சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழா ஊடக வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெலீஸ் ஏற்பாட்டில் நாவலர் ஈழமேகம் பக்கீர்த் தம்பி நினைவரங்கில் 'புறப்படு பெண்ணே பொங்கியெழு' எனும் தலைப்பில் உலகறிந்த பன்முக ஆளுமை கவிஞர் எழுத்தாளர் நாவலாசிரியர் பாடலாசிரியர் வித்தியாசாகர் தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் கவியரங்கம் இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம்.ஹனீபா கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் றமீஸ் அப்துல்லா மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா சிறப்பு அதிதிகளாக கதை சொல்லி டாக்டர் எம்.எம்.நௌஷாத் பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ்அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எம். ரி.எம். ரிம்சான் பிரபல ஊடக வியலாளர் வி.ரி. சகாதேவராஜா இலக்கிய ஆளுமைகள் சமூக சேவை மகளிர் அமைப்புக்கள் பாடசாலை மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கவியரங்கில் கவிஞர் திருமதி. றியாசா வாஹிர் கவிஞர் செல்வி. றிப்னா றியாஸ் கவிஞர் திரு. ஆசுகவி அன்புடீன் கவிஞர் திருமதி. யுகதாரிணி கவிஞர் திரு. எம்.எச்.அலியார் கவிஞர் செல்வி. மு.ஸாஹிரா பானு கவிஞர் திரு.கே.எம்.ஏ. அசிஸ் கவிஞர் திரு. அருளானந்தம் சுதர்சன் ஆகியோர்களின் கவிதைகள் அரங்கேற்றப்பட்டன.
உலகறிந்த தென்னிந்தியாவின் பன்முக ஆளுமைக்கவிஞர் பாடலாசிரியர் எழுத்தாளர் வித்யாசாகர் அங்கு உரையாற்றுகையில்:
ஈழத்து தமிழ்மண் தமிழ்இலக்கியத்தை இனநல்லிணக்கத்தை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. இஸ்லாமியத்தமிழ் ஒற்றுமையை விதைக்கும் இலக்கிய விவசாயிகள் நீங்கள். இது போற்றுதற்குரியது. தமிழ் மொழியால் இணைந்துள்ளோம். இந்தியாவிலிருந்த என்னை புகழ்பூத்த ஈழமேகம் பக்கீர்த்தம்பி பிறந்த சம்மாந்துறை மண்ணுக்கு அழைத்தது இந்த தமிழ். தமிழுக்கு சாதிமத பேதமில்லை. வள்ளுவர் கூறிய வாழ்வியல் தத்துவத்தை விடவா?
பெண்கள் அடக்கமாக இருக்கவேண்டும். அடக்கம் என்பது அடக்குதல் அல்ல இணைந்து போதல் அடக்கமாக ஒன்றித்தல் என்று பேராசிரியர் றமீஸ்அப்துல்லா சொன்னார்கள். அது உண்மை. அருமையான வாசகம்.
ஒரு தடவை மலேசியாவில் இலக்கியக்கூட்டம் நடைபெற்றுகே கொண்டிருக்கையில் டாக்டர் சொக்கலிங்கம் என்பவர் இப்படிச்சொன்னார். அதாவது பார்வையாளர்கள் கைதட்டுங்கள். கைதட்டினால் ஆயள்கூடுகிறது. இதயம் நன்றாக வேலை செய்கிறது. என்றார்.
தமிழ்ச்சங்கங்கள் இங்கு மட்டுமல்ல இஸ்லாமிய நாடுகளில் குவைத் பஹ்ரேன் கட்டார் மற்றும் ஜேர்மன் பிரான்ஸ் லண்டன் அமெரிக்கா போன்ற நாடுகளில் நிறையவுள்ளன. அவர்களும் தமிழ்வளர்க்கிறார்கள். என்னோடு கவிபாடும் பன்னாட்டுக்கவிஞர்களை இணைத்து உலகளாவியரீதியல் கவியரங்கு நடாத்த ஆசைப்படுகிறேன். இறையருயளால் அது கைகூடும் என்றார்.
சிறப்புக் கவிஞர்களாக சந்தக்கவிஞர் திரு. முகம்மது இஸ்மாயில் அச்சிமுகம்மட் கவிஞர் திரு. வேலணையூர் ரஜிந்தன் கவிதாயினி திருமதி. சம்மாந்துறை மஷூறா கவிதாயினி திருமதி. ஏம்.ஐ.சித்தி றபீக்கா ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டு சிறப்புக் கவிதைகளும் இடம் பெற்றன.
அத்தோடு இலக்கிய ஆளுமைகளுக்கு தமிழா ஊடக வலையமைப்பினால் 'இலக்கிய முரசு' எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. உலகறிந்த பன்முக ஆளுமை கவிஞர் வித்தியாசாகர் அவர்களின் கடல் கடந்த இலக்கிய செயற் பாட்டிற்காகத் தமிழா ஊடக வலையமைப்பினால் 'கவிவேந்தர் ' பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும். அதுபோல், மலேய பல்கலைக் கழகத்தில் மூன்று நாட்களாக நடந்தேறிய "உலக திருக்குறள் மாநாட்டில்" கவிஞர் வித்யாசாகருக்கு மலேசியாவின் பினாங் மாநிலத்து முதலமைச்சரின் திருக்கரங்களால் "தமிழ் படைப்பிலக்கியச் செம்மல்" எனும் உலகளாவிய பெருவிருது தந்து கௌரவிக்கப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
தமிழா ஊடக வலையமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் எஸ்.எம்.ஜெலீஸ் அவர்களின் பிறந்த ஊரின் மக்களுக்காகவும் மொழிக்காகவும் பெண்ணிய நல்விடிவுக்காகவும் அரும் பாடுபட்டு பல நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடாத்தி வருகின்றமைக்காக "முகில் பதிப்பகத்தினால் 'மக்கள் காவலன்' எனும் பட்டம் கவிஞர் வித்தியாசாகர் அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கவிஞர் வித்யாசாகரின் இந்தியாவிலே வெளியிடப்பட்ட பறக்க ஒரு சிறகு கொடு, சில்லறை சப்தங்கள், கண்ணாடிக்கும் கைதட்டும் ஆனால் கவிதையல்ல ஆகிய கவிதைத் தொகுப்புகளும் ஓட்டைக்குடிசை எனும் சிறுகதை தொகுப்பும், கொழும்பு வழியே ஒரு பயணம் எனும் வரலாற்று நாவல் போன்ற நூற்களின் அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது.
கவிஞர் வித்தியா சாகர் அவர்களின் முகில் பதிப்பகத்தின் வெளியீடாக திரை மொழி மற்றும் வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (வாழ்வியல் கட்டுரைகள்) எனும் நூற்கள் வெளியிடப்பட்டன. முதல் பிரதியினை மனித நேயன் இர்சாட் ஏ காதர் பெற்று கொண்டார். அத்துடன் கவிஞர் வித்யாசாகரின் 'வெளிநாட்டு வாழ் தமிழர்களுடைய' வாழ்க்கையைப் பற்றி பேசும் உருக்கமான பாடல் அடங்கிய இறுவட்டும் வெளியீடும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல், கவிஞர் வித்யாசாகரின் படைப்புக்களை விற்று கிடைக்கும் வருவாயில் இலங்கையிலுள்ள வறுமைமிக்க எளிய ஊர்களின் பள்ளிக்கூடங்களுக்கு கழிப்பறை வசதியும் நூலக ஏற்பாடும் செய்து தரப்படவுள்ளதாக தமிழா ஊடக வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெலீஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வி.ரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்
சம்மாந்துறை, அம்பாறை மாவட்டம்,இலங்கை
No comments:
Post a Comment