் பொருளாதார நிலைமையை கையாளுவது பிரதமர் இம்ரான்கானின் அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.
எனவே நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு, சர்வதேச நிதியத்தின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையே பல மாதங்களாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தன.
இந்த நிலையில், வெளிநாட்டு கடன் சுமைகளை குறைப்பதற்காக பாகிஸ்தானுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 6 பில்லியன் டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் முன்வந்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இடையே ஒப்பந்தமாகியுள்ளது.
அத்துடன் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்தும் 2 முதல் 3 பில்லியன் டொலர்கள் வரை நிதியுதவியாக பெற பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை
15/05/2019 அமெரிக்காவுக்கு எதிராக செயல் பட்டால் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரித்துள்ளார்.
மேலும் ஈரான் - அமெரிக்கா இடையேயான உறவு முற்றிலும் சீர்குலைந்துள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா துறைமுகம் அருகே 2 வர்த்தகக் கப்பல்கள் தாக்குதலுக்குள்ளாகின. எத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்தோ, யார் தாக்குதல் நடத்தியது என்பது குறித்தோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இருப்பினும் இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருக்கலாம் என அமெரிக்கா சந்தேகிக்கிறது.மேலும் ஈரானிடமிருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யக்கூடாது என கடந்த ஆண்டு அமெரிக்கா நேரடி பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில் அமெரிக்காவை மீண்டும் மிரட்ட நினைத்தால் வரலாறு முழுக்க சில நாடுகள் அடைந்த வேதனையை எதிர்கொள்ள நேரிடும் என ஈரானுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்பிடம் ஈரானில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும் வகையில் அந்நாட்டுடன் அமெரிக்கா மோதலில் ஈடுபட்டுள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.
ஈரான் தொடர்பாக சில விஷயங்களை கேள்விப்படுவதாக குறிப்பிட்ட ட்ரம்ப் அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் ஏதாவது செய்யுமானால் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.
‘வன்முறை மற்றும் மரணங்களை காட்டி நீங்கள் மிரட்டுவதை பொறுத்துக்கொள்ளும் நாடாக அமெரிக்கா இனி ஒரு போதும் இருக்காது எனவும் கூறினார். நன்றி வீரகேசரி
அமெரிக்கா தொலைத்தொடர்பு துறையில் அவசர நிலை பிரகடனம்:ட்ரம்ப் அறிவிப்பு
17/05/2019 அமெரிக்கா தகவல் தொழில் நுட்ப துறையில் அவசர நிலை பிரகடனத்தில் அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
வாஷிங்டனில் உள்நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்தாக உள்ள நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட தொலை தொடர்பு சாதனங்களை,அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்துவதை தடை செய்யும் அவசர நிலை பிரகடனத்தில், அந்த நாட்டு அதிபர், ட்ரம்ப், நேற்று கையெழுத்திட்டுள்ளார்.
சமீப காலமாக, அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் அதிகரித்துள்ளது.
சீனப் பொருட்களுக்கு, அமெரிக்காவில் அதிக அளவில் வரி விதிக்கப்படுகிறது.
இதற்கு பதிலடியாக, சீனாவும், அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரியை விதித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில்,தொலை தொடர்பு சம்பந்தமான தொழில்களில், சீன நிறுவனங்களின் பங்கு குறைவாக உள்ளது.
இந் நிறுவனங்களுக்கு நெருக்கடி தரும் வகையில், அமெரிக்காவின் தொழில்நுட்பம் திருடப்படுவதை தடுப்பதற்காக, தேசிய அவசர நிலை பிரகடனத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நேற்று கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில அன்னிய நாட்டு நிறுவனங்களால்,அமெரிக்க தொழில்நுட்பம் திருடப்படுவதால், உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுஉள்ளது.
இதை தடுக்கும் வகையில், தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment