அஞ்சலிக்குறிப்பு: அமரர் செல்லப்பா சதானந்தன் (1940 -2019) நினைவுகள் - முருகபூபதி


இம்மாதம் 1 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை காலை, இலங்கையில் பருத்தித்துறையில் இறங்கினேன். முதல் நாள் இரவு 10.45 மணிக்கு தனியார் துறையைச்சேர்ந்த அந்த பஸ்வண்டி நீர்கொழும்பு - பெரியமுல்லை என்ற இடத்திலிருந்து புறப்பட்டது.
கொழும்பிலிருந்தே அது தாமதமாக வந்தது. இலங்கைக்கு அவ்வப்போது சென்றுவரும் எனக்கு இந்த தாமதங்கள் உவப்பானது அல்ல. அதிலும் பெப்ரவரி மாதம் குறைந்தது இரண்டு அல்லது மூன்று நாட்களை விழுங்கிவிடும்.
அந்த நாட்களையும் இழுத்துப்பிடிப்பதென்றால் அதிகாலை மூன்று மணிக்கு துயில் எழுந்து கடமைகளை கவனிக்கவேண்டும். அவ்வாறு ஒரு அதிகாலையில் எழுந்து, இலங்கையில் நிற்கவிருக்கும் நாட்களில் என்ன என்ன செய்யவேண்டும்? யார் யாரைப்பார்க்கவேண்டும்? என்று ஒரு பட்டியலை எழுதினேன்.
வடமராட்சியில் வதியும் எனது இலக்கிய நண்பர்கள் சிலர் சுகவீனமுற்றிருப்பதாக அறிந்திருந்தேன். அவர்களில் எனது பார்வையில் மும்மூர்த்திகள் என தீர்மானிக்கப்பட்ட மூவர் மனக்கண்ணில் தோன்றினார்கள். அவர்கள்தான் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியான். கலை இலக்கிய ஆர்வலர்கள் இராசேந்திரம், சதானந்தன்.
இவர்கள் மூவரையும் 1974 ஆம் ஆண்டு முதல் நன்கறிவேன். வடமராட்சியில் அக்காலப்பகுதியில் இவர்கள் மூவரும் இணைந்துதான் எந்தவொரு சமூகப்பணிகளிலும்  ஈடுபடுவார்கள்.
1974 இல், எங்கள் நீர்கொழும்பூரில் தெணியானின் விடிவைநோக்கி நாவலுக்கு அறிமுகவிழா நடத்துவதற்கு நாள் குறித்து, அழைப்பிதழும் அனுப்பியபோது தெணியான் தன்னுடன் அழைத்துவந்தவர்கள்தான் சதானந்தன் மாஸ்டரும் கிளாக்கர் அய்யா என அழைக்கப்பட்ட இராசேந்திரமும்.
அன்றுதான் முதல் முதலில் தெணியானையும் மற்றும் இருவரையும் பார்த்தேன். அன்று முதல் எனது பாசத்திற்குரிய நண்பர்கள்.
இவர்கள் சுகவீனமுற்றிருந்தமையால், இம்முறை பயணத்தில் இவர்களை பார்த்துவிடவேண்டும் என்று எனது பயண நிகழ்ச்சி நிரலில் தீர்மானித்திருந்தேன்.

எனது வருகை பற்றி எழுத்தாளரும் ஊடகவியலாளரும் மறைந்த நண்பர் ராஜஶ்ரீகாந்தனின் உறவினருமான ரவிவர்மாவுக்கு தெரிவித்து, இவர்கள் மூவரையும் பார்ப்பதற்கு அழைத்துச்செல்லுமாறும் சொல்லியிருந்தேன்.
இம்மாதம் 1 ஆம் திகதி காலை பருத்தித்துறையில் இறங்கியதும் எனது பெறாமகளின் கணவர் பஸ் தரிப்பிடம் வந்து அழைத்துச்சென்றார். அன்று காலை அவர்கள் இருவரும் கடமைக்குச்செல்லவேண்டும். வீட்டின் சாவியை என்னிடம் தந்துவிட்டு புறப்பட்டுவிட்டார்கள்.
சிரமபரிகாரம் செய்துவிட்டு, நண்பர் ரவிவர்மாவுக்கு தகவல் தெரிவித்தேன். அவர் ஒரு ஓட்டோவில் பத்துமணியளவில் வருவதாகச்சொன்னார்.
அந்த ஓட்டோவை அன்றைய நாள் முழுவதும் எம்மோடு வைத்திருந்தால்தான் தீர்மானித்தவாறு அனைவரையும் சந்திக்கமுடியும். காலை 10 மணி முதல் இரவு வரையில் அந்த ஓட்டோவும் எம்முடன் பொழுதை கழித்தது. அதன் சாரதி ரவிவர்மாவுக்கு உறவினராகவும் இருந்தமையால் வசதியாகிப்போனது.
தெணியான், கலாமணி, வன்னியகுலம், சதானந்தன், இராசேந்திரம், திருமதி லீலா ராஜஶ்ரீகாந்தன், ஜீவநதி ஆசிரியர் பரணீதரன், குலசிங்கம், கொற்றாவத்தை கிருஷ்ணானந்தன், வதிரி சி. ரவீந்திரன் இவர்கள் அனைவரையும் அன்றைய பொழுதுக்குள் பார்த்துவிடவேண்டும்.
வதிரி, அல்வாய், கரணவாய், கரவெட்டி, புலோலி, பருத்தித்துறை, என்று ஓடிக்கொண்டிருந்தேன். சதானந்தன் மாஸ்டர் நீரிழிவு உபாதையின் தாக்கத்தினால் ஒரு காலையும் மற்றும் ஒரு காலில் விரல்களையும் இழந்திருந்தார் என அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
அவரையே முதலில் பார்ப்போம் என்றேன். எனது வருகை அவருக்குத் தெரியாது. அவரது வீட்டில் அவர் இல்லை. மருத்துவமனைக்கு சென்றிருப்பதாக தகவல் கிடைத்தது.
மாலை அங்கு வருவதாகச்சொல்லிவிட்டு மற்றவர்களை பார்க்கப்புறப்பட்டோம்.
மற்றவர்கள் நீரிழிவு, இதயநோய், உட்பட பல உறவினர்களை தம்மகத்தே வைத்துக்கொண்டு வீடுகளில் முடங்கிவிட்டாலும் உற்சாகமாக இருந்தார்கள்.
ரவிவர்மா வீட்டில் மதிய உணவுக்குமேல் அங்கு விறாந்தையில் ஒரு பாயை விரித்து படுத்துவிட்டேன். பயணக்களைப்பு! எனினும் உறக்கம்வரவில்லை. கடந்த ஜனவரி 24 ஆம் திகதி மெல்பனைவிட்டுப்புறப்பட்டு,  பாரிஸ், லண்டன், தமிழ்நாடு,  சென்று தாயகம் வரும்வரையில் நான் சந்தித்த பலருள்  முதுமை, தனிமை, இயலாமையுடன் போராடிக்கொண்டிருந்தவர்களும் அடக்கம்.
அவர்களுக்கு  பேச்சுத்துணை அவசியம். மெகா தொலைக்காட்சித் தொடர்,  முகநூல், வாட்ஸ் அப் என்று பொழுதைப்போக்கிக்கொண்டிருக்கும் எம்மவர்கள் மத்தியில், பேச்சுத்துணையும் இல்லாமல் வீட்டின் முகட்டைப்பார்த்து பெருமூச்சுவிட்டுக்கொண்டிருப்பவர்களின் மனதில்  கடந்த காலங்கள்தான் ஓடிக்கொண்டிருக்கும். 
வடமராட்சியில் அன்றைய உலாத்தலில் முற்பகல் பொழுதில் சந்திக்கமுடியாதுபோன நண்பர் சதானந்தன் மாஸ்டரை முன்னிரவில் பார்க்கச்சென்றேன். அவரும் கட்டிலில் படுத்து முகட்டைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
எனது குரல் கேட்டதும் எழுவதற்கு முயன்றார். அருகே அமர்ந்ததும், என்னை வாரி அணைத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதார். அவரது கால்களை பார்த்து உறைந்துபோனேன்.
வடமராட்சி முழுவதும் ஊர்பொதுப்பணிகளுக்காக ஓடித்திரிந்த அந்தக் கால்கள் எங்கே..? சதானந்தனை நான் முதல் முதலில் பார்த்தபோது அவரது வயது 34. அன்று நான் பார்க்கும்போது வயது 79. இடையில் 45 வருடங்கள் அவரதும் எனதும் வாழ்வில் நிறைய மாற்றங்கள் நேர்ந்துவிட்டன. மாறாமல் இருந்தது நட்புறவுதான்!
அவரது இளமைக்காலம்,  வடபகுதியில் சமூக சமத்துவத்திற்காக அடிநிலை மக்கள் போராடிய காலம். இடதுசாரிகள் ஒன்றிணைந்து ஆலயப்பிரவேசம், சமபந்தி போசனம், தேநீர்க்கடைப் பிரவேசம் முதலான போராட்டங்களில் ஈடுபட்ட காலம்.
அக்காலப்பகுதியில்  ஒரு போராளியாக இயங்கியவர் சதானந்தன். ஆரம்பக்கல்வி இடைநிலைக்கல்வியை தேவரையாளி இந்துக்கல்லூரியிலும் கரவெட்டி திருஇருதயக்கல்லூரியிலும் யாழ். இந்துக்கல்லூரியிலும் தொடர்ந்தவர். 

பின்னர்  பலாலி ஆசிரியப்பயிற்சிக்கல்லூரியில் பயின்று,  ஆசிரியராக அதிபராக பணி தொடர்ந்தவர்.  யா/அல்லாரை வெள்ளம் போக்கட்டி ...பா.கொடிகாமம்,  /டங்கெல்ட் ...பா. டிக்கோயா /வெலம்பொடை மு..வி,  /குண்டசாலை ...பா,  யா/தேவரையாளி இந்துக் கல்லூரி, கரவெட்டி யா/மணற்காடு றோ... பா, குடத்தனை முதலான பாடசாலைகளில் ஆசிரியராக பணியாற்றியவர்.

ஊரில் சாமணந்தறை  பிள்ளையார் ஆலயம் மனோகரா சனசமூகநிலையம், மனோகரா விளையாட்டுக்கழகம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக உழைத்தவர். அத்துடன் கலை, இலக்கிய ஆர்வலர்.
அந்த ஆர்வம்தான் 1974 ஆம் ஆண்டளவில் தெணியானுடன் எங்கள் ஊருக்கும் அவரை அழைத்துவந்தது.
கட்டைவேலி - நெல்லியடி ப.நோ. கூட்டுறவு சங்கத்தின் துணைத்தலைவராகவும் மத்தியஸ்த சபையின் உறுப்பினராகவும் இருந்தவர். வடமராட்சி கல்வி, ஆக்க இலக்கியம், இதழியல், ஊடகம் முதலான துறைகளில் பலரையும் பிரகாசிக்க வைத்த பிரதேசம். முற்போக்கு கலை இலக்கிய முகாமைச்சார்ந்த பலரை உருவாக்கிய மண். வடமராட்சியில் பருத்தித்துறை தொகுதியிலிருந்துதான் இடதுசாரித்  தோழர் பொன். கந்தையா நாடாளுமன்றம் பிரவேசித்தார். அவ்வாறு அதன்பின்னர் அங்கிருந்து எவரும் தெரிவாகவில்லை. தமிழ்த்தேசிய உணர்வலை, ஆயுதக்கலாசாரத்தை நோக்கி பயணித்தபின்னர், அங்கிருந்த சதானந்தன் போன்ற ஆளுமைகளும் தங்களை அடக்கி வாசிக்கவேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளானார்கள்.
அல்வாயில் 23-07-1940  ஆம் திகதி செல்லப்பா - தங்கமுத்து தம்பதியரின் ஏக புத்திரனாகப்பிறந்த சதானந்தன், இளமைக்காலம் முதலே இடதுசாரி இயக்கத்துடனும் முற்போக்கு இலக்கிய முகாமுடனும் நெருக்கமான உறவைப்பேணியவர்.
சதானந்தன் மாஸ்டருடன் நெருங்கிப்பழகியவர்கள் அவர் குறித்து முழுமையான பதிவுகளை எழுதவேண்டும்.
இம்மாதம் 1 ஆம் திகதி அவரது கைபற்றியவாறு நெடுநேரம் உரையாடிக்கொண்டிருந்தேன். அவரது புதல்வன் செல்வானந்தன் அருகில் நின்றார். அவர் அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலயத்தின் அதிபராக பணியாற்றுவதாக தெரிந்துகொண்டேன். தந்தையைத் தொடர்ந்து அவரும், மற்றும் மகள் தேவகி,  மகன் கருணானந்தன் ஆகியோரும் ஆசிரிய கல்வி சார்ந்த விரிவுரைப்பணிகளை தொடர்கின்றார்கள். மகள்  ரஞ்சிதா, மகன் சர்வானந்தன் ஆகியோரும் நல்ல பதவிகளில் பணி தொடருகின்றார்கள்.
இத்தனை மக்களை அவருக்குத்தந்த மனைவி இராசகுமாரி அவர்கள் மறைந்தபின்னர், சதானந்தனின் பேச்சுத்துணைக்கு இருந்தவர்கள்   அந்த மக்களும் பேரப்பிள்ளைகளும் நண்பர்கள், உறவினர்களும்தான்.
அன்று அவரது விசும்பலை மிகுந்த கவலையுடன் அவதானித்துவிட்டு,               " தைரியமாக இருங்கள் மாஸ்டர். நீங்கள் கடந்துவந்த பாதையை உங்கள் பிள்ளைகளிடம் அல்லது பேரப்பிள்ளைகளிடம் சொல்லுங்கள். தினமும் ஒரு பக்கம் வீதம் சொல்லச்சொல்ல அவர்கள் எழுதினால், நல்லதொரு வடமராட்சி ஆவணம் கிடைக்கும். நீங்கள் சொல்லத்தவறிய கதைகள் உங்களிடம் ஏராளமாக இருக்கின்றன." என்றேன்.
அவர் அழுகையை நிறுத்தி புன்முறுவல் பூத்தார்.
கடந்த 13 ஆம் திகதி, நான் அவுஸ்திரேலியா மெல்பனில் இறங்கியதும் வந்த முதலாவது துயரமான செய்தி: சதானந்தன் மாஸ்டர் இன்று 13 ஆம் திகதி மறைந்துவிட்டார். 01 ஆம் திகதி அவரை பார்ப்பதற்கு அழைத்துச்சென்ற நண்பர் ரவிவர்மாவிடமிருந்தே இந்தச்செய்தி வந்திறங்கியது.
குறிப்பிட்ட 12 நாட்களுக்குள்  அவரால்  எதைச்சொல்லமுடிந்திருக்கும்  எதனைத்தவிர்த்திருக்கமுடியும் என்ற யோசனையுடன் இந்த அஞ்சலிக்குறிப்பை எழுதுகின்றேன்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து அவர்களின் துயரத்தில் பங்கேற்கின்றேன்.
---0----->No comments: