வாழ்தல் என்பது - செ .பாஸ்கரன்

.


இலட்சியங்கள் எல்லாவற்றையும்
நம்மால் அடையமுடியாது
ஒவ்வொன்றாய் முயற்சிக்கலாம்
ஜன்னலின் ஊடாய்
வெளித்தெரியும் வானம்
அதில் எங்கோ தொலைதூரத்தில்
வட்டமடிக்கும் பருந்து
கண்கள் மட்டும்
இரையைத் தேடியவண்ணம்
ஊடுருவும் பார்வையில் சிறு புள்ளி
பறத்தலை திசை மாற்றி
தொப்பென வீழ்வதுபோல்
கீழிறங்கி மேலெழும்பும்
கண்ணிமைக்கும் நேரத்தில்
கால்கள் இரண்டிற்கிடையில்
உயிருக்காய் போராடும் ஓர் ஆன்மா

சற்று முன்பு நினைக்காத தருணம்
இப்போ நிகழ்த்து விட்டது
வாழ்வில்  இது நியதி 
இன்றும் நேற்றைய நாட்போல்
சுகமாக இருக்குமா
கேள்வியொன்று
விழித்தெழுகையில்
எம்முன் எழுந்து நிற்கும்
நேற்றைய கவலைகள்
இன்றும் மீதமிருப்பதுபோல்
தொற்றிக் கொள்கிறது

நமக்கு நாமே போட்டுக் கொண்ட
திரைகளை விலக்கிப் பார்க்கும் போது
நீண்ட தூரம் பயணித்திருப்போம்
மரணம் அதை  வெல்லும் இலட்சியம்
ஒவ்வொரு நிமிடமும் நீ வாழ்ந்து கொள்
வாழ்தல் என்பது புரியாத புதிர்
விடை தெரிந்து விட் டால்
உன் இலட்சியம் நிறைவேறிவிடும்







No comments: