பயணியின் பார்வையில் - அங்கம் 07


" சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்

முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது"

                                                                             கவியரசு கண்ணதாசன்
திரைப்படங்களின் பெயர்களை விடுதலை இயக்கங்களுக்கு சூட்டிய இளைஞர்கள் புகலிடத்தில் யாருக்கு பெயர் சூட்டுகிறார்கள்?

                                                                             முருகபூபதி

அலைகள் ஓய்வதில்லை, விடியும் வரை காத்திரு, பயணங்கள் முடிவதில்லை, தூரத்து இடிமுழக்கம், எங்கேயோ கேட்ட குரல் --- இந்தப்பெயர்கள் யாவும் முன்னர் வெளிவந்த திரைப்படங்கள்தான்.
ஆனால், இந்தப்படங்களின் பெயர்களை 1980 களில் ஆயுதம் ஏந்திய தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களுக்கும் வடபகுதி தமிழ் இளைஞர்கள் சூட்டியிருந்தார்கள் என்பது  உங்களுக்கு நினைவிலிருக்கிறதா?
எனக்கு இந்த சுவாரசியங்களை சொல்லித்தந்த ஒரு இளைஞர் கூட்டம் யாழ்ப்பாணம் அரியாலையில் இருந்தது.
எனது வாழ்வில் யாழ்ப்பாணம் அரியாலைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. 1963 இல் தொடங்கிய இந்த உறவு பல தொடர்கதைகளை உள்ளடக்கியது.
நானும் எனது மாமா மகன் முருகானந்தனும் எங்கள் ஊரில் அன்றைய ஆறாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்று யாழ்ப்பாணத்திலிருக்கும் கச்சேரிக்கு அருகாமையில் செல்லும் நாவலர் வீதியில் அரியாலையில் அமைந்திருந்த ஸ்ரான்லிக்கல்லூரியில் அனுமதிபெற்றோம்.
அதற்கு முன்னர் நீர்கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் பாதையில் வரும் சிலாபம், உடப்பு, முன்னேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு அப்பால் சென்றதேயில்லை.  யாழ்ப்பாணத்தையோ   பனைமரத்தையோ தரிசித்திருக்கவில்லை.
அரியாலை புங்கன் குளத்திற்கு அதிகாலைவேளையில் வந்து தரித்துச்செல்லும் கொழும்பிலிருந்து வரும்  இரவு  தபால் ரயில் வண்டி எழுப்பும் ஓசையின்போது,  ஸ்ரான்லிக்கல்லூரி ஆண்கள் விடுதியில் துயில் எழும்பும் எனக்கு வீட்டின் ஏக்கம் வரும். அடுத்த தவணை விடுமுறை வரும் நாட்களை மனம் எண்ணத்தொடங்கும். நாம் அங்கு படிக்கத்தொடங்கிய காலத்தில்தான் அதன் பெயர் கனகரத்தினம் மத்திய கல்லூரியாக மாற்றப்பட்டது.
அந்த ஆண்கள் விடுதி வாழ்க்கை வீட்டு ஏக்கத்திலேயே (Home Sick)  கழிந்தாலும், அவ்வூரில் கண்டிவீதியில் மாம்பழம் சந்திக்கும் தபால் கட்டை சந்திக்கும் இடையிலிருக்கும் கலைமகள் சனசமூக நிலையத்தில் நடக்கும் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் மனதைக்கவர்ந்தன.
ஒவ்வொரு ஊருக்கும் காரணப்பெயர் இருக்கும். மர அரிவு ஆலைகள் அங்கு முன்னர் இருந்தமையால் அரியாலை என்ற பெயர் தோன்றியதாகவும் சொல்கிறார்கள். கல்வி, கலை, இலக்கியம், விளையாட்டு முதலான துறைகளில் பின்னாளில் பிரகாசித்த பலருக்கு அரியாலைதான் பூர்வீகம்.
பிரான்ஸ் - லண்டன் பயணங்கள் குறித்த தொடரில் அரியாலை ஏன்வருகிறது?  என்ற கேள்வி எழக்கூடும்! எனது வாழ்வில் நிகழ்ந்த பல திருப்பங்களுக்கு இந்த அரியாலையும் ஒரு காரணம்தான்.
எங்கள் நீர்கொழும்பூருக்கு 1970 களில் அரியாலையிலிருந்து ஒரு இளைஞர் தொழில் நிமித்தம் வந்து சேர்ந்தார். அவரது பெயர் தியாகராஜா. அவருக்கு எங்கள் ஊர் பிரமுகர் (அமரர்) எஸ். கே. விஜயரத்தினம் அவர்களின் குடும்பத்தினருக்குச் சொந்தமான மாவத்தகமவில் அமைந்திருந்த தெங்கு உற்பத்தி  தொழிற்சாலையில் முகாமையாளர் பணி கிடைத்தது.
அவரும் முன்னர் அரியாலை ஸ்ரான்லி கல்லூரியில் படித்தவர்தான். அவரது வீடும் கண்டிவீதியில்தான் இருந்தது. அவர் எங்கள் ஊருக்கு வந்தது முதல் எனது நண்பரானார். வயதால் என்னை விட மூத்தவர் அதனால் அவரை, அண்ணா என்றழைப்பேன்.
1972 இல் அவருக்கும் அரியாலையில் திருமணம் நடந்து, துணைவியாருடன் எங்கள் ஊருக்கே வந்து நிரந்தரமானார். அவரது குழந்தைகள் எனது செல்ல மருமக்களாயினர். எனது தம்பியின் திருமண பதிவிற்கு அந்த அண்ணரே சாட்சிக்கையொப்பமும் இட்டார். எங்கள் குடும்பத்தில் அவர்களும் அவ்வாறு நெருக்கமாக இணைந்தனர்.
அண்ணரின் துணைவியான அந்த அக்காவிற்கு, இருதயத்தில் ஒரு உபாதை வந்தது . நண்பர் மல்லிகை ஜீவாவின் மூத்த புதல்விக்கும் அக்காலப்பகுதியில் அதே போன்றதொரு உபாதை ( Hole in the heart )  வந்தது. யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் நற்குணம்,  ஜீவாவின் மகளை அழைத்து பரிசோதித்துவிட்டு, கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை வழங்கி சுகப்படுத்தினார். இதுவிடயமாக ஜீவாவுடன் நானும் பல தடவைகள் கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு சென்று வந்தமையால் மருத்துவர் நற்குணமும் அறிமுகமானார்.
தியாகராஜா அண்ணாவையும் அக்காவையும் அவரிடம் அழைத்துச்சென்றேன். சிகிச்சைக்காக அக்கா அனுமதிக்கப்படுவதற்கு நாள் குறிக்கப்பட்டது. அப்பொழுது 1979 ஆம் ஆண்டு.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அங்கிருந்த எழுதாத சட்ட விதிகளின் பிரகாரம் ஒரு பைந்து இரத்தம் தானமாக வழங்கப்படல்வேண்டும். கொழும்பில் அதற்கு யாரையாவது தயார் செய்யும்படி அண்ணா சொன்னார். அன்று மாலை அக்காவை அனுமதிக்கவேண்டும். அதற்கு முன்னர் இரத்த தானம் செய்து அதற்கான சான்றிதழை அனுமதிக்கப்படும் வார்டில் தாதியரிடம் காண்பிக்கவேண்டும்.
" அங்கிருக்கும் இரத்தவங்கிக்கு காலை வேளையில் சென்றால் பணத்திற்காக இரத்த தானம் வழங்க வருபவர்களை சந்திக்கமுடியும் " - என்று நான் பணியாற்றிய வீரகேசரி அலுவலகத்தில் சொன்னார்கள். நானும் சென்று பார்த்தேன். எவரும் கிடைக்கவில்லை. இறுதியில் நானே இரத்தம் வழங்கினேன். எனினும் இதுபற்றி அண்ணாவிடமோ அக்காவிடமோ சொல்லக்கூடாது என்று மனதிற்குள் தீர்மானித்திருந்தேன்.
அக்கா மாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்த தாதியர் மூலம் அண்ணா, நான் இரத்தம் வழங்கிய தகவலை எப்படியோ அறிந்து என்னை கடிந்துகொண்டார். அந்த மாதம்தான் எனக்கும் திருமணம் நடந்திருந்தது.         " அக்காவுக்குத்தானே கொடுத்தேன். இதனையேன் பெரிசுபடுத்துகிறீர்கள் " என்றேன். அண்ணா கண்கள் பனிக்க என்னை அணைத்துக்கொண்டார். அக்காவும் அறிந்துகொண்டார். அன்று தொடங்கிய அந்த இரத்த உறவு இற்றைவரையில் நீடிக்கிறது.
அண்ணா சில வருடங்களுக்கு முன்னர் மறைந்துவிட்டார். அண்ணா - அக்காவின் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி திருமணம் முடித்து பிள்ளைகளுக்கும் பெற்றோர்களாகிவிட்டனர். 1984 இற்குப்பின்னர் அனைவரும் லண்டன் வாசிகளாகிவிட்டனர்.
இந்த அண்ணா - அக்கா உறவினால் எனக்கு அரியாலையில் மிகப்பெரிய உறவு வட்டம் தோன்றியது. 1983 ஆம் ஆண்டு கலவரத்தையடுத்து பாதுகாப்பின் நிமித்தம்  யாழ்ப்பாணம் அரியாலைக்கு அண்ணாவும் அக்காவும் எனது குடும்பத்தை அழைத்துச்சென்று கண்டிவீதியில் செம்மணிவீதியில் குடியமர்த்தினர். அந்த வீட்டுக்கு முன்னால் யாழ்ப்பாணம் ஶ்ரீபார்வதி அச்சகத்தின் உரிமையாளர் ரவீந்திரனின் வீடு. அவரும் அக்கா - அண்ணாவின் நெருங்கிய உறவினர்.  அவரை நான் ரவிகுஞ்சியய்யா என அழைப்பேன்.
அவரது அச்சகத்தில்தான் எங்கள் மூத்த எழுத்தாளர் வரதர் ஒரு காலத்தில் வேலை செய்தார்.  இலக்கிய நண்பர் கே. டானியலின் பஞ்சமர் நாவலும் இங்குதான் அச்சாகியது. ஒரு காலத்தில் வடபிரதேச கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரசுரங்களும் இங்குதான் அச்சிடப்பட்டன. அரியாலை கண்டிவீதியில் அமைந்துள்ள நீர்நொச்சித்தாழ்வு சித்திவிநாயகர் கோயில் கிணற்றில் நன்னீர் ஊற்று இருந்தமையால் அந்தப்பகுதி மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியானது.
இந்தக்கோயிலின் பூர்வீகம் தொடர்பாக இப்படியும் ஒரு கதை இணையத்திலிருக்கிறது:
யாழ்பாடியின் பின்,  யாழ்ப்பாணம் சிலகாலம் அரசற்ற நாடாயிருந்து பின்னர் கி.பி 16 ஆம் நூற்றாண்டு வரையும் சிங்கை ஆரிய மன்னர்களாலும், ஈற்றில் சங்கிலி அரசனாலும் ஆளப்பட்டது. இக்காலத்தில் சைவசமயமும் சைவக்கோயில்களும் சிறப்புற்று விளங்கின. அதன் பின்னர் பறங்கியராலும் ஆங்கிலேயராலும் ஏறக்குறைய நான்கு நூற்றாண்டு காலம் ஆளப்பட்டது. சங்கிலி அரசனின் ஆட்சிக்குப்பின் அதாவது பறங்கியர் ஆட்சி ஆரம்பித்த போது சைவக் கோயில்கள் பெரும்பாலும் தரைமட்டமாக்கப்பட்டன. நல்லூரில் சிறப்புற்று விளங்கிய கைலைநாதர் கோயில் இருந்த இடம் தெரியாது அழிக்கப்பட்டதென்று சொல்லப்படுகின்றது. அக்காலத்தில் சித்தி விநாயகர் கோயில் இடிபடாது தப்பியிருப்பது எங்ஙனம்?
சங்கிலி மன்னன் மன்னாரிலிருந்த கத்தோலிக்கருக்குச் செய்த கொடுமைகளுக்குப் பழிக்குப்பழி வாங்காது விடமாட்டார்களென்று உணர்ந்த பிராமணர்களிற் சிலர் தத்தம் கோயில்களிலிருந்த விலையுயர்ந்த பொருட்களையும் விக்கிரகங்களையும் அப்புறப்படுத்தி விட்டு,  அதாவது சனநடமாட்டமில்லாத இடங்களில் மறைத்து வைத்து விட்டு தாமும் ஓடி ஒளித்திருப்பார்கள். அல்லது தமது தாய் நாடாகிய இந்தியாவுக்கே சென்றிருப்பார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா? சித்திவிநாயகர் விக்கிரகமும் இவ்வாறே மறைக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கத்தாட்சியாக இப்பகுதியில் கர்ண பரம்பரையாகப் பேசப்பட்டு வரும் வரலாறு ஒன்றுள்ளது.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு என்று வழங்கப்படும் புண்ணிய பூமியில் மாடு மேய்த்து வந்த சிறுவர்கள் தாங்கள் கொண்டு சென்ற மாடுகளை மேயவிட்ட பின்னர் கூடி விளையாடுவது வழக்கம் என்றும்,  ஒருநாள் அவர்கள் விளையாடும் போது தற்செயலாகப் பற்றையொன்றினுள் சித்திவிநாயகர் விக்கிரகம் ஒன்றைக் கண்டெடுத்தார்கள் என்றும் அதன் பின்னர் அந்த விக்கிரகத்தை வைத்து சுவாமி விளையாட்டை விளையாடி வந்தனர் என்றும் அதனை அறிந்த பெரியோர்கள் அவ்விடத்திலேயே சித்திவிநாயகருக்கு ஓர் கோயில் கட்டுவித்தார்கள். என்றும் பேசப்பட்டு வருவதே அவ் வரலாறு ஆகும்." இது இந்தக்கோயிலின் பூர்வீகக்கதை!
இக்கோயிலின் தேர்முட்டியில் நடந்த  கதையாடல்களை  நான் எழுதியிருக்கின்றேன்.
அந்தத் தேர்முட்டியில் 1983 இனக்கலவரத்தையடுத்த காலப்பகுதியில் நான் சந்தித்த மாணவப்பருவத்து இளைஞர்கள் பலர் கார்ட்ஸ் விளையாடுவார்கள். எனக்கு அந்த விளையாட்டுத் தெரியாது. எனது மூத்த குழந்தையையும் தூக்கிக்கொண்டு அந்தக்கோயில் பகுதிக்குச்செல்லும்போது,  பத்திரிகையிலிருந்து வந்திருந்தமையால் அந்த இளைஞர்கள் என்னுடனும்  அரசியல் பேசுவார்கள். சில மாதங்களில் அவர்களில் சிலர்,  சில விடுதலை இயக்கங்களில் சேர்ந்து காணாமல்போனார்கள் ! பின்னாளில் சிலர் வெளிநாடுகளில் தஞ்சமடைந்தனர்.
சிலர் சகோதர படுகொலைகளில் பரலோகம் சென்றனர். அவர்களில் ஒரு சிலர் தலையாட்டிகளாயினர். இயக்கங்களினால் தலையில் போடப்பட்டனர். சிலர் காட்டிக்கொடுப்புகளினால் கைதாகி அரச தடுப்பு முகாம்களில் வதைபட்டனர். ஒவ்வொரு இயக்கத்தினதும் இயல்புகளுக்கும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கும் ஏற்ப அந்தப்பெயர்களை அவ்விளைஞர்கள் சூட்டியிருந்தனர்.
அலைகள் ஓய்வதில்லை (தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் )விடியும் வரை காத்திரு ( புளட்)  பயணங்கள் முடிவதில்லை( ஈ.பி. ஆர். எல். எப்.)  , தூரத்து இடிமுழக்கம் ( ஈரோஸ்)  நாளை நமதே ( டெலோ)  எங்கேயோ கேட்ட குரல் (செம்படை)
இத்தனை வருடங்களின் பின்னர் இது பற்றி நினைத்து சிரிப்பதா? அழுவதா ? என்பது தெரியவில்லை!
அச்சம்பவங்கள் குறித்து தேர்முட்டி ( சிறுகதை - வீரகேசரியில் வெளிவந்தது) வழிகாட்டி மரங்கள் நகருவதில்லை ( புனைவு சாரா பத்தி எழுத்து - சொல்ல மறந்த கதைகள் தொகுப்பில் இடம்பெற்றது) ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்.
1984 ஆம் ஆண்டின் பின்னர் அரியாலையைச்சேர்ந்த பல இளைஞர்கள் , யுவதிகள் அய்ரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்தபோது எங்கள் ஊரில் எமது வீடு அவர்களுக்கு தங்கிச்செல்லும் சத்திரமானதால், அதனை Transit இல்லம் என்றும் அவர்கள் அழைத்தனர். அவர்களின் அம்மாமார் எனக்கு குஞ்சியம்மாக்களாயினர். இந்தப்பதிவின் தொடக்கத்தில் வரும் தியாகராஜா அண்ணர் குடும்பத்தின் உறவினர்கள் அவர்கள்.
எனது அவுஸ்திரேலியா புகலிட வாழ்வுக்கு அவர்கள்தான் முக்கியகாரணம். அவர்களது உதவி இல்லையேல்  நான் இங்குவந்திருக்கவேமாட்டேன். லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நோர்வே, கனடாவில் வதியும் அரியாலையைச்சேர்ந்த பலர் இன்றளவும் என்னோடு  தொடர்பிலிருக்கிறார்கள். அவர்களில் பலர் குடும்பஸ்தர்களாகி பேரன், பேத்திகளும் கண்டுவிட்டனர்.
அன்று பல வருடங்களுக்கு முன்னர் தொடங்கிய இரத்த உறவு -  சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் எனச்சொல்லுமாப்போன்று நீடித்து நிலைத்து நிற்கிறது.
எனது லண்டன் வருகையறிந்த மோகனா அக்கா ( திருமதி தியாகராஜா) தனது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் தெரிவித்துவிட்டார்கள். ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்கு அழைத்தனர். இந்த அன்புத்தொல்லையிலிருந்து மீட்சி பெறுவதற்கு ஒரே வழி அனைவரையும் ஓரிடத்தில் கூடச்செய்வதுதான் என்று எனக்குத் தோன்றியது.
 மோகனா அக்கா, இலங்கையில் ஒரு திருமண நிகழ்வுக்குச் செல்லவிருந்தமையால், நான் லண்டன் வந்திறங்கிய மறுகணமே தனது வீட்டுக்கு  அழைத்துவிட்டார்கள். சேயும் சேயுமாக அவர்கள் உபசரித்தனர். அங்கிருந்தே ஏனையவர்களை நான் சந்திப்பதற்கும் நாள் குறித்தனர்.
இத்தகைய சம்பிரதாயம் புகலிடங்களில் தொடர்வதை அறிவீர்கள். பல நாடுகளில் ஊர்ச்சங்கங்கள் இருப்பதுபோன்று, முகநூல்களில் Our Sweet Home என்ற வலைப்பின்னல்களும் தோன்றியிருக்கின்றன.  வாட்ஸ் அப் மூலம் உடனுக்குடன் தகவல் பரிமாறி, குடும்ப நிகழ்வுகள், பிறப்பு - மறைவுச்செய்திகள் பரிமாறப்படுகின்றன.
மோகனா அக்காவின் தங்கை ஹேமாவின் வீட்டில் அனைவரும் ஒன்றுகூடி என்னை அழைத்தனர். நீண்ட இடைவெளிக்குப்பின்னர், இடப்பெயர்வு - புலப்பெயர்வு காலத்தில் நிகழ்ந்த மறக்கமுடியாத சம்பவங்களையும் நேர்ந்த அவலங்களையும்  நினைவுகூர்ந்து மறைந்தவர்களையும் காணாமல் போனவர்களையும் பற்றிப்பேசினோம்.
அரியாலை கிழக்கில் இயக்கத்தை தேடிவந்த படையினர், ஒரு குடும்பத்தில்  புதுமணத்தம்பதிகள்  கால்மாறிச்செல்லும் சடங்கின்போது சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியையும் எழுதியிருக்கின்றேன். மாற்று இயக்க இளைஞனை பெரிய இயக்கம் சுற்றிவளைத்து இழுத்துச்சென்றபோது அவனைப்பெற்ற தாய் போராடி மீட்டெடுத்து,  நோர்வேக்கு அனுப்புவதாக வாக்குறுதி வழங்கி,  கொழும்புக்கு கொண்டுவருகையில் ஆனையிறவு முகாமில் அவனது நண்பனாலேயே (தலையாட்டி) காட்டிக்கொடுக்கப்பட்டு,  நீண்டகாலம் தடுப்பிலிருந்து,  இலங்கை - இந்திய ஒப்பந்த பொதுமன்னிப்பில் விடுதலையாகி புலம்பெயர்ந்து சென்றது முதலான பல கதைகளுக்கு நேரடி சாட்சியாக இருந்து பல பத்திகள் எழுதியிருக்கின்றேன்.
அக்காலப்பகுதியில் சந்தித்த அதிர்ச்சிகள், ஆச்சரியங்கள், அவலங்கள்                    " யாவும் கடந்து செல்லும்"  என்ற  காலமாற்றத்தில் நனவிடைதோய்தலுக்குட்பட்டன.
"பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா?" பல குடும்ப உறுப்பினர்கள் புடைசூழ அன்றைய இரவுப்பொழுது கழிந்தது. என்னை அங்கு அழைத்துச்சென்ற எனது மருமகள் ஜெயசித்ராவுக்கு அன்று நாம் பேசிய கதைகள் யாவும் புதிது.
அவள் பிறந்து வளர்ந்தது படித்தது திருமணமானது எங்கள் ஊரில்தான். இன்று அவளும் லண்டன் வாசி! அவளுக்கும் வடபகுதி தெரியாது! 1983 கலவரக் கதைகளையும் போர்க்காலக் கதைகளையும் இடப்பெயர்வு அவலங்களையும் கேட்டு வியப்படைந்தாள்.
" மாமா அந்தக்கதைகளையெல்லாம் எழுதுங்கள். " என்றாள்.
" புகலிடத்திலும் நிறைய கதைகள் இருக்கின்றன. தாயகம் தொடங்கி புகலிடம் வரையில் ஒவ்வொருவரிடமும் நிறைய கதைகள் மனதில் சஞ்சரித்துக்கொண்டிருக்கின்றன. பலர் எழுதுகிறார்கள் .  அதில் நானும் ஒருவன் " என்றேன்.
லண்டன் ஐ.பி.சி. தொலைக்காட்சி நேர்காணலுக்கும் அழைத்துச்சென்றாள். அவளது வீட்டில் ஸ்கைப் மூலம் லண்டன் தமிழ் வானொலிக்காக நடா.மோகனும் நவஜோதியும் ஒலிப்பதிவுசெய்த நேர்காணலை அருகிருந்து கேட்டாள்.
அவளது முகத்தில் வியப்பின் ரேகைகள் படர்ந்தன!
இந்த இணைப்பில் லண்டன் ஐ.பி.சி. தொலைக்காட்சியில் நண்பர் அனஸ் இளைய அப்துல்லா தொடுக்கும் கேள்விகளையும் எனது பதில்களையும் காணலாம்.
https://www.youtube.com/watch?v=Cx8X4rcYv6g

Attachments area
Preview YouTube video எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களுடன் நேர்காணல் | Agakkan 16th Feb
எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களுடன் நேர்காணல் | Agakkan 16th Feb


( தொடரும்)








-->








No comments: