நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இணைந்து வரும் இரகுபதி பாலஶ்ரீதரன் - முருகபூபதி


எழுபதுகளில் இலங்கையில் அரசியல் சமூக பொருளாதாரத்தில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்தன.

அக்காலப்பகுதியில் பதவியிலிருந்த டட்லி சேனா நாயக்காவின் தலைமையில் இயங்கிய ஐக்கிய தேசியக்கட்சியின் அரசு தேர்தலில் தோல்வி கண்டதனால், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக்கட்சியும் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்தன.

அதனால் ஏற்பட்ட பல முற்போக்கான மாற்றங்களுடன், தென்னிலங்கை சிங்கள இளைஞர்களும் வட இலங்கை தமிழ் இளைஞர்களும் தமது எதிர்காலம் குறித்து மேற்கொண்ட  தீவிர நிலைப்பாடுகளும் இலங்கை அரசியலில் அதிர்வுகளை சந்தித்தன.

இலங்கையில் உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கத்தையும் கலை, இலக்கியத்துறையில் மாற்றத்தையும் தரவேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்குத்தோன்றியது.

உள்நாட்டு திரைப்படங்களை  ஊக்குவிப்பதற்காக திரைப்படக்கூட்டுத்தாபனமும் தோன்றியதுடன் கலை – இலக்கியத்தின் மேம்பாட்டிற்காக தென்னிந்திய வணிக இதழ்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளும் உருவாகின.

இக்காலப்பகுதியிலேயே நானும் இலக்கியப்பிரவேசம் கண்டேன். இலங்கையில் பல கலை – இலக்கிய சிற்றிதழ்கள் தோன்றின.

கொழும்பில் பாமன்கடையிலிருந்து மாணிக்கம் என்ற மாத இதழ் வெளிவரத்தொடங்கியது. எனது சிறுகதைகளை  அடுத்தடுத்து  மல்லிகை, பூரணி, புதுயுகம், கதம்பம் முதலான இதழ்களில் கண்ணுற்ற அந்த இளைஞர் ஒருநாள் கொழும்பில் நடந்த நிகழ்ச்சியொன்றில் என்னைச்சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

அவர்தான் இணுவையூர் இரகுபதி பாலஶ்ரீதரன்.

அவர் அச்சமயம் கொழும்பு – 12 இல் நீதிமன்றங்கள் இயங்கிய பிரதேசத்தில் இருந்த இலங்கை வங்கிக் கிளையில் பணியிலிருந்தார்.


மாணிக்கம் என்ற பெயரில் ஒரு மாத இதழ் தொடங்கப்படவிருப்பதாகவும் அதற்கும் எழுதுமாறும் இரகுபதி பாலஶ்ரீதரன் கேட்டுக்கொண்டார்.

அவ்வேளையில் எமக்கிடையே ஏற்பட்ட தொடர்பாடலினால் உருவான நட்புறவு இற்றைவரையில் எந்தவொரு விக்கினமும் இல்லாமல் நீடித்து ஆரோக்கியமாக வளர்ந்துள்ளது.

எமக்கிடையேயான அந்த உறவுக்கு 45 ஆண்டுகள் வயதாகிவிட்டன.

இவ்வாறு நீடித்து நிலைத்து நிற்கும் நட்பு அபூர்வமானது!

நண்பர் இரகுபதி பாலஶ்ரீதரனை நான் முதலில் சந்தித்த காலப்பகுதியில்தான் நீர்கொழும்பில் விஜயரத்தினம் மகா வித்தியாலயத்தில் பழைய மாணவர் மன்றத்தினை ஆரம்பித்திருந்தோம்.

இன்று அந்த வித்தியாலயம் இந்து மத்திய கல்லூரியாக தரமுயர்ந்து வாழ்கிறது.

1972 ஆம் ஆண்டு எமது மன்றம் நடத்திய முதலாவது நாமகள் விழாவில் இரகுபதி பாலஶ்ரீதரனும் மாணிக்கம் இதழ் ஆசிரியர் திருமதி சரோஜினியும் உரையாற்றினர்.

எனது சிறுகதைகளும் மாணிக்கம் இதழில் வெளியானது. நண்பர் இரகுபதி பாலஶ்ரீதரன் தமிழ்த்தேசியத்திலும் மிகுந்த பற்றுக்கொண்டிருந்தார்.

1972 இல் அன்றைய அரசு தயாரித்து அமுல்படுத்திய புதிய அரசியல் அமைப்புச்சட்டம் இலங்கை வாழ் தமிழ் மக்களை இரண்டாந்தர பிரஜைகளாக்கியிருந்தது. அத்துடன் பல்கலைக்கழகத்திற்கான தெரிவிலும் தரப்படுத்தல் அறிமுகமாகியிருந்தது.

அதனால் வெகுண்டெழுந்த தமிழ் இளைஞர்கள் கொழும்பில் தமிழ் இளைஞர் பேரவையை உருவாக்கி எழுச்சிக்கூட்டங்களை நடத்திவந்தனர்.

இரகுபதி பாலஶ்ரீதரனும் இந்த இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டதனால் அன்றைய அடக்குமுறைச்சட்டங்களை இவரும் இவரது சகோதரர்களும் எதிர்கொள்ளநேர்ந்தது.

எங்கள் ஊர் சிறையிலும் பல தமிழ் இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் இன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மாவை சேனாதிராஜா.

அன்றைய தமிழ்த்தலைவர்களின் ஆசிர்வாதம் இரகுபதி பாலஶ்ரீதரனுக்கு முறையாக கிடைத்திருக்குமானால், இவரும் இன்று நாடாளுமன்றத்தின் ஆசனத்தில் அமர்ந்திருப்பார்.

ஆனால், இவரோ, தனக்கு சரியெனப்பட்ட தமிழ்மக்களுக்கு உகந்த நிலைப்பாட்டினை அன்றே எடுத்திருந்தமையால் அன்றைய தலைவர்களின் ஆசிர்வாதம் இவருக்கு கிட்டவில்லை என்றே கருதுகின்றேன்.

மாணிக்கம் இதழில் தனது பங்களிப்பை செய்தவாறே, தமிழ் இளைஞர் பேரவையிலும் இவர் தீவிரமாக இயங்கினார். ஈழ அரசியல் போராட்டக்களம் குறித்து புஸ்பராசா எழுதிய “ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் “ என்ற நூலிலும் புஸ்பராணி எழுதிய  “அகாலம் “  நூலிலும் இரகுபதி பால ஶ்ரீதரனின் அக்காலப்பணிகள் விபரிக்கப்பட்டுள்ளன.

தமிழ்த்தேசியம் சார்ந்து இயங்கி வந்திருக்கும் இவர்,  கலை இலக்கியம் சார்ந்தும் பதிவுகளை எழுதிவந்தவர். பல கலை, இலக்கிய, சமூக ஆளுமைகளைப்பற்றிய இவரது பதிவுகள் பல வரலாற்றுச்செய்திகளையும் உள்ளடக்கியிருப்பவை.  இந்தத்துறையில் சில நூல்களையும் வரவாக்கியிருப்பவர்.

இணுவையூர் கலை, இலக்கிய பாரம்பரியத்தை கொண்டிருப்பது. இரகுபதி பாலஶ்ரீதரனும் தனது இல்லற வாழ்வில் ஒரு கலைக்குடும்பத்தில் இணைந்தார். நாடறிந்த இலங்கை வானொலிக்கலைஞர் “சாணா “ சண்முகநாதனின் புதல்வியை மணந்தார். கலை, இலக்கிய வாரிசுகளையும் இந்தத் தம்பதியர் பெற்றெடுத்தனர்.

அவர்களில் லோஷன்,  வானொலி ஊடகத்துறையிலும் திருச்செந்தூரன் நாடக இலக்கியத்துறையிலும் தங்கள் அடையாளத்தை தக்கவைத்தனர்.

உள்ளார்ந்த கலை, இலக்கிய ஆற்றல் மிக்கவர்கள் எக்காலத்திலும் பிரகாசித்துக்கொண்டிருப்பார்கள் என்பதற்கு எனது நீண்டகால இனிய நண்பர் இரகுபதி பாலஶ்ரீதரனும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளும் சிறந்த உதாரணம்.

இரகுபதி பாலஶ்ரீதரன் கொழும்பு தமிழ்ச்சங்கத்திலும் தன்னை இணைத்துக்கொண்டு நீண்டகாலமாக அதன் வளர்ச்சிக்கும் பங்காற்றிவருபவர் என்பது புதிய செய்தியல்ல. நான் இலங்கை வந்த சந்தர்ப்பங்களில் என்னையும் அழைத்து சங்கத்தின் நிகழ்ச்சிகளில் பேசவைத்தவர்.

நாம் 2011 ஆம் ஆண்டு தொடகத்தில் தமிழ்ச்சங்க மண்டபத்தில் நான்கு நாட்கள் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்தியபோது அதற்கும் எமக்கு பக்க பலமாக விளங்கியவர்.

இவரது மகன் திருச்செந்தூரன் எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர் என்பதையும் இவரது நாடக நூலின் வெளியீட்டு விழாவில் நானும் உரையாற்றியிருக்கின்றேன் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துகின்றேன்.

இரகுபதி பாலஶ்ரீதரனும் துணைவியாருடன் மெல்பனுக்கு தனது புதல்வனிடம் வந்திருந்தசமயத்தில்தான் கொழும்பில் எமது இலக்கிய நண்பரும் ஊடகவியலாளருமான விஜயன் திடீரென மறைந்தார்.

அன்னாருக்காக நாம் நடத்திய இரங்கல் கூட்டத்திலும் இரகுபதி பாலஶ்ரீதரன்தான் விஜயன் பற்றிய நினைவுரையை நிகழ்த்தினார்.

இவ்வாறு கடந்த 45 வருடங்களுக்கும் மேலாக எம்முடன் இணைந்து பயணிக்கும் இனிய நண்பர் இரகுபதி பாலஶ்ரீதரன் அவர்களுக்கு 70 வயது பிறக்கிறது என அறிந்ததும் கடந்த கால நினைவுகள் வந்துகொண்டிருக்கின்றன.

நினைவுகள் அழிவதில்லை. அவை சாசுவதமானவை. நண்பர் இரகுபதி பால ஶ்ரீதரன் நல்லாரோக்கியத்துடன் தொடர்ந்தும் கலை, இலக்கிய, சமூகப்பணிகளில் ஈடபடவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

சமூக நலன் விரும்பிகள் ஓய்வுபெறுவதில்லை.

---0---










No comments: