யாருக்கு? பிச்சினிக்காடு - இளங்கோ

தொடக்க்ம: (25.2.2019)


அன்று
அந்தவீட்டீல்
பணியின் நிமித்தமாய்…

தோட்டமும் துரவும்
உள்ள வீடு

அங்கே
புன்னகையைப்
பூவாக்கிய தாவரங்கள்

கிளைகளால்
இலைகளால்
நிழல்விரிக்கும்
உயிர்க்குடைகள்

உயிர்க்குடைகளில்
ஒட்டிக்கொண்டு வாழும்
பறவைக்கூடென்னும்
ஒட்டுண்ணிகள்

இப்படித்
தாவரமுகங்களோடு
வரவேற்கும் வீட்டில்தான்
எங்கள் பணி

காலையில்
பணிமலரும்வேளையில்தான்
“காபி வேண்டுமா?”
ஒருகுரல்

“வாயை மூடு”
மறுகுரல்

“தண்ணீர் வேண்டுமா?”
உன்வேலையைப்பாரு!

ஒரு சின்ன
கால  இடைவேளையில்
மீண்டும்
“சாப்பிட என்ன வேணும்?”
அவுங்களுக்குத்தெரியும்.

அடிக்கடி
கதவைத்திறப்பதும்
மூடுவதும்
நிரந்தர நிகழ்வுகள்

“உட்கார நாற்காலி வேண்டுமா?”
 சும்மா இருக்கமாட்டே!

வியர்வையில்
குளித்துக்கொண்டிருக்கும்
வியர்வைத்தாவரங்களின்செவிகளில்
அடிக்கடி
அரங்கேறிக்கொண்டிருக்கும்
இந்தக்
கேள்விபதில் அங்கம்

வியர்வையைத்
துடைத்துக்கொண்டு
விடைபெறும் முன்
கதவைத்திறந்துகொண்டு
வெளிவந்த இளைஞனை
உள்ளே இழுத்து
அமரவைத்தது
அதிரடிக்காட்சியாய் மின்னியது

இதயம்கரையும் இளைஞனுக்கு
குன்றிய மனவளர்ச்சியென
குறிப்பு உதிர்ந்தது

பணியில்
வியர்வையில்
ஈரமான நான்
ஈரக்கடலில் மூழ்கினேன்

(தெலொக்குராவ் தெருவில் நிகழ்ந்தது)









-->

No comments: