உலகச் செய்திகள்


இரு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளோம் - பாக்கிஸ்தான்

அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா!

அடையாளம் காணப்பட்டது காஷ்மீர் தாக்குதலில் பயன்படுத்திய வாகனம்

அமெரிக்க ஜனாதிபதியை சந்திப்பதற்காக வியட்நாம் சென்றார் கிம்

விடுதலைப் புலிகளை மேற்கோள்காட்டி இம்ரான் கான் தெரிவித்தது என்ன ?

இந்தியாவை வந்தடைந்தார் இராணுவ வீரர் அபினந்தன்

பாகிஸ்தான் விமானியை இந்திய விமானி என நினைத்து அடித்துக் கொன்ற கிராம மக்கள்



இரு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளோம் - பாக்கிஸ்தான்

27/02/2019 இந்தியாவின் இரு போர் விமானங்களை சுட்டுவீழ்த்தியுள்ளதாக  பாக்கிஸ்தான் அறிவித்துள்ளது.
பாக்கிஸ்தானின் வான்வெளிக்குள் ஊடுருவிய இரு இந்தியபோர் விமானங்களை சுட்டுவீழ்த்தியுள்ளோம் என பாக்கிஸ்தான் இராணுவத்தின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் அசிவ் கபூர் தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தானின் வான்பரப்பிற்குள் இரு இந்திய விமானங்களை சுட்டுவீழ்த்தியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதில் ஒரு விமானம் இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காஸ்மீர் பகுதியில் விழுந்து நொருங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள பாக்கிஸ்தான் அதிகாரி இரண்டாவது  விமானம் பாக்கிஸ்தானில் விழுந்து நொருங்கியுள்ளது இந்திய விமானியை கைதுசெய்துள்ளோம்  எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 










அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா!

27/02/2019 காஷ்மீர், நவ்ஷரா பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்ட இரண்டு பாகிஸ்தான் விமானங்களில் ஒன்றை இந்திய இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். 
பாகிஸ்தான் பகுதிக்குள் புகுந்து தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நேற்றைய தினம் தாக்குதலை மேற்கொண்டது.
இந்த நிலையில் 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது. தாக்குதல் நடத்தும் திட்டத்துக்குள் அந்த விமானங்கள் இந்திய பகுதிக்குள் வந்திருக்கலாம் என தெரிகிறது.  
இதையடுத்து இந்திய இராணுவ வீரர்கள் உடனடியாக பதிலடி தாக்குதலை நடத்த ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதுடன் மற்றொரு விமானம் அங்கிருந்து தப்பிச் சென்றது. 
சுட்டு வீழ்த்தப்பட்ட எப் 16 விமானம் லேம் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது. 
இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஸ்ரீநகர் உட்பட காஷ்மீரில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 









அடையாளம் காணப்பட்டது காஷ்மீர் தாக்குதலில் பயன்படுத்திய வாகனம்

26/02/2019   40 இராணுவவீரர்களின் உயிரை பலி கொண்ட காஷ்மீர்-புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாத அமைப்பினர் பயன்படுத்திய வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதன் உரிமையாளரையும்  கண்டுபிடித்தது தேசிய விசாரணை முகமை.தற்கொலைத் தாக்குதல் நடத்திய தீவிரவாதி வெடிபொருட்களுடன் வந்த வாகனம் வெடித்துச் சிதறியது, அதன் பாகங்களை எடுத்து ஒட்டி. தடயவியல் நிபுணர்கள் மற்றும் ஆட்டோமொபைல் நிபுணர்கள் ஆகியோர் உதவியுடன் அந்த வாகனம் என்ன என்பதை என்.ஐ.ஏ. அடையாளம் கண்டுள்ளது.
மாருதி ஈக்கோ மினிவேன் ரக வாகனம் அது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.  இந்த வாகனம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தின் ஹெவன் காலனியில் உள்ள ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளது.
அதன்  பிறகு  குறித்த வாகனம்7 கைகள் மாறியுள்ளது மாருதி ஈக்கோ வாகனம் கடைசியாக அனந்த்நாகில் உள்ள சாஜத் பட் என்பவர் கைக்கு வந்துள்ளது. பெப்ரவரி கடந்த 23 ஆம் திகதி இவரது வீட்டை ஜம்மு பொலிஸார் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையிடச் சென்ற போது அவர் தலைமறைவாகியிருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில் சந்தேக நபர் பொலிஸாரின்  கண்களில் படமால் இருந்து வந்துள்ளார்.
எனினும் ஜெய்ஷ் அமைப்பில் இந்நபர் சேர்ந்திருக்கலாம் என்றும் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. மேலும்  சாஜத்தின் படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் தோன்றியது என்றும் அதில் இவன் ஆயுதங்களுடன் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சாஜத் ஷோபியானில் உள்ள சிராஜ் உல் உலூம் மாணவர் என்று விசாரணைகளின் பின் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 











அமெரிக்க ஜனாதிபதியை சந்திப்பதற்காக வியட்நாம் சென்றார் கிம்

26/02/2019 அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் சந்தித்து பேசும் 2 ஆது உச்சிமாநாடு வியட்நாமின் ஹனோய் நகரில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடக்கவிருக்கிறது.

இதற்காக கிம் ஜாங் 24 ஆம் திகதி மாலை தென் கொரிய தலைநகர் பியோங்காங்கில் இருந்து தனக்கான சிறப்பு ரயிலில் வியட்நாமுக்கு பயணத்தை ஆரம்பித்தார்.
இரண்டரை நாட்கள் பயணம் செய்த கிம் ஜாங் உன், சீனா வழியாக இன்று வியட்நாம் வருகை தந்தார். 
கிம் குறித்த சந்திப்பு நடைபெறும் ஹனோய் நகருக்கு, கார் மூலமாக பயணம் மேற்கொண்டுள்ளார். 
கிம் ஜாங் உன்னுடன் அவரது சகோதரி கிம் யோ ஜாங், உதவியாளர் கிம் யோங் சோள் உட்பட உயர் அதிகாரிகள் வியட்நாம் சென்றுள்ளனர்.
அதேபோல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வியட்நாம் புறப்பட்டுள்ளார். 
பயணத்திற்கு முன்னதாக, தனது டுவிட்டரில் பதிவிட்ட டொனால்ட் ட்ரம்ப், 
வடகொரிய ஜனாதிபதி ஆக்கப்பூர்வமான சந்திப்பை எதிர்நோக்குவதாக தெரிவித்து இருந்தார். 
ட்ரம்ப் கிம் ஜாங் உன் சந்தித்து பேசும் டோங் டாங், நகரில் பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.  நன்றி வீரகேசரி   











விடுதலைப் புலிகளை மேற்கோள்காட்டி இம்ரான் கான் தெரிவித்தது என்ன ?

01/03/2019 செப்­டெம்பர் 11 தாக்­கு­த­லுக்கு முன்­ன­தா­கவே இந்­துக்­க­ளான விடுதலைப்­பு­லிகள் தற்­கொலைத் தாக்­குதல் முறை­மையை பயன்­ப­டுத்தி உள்­ளன என்று பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 
தீவி­ர­வா­தத்­திற்கு மதம் கிடை­யாது. தற்­கொ­லைப்­படைத் தாக்­கு­தல்கள் மதத்தின் பெயரால் நடப்­ப­தில்லை. இரட்டைக் கோபுர தாக்­கு­த­லுக்கு முன்­பாக உல­க­ளவில் அதிக தற்­கொ­லைப்­படை தாக்­கு­தல்­களை இலங்­கையின் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களே நடத்­தி­யி­ருந்­தனர். 
இதில் தாக்­குதல் நடத்­தி­ய­வர்கள் இந்து மத நம்­பிக்­கையைக் கொண்­ட­வர்கள். ஆனால் மதத்தின் பெயரால் எந்தத் தாக்­கு­த­லையும் நடத்­தி­வில்லை. மாறாக தங்­க­ளது விரக்தி மற்றும் கோபத்தில் விளை­வா­கவே தாக்­கு­தல்­களை நடத்­தினர் என்றும் இம்ரான் கான் தெரி­வித்­துள்ளார். 
தற்­கொலைக் குண்­டுத்­தாக்­குதல் என்­பது பல­வீ­ன­மா­ன­வர்­களின் தந்­திரம். அதற்கு மதச்­சாயம் பூச­மு­டி­யாது. ஆனால் இந்­தத் ­தந்­திரம் ஏன் பய­ன்­ப­டுத்­தப்­பட்­டது என்­ப­தற்­கான உண்­மை­யான கார­ணி­களை தேட­வேண்டும் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார். 
இந்­திய விமா­னப்­ப­டையின் விமானி இன்­றைய தினம் விடு­விக்­கப்­ப­டுவார் என்று நேற்று பாரா­ளு­மன்­றத்தில் பாகிஸ் தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருந்தார். இதன்போதே விடுதலைப் புலிகளின் தொடர்பிலும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










இந்தியாவை வந்தடைந்தார் இராணுவ வீரர் அபினந்தன்

01/03/2019 பாகிஸ்தான் இராணுவத்திடம் 3 நாட்களாக பிடிபட்டிருந்த இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் இன்று இரவு 9 மணியளவில் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பாகிஸ்தானில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வந்த ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாதிகளின் பாலகோட் பயிற்சி முகாமை கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய விமானப்படை குண்டுகள் வீசி அழித்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் விமானப்படை மறுநாள் புதன்கிழமை காஷ்மீரில் உள்ள 4 ராணுவ நிலைகளை குண்டு வீசி அழிக்க முயற்சி செய்தது. 
பாகிஸ்தானின் 20 அதிநவீன விமானங்கள் இந்த தாக்குதல் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி மாவட்டத்துக்குள் வட்டமடித்த அந்த விமானங்களை இந்திய போர் விமானங்கள் சுற்றி வளைத்து விரட்டின. இதனால் பாகிஸ்தான் போர் விமானங்கள் தங்கள் வான் பகுதிக்குள் திரும்பின.
அப்போது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் எப்-16 ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. மேலும் 2 பாகிஸ்தான் விமானங்களை விரட்டி சென்ற போது இந்தியாவின் மிக்-21 விமானம் தாக்கப்பட்டு பழுதடைந்தது.
இதையடுத்து அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி அபினந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர்தப்பினார். அவரை பாகிஸ்தான் ராணுவம் கைதியாக சிறை பிடித்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அபினந்தன் போர் கைதியாக பாகிஸ்தானிடம் சிக்கிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெனீவா ஒப்பந்தத்தின் பேரில் அபினந்தன் விடுவிக்கப்பட வேண்டும் என்று தூதர் மூலம் இந்தியா வலியுறுத்தியது.
பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் நேற்று காலை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு நேரில் சென்று அபினந்தனை விடுவிக்க வலியுறுத்தினார். 
இதற்கிடையே, பாகிஸ்தான் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள், அபினந்தனை உடனே விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று பிற்பகல் பாராளுமன்றத்தில் பேசுகையில், “அபினந்தன் நாளை (இன்று) விடுதலை செய்யப்படுவார்” என்று அறிவித்தார்.
அபினந்தனை வரவேற்க இந்திய விமானப்படை உயர் அதிகாரிகள் குழு இன்று காலை டெல்லியில் இருந்து வாகாவுக்கு புறப்பட்டு சென்றது. அதுபோல அபினந்தனின் பெற்றோர் வர்தமான்-டாக்டர் ஷோபா மற்றும் உறவினர்களும் டெல்லியில் இருந்து விமானத்தில் அமிர்தசரசுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து காரில் வாகா எல்லைக்கு சென்றனர்.
இதற்கிடையே, இன்று காலை பாகிஸ்தானில் இருந்து அபினந்தன் விடுவிக்கப்பட்டார். 35 வயது நிரம்பிய அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று முன்தினம் சிறைபிடித்ததும் எல்லையில் இருந்து ராவல்பிண்டிக்கு அழைத்து சென்று இருந்தனர். அங்கு ராணுவ முகாமில் அவர் தங்க வைக்கப்பட்டு இருந்தார்.
அங்கு வைத்துதான் அவரிடம் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் பேசினார்கள். நேற்றும் அவர் அங்குதான் வைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், இன்று மதியம் அவர் ராவல்பிண்டியில் இருந்து லாகூர் நகருக்கு பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பாகிஸ்தான் அதிகாரிகள் வாகனங்கள் புடைசூழ வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார்.
இன்று மாலை வாகா எல்லை வந்தடைந்த அபினந்தனை இந்திய மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். ஆனால், அவரை ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, இரவு 9 மணிக்கு ஒப்படைக்கப்பட உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இரவு 9 மணியளவில் பாகிஸ்தான் அதிகாரிகள் தமிழக வீரர் அபினந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.   நன்றி வீரகேசரி 











பாகிஸ்தான் விமானியை இந்திய விமானி என நினைத்து அடித்துக் கொன்ற கிராம மக்கள்

03/03/2019 பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச் சென்றபோது அபிநந்தன் சிக்கிக் கொண்ட நிலையில், பாகிஸ்தான் விமானியை கிராம மக்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் கடந்த 26 ஆம் திகதி இந்திய விமானங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. அடுத்தநாள் காலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய பகுதிக்குள் தாக்குதல் நடத்துவதற்கு வந்தன. உடனே இந்திய போர் விமானங்கள் அவற்றை விரட்டிச் சென்றன.
அதில் மிக்-21 என்ற விமானத்தை அபிநந்தன் ஓட்டிச் சென்றார். அவர் பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை விரட்டிச் சென்று ஏவுகணையால் சுட்டு வீழ்த்தினார். அந்த விமானம் வெடித்து சிதறி கீழே விழுந்தது. அடுத்த வினாடி அபிநந்தன் ஓட்டிச் சென்ற விமானத்தின் மீது பாகிஸ்தான் ஏவுகணை வீசி தாக்கியது. அதில் அபிநந்தனின் விமானமும் வெடித்து சிதறி கீழே விழுந்தது.
இந்த நேரத்தில் அபிநந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்தார். அதேபோல அபிநந்தனால் வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் விமானத்தில் இருந்தும் விமானி பாராசூட்டில் கீழே குதித்தார்.
அபிநந்தனும், பாகிஸ்தான் விமானியும் தனித்தனி இடத்தில் பாராசூட்டில் இறங்கினார்கள். அபிநந்தனை கிராம மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் ராணுவம் வந்து அவரை மீட்டது.
அதே நேரத்தில் பாகிஸ்தான் விமானி விழுந்த இடத்தையும் கிராம மக்கள் சுற்றி வளைத்தனர். ஆனால் அவர் பாகிஸ்தான் விமானி என்று அவர்களுக்கு தெரியவில்லை. அவர் இந்திய விமானி என கருதி அவரை சரமாரியாக தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்தார். பின்னர் குறித்த விமானி உயிரிழந்தார்.
28 ஆம் திகதி தாக்குதல் நடந்தபோது இந்தியாவை சேர்ந்த 2 விமானிகளை நாங்கள் பிடித்துவிட்டோம். ஒருவரை கைது செய்து வைத்திருக்கிறோம். மற்றொருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறார் என்று பாகிஸ்தான் முதலில் அறிவித்தது.
சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு விமானியை மட்டும்தான் பிடித்துள்ளோம். அவரது பெயர் அபிநந்தன் என்று பாகிஸ்தான் கூறியது.
பாகிஸ்தானின் விமானியையும் இந்திய விமானி என கருதி பாகிஸ்தான் அரசு அவரையும் சேர்த்து 2 பேர் என கூறியது. பின்னர் அவர் பாகிஸ்தான் விமானி என உறுதியானதும் அந்த தகவலை மாற்றி கூறியது இப்போது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு சொந்தமான போர் விமானம் எதுவும் இந்தியாவில் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் விமானம் வீழ்த்தப்பட்டதை இந்தியா உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் அந்த விமானி அடித்து கொல்லப்பட்ட வி‌டயமும் இப்போது உறுதியாகி இருக்கிறது. இந்த தகவலை லண்டனில் வசிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த சட்டத்தரணி காலித்உமர் உறுதி செய்திருக்கிறார்.
பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு கிடந்ததையும், விமானி தாக்கப்பட்டதையும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். ஆனால் பாகிஸ்தான் அரசு அதில் உடனே தலையிட்டு வலைதளத்தில் இருந்து நீக்கியது. அதே நேரத்தில் நான் அதற்கு முன்பே அந்த வீடியோக்களை பார்த்துவிட்டேன் என்றும்  காலித்உமர் கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் விமானப்படை தரப்பில் இருந்தும் தனக்குள்ள தொடர்பின் மூலமும் பல தகவல் கிடைத்ததாக அவர் கூறியுள்ளார். அதில் விமானம் வீழ்த்தப்பட்டது, விமானியை கிராம மக்களே அடித்து கொன்றது உறுதியாகி இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அந்த விமானியின் பெயரையும் அவர் வெளியிட்டுள்ளார். அவரது பெயர் விங் கமாண்டர் ‘ஷாகஸ் உத் தின்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். அபிநந்தன் போலவே ஷாகஸ் உத் தினும் விமானப்படை அதிகாரி ஒருவரின் மகன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.  நன்றி வீரகேசரி 





No comments: