யாழ் பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை!
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் : 10 பெண்கள் உள்ளிட்ட 85 பேர் கைது
மினுவாங்கொடையில் 12 கடைகள் முழுமையாக தீக்கிரை, பள்ளிவாசலுக்கும் பலத்த சேதம்
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பகுதியில் சிரமதானம் !
விடுதலை புலிகள் மீதான தடையை நீடித்தது இந்தியா!
முல்லைத்தீவில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பிரார்த்தனை
நிச்சயமாக நான் போட்டியிடுகின்றேன்- கோத்தபாய ராஜபக்ச
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
சிறுமியின் பொதுச்சுடருடன் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
ஜிகாதி பயங்கரவாத்தை ஒழிக்க இலங்கையுடன் கைக்கோர்க்கும் அமெரிக்கா - இந்தியா
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்- ஜெரமி கொர்வின்
”பத்தாண்டுகள் நிறைவில் போரினால் பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தவறியிருக்கிறது ”
ஈஸ்டர் தாக்குதல் ; உயிரிழந்தோருக்கு 119.3 மில்லியன் ரூபா நஷ்டஈடு!
யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் ; பிரித்தானியா, கனடா, அமெரிக்கா இரங்கல்!
யாழ் பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை!
17/05/2019 சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் குறித்த வழக்கு இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுட்டது. சட்டமா அதிபரிடமிருந்து தொலைநகல் மூலம் தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய மூவரையும் பிணையில் விடுவிக்க ஆட்சேபனை இல்லை என்று கோப்பாய் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
மாணவர்களை பிணையில் விடுவிப்பது மட்டுமல்ல, அவர்களை அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிப்பதே தமது நோக்கமென்றும் பொலிஸார் இந்த வழக்கை உரியமுறையில் விசாரணை செய்தால் குறித்த மூவரையும் வழக்கிலிருந்தே விடுவிக்க முடியும் என்று சட்டத்தரணி கே.சுகாஷ் குறிப்பிட்டார்.
இருதரப்பு கருத்துக்களையும் ஆராய்ந்த நீதவான், மாணவர்களையும் சிற்றுண்டிச்சாலை நடத்துனரையும் ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவித்து வழக்கை ஒத்திவைத்தது. நன்றி வீரகேசரி
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் : 10 பெண்கள் உள்ளிட்ட 85 பேர் கைது
15/05/2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தலை நகர் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை மையப்டுத்தி இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 10 பெண்கள் உள்ளிட்ட 85 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.
சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரதன்வின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணைகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அந்த பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் பயங்கரவாதிகள் பயன்படுத்திய 17 பாதுகாப்பு இல்லங்களும் 7 பயிற்சி முகாம்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நன்றி வீரகேசரி
மினுவாங்கொடையில் 12 கடைகள் முழுமையாக தீக்கிரை, பள்ளிவாசலுக்கும் பலத்த சேதம்
15/05/2019 பஸ்களிலும்,மோட்டார் சைக்கிள்களிலும் நாலா புறங்களிலுமிருந்து மினுவாங்கொடை நகருக்கு வருகை தந்த குழுவினர் மினுவாங்கொடை பள்ளிவாசலைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் 27 வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு சேதங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. இவற்றில் 12 கடைகள் தீக்கிரையாகியுள்ளன என மினுவாங்கொடை ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் எம்.ஆர்.எம். சவாஹிர் செயலாளர் ஏ.டபிள்யூ.ரஷீத் ஆகியோர் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் இரவு மினுவாங்கொடை நகரில் மேற்கொள்ளப் பட்ட தாக்குதல்கள் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில்,
கடைகளைத் தாக்கிய அவர்கள் பொருட்களை வெளியிலெடுத்து எறிந்ததுடன் சில பொருட்களை கொள்ளையிட்டும் சென்றுள்ளனர்.
12 கடைகள் முற்றாக எரிந்துள்ளன.பள்ளிவாசலுக்கு முழுமையாக சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கும் 8.30 மணிக்கும் இடையிலே தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
பள்ளிவாசல் இரண்டு தடவைகள் தாக்கப்பட்டுள்ளன.7 மணிக்கு பள்ளிவாசலை கற்களால் தாக்கி,கண்ணாடிகளை உடைத்துள்ளார்கள்.
பின்பு 8.30 மணியளவில் பள்ளிவாசலின் பிரதான நுழைவாயிலை உடைத்து பள்ளிவாசலினுள் சென்று முழுமையாகச் சேதப்படுத்தியுள்ளார்கள்.மினுவாங்கொடை நகரில் முஸ்லிம்களின் 3 வீடுகளும் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளன.
உள்ளூர்வாசிகளுடன் அநேகமானோர் வெளியிலிருந்து வந்தே தாக்குதல்களை நடத்தினார்கள். மினுவாங்கொடையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவே வாழ்கிறார்கள்.இதனால் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.அவர்களை அமைதியாகவும் பொறுமையுடனும் இருக்குமாறு வேண்டியுள்ளோம் என்றார்கள்.
சம்பவ இடத்தில் தற்போது விசேட அதிரடிப்படை ,இலங்கை விமானப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் இப்பிரதேசத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை நகரில் அமைதியற்ற சூழ்நிலை மேலும் நீடிக்காதிருக்கும் வகையில் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மினுவாங்கொடை புருல்லபிட்டிய ,கல்லொழுவை,ஜாபாலவத்தை,பொல்வத்தை,பத்தண்டுவன, மிரிஸ்வத்தை,கோப்பிவத்தை ஆகிய பகுதிகளில் நேற்று முன் தினம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
மதகுருமார் அரசியல்வாதிகள் விஜயம்
மினுவாங்கொடை நகருக்கும் பள்ளிவாசல்களுக்கும் நேற்று அரசியல்வாதிகளும் மதத் தலைவர்களும் விஜயம் செய்து சேத விபரங்களைப் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
பென்சி கடை உரிமையாளர்
மினுவங்கொடை நகரில் பென்சி கடை உரிமையாளரும் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினருமான சுஹைதர் தெரிவிக்கையில் எனது கடை மினுவாங்கொடை நகரிலே மத்திய சந்தையில் இருக்கிறது.
எனது கடையை மாலை 6.30 மணியளவில் தாக்கினார்கள். எனக்கு சுமார் 50 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மினுவாங்கொடையில் உள்ள முஸ்லிம்களின் கடைகள்ளை தாக்கி விட்டார்கள் என்றார்.
தொலைபேசி கடை உரிமையாளர்
மினுவாங்கொடை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்னாலே எனது தொலைபேசிக் கடை இருக்கிறது. காடையர்கள் தாக்குதல்களை மேற்கொள்வதாகவும்இ கடையை மூடுமாறும் கூறப்பட்டது. நான் கடையை மூடிவிட்டேன். எனது கடை தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதில் சுமார் 17 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார். நன்றி வீரகேசரி
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பகுதியில் சிரமதானம் !
15/05/2019 இம்மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர்கள் வாழும் பகுதியெங்கும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் இம்மாதம் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது .
இதனை முன்னிட்டு நேற்று மாலை சிரமதான பணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நினைவுதூபியில் எல்லோரும் இணைந்து வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவில் உள்ள அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், திருகோணமலை தென்கையிலை ஆதீன குருக்கள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள் ,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன், யாழ் பல்கலைகழக மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டனர் .
இந்நிலையில் இம்மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் வழமைபோல அஞ்சலி செலுத்தி தீபம் ஏற்ற உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .
நன்றி வீரகேசரி
விடுதலை புலிகள் மீதான தடையை நீடித்தது இந்தியா!
14/05/2019 இந்தியாவின், மத்திய அரசாங்கம் விடுதலை புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகள் நீடித்துள்ளது.
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் உள்துறை அமைச்சகம் நீடித்துள்ளது.
இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் தடுக்க தடை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
முல்லைத்தீவில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்
13/05/2019 முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேறி இருக்கின்ற சிங்கள மக்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த கொக்கிளாய் முகத்துவாரம் மக்களுக்கு வீடுகள் வழங்குவதற்கென தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அடிக்கல் நாட்டுவதற்கு முற்பட்ட வேளை அந்த விடயம் தடுத்து நிறுத்தப்பட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட செயலாளருடன் கலந்துரையாட மாவட்ட செயலகத்துக்குள் நுழைய முற்பட்ட போது மாவட்ட செயலக வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனை தொடர்ந்து போலிசார் சென்று மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடி 3 பேரை கலந்துரையாட அனுமதித்தனர் சுமார் ஒரு மணிநேர கலந்துரையாடலை தொடர்ந்து இருக்கின்ற சிக்கல் நிலைமைகளை கூறி ஒருவார கால அவகாசத்தில் இதற்கான தீர்வு தொடர்பில் தெரிவிப்பதாக தெரிவித்து இருந்ததாகவும் இருப்பினும் மக்களுடன் கலந்துரையாடுமாறு மக்கள் கேட்டதற்கு இணங்க மாவட்ட செயலாளர் போராட்ட காரர்களை வந்து சந்தித்து குறித்த விடயத்தை தெரிவித்தார்.
இதனை ஏற்க முடியாதெனவும் உடனடியாக தீர்வு வேண்டுமெனவும் அரச அதிபரை மக்கள் கடும் தொனியில் எச்சரிக்கை மாவட்ட செயலாளர் குறித்த இடத்தை விட்டு சென்றார் .
இருப்பினும்போராட்ட காரர்களது பிரதிநிதிகள் மாவட்ட செயலாளரை சந்திக்க சென்ற வேளையில் இருந்து ஏனைய மக்கள் மாவட்ட செயலக வாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இருப்பினும் போலிசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
இறுதியில் மாவட்ட செயலாளரை மீண்டும் சந்தித்த பிரதிநிதிகள் மாவட்ட செயலாளர் இன்று மாலை குறித்த இடத்துக்கு நேரில் வருகைதருவதாக அளித்த உறுதிமொழியை தெடர்ந்து போராட்ட காரர்கள் கலைந்து சென்றுள்ளனர். நன்றி வீரகேசரி
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பிரார்த்தனை
18/05/2019 வவுனியா சகாயமாதபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாக சபையினர், சமூக ஆர்வலர்கள் அமைப்பு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவுப் பிரார்த்தனை நிகழ்வு இன்று காலை 9.30மணியளவில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செய்யப்பட்டதுடன் ஆத்மா சாந்திப்பிரார்த்தினையும் இடம்பெற்றது.
இறுதி யுத்ததின் போது முள்ளிவாய்க்காலில் கணவனை இழந்த மற்றும் பிள்ளைகளை இழந்த 10 குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் வரலாற்றினை நினைவுபடுத்தும் முகமாக உப்பில்லாக் கஞ்சியும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ. பிரதீபன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், சமூக ஆர்வலர்கள், ஆலய நிர்வாக சபையினர் ,பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். நன்றி வீரகேசரி
நிச்சயமாக நான் போட்டியிடுகின்றேன்- கோத்தபாய ராஜபக்ச
18/05/2019 ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக நான்போட்டியிடுகின்றேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அல்ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நிச்சயமாக நான் போட்டியிடுகின்றேன், இது குறித்து நீண்ட காலத்திற்கு முன்பே நான் தீர்மானித்துவிட்டேன் என தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச இல்லாவிட்டால் நான் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடவேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல்களின் பி;ன்னர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது அறிவிப்பை தான் வெளியிட்டுள்ளதை சந்தர்ப்பவாதமாக கருதமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நான் நிச்சயமாக ஒரு வாய்ப்பாக அல்லது சந்தர்ப்பமாக கருதவில்லை என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச தேர்தல்கள் குறித்து நான் அக்கறை காண்பிக்கவில்லை எனது தேசம் குறித்தே நான் கரிசனையுடன் உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
நான் கவனம் செலுத்திய விடயமொன்று அழிக்கப்பட்டுவிட்டது,இதன் காரணமாக நான் கவலையடைந்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் என்ற அடிப்படையில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நவீனத்துவமான 5000 புலனாய்வாளர்களை நான் பணியில் ஈடுபடுத்தினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட யுத்தகுற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச நீங்கள் மனித உரிமைகள் குறித்து பேசுகின்றீர்கள்,தனிநபர்களின் சுதந்திரம் குறித்து கருத்துவெளியிடுகின்றீர்கள்,நீங்கள் நல்லிணக்கம் குறித்து கருத்துக்களை வெளியிடுகின்றீர்கள் ஆனால் இவை அனைத்தும் நாட்டின் பாதுகாப்பிலேயே தங்கியுள்ளன என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேசத்தில் பாதுகாப்பின்மை நிலவினால் என்ன நடக்கும் சுதந்திரம் நிலவுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈவிரக்கமற்ற ஆபத்தான வலுவான பயங்கரவாத அமைப்பினை தோற்கடித்த இராணுவம் இதுவெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவையனைத்தும் கொலைகாரர்களால் காடையர்களால் செய்யப்பட்டதா என நான் ஆச்சரியப்படுகின்றேன், எங்கள் இராணுவத்தினர் அவ்வாறானவர்கள் என நாங்கள் தெரிவிக்கின்றோமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனிநபர்கள் சிலர் இருக்கலாம் ஆனால் நீங்கள் அனைவரையும் அவ்வாறானவர்களாக பொதுமைப்படுத்துகின்றீர்கள்,சர்வதேச அளவிலும் அவர்கள் இதனை செய்கின்றார்கள் எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
18/05/2019 முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் ரவிகரன் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
"எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல்.
ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் ,செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி ,உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலித்தேன்.."
என்று சற்று முன்னர் இனழிப்பு போரில் உயிர் நீத்த உறவுகளுக்காக மலர் தூவி அஞ்சலித்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இன்று காலை ஒழுங்கமைக்கப்பட்ட உயிர் நீத்த எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் நடைபெறும் என்பதையும் அவர் தெரிவித்தார்.
சிறுமியின் பொதுச்சுடருடன் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
18/05/2019 முள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் காணிக்கையுடன் நடைபெற்றது .
தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்டு யுத்தம் நிறைவுக்கு வந்த நாளான 2009 மே 18 ஆம் திகதியன்று தமிழ் மக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக வருடம் தோறும் நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் யுத்தம் நிறைவடைந்து பத்தாவது ஆண்டு நிறைவடைகின்ற நிலையில் நாட்டில் அவசரக்கால சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் படையினர் மற்றும் புலனாய்வாவார்களின் தீவிர கண்காணிப்புகளுக்கு மத்தியில் இம்முறையும் முள்ளிவாய்க்கால் தமிழின பேரவல நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றன.
சிறப்பாக இவ்வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் (வடக்கு கிழக்கு ) ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு நேர்த்தியாக நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தது.
அந்த வகையில் இன்றைய தினம் தமிழினப் படுகொலை 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் காலை பத்து முப்பது மணிக்கு அக வணக்கத்தோடு ஆரம்பித்துத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் தனது தாய் இறந்துகிடப்பதை கூட அறியாது அந்த தாயின் மார்பில் பால் குடித்தும் அவ்வேளையில் தனது ஒரு கையை இழந்த சிறுமி ஒருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து மக்களால் உயிரிழந்தவர்களுக்காக நினைந்துருகி சுடர்கள் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழினப் படுகொலை நாளான மே 18 பிரகடனம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். சர்வமத தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் மக்களோடு மக்களாக நின்று உயிரிழந்த உறவுகளுக்காகச் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
இந்த நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு மக்கள் உணவாக உட்கொண்டு பசிபோக்கிய முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் , பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா ,சிவமோகன் ,சிவசக்தி ஆனந்தன் ,சாள்ஸ் நிர்மலநாதன் ,செல்வம் அடைக்கல நாதன் , முன்னாள் மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் , சிவநேசன் ,ஐங்கரநேசன் ,முன்னாள் மாகாசபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம் ,ரவிகரன் ,கமலேஸ்வரன் ,புவனேஸ்வரன் ,சயந்தன் .கஜதீபன் ,யாழ் மாநகர மேஜர ஆர்னோல்ட் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர் . நன்றி வீரகேசரி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
18/05/2019 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது.
10ஆம் ஆண்டு நினைவு தினமான இன்றைய தினம் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. காலை 10.30 மணிக்கு அக வணக்கத்துடன் நினைவஞ்சலி ஆரம்பமாகி 10.32 மணிக்கு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் உறவினர் ஒருவர் பொது சுடர் ஏற்றினார்.
அதனை தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜிகாதி பயங்கரவாத்தை ஒழிக்க இலங்கையுடன் கைக்கோர்க்கும் அமெரிக்கா - இந்தியா
18/05/2019 அமெரிக்க- இலங்கை இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயமாக கருத கூடிய வகையிலான கலந்துரையாடல் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.
வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழு பேச்சு வார்த்தைகளில் கலந்துக்கொண்டிருந்தது. அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக்கேல் றிச்சர்ட் பொம்பியோ தலைமையிலான முக்கிய தரப்பினர் அமெரிக்கா சார்பில் கலந்துக்கொண்டிருந்தனர்.
இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் அவசரமாக நடைப்பெற்ற இந்தப் கலந்துரையாடலில் , பிரதானமாக தீவிரவாத முறியடிப்பு, பாதுகாப்பு, மற்றும் ஒருங்கமைக்கப்பட்ட நாடுகடந்த குற்றங்கள் உள்ளிட்ட விடயங்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் இரு நாடுகளினதும் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் இந்தோ-பசுபிக் மூலோபாயம் இலங்கை மற்றும் ஆசியப் பிராந்தியம், இராணுவ- இராணுவ உறவுகள் மற்றும்வருகை படைகள் உடன்பாடு மற்றும் இலங்கையின்
அமைதிகாப்புக்கான உதவி கண்ணிவெடிகளை அகற்றும் ஆற்றல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதே வேளை அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழு மெக்சிக்கோவில் வெளிவிவகார அமைச்சர் மார்சிலோ எப்ராட்டை சந்தித்து கலந்துரையாடியது.
அத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாத ஜிகாதி பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இலங்கைக்கு அனைத்து வகையான ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது. நன்றி வீரகேசரி
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்- ஜெரமி கொர்வின்
18/05/2019 தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரிட்டனின் தொழில்கட்சித் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஜெரமி கொர்வின் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்டிருக்கும் பிரிட்டனின் தொழில்கட்சித் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஜெரமி கொர்வின், தமிழ் மக்களுக்கு நிதி கிடைக்கவும், அவர்களது சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவும் முன்னெடுக்கப்படக் மூடிய செயற்பாடுகளுக்கு எதிர்காலத்தில் பதவிக்கு வரக்கூடிய தொழில்கட்சி அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
படுகொலைகளின் பத்தாவது வருடத்தை நினைவுகூரும் இந்தச் சந்தர்ப்பம் மிகவும் கவலைக்குரியது. அட்டூழியங்கள் செய்யப்பட்டன என்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம். மனித உரிமை மீறல்களுக்கு ஒரு முடிவு வேண்டும். அட்டூழியங்களுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும். அரசியல் இணக்கத் தீர்வொன்று காணப்பட்டு, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். நிலைபேறான சமாதானத்திற்கு இது முக்கியமானதாகும் என்று கொர்வின் கூறியிருக்கிறார்.
எதிர்காலத்தில் பிரிட்டனில் பதவிக்கு வரக்கூடிய தொழில்கட்சி அரசாங்கம் இலங்கைக்கான வர்த்தக மற்றும் ஆயுத விற்பனை தொடர்பில் இராஜதந்திர நெருக்குதல்களைப் பிரயோகிக்கும். மனித உரிமைகள் தொடர்பான பொறுப்புக்கூறல்களுக்கு வற்புறுத்தும். கொடூரமான யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் இலங்கையின் வடக்கில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை இன்று (நேற்று) நாம் நினைவுகூருகிறோம். அவர்களின் நினைவாக அட்டூழியம் செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று கோருகின்றோம் என்று குறிப்பிட்ட தொழில்;கட்சித் தலைவர், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களையும் அதற்குப் பிறகு முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளையும் கடுமையாகக் கண்டித்தார். நன்றி வீரகேசரி
”பத்தாண்டுகள் நிறைவில் போரினால் பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தவறியிருக்கிறது ”
18/05/2019 இலங்கையில் நடைபெற்ற கொடூர யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட பலருக்கும் நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தவறியிருக்கின்றது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கவலை வெளியிட்டிருக்கின்றது.
முப்பது வருட யுத்தம் 2009 மே மாதம் 18 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதி வழங்கல் மற்றும் மனித உரிமைகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வலுவூட்டல் என்பவற்றை நடைமுறைப்படுத்துவோம் என்று கடந்த 2015 அக்டோபர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது. அந்தக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, பொறுப்புக்கூறல் மற்றும் நீதி வழங்கல் என்பன தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
இலங்கையில் யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டமையானது சிதைந்திருந்த சமூகத்தை மீளக் கட்டியெழுப்பல் மற்றும் சமூக அபிவிருத்தி என்பவற்றுக்கு மாத்திமன்றி, நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுக்கும் வாய்ப்பேற்படுத்திக் கொடுத்தது என்று கூறியிருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர், எனினும் யுத்தத்தின் போது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் தொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தவறியிருப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றிலிருந்தும் தவறியிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
ஈஸ்டர் தாக்குதல் ; உயிரிழந்தோருக்கு 119.3 மில்லியன் ரூபா நஷ்டஈடு!
19/05/2019 ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகியவற்றில் பலியானவர்களுக்கு அரசாங்கம் இதுவரை 119.3 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக வழங்கியுள்ளது.
நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் பலியானவர்களுக்கு 86மில்லியன் ரூபாவும் கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் பலியானவர்களுக்கு 12.1மில்லியன் ரூபாவும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு 21.2மில்லியன் ரூபாவும் நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு சங்ரில்லா ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல், தெஹிவளை ட்ரொபிக்கல் இன் ஹோட்டல் ஆகியவற்றில் குண்டுத்தாக்குதலினால் பலியானவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் பலியானவர்களுக்காக 2.8 மில்லியன் ரூபாவும் சினமன் கிராண்ட் ஹோட்டலில் பலியானவர்களுக்கு 1.4மில்லியன் ரூபாவும் கிங்ஸ்பெரி ஹோட்டலில் பலியானவர்களுக்கு 9இலட்சம் ரூபாவும் தெஹிவளை ட்ரொபிக்கல் இன் ஹோட்டலில் பலியானவர்களுக்கு 1.1 மில்லியன் ரூபாவும் நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் ; பிரித்தானியா, கனடா, அமெரிக்கா இரங்கல்!
19/05/2019 இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பிரித்தானியா, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளன.
பிரித்தானியா பிரதமர் தெரேசா மே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது :
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதில் உயிரிழந்த அனைவரையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இலங்கையுடனான எமது உறவு முக்கியமானது, குறிப்பாக ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னர், அமைதியான எதிர்காலத்திற்காக நாம் ஒன்றாக இணைந்து செயல்படுவது முக்கியமான ஒன்றாகியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் நேரடியாக பாதிக்கப்பட்ட பல கனடாவாழ் இலங்கை மக்களை சந்தித்து உரையாடியுள்ளேன். கணக்கிட முடியாத இழப்பு, மிகப்பெரிய சிரமம் மற்றும் தொடர்ச்சியான பின்னடைவை அவர்கள் சந்தித்துள்ளார்கள் என இதன்போது தெரிவித்தனர்.
ஆகவே போரில் உயிர் பிழைத்தவர்களுக்கு நம்பிக்கை மற்றும் உறுதியை அளிக்கும் ஒரு அர்த்தமுள்ள செயல்முறையை உருவாக்க இலங்கை அரசாங்கத்தை நான் வலியுறுத்துகிறேன்.
அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு மட்டுமின்றி பொறுப்புணர்வு, நீதி, சமாதானம் மற்றும் சமரசத்திற்காக செயல்படும் அனைவருக்கும் கனடா தனது முழுமையான ஆதரவை வழங்கி வருகிறது.
போரின்போது பிரியமானவர்களை இழந்த தமிழ்-கனேடியர்கள் உட்பட அனைவருக்கும் கனேடிய அரசின் சார்பாக எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்-கனேடியர்கள் நாட்டிற்கு செய்துள்ள பல பங்களிப்புகளையும் அவர்கள் கடந்து வந்த துன்பங்களையும் அங்கீகரிக்க இன்றைய தினம் அனைத்து கனேடிய மக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் மூன்று தசாப்த காலம் சிவில் யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் முடிவின் நிமித்தமான இந்த பெருமிதமான ஆண்டு நிறைவை பொறுத்தவரையில் பெரும் எண்ணிக்கையிலான உயிரிப்புகள், காணாமல்போதல் மற்றும் கடந்த காலத்தின் உடல், உணர்வு ரீதியான வடுக்களை இன்னும் கொண்டிருக்கும் அனைவரையும் நாம் மதிக்கின்றோம் என்ற வகையில் சமாதானம், நீதி மற்றும் நல்லிணக்கத்துக்கான இலங்கையின் முன்னெடுப்புக்களை நாம் தொடர்ந்தும் ஆதரிக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment