இலங்கைச் செய்திகள்


"காங்கேசன்துறை பகுதியில் 62 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்க முயற்சி"

இராணுவ கூட்டுப்பயிற்சியில் கலந்துகொள்ள இந்திய படை இலங்கை வருகை

தமிழகத்திலிருந்து நாடு திரும்பும் 54 இலங்கை அகதிகள்

 "கடத்தப்பட்ட 11 பேருக்கு என்ன ஆனது என்பதை கரன்னாகொட அறிந்திருந்தார்"

யாழ். மாவட்டத்தில் 50 மாணவிகளுக்கு “ 9 ஏ ” சித்தி

திருகேதீஸ்வர விவகாரம் ; வழக்கு ஒத்திவைப்பு

பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்த பிக்குவுக்கு புற்றுநோய் ;  தீர்ப்பு ஒத்திவைப்பு


"காங்கேசன்துறை பகுதியில் 62 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்க முயற்சி"

25/03/2019 காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ராஜபக்ஷ் அரண்மனையை மையமாகக்கொண்டு மேலும் 62 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்றுறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், 
புனிதத்தலங்கள் அமைந்திருக்கும் இந்த பிரதேசத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் நில அபகரிப்புக்கு இடமளிக்கமாட்டோம். அத்துடன் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்க தயாராக.
அவ்வாறு இல்லாமல் எமது புனித பிரதேசங்கள் அமைந்திருக்கும் நகுலேஸ்வர, கீரிமலை பிரதேசங்களை எந்த விலைகொடுத்தேனும் நாங்கள் பாதுகாப்போம். எந்த சந்தர்ப்பத்திலும் எமது நிலங்களை விட்டுக்கொடுக்க இடமளிக்கமாட்டோம் என்றார்.  நன்றி வீரகேசரி 










இராணுவ கூட்டுப்பயிற்சியில் கலந்துகொள்ள இந்திய படை இலங்கை வருகை

26/03/2018 இலங்கை மற்றும் இந்திய இராணுவம் பங்குகொள்ளும் கூட்டு இராணுவப் பயிற்சி இம் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து ஏப்பிரல் மாதம் 8 ஆம் திகதி வரை தியத்தலாவையில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டுப் பயிற்சி வருடாந்தம் இந்தியா மற்றும் இலங்கையில் ஒரு சுழற்சி முறையில் நடைபெறுகின்றது. 
மித்திர சக்தி – ஏ இந்தியாவின் புனே நகரில் நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியில் 120 இலங்கை இராணுவத்தினர் பங்குபற்றினர்.
இந்த வருடம் 11 அதிகாரிகள் உட்பட, 120 இந்திய இராணுவத் தொகுதியொன்று இலங்கை இராணுவத்துடன் இரண்டு வார கால பயிற்சியில் ஈடுபடுவதற்காக இந்திய விமானப்படை விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். 
மித்திர சக்தி பிராந்தியத்தில் நடத்தப்படுகின்ற இராணுவத்திற்கு இராணுவம் எனும் ரீதியிலான பெரும் இரு தரப்பு பயிற்சியாகும்.
முன்னைய பயிற்சி நடவடிக்கைகளின் வெற்றியின் அடிப்படையில் மித்திர சக்தி அண்மையில் ஒரு படைக் குழு என்ற மட்டத்திலிருந்து ஒரு முழுமையான படைப்பிரிவு மட்டத்திலான ஈடுபடுதல் எனும் நிலைக்கு முன்னேற்றப்பட்டுள்ளது.  
இந்தப் பயிற்சியானது இரு தரப்பு இராணுவத்திற்கும் இடையில் இணைந்து செயலாற்றுதல் மற்றும் பரஸ்பரம் புரிந்து கொள்ளுதலை மேம்படுத்துவதற்கும் மற்றும் தொழில்சார் ரீதியான மதிப்பு, தனிப்பட்ட ரீதியான பிணைப்பு மற்றும் பரந்த பயிற்சி இடைத் தொடர்பு என்பவற்றின் அடிப்படையில் ஏற்கெனவே உள்ள சுமுக உறவை கட்டியெழுப்புவதற்கும் வாய்ப்பை அளிப்பதற்குமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
குறித்த பயிற்சி நாடுகளுக்கிடையிலான பயங்கரவாதத்தைக் கையாளுதல், கூட்டு மூலோபாய செயலாற்றல் மற்றும் போர்த் திறன்களைக் உருவாக்குதல் என்பவற்றுக்கான ஆற்றல்களைக் கட்டியெழுப்புவதற்கு உதவும். 
இரண்டு இராணுவங்களினாலும் பின்பற்றப்படும் சிறந்த நடை முறைகளிலிருந்து கற்றுக் கொள்ளுதல் மற்றும் ஒவ்வொருவரினதும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் என்பவற்றுக்கான ஒரு சிறந்த தளத்தையும் வழங்கும். 
பயங்கரவாதம் மற்றும் ஏனைய பொதுவான அச்சுறுத்தல்கள் என்பவற்றுக்கெதிராக பயனுறுதியான வகையில் போராடுவதற்கான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளினதும் விருப்பங்களையும் இப்பயிற்சியின் போது முன்னெடுக்கபடவுள்ளது.
இந்த வருடம் பயிற்சியின் பரப்பெல்லை கணிசமான வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் காலாட்படை அடிப்படையிலான நிகழ்வுகளிலிருந்து, பீரங்கிப் படை, பொறியியலாளர் பிரிவு, சமிக்ஞைப் பிரிவு, இராணுவ மருத்துவப் பிரிவு மற்றும் விசேட படையணி ஆகிய மட்டங்களிலிருந்தும் பங்குபற்றுவர்.  
இப்பயிற்சி தியத்தலாவையில் நடத்தப்படுவதுடன் அங்கு இலங்கை இராணுவத்தின் கெமுனு வோட்ச் படைப்பிரிவு, இலங்கை இராணுவத்தின் பீரங்கிப் பிரிவு, பொறியியலாளர்கள், சமிக்ஞைப் பிரிவு போன்ற பிரிவின் படையுறுப்பினர்களுடன் பங்குபற்றும். பயிற்சி விரிவுரைகள், செய்முறை விளக்கங்கள், சிறிய அணி மூலோபாய செயற்பாடுகள், தொடர்பாடல் ஒருங்கிணைப்பு, சுடுகலன் பயிற்சிகள் மற்றும் மனிதநேய உதவி, அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் என்பவற்றின் சம்பந்தப்படுத்தல்களுடன் இடம்பெறவுள்ளது.
பயிற்சி விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் கலந்தவையாக இருக்கும் என்பதுடன் அவை இரண்டு இராணுவங்களும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளுதல், பகிர்ந்து கொள்ளும் விழுமியங்களின் மீள் நடைமுறைப்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட பிணைப்பு, நட்பு மற்றும் ஒருமைப்பாடு என்பவற்றைக் கடடியெழுப்புவதல் என்பவற்றுக்கும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 











தமிழகத்திலிருந்து நாடு திரும்பும் 54 இலங்கை அகதிகள்

26/03/2019 இந்தியாவின் தமிழகத்திலிருந்து 54 இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
அதன்படி இவர்கள் இன்றும் நாளைமறுதினமும் நாடு திரும்பவுள்ளனர். 
விசேட விமான சேவைகளின் ஊடாக குறித்த இரண்டு தினங்களிலும், 24 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் நாடு திரும்பவுள்ளதுடன், இவர்கள் இவர்களது சொந்த இடமான  யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலேயெ மீள குடியமர்த்ப்படுவார்கள் என்று தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 










 "கடத்தப்பட்ட 11 பேருக்கு என்ன ஆனது என்பதை கரன்னாகொட அறிந்திருந்தார்"

28/03/2019 ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தி, சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட பூரணமாக அறிந்திருந்த நிலையில், அவர்  அவ்விடயம் தொடர்பிலான விடயங்களை மூடி மறைத்துள்ளமை விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாக சி.ஐ.டி.யினர் நேற்று கோட்டை நீதிவானுக்கு அறிவித்தனர்.
கடற்படையின் முன்னாள் புலனாய்வு பிரதானியும் தற்போதைய ரியர் அத்மிரால் தர அதிகாரியுமான ஆனந்த குருகே,  கரன்னாகொடவின் ஆலோசகராக இருந்த  கொமாண்டர் உதயகீர்த்தி பண்டார,  முன்னாள் கிழக்கு கட்டளைத் தளபதி ரியர் அத்மிரால் துஷித் வீரசேகர உள்ளிட்டோரின்  வாக்கு மூலங்களை மையபப்டுத்தி  சி.ஐ.டி.யின்  சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா இதனை நீதிமன்றில் அறிவித்தார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  இதன்போதே விஷேட மேலதிக விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பித்த பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா இந்த விடயங்களை வெளிப்படுத்தினார்.  நன்றி வீரகேசரி 










யாழ். மாவட்டத்தில் 50 மாணவிகளுக்கு “ 9 ஏ ” சித்தி

29/03/2019 கல்வித் பொதுத்தர சாதாரண பரீட்சை முடிவுகளின் படி யாழ்ப்பாண மாவட்டத்தில் 50 மாணவிகள் 9 ஏ சித்திகளை பெற்று வேம்படி மகளீர் கல்லூரி முதலிடத்தை பிடித்துக் கொண்டது.
பரீட்சை முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியது. அந்த முடிவுகளின் படி யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் 35 மாணவர்கள் 9 ஏ சித்தியையும், 42 மாணவர்கள் 8 ஏ சித்திகளையும் பெற்றுக் கொண்டனர். கொக்குவில் இந்து கல்லூரியில் 8 மாணவர்கள் 9 ஏ சித்திகளையும்,13 மாணவர்கள் 8 ஏ சித்திகளையும் பெற்றுக்கொண்டனர்.
தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் 5 மாணவர்கள் 9 ஏ சித்திகளையும் யாழ்ப்பாணம் அருணோதயாக் கல்லூயில் 5 மாணவர்கள் 9 ஏ சித்திகளையும் பெற்றுக்கொண்டனர்.
வேம்படி மகளீர் கல்லூரி 50 மாணவிகள் 9 ஏ சித்திகளையும், 49 மாணவிகள் 8 ஏ சித்திகளையும் பெற்று  முதலிடத்தில் உள்ளது.  நன்றி வீரகேசரி 










திருகேதீஸ்வர விவகாரம் ; வழக்கு ஒத்திவைப்பு

29/03/2019 மன்னார், மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த  திருக்கேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் உடைப்பு தொடர்பான வழக்கு விசாரணை இன்று வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது  ஜூன் மாதம் 28 ஆம் திகதிக்கு மன்னார் நீதிவான் ரீ.சரவணராஜா ஒத்தி வைத்துள்ளார். 
திருகேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார நுழைவாயில்  உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இன்று (29.03.2019) வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்தேக நபர்கள் 10 பேரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
குறித்த விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதிவான் வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.   நன்றி வீரகேசரி 










பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்த பிக்குவுக்கு புற்றுநோய் ;  தீர்ப்பு ஒத்திவைப்பு

28/03/2019 முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் இடமாக பிரகடனப்படுத்தி குருகந்த ரஜமஹா விகாரையையும் ,பிரம்மாண்ட புத்தர்சிலையையும் அமைத்துள்ள பிக்குவுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதன்  காரணமாக குறித்து பிக்கு நீதி மன்றில்  ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வழக்கு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
குறித்த சர்சைக்குரிய ஆலயம் தொடர்பான வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி எஸ் .லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றது. 
இந்நிலையில் இந்த வழக்கு மீதான தீர்ப்பு இன்றையதினம் வழங்கப்படவிருந்த நிலையில் பௌத்த பிக்கு சார்ப்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்த  வழக்கின் ஒருதரப்பான பௌத்த பிக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சிகிச்சைக்கு  சென்றுள்ளதன் காரணமாக மன்றில் ஆஜராக முடியவில்லை எனவும் மன்றில் தெரிவித்தார் .
இந்நிலையில்  இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்புக்காக ஏப்ரல் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார் . நன்றி வீரகேசரி 






No comments: