பூசா- சிறுகதை - கன்பரா யோகானந்தன்

  .
                                                   
நான் ஆலடிச் சந்தியில் காரை நிறுத்திவிட்டு  பிரதான வீதியிலிருந்து கெவர் போலப் பிரிந்து செல்லும் ஒழுங்கை வழியே நடந்தேன்.   
பாசி பிடித்துக் கறுத்து கிடந்த மதில் வீடொன்றைத் தாண்டியபொது உள்ளிருந்து பெரிய நாயொன்று எட்டிக் குரைத்தது. மதில் வீடுகளைக் கடந்ததும் ஒழுங்கை மடங்கித் திரும்பி குருமணல் பாதையாக மாறி ஒடுங்கி சிறுத்துக் கொண்டே போய் இடப்புறம் திரும்பி சரிவில் இறங்கிக் கொண்டே சென்றது. 

முப்பது வருசத்துக்கு முன்னால் அவ்விடத்தில் அனேகமாக வேலிகள் பூவரசு கதியால்களில் கிடுகு அல்லது பனை ஓலையால் வேய்ந்திருந்தன.  அவையும் உக்கி விழுந்து கொட்டில் வீடுகள் பின்னால் தெரியும்.  இப்போது அவ்வேலிகளில் பல மதில்களாக மாறி பின்னால் ஓட்டுக் கூரைகள் தெரிந்தன.  அப்போதிருந்த அவன் கொட்டில்  வீட்டை கண்டு பிடிப்பது இலகுவாகத் தெரியவில்லை.
எதிரே கம்பியில் சைக்கிள் ஓடும் சேர்க்கஸ் வித்தைக்காரன் போல மணலில் சைக்கிள் ஓடி வந்த வந்த ஒருவனை நிற்பாட்டி பூசாவின் வீடு எங்கே என்று கேட்டென். அவன் தெரியாது என்று சொல்ல வாயெடுக்குமுன்
'வேல் மரக்காலை தவகுமார். இப்ப உயிரோடே இல்லை’ என்று திருத்தினேன்.  


அந்நாட்களில் தென்னிலங்கையின் கடற்கரையோரமாக செல்லும் காலி வீதியை அண்மித்திருக்கும் பூசா இராணுவ முகாமின் பெயரைக்  கேள்விப்படாத தமிழர்கள் மிகக் குறைவு. ஆனால் பூசா என்ற பட்டப் பெயர் தவக்குமாருக்கு இருந்தது அப்போது ஆலடியில் எவருக்கும் தெரியாது. ஏனென்றால்  அந்தப் பட்டத்தை அவனுக்கு வழங்கியவர் பொன்னி வளவில் கள்ளிறக்கும் கிளியர். 
பொன்னி வளவில் கிளியரின் கள்ளு அந்நாட்களில் பெயர் போனது. பொன்னி வளவு என்றால் அது ஒரு காணி அல்ல. ஒரு முப்பது நாப்பது குடும்பங்கள் வாழும் பகுதிக்கே அந்தப் பெயர் வழங்கி வந்தது. அது சீவல் தொழிலாளிகள் வாழும் பகுதி.  ஐந்தாறு மைல்களுக்கப்பாலிருந்தெல்லாம் கிளியரிடம் வருவார்கள். ஆலடியிலிருந்து பூசா மூன்று மைல் சைக்கில் ஓடி பொன்னி வளவுக்கு  வருவான்.
எனக்கு சைக்கிளில் போனால் இரண்டு நிமிடம்தான்.
ஒருமுறை ராணுவத்திடம் அகப்பட்டு பூசா வரை சென்று மீண்டதை கிளியரிடம் சொல்லியதிலிருந்து கிளியரின் கள்ளுக் கொட்டிலில் பூசா என்பது அவன் ஆகு பெயராகி விட்டது.

எண்பத்தெட்டு அல்லது  எண்பத்தொன்பதாம்  வருடம் மார்கழியில் நல்ல மழை பெய்தது. மார்கழியில் மயிர் நனையாத்  தூறல் என்பது பொய்த்தது.  மழைக்குப் பிறகு பனைகளில் புது ஊற்று தொடங்கும் வரை  கள்ளு  விற்பனை மாரி  காலத்தில் மந்தமாகவே இருந்தாலும் கிளியருக்கு குறைந்தது  நாலு குடி மகன்கள் நாள்தோறும் வந்து கொண்டுதானிருந்தனர். கிளியரின் பெறாமகன் பெரியதம்பி கால்முறிந்து இரண்டு மாதமாக மரமேறாமல் பாயில் கிடந்தான். அவனுடைய இரண்டு பனைகளையும் கிளியர்தான் சீவிக்கொண்டிருந்தார்.

அன்றைக்கு மழைக்குப் பின் எறித்த பளிச்சென்ற வெயில்.
சமையலறையில் அம்மா மழையில் நனைந்த ஈர விறகை ஊதி பற்ற வைப்பதில் சலித்துப் போய் கண்டபடி என்னைத் திட்டிக் கொண்டிருந்தாள்.  தாழ்வாரத்தில் அடுக்கி வைத்திருந்த காய்ந்த விறகுகள் முடிந்து போனதால் பின் வளவில் பட்டுப் போய் நின்ற  பூவரசைத் தறித்துக் கொத்தி அடுக்கும் படி நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்தாள். நானும் கடத்திக் கொண்டிருந்தேன்.

அடுத்த பாட்டம் மழை பெய்யத்  தொடங்குமுன்  என்ன செய்யலாம் என்று யோசித்து விட்டு கிளியரிடம் போவோம் என்று சத்தம் போடாமல் சைக்கிளை எடுத்தேன். சைக்கிள் முன் சில்லு டயர் தேய்ந்து வாழைப்பழம் போலக் கிடந்தது
கிளியர் வீட்டு படலையை திறந்து சைக்கிளில் ஓடியே அவர் வளவின் எல்லையிலிருக்கும் கொட்டிலுக்குப் போனேன்.  அவ்வளவு தூரத்தில் கொட்டிலை மறைவாக வைத்திருந்ததற்கு ஏதுவாக இருந்ததது அவரது பெரிய காணி.
கிளியருக்கு இருபத்தைதாவது வயதில் மூத்தவள் பிறந்து பத்தாவது மாதத்தில்  தனது பனைகளைப் பெரியதம்பியிடம் ஒப்படைத்து விட்டு சவுதிக்குப் போனார்.  நாலு வருடங்கள் கடுமையான உழைப்புக்குப் பிறகு ஊருக்கு வந்து பக்கத்து வளவு மாரிமுத்துவின் காணியை வாங்கி வேலியைப் பிரித்து ஒரே வளவாக்கினார். மாரிமுத்துவின் வளவில் நின்ற உயரிப் பனையும் வேறு எட்டுப் பத்து மரங்களும் அவரது கைக்கு வந்தது இப்படித்தான். அதற்குப் பிறகு அவர் ஊரை விட்டுப் போகவில்லை.

சைக்கிளை கொட்டிலுக்கு முன்னே சைட் ஸ்ராண்டில் விட்டேன். மழை ஈரத்தில் ஸ்டாண்ட் புதைந்து சைக்கிள் சரிந்து நின்றது. விழுந்து விடுமோ என்று கொஞ்ச நேரம் நின்று பார்த்து விட்டுப் போனேன்.
அப்பச்சி மாமாவின் சி90 கிளியரின் மாட்டுக் கொட்டிலில் நின்றது.
பதினொரு மணிக்கே கொட்டிலில் ஆட்கள் நின்றனர். அடாது மழை  பெய்தாலும் ஆட்கள் வராது விடுவதில்லை. தலைவர் பாட்டுச் சத்தம் கேட்டது. எதிரே அப்பச்சி மாமாவும் சகலரும் கைதட்டி தாளம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் போல ஒருபோதும்  தனித்து வருவதில்லை. அப்பச்சி மாமாவும் சகலரும் அக்கா தங்கையை கட்டியிருந்தார்கள். அப்பச்சி மாமாவுக்குத்தான் அவர் சகலர். உண்மைப் பெயர் தெரியாததால் எங்கள் எல்லாருக்கும் அவர் சகலர் ஆகி விட்டார்.
தலைவர் நிலத்தில் அமர்ந்திருந்தார். அவர் எப்போதும் நிலத்தில் அம்ர்ந்து பனங்குற்றியில் முதுகைச் சாய்த்துக்கொள்வார். அவர் பெயரும் எனக்குத் தெரியாது. ஆனால் அவர்தான் அங்கே பாட்டுக்குத் தலைவர்.

‘இழுத்து பாடு தலைவா என்ன இண்டைக்கு உன்ரை குரல் கமறுது.’

நார் கட்டிய கள்ளு முட்டியுடன் கொட்டிலுக்கு வந்தபடியே கிளியர் சொன்னர். அவர் எல்லா முட்டிகளையும் கொட்டிலுக்குள் வைத்திருப்பதில்லை. பொருள் முடிய முடிய வீட்டின் அரைச்சுவரின் பின்னால் மறைத்து வைத்திருக்கும் அடுத்த முட்டியை கொண்டு வருவார்.

‘பொருளைக் குடும் கிளியர் அப்பவெல்லோ தலைவருக்கு குரல் திறக்கும்.’ என்றார் அப்பச்சி மாமா. 

இதுதான் தருணமென தலைவர் சிரட்டையை நீட்டினார்.

‘வாங்கி வாங்கி குடி காசை மட்டும் தராதை என்ன?’ முகத்திலடித்தது போலச்சொன்னார் கிளியர்.

தலைவர் கட்டிட வேலைக்கு மேசனுக்கு முட்டாளாகப் போய் வந்தார் ஆனால் மழை காலத்தில் கட்டிட வேலைகள் ஒன்றும் இராது.

பாறி விழுந்த பனைக் குற்றியொன்றில் கவிழ்த்து வைக்கப் பட்டிருந்த கள்ளுச் சிரட்டையை எடுக்க வெளியே போனேன். சிரட்டைகளில் செட்டி அட்டை ஏறியிருந்தது.

'சீ சனியனே  மழை வந்தால் இந்தச் சவங்களும் வந்திடும்.’             
பாளைக்கத்தியின் பிடியால் கிளியர் சிரட்டையைத் தட்டி விழுத்தினார்.
பிறகு போய் கட்டை வடலியின் கைக்கெட்டின ஒலையை வெட்டி பிளா கோலி வந்தார். பிளாவை வாங்கிகொண்டு உள்ளே பானா வடிவில் போட்டிருந்த பனங்குற்றியில் பாத்திரம் ஏந்திய பிச்சைக்காரன் போல அமர்ந்தேன். பச்சை ஓலையின் மணமும் கள்ளின் மணமும் சேர்ந்து மூக்கை நிறைத்தது.

பூசா அப்போதுதான் வந்து சைக்கிளை நிறுத்தினான். அடை மழை வரப்போகுது என்று சொல்லிக் கொண்டே கொட்டிலுக்குள் வந்தவனின்  சுருட்டைத் தலை மயிரில் மரத்தூள் ஒட்டியிருந்தது. பூசா சொந்தமாக மரக்காலை ஒன்றை வைத்திருந்தான். அறுத்த மரங்களை மொத்த விலைக்கு வாங்கி கதவு நிலை யன்னல்கள் அடிக்கும் ஆசாரித் தொழில். ஆலடியில் இன்னொரு மரக்காலை முதலே இருந்தது. பூசா புதிதாக வேல் மரக்காலை திறந்ததில் ஏற்பட்ட  தொழில் போட்டியிலேயே பூசாவை ராணுவத்துவத்திடம் தலையாட்டி மூலம் மாட்டி விட்டதாக ஆலடியில் ஒரு கதை உலாவியது.

‘என்ன பூசா மழைக்குப் பூரான்  வெளிக்கிட்ட கணக்கு இண்டைக்கு வந்திட்டாய்.’ என்றார் கிளியர் குத்தலாக.
நீண்ட நாட்களாக பூசா கிளியரிடம் வரவில்லை.  

‘புது வீட்டுக்கு அச்சாரம் வேண்டின கையோடை போத்திலோடை வாறன் எண்டாய். பிறகு  இந்தப் பக்கம் காணேல்லை. ‘

கிளியர் என்னதான் திறமான கள்ளு  வித்தாலும் தான் சீவின கள்ளைக் குடிப்பதில்லை. அவர் குடிப்பதெல்லாம் சாராயம்தான். அதுவும் இப்படி ஓசியில் யாராவது கொண்டு வந்தால் மட்டுமே.

‘ஒண்டும் சரி வரேல்லை கிளியர்’.  பூசா சொன்னது பொய்க்குத்தான். உண்மையில் வீட்டுக்கு அச்சாரம் கொடுத்து விட்டார்கள்.

கடதாசிப் பையில் சுற்றி இடுப்புக்குள் மறைத்துக் கொண்டு வந்த போத்தலைக் கிளியருக்கு சொல்லவேண்டாமென்று கண்ணை காட்டி அப்பச்சி மாமாவிடம்  இரகசியமாகக் கொடுத்தான்.   

‘ பொருள் முடிஞ்சுது ‘ கிளியர் பூசாவிடம் உதட்டைப் பிதுக்கினார்.

' கிளாசைக் கொண்டு வாரும் கிளியர் இண்டைக்கு பூசாவின் உபயம். ' என்றவாறே கடதாசிப் பையிலிருந்து சாராயப் போத்தலை எடுத்தார் அப்பச்சி மாமா.

‘எடேய் எனக்குத் திறுக்கீஸ் விட்டுட்டாய் என்ன’

கிளியர் திட்டிக் கொண்டே ஆனால் உள்ளுக்குள் புழுகத்துடன் கிளாசை எடுக்கப் போனார்.
கால்வாசிக் கிளாஸ் மட்டத்துக்கு எல்லோருக்கும் சாராயம் ஊற்றப்பட்டது. கள்ளில் தொடங்கி சாராயத்தில் முடித்தவர்கள் பறக்கத்தொடங்கினர். மற்றவர்கள் மிதக்கத் தலைப்பட்டனர்.
மழை சடசடத்தது. தலைவர் பாடத்தொடங்கினார். கண்டசாலா ஜெயராமன் காலத்துப் பாட்டுக்கள். சகலரும்  அப்பச்சி மாமாவும் பீடியை பற்ற வைத்து கொண்டனர்.  மழை தூறி பின் பெருத்துப் பெய்தது. கொட்டிலுக்குள் மழை   ஒழுக கிளியர் எதோ எடுத்து வைக்க வீட்டுக்கு ஓடினார்.

எனக்கு மழையைக் கண்டால் நனைந்தே ஆக வேண்டும். அப்போது அப்பிடி ஒரு விசர்க்குணம். பிளேன் போல கைகளை விரித்துக் கொண்டே மழைச் சாரல்களூடே ஓடினேன். பின்னால் பூசாவும் வந்தான். அவன் சேர்ட்டைக் கொட்டிலில் கொழுவி விட்டே வந்தான். கிளியரின் பின் வேலிப் பொட்டுக்குள்ளால் வயல் கிணத்துக்குப் போனோம்.
எங்களை முந்திக் கொண்டு கிளிமாமா கிணத்துக்குள் குதித்தார். மற்றவர்கள் கொட்டிலை விட்டு வரவில்லை. மாரி காலக் கிணறு முதல் படிக்கல்லை மூடி முட்டிப் போயிருந்தது.
பூசா படிக்கல்லை ஒருவாறு தேடிப் பிடித்து அதில்   காலை வைத்து கிணற்றுக் கட்டைப் பிடித்துக் கவனமாக இறங்கினான்.

'சிவா குதியடா குதியடா' என்று உள்ளிருந்து அப்பச்சி மாமா என்னைப் பார்த்துக் கத்தினார். அன்று அவருக்கு நல்ல ஏத்தம். நான் பட்டிக்கக்கட்டில் நின்று காற்சட்டையை கழற்றிக்கொண்டிருக்கையில் பின் பக்கமாக வந்து கிணற்றுக்குள் தள்ளி விட்டார். தண்ணீர் முதலில் பாசி நிறத்தில் இருந்தது பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளைப் பச்சையாக மாறியது.  மழை கொட்டிக் கொண்டிருந்தபோதும்  கிணற்றுத் தண்ணீர் இதமான சூடாக இருந்தது.
வேட்டியை கொடுக்குக் கட்டியிருந்த அப்பச்சி மாமா குத்துக் கரணம் அடித்தார். பிறகு பூசா கைகளைக் கட்டிக்கொண்டு பனங்குற்றி போல கால் குத்தென தண்ணீருக்குள் விழுந்தான். எனது முறைக்காக வந்து படிக்கட்டில் நின்றேன்.
தண்ணீருக்குள் மீன் கொத்துவது போல மழைத்துளிகள் உடம்பில் குத்தியபடி  விழுந்து கொண்டிருந்தன..
அரை நிமிடம் கழிந்தும் பூசா மேலே வரவில்லை. குமிழிகள் மேலெழுந்து வந்தன. பிறகு பூசாவின் கை மேலே வந்தது. விபரீதம் நிகழ்ந்து விட்டதா அல்லது விளையாட்டுக்கு பூசா நாடகமாடுகிறானா என்று முதலில் தெரியவில்லை.
கிணற்றுக்குள்ளிருந்து அப்பச்சி மாமா கையை பிடி பிடி என்று என்னிடம் கத்தினார். மணிக்கட்டை எட்டிப்  பிடித்தேன். என் பிடியிலிருந்து பூசாவின் கை வழுக்கிக் கொண்டே கீழே போனது.  பூசாவுக்கு எதோ நடந்து விட்டது தெரிந்தது. அப்பச்சி மாமா தண்ணீருக்குள்ளே சுழியோடினார். நான் கிளியரிடம் ஓடினேன் அவர் வடக் கயிற்றைக் கொண்டு வருவதற்குள் பூசா மூச்சடங்கி கீழே போய் விட்டான்.

கயிற்றை விட்டு கிளியரும் அப்பச்சி மாமாவும் அவனைத் தூக்க நான் போய் அப்பச்சி மாமாவின் சி90 மோட்டர் சைக்கிளை ஒழுங்கை  வழியாக வயற்கரைக்குக் கொண்டு வந்தேன். கொட்டிலில் இருந்தவர்களுக்கு ஒன்றுமே தெரியாத போதையிலும் மழையின் இரைச்சலிலும் இவையெல்லாம் பத்து நிமிடங்களில் நடந்தேறி விட்டன.

நான் மோட்டர் சைக்கிளை ஓட பின்னால் அப்பச்சி மாமா பூசாவை நடுவில் இருத்தி வைத்துக் கொண்டு வைத்துக் கொண்டு சேச்சடிச் சந்தியிலிருந்த சுந்தரம் பிள்ளையின் மருந்துச்சாலைக்கு கொண்டு போனோம்.
நல்ல வேளை நோயாளிகள் எவரும் இல்லை.
பூசாவைத் தூக்கி கட்டிலில் கிடத்தும் போதே சுந்தரம் பிள்ளைக்கு தெரிந்து விட்டது. கடமைக்கு கையை பிடித்துப் பார்த்து விட்டு கையை விரித்தார்.

மழை நின்று ரோட்டுக் கரையெங்கும் வெள்ளம் பாய்ந்து கொண்டிருந்தது. சந்தியில் நின்ற கார்க்கார பெடியன் இந்திரனை ஓடிப்போய் கூட்டி வந்து  பூசாவை ஆலடிக்கு கொண்டு போக வேண்டும் என்று சொன்னென்.
முதலில் ஏற்றத் தயங்கி சுற்று முற்றும் பார்த்து விட்டு  சரி ஏத்துங்கள் என்றான். 
சவத்தை ஏற்றினால் சவாரிக்கு ஆட்கள் வராது போய் விடுவார்களோ என்ற பயம்தான்.

ஆலடியை நெருங்க நெருங்க எனக்கு இதயம் பலமாக அறைந்து அறைந்து அடித்தது. ஒரு வேளை நான் முதலில் மழைக்குள் ஓடியிருக்கா விட்டால் இதெல்லாம் நடந்திருக்காதோ?  வழியெங்கும் என்னை நானே கேள்வி கேட்டு வதைத்துக் கொண்டேன்.
பூசாவின் கொட்டிலுக்கு முன்னால் காரை நிறுத்திவிட்டு அப்பச்சி மாமா இறங்கி உள்ளே விசயத்தைச் சொல்லப்  போனார். நான் நெஞ்சு நடுங்க முன் சீற்றிலெயே இருந்தேன். ஒரு பெருங் கூக்குரல் கேட்டது. நொடிப்பொழுதில் அயலிலுள்ளோர் கூடிவிட்டனர். அவர்களில் ஒருவன் கோபத்துடன் ஓடி வந்து அப்பச்சி மாமாவை கீழே தள்ளி காலால் உதைத்தான். இன்னொருவன் காரை நோக்கி வந்து என்னை வெளியே இழுத்தெடுத்து முகத்தில் ஒங்கி குத்தினான். கார்க்கார இந்திரன் எங்கோ  நழுவி விட்டான். கீழே விழுந்தபடி என் பல்லைத் தொட்டுப் பார்த்தேன். கை முழுவதும் இரத்தம்.
பாய் படுக்கை என்று வருத்தமேதுமில்லாமல் சுக தேகியாகவிருந்த பூசாவை பிணமாகக் கொண்டுபோனதை அவர்கள் நம்பத் தயாரில்லை. நாங்கள்தான் ஏதோ செய்துவிட்டோம்  என்று எண்ணியிருப்பார்கள்.

இதற்கிடையில் அப்பச்சி மாமா எப்படியொ விஷயத்தை  விளங்கப்படுத்தி விட்டார் போலும். அடி உதை நின்றது.  இருவர் பூசாவை காரிலிருந்து தூக்கிக் கொண்டு போய் வெளித் திண்ணையில் கிடத்தினார்கள். அழுகுரல் அதிகரித்தது. 

சைக்கிளை எடுப்பதற்காக கிளியரின் கொட்டிலுக்குப் போனேன். கொட்டிலில் எவருமில்லை. கிளியர் பனை ஏறப் போய் விட்டார். தலையே போனாலும் அதை தவற விடமாட்டார்.
பூசா கொண்டு வந்த சாராயப் போத்தல் வெறுமையாக நிலத்தில் கிடந்தது.
கொழுவியிருந்த பூசாவின் சேட்டை எடுத்தேன் பொக்கட்டுக்குள் தொய்வுக்கு அடிக்கும் பம் கிடந்தது. அவ்வளவு விரைவாக பூசா மூச்சடங்கிப் போனதுக்கு தொய்வு காரணமாகி இருக்கக் கூடும்  என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
இதற்கிடையில் பொன்னி  வளவில் குடிக்கப் போய் ஒருவன் கிணற்றில் விழுந்து செத்தும் போனான்  என்று  ஊரில் இந்த விஷயம் பரவிவிட்டது. கொஞ்ச நாட்கள் வெளியில்  தலை காட்ட  முடியவில்லை. வீட்டிலும் அம்மா என்னோடு கோபத்தில் கதைக்காது விட்டாள்.


அடுத்த  வருட நடுப்பகுதியில் நான் பொறியியல் படிப்புக்காக பெங்களூருக்குப் போனேன். படிப்பை முடித்து தொழில் தேடி சிங்கப்பூர் போய் பிறகு
மலேசியாவில் நிரந்தரமாகக் குடியேறினேன்.
அங்குள்ள பாம் ஒயில் தொழிற்சாலையில் வேலை செய்தேன். திரும்ணமும் அங்கேயே நிகழ்ந்தது. பிள்ளைகளை  லண்டனுக்கு  அனுப்பிப் படிப்பித்தேன்  அவர்கள் அங்கேயே  நிரந்தரமாகத் தங்கிவிட்டனர்.
இந்த முப்பது வருடங்களில் பாம் ஒயில் சம்பந்தமான மகாநாடு ஒன்றுக்காக கொழும்புக்கு ஒரு முறை வந்து போனததைத் தவிர ஊருக்கு நான் வரவேயில்லை.

கொட்டில் வீடுகளின் நடுவே தெரிந்த ஒரு கல் வீடுதான் பூசாவின் வீடு. உள்ளே நாயொன்று குரைத்தபடி வரவேற்றது. நாயின் குரல் கேட்டு உள்ளிருந்து ஒரு நடுத்தர வயதுப் பெண்  வெளியே வந்தாள். அது பூசாவின் மனைவிதான் என்று அறிந்து கொண்டேன்.
நான் பூசாவின் நண்பன் என்று என்னை அறிமுகப்படுத்தினேன். கொஞ்ச நேர இடைவெளியின் பின் அன்று கிளியரின் வீட்டிலிருந்து பூசாவைக் கொண்டு வந்த இருவரில் நானும் ஒருவன் என்றேன்.

பூசாவின் மனைவி தலையை குனிந்த படி மௌனமாக நின்றாள். அவள் தலையை நிமிர்ந்த போதும் முகத்தில்  எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. முப்பது வருடம் ஒரு நீண்ட காலம் என்பதை அவள் முகம் உணர்த்தியதாகப் பட்டது.
ஆனால் நானோ முப்பது வருடமாக என்னை வதைத்துக்கொண்டிருந்த அந்தக் கேள்வியை மீண்டும் எனக்குள் கேட்டேன். ஒரு வேளை நான் முதலில் மழைக்குள் ஓடியிருக்கா விட்டால் பூசா இருந்திருப்பானோ?’ 

பேச்சை மாற்றுவதற்காக வீட்டை கண்டு பிடிக்க முடியவில்லை என்றேன்.
அந்த பழைய கொட்டில் வீட்டிலிருந்து இங்கு வந்து பதினைது வருசமாகிவிட்டது என்றாள் பூசாவின் மனைவி. மகன் பிரான்சுக்கு போனதில் இந்தக் கல் வீடு கட்ட முடிந்தது என்று சொல்லிக் கொண்டே "வேணீ" என்று உள்ளே  பார்த்து மருமகளைக். கூப்பிட்டாள்.
குங்குமப் பொட்டு வைத்த இளம் பெண்ணொருத்தி இடுப்பில் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு உள்ளிருந்து வந்து பிள்ளையை கீழே இறக்கி விட்டாள்.

அந்த மூன்று வயதுப் பெண் குழந்தை என்னிடம் நேரே ஓடி வந்தது. நான் பெயரைக் கேட்டேன். அது உடனே என் பல்லை பார்த்து விட்டு
“என்ன மாமா பவுண் பல்லு” என்றது.

அன்று உடைந்த பல்லுக்கு பதிலாக பொன் முலாம் பூசிய பல்லு கட்டியிருந்தேன்.
குழந்தை என்னை விடாமல்
“ஏன் மாமா பவுண் பல்லு கட்டினீங்கள்?” என்றது.

‘பல் விழுந்து விட்டது’ என்றேன்.

‘எனக்கும் இரண்டு பல்லு  விழுந்து விட்டது’ என்றபடி வாயை ஆவென்று காட்டியது. பிறகு என்னைப் பார்த்து தலையைச் சரித்து ஓட்டைப் பல் தெரியச் சிரித்தது.
-->








No comments: