நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்களின் அறிமுக நிகழ்வு - கானா பிரபா



.

“அம்மா தன்னிடம் எதையும் வைத்துக் கொள்ளாமல் தான் கற்ற எல்லாவற்றையுமே தன்னிடம் நடனக் கலை கற்ற பிள்ளைகளுக்குக் கொடுத்து விட்டார், அவர் எதையுமே ஒளித்து வைக்கவில்லை”

இப்படியொரு நெகிழ்வானதொரு அனுபவ மொழிகளை மகன் பகிர, தாய் கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல் வெளியீடு கடந்த சனிக்கிழமை சிட்னி முருகன் ஆலயத்தின் கலாசார மண்டபத்தில்
நிகழ்ந்தது.நாட்டிய கலாநிதி மற்றும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திருமதி கார்த்திகா கணேசரின் மூன்று  நூல்களின் அறிமுக நிகழ்வே இவ்வாறு இடம்பெற்றது.

இந்த நிகழ்வினை திருமதி சோனா பிரின்ஸ் அவர்களின் வரவேற்புரையுடன், இறை வணக்கத்துடன் திரு திருமதி பவராஜா ஆகியோர் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர். 





தலைமை தாங்கி திரு வை.ஈழலிங்கம் அவர்கள் தொடர்ந்து முன்னெடுத்தார்.  கார்த்திகா கணேசரின் முதல் குருவாக விளங்கிய பிரம்மஶ்ரீ நா.வீரமணி ஐயர் தன்னுடைய இணுவில் மண்ணைச் சேர்ந்தவர் என்று பெருமையோடு குறிப்பிட்ட அவர் தொடர்ந்து புலம்பெயர் வாழ்வில் ஈழத்தமிழர் கழகத்தின் நிகழ்வுகளில் பல்வேறு நாட்டிய நாடகங்களை அரங்கேற்றியதோடு தொடர்ந்து அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் தன்னுடைய படைப்பாற்றலைக் காட்டி வருவதைக் குறிப்பிட்டுப் பேசினார்.

தொடர்ந்து செளந்தரி கணேசன் அவர்கள் அறிமுக உரையை நிகழ்த்திய போது ஒரு படைப்பு எல்லோருக்கும் பயனுடையதாக இருக்க வேண்டும் என்ற முனைப்போடு 56 ஆண்டுகளாக நடனத் துறையில் இயங்குபவர் கார்த்திகா என்று  சிலாகித்துப் பேசினார். 

“தமிழர் வளர்த்த ஆடற்கலைகள்” என்ற நூலைப் பற்றிப் பேச வந்த கலாநிதி ஆ.சி.கந்தராஜா அவர்கள்
தன்னுடைய வாழ்வியலில் நாற்பது ஆண்டுகளாக பரத நாட்டியம் ஒன்றைத்தானும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருக்கவில்லை என்றும், முதல் முதலாக இந்த வாய்ப்பு சிட்னிக்குக் குடி பெயர்ந்த பின்பு கார்த்திகா கணேசர் அவர்களின் பரத நாட்டிய நிகழ்வின் வழியாகவே கைகூடியது என்றும் குறிப்பிட்டார்.
ஈழத்தில் பரதக் கலை செழுமை பெறுவதற்கு முந்திய காலகட்டத்தின் கூத்து மரபு, சின்ன மேளம் போன்ற நாட்டிய, நாடக மரபுகளைத் தன் அனுபவங்களினூடு இந்தப் புத்தகத்தை ஒப்பு நோக்கி ஆய்ந்து பேசினார்.





அவருடைய உரையில் ஈழத்தின் பண்பாட்டு மரபியலில் நிகழ்ந்த மாற்றம் குறித்த ஆழமான பார்வை இருந்தது. காலவோட்டத்துக்கேற்ப நம் கலையிலும் புதுமை புகுத்தப்பட வேண்டும் அன்றில் அது அழிந்து விடும் என்று கார்த்திகா கணேசர் முன் வைத்த சிந்தனையும், அதை அவர் செயல் வடிவத்தோடு தன் நாட்டியப் பண்பில் செய்து காட்டியதையும் குறிப்பிட்டுப் பேசினார்.

இந்த நிகழ்வு நடைபெறப் போகிறது என்றறிந்து கார்த்திகா கணேசர் அவர்களின் கலையுலக வாழ்க்கையை வாழ்த்தி திருமதி ராணி பாலா கவிதைப் பகிர்வு மற்றும் வாழ்த்து மடலைச் சட்டம் போட்டுப் பகிர்ந்தார்.

“காலம் தோறும் நாட்டியக் கலை” என்ற நூலை ஆய்வு செய்த செல்லையா பாஸ்கரன் அவர்கள் 
பேராசிரியர் மெளனகுரு, பேராசிரியர் இந்திரபாலா மட்டுமன்றி சிங்கள விமர்சகர்களாலும் கார்த்திகா கணேசர் விதந்து பாராட்டப்பட்டதை நூல் வழியே சிலாகித்தார். குறிப்பாக இந்திரபாலா குறிப்பிட்ட “சிங்கப் பார்வை” என்ற சொலவாடையைக் கோடிட்டுக் காட்டினார்.
ஆடல் கலையில் கூத்து மரபு பின்பற்றப்பட வேண்டும் என்ற கார்த்திகா கணேசரின் வாக்கை முன் மொழிந்ததோடு நான்கு ஆண்டுகளில் 8 நாட்டிய நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றிய அசுர சாதனையைச் சொல்லி வியந்தார். எல்லாளன் - துட்டகைமுனு நாட்டியத்தை போர் தர்மத்தின் நோக்கோடு கையாண்ட திறனைக் காட்டி இதன் வழி பரவலான விமர்சனத்தையும் கார்த்திகா எதிர்கொண்டதைக் குறிப்பிட்டார்.


இயேசு காவியம் மேடையேற்றலில் கார்த்திகா கணேசரின் புதுமையை தலைமையுரை ஆற்றிய ஈழலிங்கம் அவர்கள் ஞாபகப்படுத்தினார்.

இந்திய நாட்டியத்தில் திராவிய மரபு நூல் பற்றிய திறனாய்வை நிகழ்த்த வந்த திரு தனபாலசிங்கம் அவர்கள், தன்னுடைய தீவிர இலக்கிய ரசனையின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் சிலப்பதிகாரத்தோடு ஓப்பிட்டும், பொதுமைத் தன்மையோடும் நூலை ஆய்வு செய்தார். பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் தான் பரதக் கலையின் முதல் நூலென்றால் மாதவி குறித்து சிலப்பதிகாரத்தில் வரும் பாடலில் அடையாளப்படுத்தும் நாட்டிய நூல் இதையே குறிக்கிறதா அன்றித் தனித்துவமாக முன்னெழுந்த படைப்பா என்று நூலாசிரியரைக் கேள்வியெழுப்பினார்.

சிட்னியில் வாழும் இளைய தலைமுறையினரை மேடையேற்றித் தன் நூல்களை வழங்கிக் கெளரவித்தார் கார்த்திகா கணேசர். இருப்பினும் இந்த நிகழ்வின் வழியாகச் சிலாகிக்கப்பட்ட நூல்களின் சிறப்பை வந்திருந்தோர் உடன் வாங்கிப் 
படிக்க முடியாதது செய்தது ஒரு குறையாகவே பட்டது.

கார்த்திகா கணேசர் அவர்களது மகன் அமிழ்தன் தன்னுடைய தாயார் எவ்வளவு அர்ப்பணிப்போடு நாட்டியக் கலைக்காக இயங்கியதைத் தன் தொட்டில் பருவத்தில் இருந்து நேரே கண்டு அனுபவத்ததைச் சுவையான சம்பவங்கள் தொட்டுப் பேசினார். 
தினமும் ஒரு தவம் போலத் தான் கற்ற நடனக் கலையைப் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார் அம்மா, அங்கே பார்வையாளராக யாரும் இருக்காத விடத்தும் அவர் தொடர்ந்து ஆடிக் கொண்டே இருப்பார் என்றார் மகிழ்னன்.

அப்போது பொப்பிசைப் பாடல்களுக்குப் பாட்டெழுதிப் பிரபலமான ஈழத்து இரத்தினம் என்ற பாடலாசிரியரை வைத்து இராமாயண நாட்டிய நாடகத்தை அரங்கேற்றிய புதுமையைப் பாடல் வரியின் சந்தமிசைத்துப் பாடி மேற்கோளுடன் குறிப்பிட்டார். புதுமைகளை ஏற்றுக் கொள்ளாத அந்தக் காலத்தில் வழுவூர் இராமையாப் பிள்ளை புதுமைகளைப் பழைமை போல் காட்டி கார்த்திகா கணேசர் வழியாகக் கொண்டு வந்தாராம்.

அந்தக் காலத்தில் மேற்படிப்புப் படிக்கவெண்ணிப் பெண்கள் மேலை நாடுகளுக்குப் போகும் போது ஏன் தன் மனைவி நாட்டியம் பயில இந்தியா செல்லக் கூடாது என்ற தனது கணவரின் பரந்த சிந்தனையின் வெளிப்பாடே தன் திருமணத்துக்குப் பின் நாட்டியக் கலையில் தீவிரமாக இறங்கியதன் பின் புலம் என்றார் ஏற்புரை ஏற்க வந்த கலாநிதி கார்த்திகா கணேசர்.



பேராசிரியர் கைலாசபதி அவர்கள் நாட்டியக் கலை வடிவம் குறித்த தேடலில் இருந்த வேளை கார்த்திகா கணேசரது மூன்று கட்டுரைகளைப் பார்க்கும் வாய்ப்புக்  கிட்டி அதன் வழியாகத் தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் அவர்களின் தூண்டுதலில் தொடராக எழுதி நூலுருக்கொண்ட நினைவுகளைப் பகிர்ந்ததோடு புலம் பெயர் வாழ்வில் யசோதா பத்மநாதன் போன்றோர் தன் எழுத்துகளைச் சிலாகித்துத் தொடர்ந்து எழுதத் தூண்டியதன் பேறாக தமிழ் முரசு அவுஸ்திரேலியாவுக்கு எழுத வந்த கதையையும் சொன்னார். பேராசிரியர் மெளனகுருவிடமிருந்து கூத்து மரபின் ஆழமான நுட்பங்களை அறிந்து கொண்டார். பேராசிரியர் சிவத்தம்பி தன்னுடைய நாட்டிய நாடகத்துக்கான அறிமுக உரையைக் கொடுத்ததோடு பல மேடைகளுக்குத் தொடர் ரசிகனாக வந்து சிறப்பித்தார். இவ்வாறான அறிஞர் தொடர்போடு கார்த்திகா கணேசரின் கலைப்பயணம் தொடர்கிறது.

தன் தாயிடம் நடனம் பயில வரும் மாணவிகள் அசைட்டையோடு கற்கும் போது மனம் சளராமல் ஜதிகள் போட்டுக் கொண்டிருக்கும் தன் தாயிடம் அதைக் காட்டி விமர்சனம் செய்யும் மகனுக்குக் கார்த்திகா கணேசர் சொல்வாராம் இப்படி
“நடனத்தைக் கற்க வேண்டும் என்று ஆசையோடு வரும் பிள்ளையை ஆரம்பத்திலேயே விமர்சித்து அதை வெறுக்க வைக்கக் கூடாது, நாளாக நாளாகத் தன்னிடம் இருந்த குறை தெரிந்து தன்னைத் திருத்திக் கொள்ளும், அதுதான் கலை”.
இந்த அனுபவ மொழிகளில் தான் பெரிய தத்துவமே ஒளிந்திருக்கிறது.





































No comments: