சொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 09 எழுத்துலகில் புகுந்துவிடும் சனிபகவானிடத்தில் எச்சரிக்கையாக இருங்கள்!!!??? கருத்தையே மாற்றிவிடும் அச்சுப்பிசாசுகளினால் நேர்ந்துவிடும் அலங்கோலம்!!! - முருகபூபதி


ஒரு காலத்தில் கல்லிலே பொழியப்பட்ட தமிழ் இன்று கணினியில் பதிவாகிறது. பனையோலை ஏட்டுச்சுவடிகளில் எழுதிய முன்னோர்கள் தங்கள் வசம் ஒப்புநோக்காளர்களை (Proof Readers)  வைத்திருந்தார்களா என்பது தெரியவில்லை!
வெள்ளீய அச்சுக்கள் அறிமுகமானதன் பின்னர் அச்சகங்களிலும் பத்திரிகை, இதழ்கள் வெளியிடும் நிறுவனங்களிலும் ஒப்புநோக்காளர் பணியும் அறிமுகமானது.
எனது தொழிலும் ஒப்புநோக்காளராகவே ஆரம்பமானது. எனக்கு மட்டுமல்ல, "சிலம்புச்செல்வர் "மா.பொ.சி., மற்றும் எழுத்தாளர்கள் ஜெயகாந்தன்,  விந்தன்,  எனது நண்பர்கள், தினக்குரல் , வீரகேசரி ஆசிரிய பீடத்தைச்சேர்ந்த வீரகத்தி தனபாலசிங்கம், பிரணதார்த்தி ஹரன், சிவராஜா, அற்புதானந்தன், மறைந்த "கோபு" கோபாலரத்தினம் உட்பட நான் அறியாத பலரும் ஒப்புநோக்காளர்களாகவே தமது எழுத்துலகத்திற்கு வந்திருக்கிறார்கள்.
1976  இல் வீரகேசரியில் ஒப்புநோக்காளர் தேவை என்ற விளம்பரத்தை  பார்த்துவிட்டு விண்ணப்பித்தேன். ஏற்கனவே எங்கள் ஊரில் எனது மாமா முறையான மயில்வாகனன் அவர்கள் நடத்திய சாந்தி அச்சகத்திலும் ( இங்கிருந்து அண்ணி என்ற மாத இதழும் வெளியானது) கொழும்பில் கலா அச்சகத்திலும் சில மாதங்கள் நூல்கள், இதழ்கள், துண்டுப்பிரசுரங்கள் ஒப்புநோக்கிய அனுபவத்துடன், வீரகேசரிக்காக எங்கள் பிரதேச நிருபராக 1972 முதல் இயங்கியிருந்தமையாலும் அந்தவேலைக்கு விண்ணப்பித்தேன்.
நேர்முகத்தேர்வுக்கு முப்பது பேருக்கு மேல் வந்திருந்தார்கள். அந்தக்கூட்டத்தை பார்த்ததும், எனக்கு இந்த வேலை கிடைக்கப்போவதில்லை என்ற அவநம்பிக்கையும் வந்தது.
நேர்முகத்தேர்வில்  எழுத்துப்பரீட்சையும் வைத்தார்கள். ஒப்புநோக்காளரின் கடமை பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும். எழுதினேன். எழுத்துப்பிழைகள் காணப்பட்ட  ஒரு பிரசுரத்தை தந்து அதனைத் திருத்திக்காண்பிக்குமாறும் கேட்டிருந்தார்கள். அதனையும் செய்தேன்.
அதன்பின்னர் வீரகேசரி பொது முகாமையாளர் எஸ். பாலச்சந்திரனும், பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசமும் ஒரு அறையில் நேர்முகத்தேர்வு நடத்தினார்கள். கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னேன். அவர்கள் இருவரும் தற்போது மேல் உலகத்தில் இருக்கிறார்கள்.
நான் இந்த உலகத்திலிருந்து அவர்களையும் நினைவுகூர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றேன். ஏனென்றால் எனது வாழ்வின் விதியை மாற்றியவர்கள். அவர்கள் அன்று நடத்திய  நேர்முகத்தேர்வில் நானும் நண்பர் வீரகத்தி தனபாலசிங்கமும் தெரிவாகவில்லையென்றால், இன்று நாம் வேறு வேறு திசைகளில் பயணமாகியிருப்போம்.
எழுத்துப்பிழைகள் கருத்துப்பிழையாகிவிடும் ஆபத்து பயங்கரமானது. அறிஞர் அண்ணா காலத்தில் அவர் நடத்திய பத்திரிகையில் கூட பாரதூரமான எழுத்துப்பிழை நேர்ந்து அவர் மன்னிப்புக்கேட்டிருப்பதாகச் சொல்வார்கள்.
                                 "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய கொள்கைகளை பற்றியிருப்போம்." என்ற தலைப்பில் " ள்" வரவேண்டிய இடத்தில் " ங்"வந்துவிட்டது!?
மற்றும் ஒரு தமிழக பத்திரிகையில் ராஜா - ஜிக்கி என்ற பிரபல பின்னணி பாடகர்கள் காதலித்து மணம் முடித்தவேளையில் வந்த செய்தியில் ராஜாஜிக்கு  திருமணம் என்று வந்துவிட்டது. மூதறிஞராகவும் தமிழக முதல்வராகவும் ஆளுநராகவும் வாழ்ந்த ராஜாஜி திருமணம் முடிக்காத கட்டைப்பிரம்மச்சாரி!
இந்தச்செய்திகளையெல்லாம் கேள்வி ஞானத்தில் தெரிந்துவைத்திருந்தமையால்,  அன்று நடந்த எழுத்துப்பரீட்சையில் எழுத்துப்பிழைகள் கருத்துப்பிழையாகிவிடும் ஆபத்தும் தோன்றும், எனவே பத்திரிகைகளில் ஒப்புநோக்காளரின் பணி மிகவும் முக்கியமானது. பொறுப்புவாய்ந்தது என்றும் எனது கட்டுரையில் எழுதியிருந்தேன். இதனையே இன்றும்  ஊடகங்களில் பணியாற்றும் ஒப்புநோக்காளரிடம் வலியுறுத்திக்கொண்டு, நான் சொல்லத்தவறிய கதைக்கு வருகின்றேன்.
வீரகேசரி வெள்ளீய அச்சுக்கள் கோர்த்து அச்சிடப்பட்ட காலத்தில் அச்சுக்கோப்பாளர் பிரிவில் சிறிய சிறிய மரத்தால் செய்யப்பட்ட ராக்கைகளில் இருக்கும் எழுத்துக்கள் தேய்ந்திருந்தால், நாம் ஒப்புநோக்கும் பிரதிகளும் அவற்றை கண்டுபிடித்துவிடும். அந்தப்பிரிவின் Forman  செல்வரத்தினத்திடம்  சொல்லி எழுத்துக்களை மாற்றச்சொல்வோம்.

எங்கள் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தார் "அன்பர்" என அழைக்கப்பட்ட பொன்னுத்துரை.  கந்தையா என்பவர் கரவெட்டியிலிருந்து வந்து ஆமர்வீதியில் வாடகை அறையில் குடியிருந்துகொண்டு  அங்கு வேலைக்கு வருவார். அவர் வேட்டிதான் அணிவார். அத்துடன் ஒரு காலை கெந்திக்கெந்தித்தான் நடப்பார். இவருக்கும் அன்பர் பொன்னுத்துரைக்கும் எழுத்துப்பிழை விவகாரத்தில் அடிக்கடி மோதல் நடக்கும். இருவரும் எம்மைவிட வயதால் மூத்தவர்கள். அதனால் நாம் அவர்களின் மோதலை வேடிக்கை பார்ப்போம்.
கந்தையா தவறவிடும் எழுத்துப்பிழைகளை கண்டுபிடித்துவிடுவார் அன்பர் பொன்னுத்துரை. அச்சந்தர்ப்பங்களில் அவரது வாயிலிருந்து உதிரும் வார்த்தை " இழவு சனியன்"
"அடிக்கடி மனதில் தோன்றும் எண்ணங்களே காலம் கடந்தாவது நிறைவேறும். அதனால் நல்ல எண்ணங்களை மாத்திரம்  வளர்த்துக்கொள்ளுங்கள், அதனையே அடிக்கடி சொல்லுங்கள்" என்று உளவியலாளர்கள் சொல்வார்கள். தினமும் எமது ஒப்புநோக்காளர் பிரிவில் " இழவு சனியன்" என்ற பதம் ஒலித்தமையால்தானோ என்னவோ ஒருநாள் அந்த சனிபகவானே அங்கு நுழைந்து பெரும் பதற்றத்தை  விளைவித்துவிட்டார்.
சனிபகவான் நல்லதும் செய்வார் -  தீயதும் செய்வார் என்பதனால் அவருக்கு  அடிக்கடி பரிகாரம் செய்யச்சொல்பவர்கள் சோதிடர்கள். அவரது வாகனம் காகம்.  விரதநாட்களில் காகத்திற்கு சாதம் வைத்துவிட்டுத்தான் சாப்பிடுவார்கள்.  அதனால் அவர் தனது வாகனமான பறவைக்கு சாதம் தரும் குடும்பங்களுக்கு நன்மை செய்வார்போலும்! ஆனால், காரணம் ஏதும் இன்றி அடிக்கடி வாய்க்கு வந்தபடி "இழவு சனியன்" என்று சொன்னால் அவர் கோபிக்கமாட்டாரா? சனியன் என்றாலும் பரவாயில்லை. அதென்ன "இழவு சனியன்?!" சொல்லக்கூடாத வார்த்தை அல்லவா?  அவ்வாறு அங்கு அடிக்கடி ஒலிக்கப்பட்டதனாலோ அல்லது   அவ்வாறு அவர் அழைக்கப்பட்டதனாலோ என்னவோ, ஒருநாள் அவரே அங்கு வந்து பெரிய அட்டகாசம் செய்துவிட்டார்.
ஒரு  சனிக்கிழமை மாலை   இலங்கையின் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா வெளிநாடொன்றிற்கு பயணமானார். அன்றைய தினத்திற்கு மறுநாள் வெளியாகும்  (ஞாயிற்றுக்கிழமைக்கான )  நகரப்பதிப்பில் நேற்று ஜனாதிபதி பயணமானார் என்ற செய்தி முன்பக்கத்தில் பதிவானது. ஞாயிற்றுக்கிழமை அச்சாகும் திங்களன்று வெளியாகவிருக்கும் வெளியூர் பதிப்பில் நேற்று முன்தினம் ஜனாதிபதி பயணமானார் என்று திருத்தி அச்சிடவேண்டும். முதல்நாள் நகரப்பதிப்பில்  வரும் செய்திகளில் நேற்று என வரும் இடங்களில் நேற்று முன்தினம் என்று திருத்தி ஆசிரிய பீடத்தினர் அச்சுக்கோப்பாளர் பிரிவுக்கு அனுப்புவார்கள்.
ஓர் அச்சுக்கோப்பாளர் அதனை மறுநாள் வெளியாகவிருக்கும் வெளியூர் பதிப்பிற்காக  நேற்று என்ற எழுத்துக்களுடன் முன்தினம் என்ற எழுத்துக்களையும் இணைத்து அச்சுக்கோர்த்து பக்கத்தை வடிவமைக்கவேண்டும்.
அந்தப்பக்கத்தில் எழுத்துக்கள் நெருக்கியடித்துக்கொண்டிருந்தமையால், குறிப்பிட்ட அச்சுக்கோப்பாளர், சனிக்கிழமையன்று என எழுத்துக்களை மாற்றுவதற்கு முதலில்  முயன்றிருக்கிறார். முடியவில்லை. பின்னர், சனியன்று எனத்திருத்தி மாற்றுவதற்கு முயன்றுள்ளார். அது சாத்தியமானது. ஆனால், அந்த எழுத்துக்களில் 'று' என்ற எழுத்தை தவறவிட்டுவிட்டார். அதனால் அந்தச்செய்தியே  தலைகீழாகிவிட்டது.
குறிப்பிட்ட வெளியூர் பதிப்பிற்கான பக்கத்தை முழுமையாகப்பார்த்து ஒப்பு நோக்கியவர் அன்பர் பொன்னுத்துரை. அன்று மாலை அவர் தனது கடமை முடிந்து வீடு திரும்பிவிட்டார்.
மாலைநேரக்கடமைக்கு வரும் ஒப்புநோக்காளரின் முதல் கடமை ஒன்று இருக்கிறது. அன்று மாலை முதலில் அச்சாகும் வெளியூர் பதிப்பின் முதல் பிரதி ஒப்புநோக்காளர் அறைக்குத்தான் முதலில் வரும். அங்கு அதனை துரிதமாக மேற்பார்வை செய்துவிட்டு, அந்தப்பிரதியை ஆசிரிய பீடத்திற்கு அனுப்புவோம். அங்கு யாராவது ஒரு துணை ஆசிரியர் அல்லது செய்தி ஆசிரியர் மீண்டும் ஒரு தடவை துரிதமாக மேற்பார்வை செய்துவிட்டு, அச்சுஇயந்திரக்கூடத்துக்கு தாமதமின்றி அனுப்புவார்கள்.
அதன் பின்னர் வெளியூர் பதிப்பு அச்சாகும். வடக்கிற்கும், கிழக்கிற்கும், மலையகத்திற்கும் அடுத்தடுத்து மூன்று பதிப்புகள் அச்சாகும்.
அந்த மாலைவேளையில், தனது கடமை முடிந்து வீட்டுக்குப்புறப்படும், தயாரிப்பு முகாமையாளர் (Production Manager) மகேந்திரராஜா, எமது ஒப்புநோக்காளர் அறையை எட்டிப்பார்த்து, வெளியூர் பதிப்பில் ஏதும் பிழைகள் இருந்ததா? எனக்கேட்பது வழக்கம்.
அன்றைய தினமும் கேட்டார். " சேர்,  ஒரு சிறிய தவறுதான். சனியன்று என்று வந்திருக்கவேண்டிய இடத்தில் ஒரு "று"  இல்லை. " எனச்சொல்லியிருக்கிறார்கள்.
" அட ஒரு எழுத்துத்தானே என்று அவரும் ஆறுதலாக அச்சுக்கூடத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு வெளியூர் பதிப்பு ஆயிரம் பிரதிகளுக்கு மேல் அச்சாகிவிட்டது. தொடர்ந்து இயந்திரம் அச்சடிக்கிறது.
அந்தத் தயாரிப்பு முகாமையாளரின் சிந்தனையில் சனிபகவான் மின்னலென தோன்றியிருக்கவேண்டும். " சனியன்று  ஜனாதிபதி பயணமானார் --- சனியன் ஜனாதிபதி பயணமானார்"  இதில் எங்கே பெரிய தவறு இருக்கும்? ஒரு " று" னா தானே இல்லை. அவர் தனது கார் தரிக்கும் இடத்திற்கு செல்லும்போது சனிபகவான் பின்தொடர்ந்திருக்கவேண்டும்.
அவர் தலைதெறிக்க திரும்பி ஓடிவந்தார். அச்சுக்கூடத்துள் பிரவேசித்து உரத்த குரலில் இயந்திரத்தை நிறுத்தச்சொன்னார். அதற்கிடையில் மேலும் நூற்றுக்கணக்கான பிரதிகள் அச்சாகிவிட்டன. ஒரு புறத்தில்  காங்கேசன் துறைக்குப்புறப்படும் இரவு தபால் ரயிலுக்கு சேர்ப்பிக்கவேண்டிய பத்திரிகை பொதிகள் தயாராகிக்கொண்டிருந்தன. அனைத்தையும் அவர் நிறுத்தினார். ஒரு ஊழியரை இயந்திரத்தின் மேல் ஏற்றி, குறிப்பிட்ட பக்கம் பதிவாகியிருந்த அச்சில் வார்க்கப்பட்ட பிளேட்டை இறக்கச்செய்து, அதில் குறிப்பிட்ட சனியன் என்ற சொல்லை உளியினால் செதுக்கி அப்புறப்படுத்தச்செய்து, மீண்டும் அச்சடிக்குமாறு உத்தரவிட்டார்.
அச்சிடப்பட்ட அனைத்துப்பிரதிகளையும் ஆசிரிய பீடத்துக்கு எடுத்துவரச்செய்து,  பிரதம ஆசிரியரின் அறையில் வைத்து பாதுகாப்பு ஊழியரைக்கொண்டு அந்த அறையை மூடவைத்துவிட்டு, மறுநாள் பிரதம ஆசிரியர் வரும்வரையில் அந்த அறையை திறக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.
எமது ஒப்புநோக்காளர் அறைக்கு வந்து அனைத்து புரூஃப் பிரதிகளையும் (Proof Copies) நேற்று முன்தினம் என திருத்தப்பட்டிருந்த குறிப்பிட்ட முதல்நாள் பக்கத்தையும் கைப்பற்றி எடுத்துச்சென்று தனது அறையில் வைத்து பூட்டினார்.
யார் யார் அச்சுக்கோர்த்தது, யார் யார் ஒப்புநோக்கியது என்ற முழுவிபரத்தையும் சேகரித்தார். அடுத்தடுத்து சில நாட்கள் விசாரணை நடந்தது.
குறிப்பிட்ட பக்கத்தை வடிவமைத்த ஸ்டீஃபன் என்பவர் ஒரு வாரம் வேலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டார். பக்கத்தில் பிழையை கண்டுபிடிக்கத்தவறிய அன்பர் பொன்னுத்துரைக்கு தண்டப்பணம் அவரது சம்பளத்தில் அறவிடப்பட்டது. அச்சிடப்பட்ட அனைத்துப்பிரதிகளும் பின்வளவில் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அந்தப்பிரதிகளில் குடியிருந்த சனிபகவானும் அதில் சங்கமித்தார்.
அந்தச்சம்பவத்திற்குப்பின்னர் எமது அறையில் " இழவு சனியன்" உச்சரிப்பு முற்றாகக்குறைந்தது.
ஒருதடவை பதியுதீன் முகம்மது கல்வி அமைச்சராக இருக்கும்போது அவர் சம்பந்தப்பட்ட செய்தியில் கலவி அமைச்சர் என்று அச்சாகியதையடுத்து அவர் கடுப்பாகியதாகவும்,  அந்தச்  செய்தியை எழுதிய சனூன் என்ற பத்திரிகையாளரை அமைச்சு அலுவலகத்திற்கு வரவழைத்து ஏசியதாகவும்  அறிந்துள்ளேன். பதியுதீன் முகம்மது கம்பளை சாகிறாக்கல்லூரியில் அதிபராக இருந்த காலத்தில் சனூன் அங்கு மாணவர். அதனால் அமைச்சருக்கு நன்கு அறிமுகமானவர்.
" சேர்... நான் சரியாகத்தான் எழுதிக்கொடுத்தேன் சேர். அங்கு அச்சுக்கூடத்திலிருந்த "ல்"  என்ற எழுத்தில் மேலிருக்கவேண்டிய குத்து (புள்ளி) தேய்ந்து அழிந்துவிட்டது சேர்" என்று அழாக்குறையாக முறையிட்டுள்ளார்.
" அந்தக்குத்தை சரியா குத்தச்செல்லி ஒன்னட ஆசிரியருக்குச்செல்லு" என்றாராம் அமைச்சர்.
" இல்லை சேர், அது ஆசிரியரின் தவறும் இல்லை சேர், அச்சுக்கோப்பவர்களின் தவறு சேர் " என்றாராம் சனூன். இவ்வாறு பல தடவை சேர் சொல்லித்தப்பித்த கதையை சனூன் என்னிடம் சொல்லிச்சிரித்திருக்கிறார்.
யாழ்ப்பாணம் முத்திரைச்சந்தியடியில் இருக்கும் சங்கிலியன் சிலையருகில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொதுக்கூட்டம் நடந்தது என்பதுதான் செய்தி. யாழ். நிருபர் செல்லத்துரை சரியாகத்தான் எழுதி அனுப்பியிருந்தார். பத்திரிகையில் சங்கிலியன் என்ற சொல்லில் " ங்" வரவேண்டிய இடத்தில் " க்" வந்துவிழுந்துவிட்டது.
தலைவர் மு. சிவசிதம்பரம் அதனைப்பார்த்து அன்று கடுப்பானார்.
ஆசிரியராகவும் பணியாற்றியவர் கவிஞர் அம்பிகை பாகர். அவர் கலந்துகொண்ட ஒரு பாடசாலை நிகழ்ச்சியில் அவரது பழைய மாணவி ஒருவரும் உரையாற்றினார். நிருபர் சரியாகத்தான் எழுதி அனுப்பியிருந்தார்.
பத்திரிகையில் பழைய மாணவி என்று வராமல் பழைய மனைவி என்று வந்துவிட்டது. அம்பி எழுத்தாளராகவும் இருந்தமையால் சிரித்துக்கொண்டு சகித்தார்.
மற்றும் ஒரு சம்பவம்:  சினிமா விளம்பரப்பக்கத்தில் ஒரு ஆங்கிலப்படத்தின் விளம்பரத்தை சரியாகத்தான் எழுதிக்கொடுத்திருந்தார்கள். அந்த விளம்பரத்தில் பிரமாண்டான தயாரிப்பு என்று வந்திருக்கவேண்டும். இங்கு எழுத்தில் தரமுடியாத தூஷண வார்த்தையுடன் அச்சாகிவிட்டது. சினிமா விளம்பரம் ஆகையால் எவரும் அதனை கண்டுபிடிக்கவில்லை.
ஆனால், ஒழுங்காக திரைப்படம் பார்க்கும் வாசகரான ஒரு புண்ணியவான் கண்ணில் பட்டுவிட்டது. அந்த நபர் அந்தப்பக்கத்தை கத்திரித்து சிவப்பு மையினால்  அடையாளமிட்டு எங்கள் பொதுமுகாமையாளருக்கு தபாலில் அனுப்பிவிட்டார்.
அவருடைய அறையிலிருந்து விளக்கம் கேட்டு  எங்கள்  அறைக்கு கடிதம் வந்தது. ஒப்புநோக்காளர்களை  நேரில் அழைத்து விளக்கம் கேட்பதற்கு அவர் தயங்கியதற்கு அந்தப்பிழையின் அர்த்தமும் காரணமாக இருக்கலாம்! ஆனால், குறிப்பிட்ட அச்சுக்கோப்பாளரை தனது அறைக்கு அழைத்து, " உமது பிள்ளை இதனைப்  படித்தால் என்ன நினைக்கும்?" என்றாராம். அச்சமயம் அந்த நபர் திருமணமாகியிருக்கவில்லை என்பது அவருக்குத்தெரியாது!
வெள்ளீய அச்சுக்களினால் தயாரான பத்திரிகைகளில்தான் இத்தகைய அச்சுப்பிழைகள் வந்தன  என்ற முடிவுக்கு நாம் வரமுடியாது. இந்த கணினி யுகத்திலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் எழுத்துப்பிழை,  தவறுகள் நேர்ந்துவருகின்றன.
முக்கியமாக எழுத்துருக்கள் (Fonts) மாறுவதனாலும் தவறுகள் நேர்ந்துவிடுகின்றன.
சனிபகவான் எங்கும் எவ்விடத்திலும் தோன்றுவார். எச்சரிக்கையாக இருங்கள். அச்சுப்பிசாசு என்றும் சொல்வார்கள். அது துரத்திக்கொண்டு வரும். கவனம்!
-->
letchumananm@gmail.com
No comments: