இலங்கைச் செய்திகள்


அமெரிக்காவின் தலையீட்டினைக் கோரி யாழில் கையெழுத்து போராட்டம்

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான மகஜர்  ஐ.நா.வதிவிடப்பிரதிநிதியிடம் கையளிப்பு

யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையத் தடை

கோத்தா உள்ளிட்ட 8 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி கொலைச் சதி ; விடுதலையானார் இந்தியப் பிரஜை ; பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல்

“இராணுவ வசமுள்ள பொதுமக்கள் காணி­களை கைய­ளிக்கும் வரை அழுத்­தம் கொடுப்­போம்”

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் விசமிகளின் நாசகார செயல்: சிவலிங்கம் உடைக்கப்பட்டதால் பரபரப்பு..!

வடக்கில் 850 தமிழ் பொலிஸார் சேவையில் இணைப்பு

திருகேதீஸ்வரத்தில் பதற்றம்


அமெரிக்காவின் தலையீட்டினைக் கோரி யாழில் கையெழுத்து போராட்டம்

25/02/2019 வட,கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லையெனத் தெரிவித்து அமெரிக்காவின் தலையீட்டினைக்கோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்துப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு நல்லூர் ஆலய முற்றிலில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மெளனம் காத்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு, அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் சங்கத்தினால் வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் இந்த கையெழுத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
மேலும் இந்த போராட்டத்தின் பிரதான விடயமாக, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் அமெரிக்கா தலையிடவேண்டும் எனக்கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 











காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான மகஜர்  ஐ.நா.வதிவிடப்பிரதிநிதியிடம் கையளிப்பு

25/02/2019 காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான மற்றும் கேப்பாப்புலவு காணி விடுவிப்பு சம்பந்தமான மகஜர்களை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதியிடம் உலகத்தமிழ் மாணவர் ஒன்றிய அமைப்பாளர் கந்தசாமி ராகுலன் கையளித்தார்.
இன்றையதினம் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதியை கொழும்பில் சந்தித்த  உலகத்தமிழ் மாணவர் ஒன்றிய அமைப்பாளர் கந்தசாமி ராகுலன் மற்றும் அவரது குழுவினர் ஐ.நா. தொண்டர் அமைப்பின் ஊடாக காணாமலாக்கப்பட்டோருக்கான மற்றும் கேப்பாப்புலவு காணி விடுவிப்பு சம்பந்தமான மகஜர்களை கையளித்தார்.
இதே வேளை இன்று ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் இணைந்து கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வட பகுதி முழுவதும் பூரண ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது  நன்றி வீரகேசரி 











யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையத் தடை

26/02/2019 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட வளாகம் உள்பட  அனைத்து பகுதிகளுக்கும் உள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை புதுமுக மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் கடுமையான பகிடி வதைக்கு உட்படுத்தியிருக்கின்றனர். சம்பவம் தொடர்பாக புதுமுக மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் பதற்றமடைந்து, பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளனர். 
சம்பவத்தையடுத்து உப விடுதிக் காப்பாளர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க முனைந்த போது, சிரேஷ்ட மாணவி ஒருவர் தகாத வார்த்தைகளினால் உபவிடுதிக் காப்பாளரை ஏசியதுடன், சம்பவத்தை ஒளிப்பதிவு செய்த தொலைபேசியைப் பறித்துச் சென்றதுடன், விடுதியினுள் கலகத்தில் ஈடுபட்டுமுள்ளனர். 
இதனையடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை பிரதிப்பதிவாளர் ஒருவருமாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முனைந்த போது,  பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் மற்றும் விரிவுரைகளுக்கெதிராக சிரேஷ்ட மாணவர்கள் குழப்பத்திலீடுபட்டனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் நேற்று மாலை தொழிநுட்ப பீடத்தில் கல்வி பயிலும் சகல மாணவர்களும் உள் நுழையா வண்ணம் துணைவேந்தரினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இலங்கையில் பகிடி வதைக்கெதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், யாழ். பல்கலைக்கழகத்தில் இதுவரை காலமும் கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை. 
இம் முறை பகிடி வதைக்கெதிரான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை - சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை மாணவர்கள் மீதான உள்நுழைவுத் தடை நீக்கப்பட மாட்டாது என அறிய வருகிறது.
துணைவேந்தரின் அவசர அறிவித்தலுக்கமைய விடுதிகளில் தங்கியுள்ள தொழில்நுட்ப பீட மாணவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  நன்றி வீரகேசரி 









கோத்தா உள்ளிட்ட 8 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

26/02/2019 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்ந்துள்ள வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி வரை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 
எவன்கார்ட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்து செல்ல அனுமதியளித்ததன் ஊடாக அரசாங்கத்துக்கு 1140 கோடி ரூபா நட்டதை ஏற்படுத்தியதாக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்குத் தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றினால் இடைக்கால தடை உத்தரவொன்று அமுலில் உள்ள நிலையில், உயர் நீதிமன்றின் உத்தரவொன்று கிடைக்கும் வரை இவ்வாறு குறித்த மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 











ஜனாதிபதி கொலைச் சதி ; விடுதலையானார் இந்தியப் பிரஜை ; பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல்

27/02/2019 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்தியப் பிரஜையான மெர்சாலின் தோமஸ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும்  சதித்தத் திட்டம் தொடர்பாக நாமல் குமாரவால் வெளியிடப்பட்ட குரல் பதிவையடுத்து இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.  நன்றி வீரகேசரி 









“இராணுவ வசமுள்ள பொதுமக்கள் காணி­களை கைய­ளிக்கும் வரை அழுத்­தம் கொடுப்­போம்”

27/02/2019 படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட வாகன ஊர்வலத்துடன் கூடிய கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தை இன்று காலை சென்றடைந்தது.
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக நடைபெற்ற கவனவீர்ப்பு போராட்டத்தின் பின்னர் கையெழுத்து சேகரிக்கப்பட்டது.
கேப்பாப்பிலவு மக்களுடன், காணி உரி­மைக்­கான மக்­கள் இயக்­கம் இணைந்து “வடக்கு பகு­தி­க­ளில் இன்­று­ வரை படை­யி­னர் ஆக்­கி­ர­மிப்­பில் உள்ள காணி­களை மக்­க­ளி­டம் மீளக் கைய­ளிக்க அதி­கா­ரி­க­ளுக்கு அழுத்­தம் கொடுப்­போம் என்­பதை வலி­யு­றுத்­தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்­லைத்­தீவில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் பரந்­தன் ஊடாக கிளி­நொச்சியை அடைந்தது. அங்கிருந்து மீண்டும் புறப்பட்ட ஊர்வலம் யாழ்ப்­பா­ணத்தை இன்று வந்தடைந்தது. பூந­கரி ஊடாக மன்­னார், வவு­னியா, நீர்­கொ­ழும்பு, கொழும்பு வரை ஊர்வலம் இடம்பெறும்.
எதிர்­வ­ரும் இரண்­டாம் திகதியன்று கொழும்பில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 










திருக்கோணேஸ்வர ஆலயத்தில் விசமிகளின் நாசகார செயல்: சிவலிங்கம் உடைக்கப்பட்டதால் பரபரப்பு..!

01/03/2019 திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் அன்னதான மடத்தின் முன் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கச் சிலை நேற்றிரவு (28.02.2019) இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு,  இன்னுமொரு இடத்தில் போடப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக இன்று (01.03.2019) திகதி ஆலய அன்னதான மடத்தின் அருகில் கூடிய தமிழ் இளைஞர்கள், பொது மக்கள், இந்துக்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு மீள அவ்விடத்திலேயே சிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்யும் வரை அவ்விடத்தில் இருந்து கலைந்து செல்லமாட்டோம் என கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் தொண்டர் சபை பிரதிநிதிகள், நேற்றைய தினம் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் பிரதான திருவுருவச் சிலை திறந்து வைக்கபட்டது. அதனைத் தொடர்ந்து அவ்விடத்தில் இருந்த ஒரு சிவலிங்கத்தை மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வீதி அலங்காரம் செய்யும் குழுவினர் அன்னதான மடத்திற்கு முன் வைத்திருந்தனர்.


அந்த சிவலிங்கமே இனந்தெரியாதோரால் நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.. அது தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்தினரிடம் அனுமதி கோரி அதனை குறித்த இடத்தில் வைப்பதற்கு அனுமதி வழங்கக் கோரி கடிதம் ஒன்றை ஆலய நிர்வாகிகளும் மக்கள் பிரதிநிதிகளும் கோரியுள்ளமையும் குறிப்பிடதக்கது.
இது தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்தின் கொழும்பில் உள்ள தலைமையகத்திற்கு கடிதம் ஒன்றை தொலைநகல் மூலமாக அனுப்பி அனுமதியை பெறுவதற்காக மக்கள் பிரதிநிதிகள் ஆலய நிர்வாகிகள் காத்திருக்கின்னறனர்.
இருப்பினும் எதிர்வரும் 10ம் திகதிவரை சிவலிங்கத்தை அவ்விடத்தில் வைப்பதற்கு பேச்சளவில்  தொல் பொருள் திணைக்களம் அனுமதி வழங்கப்பட்டள்ள போதும் அதற்கான எழுத்து மூல ஆவணத்தை எதிர்பார்த்து காத்திருகப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன. 


 நன்றி வீரகேசரி















வடக்கில் 850 தமிழ் பொலிஸார் சேவையில் இணைப்பு


01/03/2019 வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்து கொள்ளவுள்ளதாக வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 
வடக்கு மாகாணத்தில் புதிதாக 850 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைத்து கொள்ளப்படவுள்ளனர்.
இதற்காக 18 வயதுக்கு 28 வயதுக்கு இடைப்பட்ட 5 அடி 4 அங்குலம் உயரமுடைய இளைஞர்கள், யுவதிகள் முன்வரவேண்டும்.
இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 30 இலட்சமாகும். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெறுமனே 85 ஆயிரம் பொலிஸாரும், 10 ஆயிரம் விசேட அதிரடிப் படையினரும் மாத்திரமே உள்ளனர்.
இந்தநிலையில் வட மாகாணத்திற்கு தேவையாகவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் விபரம் குறித்து பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 













திருகேதீஸ்வரத்தில் பதற்றம்

03/03/2019 நாளைய தினம் மன்னார் திருகேதிஸ்வர ஆலயத்தில் வருடாந்த  சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வீதிகள் மற்றும் பலவிதமான சீரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது 
அந்த வகையில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு  பல வருடங்களுக்கு முன் செய்யப்பட்டதால் துருப்பிடித்திருந்தது அதனை மாற்றி  புதிய வளைவு அமைக்கும் பணியில் சில தொண்டர்கள்  இன்றைய தினம் (03.03) ஈடுபட்டிருந்தார்கள்
அப்போது அங்கு வந்த மாற்று மத மக்கள் சிலர் அவ்விடத்தில் வளைவு அமைக்க விடாமல் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன்  கோவிலுக்குள் உள்நுழையும் வளைவுகள் முழுவதையும்  அடித்து நொறுக்கி பிடிந்து எறிந்துள்ளனர்
சம்பவம் பற்றி மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்ட போதும் ஒருவர் கூட சம்மந்தப்பட்ட இடத்திற்கு  செல்லவில்லை எனவும் இருசாரான்ருக்கும் இடையில் பிரச்சினை  நடப்பதற்கு சற்று நேரத்தின் முன் ஒருபாராளுமன்ற உறுப்பினர் அங்கிருந்து சென்றதாக மக்கள் தெரிவிக்கின்றார்கள்
அதே நேரத்தில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதும் சம்பவம் நடந்து முடிந்த பின்னரே பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர் ஆனாலும்  எவரும் கைது செய்யப்படவில்லை என அறிய முடிகின்றது
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரி கருத்து தெரிவித்த போது இந்த பகுதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது இதில் வளைவுகள் அமைப்பது சட்டப்படி குற்றம் என்றும் இந்த வளைவுகளை பிடுங்கி எறிந்தவர்கள் மீது பொலிஸ்' நிலையத்தில் முறைப்பாடு செய்து  சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கூறி அனைவரையும் அவ்விடத்தில் இருந்து செல்லுமாறு கட்டளை இட்டனர்
இது சம்பந்தமாக கத்தோலிக்க மக்கள் கருத்து தெரிவிக்கையில் இந்த பாதை நீதிமன்ற வழக்கில் உள்ளதாகவும் கொங்ரீட் போட்டது தமக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறினார்கள் 
இது சம்பந்தமாக திருக்கேதீஸ்வர ஆலயத்தின் நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கும் போது இந்த பாதைக்கு வழக்குகள் இல்லை பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட வளைவு துருப்பிடித்ததால் புதிதாக அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது  இந்த செயலை செய்தார்கள் அடுத்தபடியாக இந்த வீதியில் வளைவு அமைப்பதற்கு  வீதி அபிவிருத்தி அதிகாரா சபையின் அனுமதிக்கடிதம் உள்ளதாக தெரிவித்த ஆலய நிர்வாகத்தினர் நாங்கள் கிறிஸ்தவர்களை மதிக்கின்றோம் 
அவர்கள் எங்கள் இரத்த உறவுகள் அதனால் அவர்கள் எங்கள் கடவுளின் வளைவுகளை பிடுங்கிய போதும் அமைதியாக நின்றோம்  
இனக்கலவரத்தால் நம் தமிழ் சமூகம் பாரிய பின்னடைவையும் அழிவையும் சந்தித்தது உறவுகளுக்கள்  மதக்கலவரத்தை நாம் விரும்பவில்லை என்று நிர்வாகத்தினர் கருத்து தெரிவித்தார்கள் 
இரண்டு பக்கமும் இல்லாமல் வேடிக்கை பார்த்த மக்களிடம் கருத்து கேட்ட போது நீதி மன்றத்தால் தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் இல்லை  எந்த மதமாக இருந்தாலும் சரி நாளைய தினம் திருவிழா நடக்க இருக்கிறது நாளை ஒருநாள் பொறுமையாக  இருந்து  உடைப்பது எனில் திருவிழா முடிந்த பின் உடைத்திருக்கலாம்  நாம் இப்படி கலவரங்களில் ஈடுபடுவதால் பேரினவாதிகளுக்கு சந்தர்ப்பம் அமைந்து விடும் என்கிறார்கள்
மேலும் கவலைக்கு உரிய விடயம் என்ன எனில் அங்கு  நின்ற பங்கு தந்தையர்களும் இவ்வாறான சமயங்களில் நடு நிலமையாக செயற்படாமல் ஒரு சார்பானவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டமை குறிப்பிடதக்கது  நன்றி வீரகேசரி 




No comments: