இலங்கைச் செய்திகள்


இலங்கைக்கு நிதி வழங்குவதற்காக கடும் நிபந்தனைகளை விதித்தது அமெரிக்கா

தமிழர் விடுதலைக் கூட்டணி வசமாகியது வவுனியா நகரசபை 

விசாரணைகள் முடியும் முன்பே பறிக்கப்பட்ட அமைச்சு மீண்டும் ஒப்படைப்பு : பலிவாங்கப்படலாமென்று அச்சத்தில் அதிபர்




இலங்கைக்கு நிதி வழங்குவதற்காக கடும் நிபந்தனைகளை விதித்தது அமெரிக்கா

17/04/2018 இலங்கைக்கு 2018 ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான நிதியை வழங்குவதற்காக அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.
அமெரிக்கா காங்கிரசினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு அமெரிக்க ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ள சட்டமூலம் குறித்தே  அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.
இலங்கையின் ஜனநாயக திட்டங்களிற்காக அமெரிக்கா 35 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
காணாமல்போனோர் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளிற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.
இதேவேளை, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள  இந்த நிதியை பெறுவதற்காக இலங்கை மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு ஏற்ப நம்பகதன்மை மிக்க பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு இணங்கியுள்ளது என அமெரிக்க இராஜாங்க அமைச்சர் உறுதிசெய்யவேண்டும் என காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.
மேலும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் இதனை உறுதிசெய்து நிதி ஒதுக்கீட்டு குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை சித்திரவதைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கும் பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதற்கும் இணங்கியுள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் உறுதிசெய்யவேண்டும்.
இலங்கை குறிப்பிட்ட நிதியை பெறுவதற்காக காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தை அமைக்கவேண்டும், யுத்தத்தின் இறுதி தருணத்தில் படையினரிடம் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை வெளியிடவேண்டும். படையினரின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் எனவும் காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.
இலங்கையின் படையினருக்கு என  500,000 டொலர்களையே ஒதுக்கீடு செய்துள்ள அமெரிக்கா அதனை மனிதாபிமான மற்றும் இயற்கை அனர்த்தங்களை கையாள்வதற்கான பயிற்சிகளிற்கும் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளிற்குமே பயன்படுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
பாலியல் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த அமைதிப்படையினருக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வலுவான நடவடிக்கையை எடுத்தால் மாத்திரமே அமைதிப்படை நடவடிக்கைகளிற்கான நிதியை இலங்கைக்கு வழங்கவேண்டும் எனவும் அமெரிக்க காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.   நன்றி வீரகேசரி 







தமிழர் விடுதலைக் கூட்டணி வசமாகியது வவுனியா நகரசபை 

17/04/2018 வவுனியா நகர சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இராசலிங்கம் கௌதமன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவு, வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில், வவுனியா நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதன்போது பகிரங்க வாக்களிப்பு நடத்தப்பட்டு, கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட நாகலிங்கம் சேனாதிராசாவுக்கு ஆதரவாக 9 வாக்குகளும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
இதனடிப்படையில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
வவுனியா நகர சபையைக் கைப்பற்றுவதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது.
எனினும் எவரும் எதிர்பார்க்காத வகையில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் கௌதமன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக் கட்சி, ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழர் விடுதலை கூட்டணி வவுனியா நகரசபையை கைப்பற்றியுள்ளது.   நன்றி வீரகேசரி 










விசாரணைகள் முடியும் முன்பே பறிக்கப்பட்ட அமைச்சு மீண்டும் ஒப்படைப்பு : பலிவாங்கப்படலாமென்று அச்சத்தில் அதிபர்

18/04/2018 ஊவா மாகாணத்தின் தமிழ்க்கல்வி தவிர்ந்த கல்வி அமைச்சின் பொறுப்புக்கள் ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. 
இதனையடுத்து முதலமைச்சர் மாகாண கல்வி அமைச்சின் பொறுப்புக்களை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுள்ளார்.
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர். பவானிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரம் குறித்து மனித உரிமை ஆணையக விசாரணைகள் மற்றும் ஊவா மாகாண ஆளுனரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு அறிக்கை, ஆசிரிய தொழிற்சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், பதுளைப் பொலிசாரின் விசாரணைகள் ஆகியன நிறைவடையும் முன்பு மீளவும் கல்வி அமைச்சின் பொறுப்புக்கள் மாகாண முதலமைச்சரிடம் வழங்கப்பட்டிருக்கின்றன.
இவ் விசாரணைகள் பக்கச் சார்பின்றி நடாத்தப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு நியாயமான தீர்வு வழங்கப்படல் வேண்டுமென்பதில் முதலமைச்சர் பொறுப்பிலிருந்து வந்த கல்வி அமைச்சு ஜனாதிபதியினால் பறிக்கப்பட்டது. 
ஆனால் விசாரணை அறிக்கைகள் வெளியிடப்படும் முன்பே மாகாண கல்வி அமைச்சு மீண்டும் முதலமைச்சரிடமே வழங்கப்பட்டிருக்கின்றது.
மாகாண கல்வி அமைச்சு பறிக்கப்பட்ட பின்னர் முஸ்லீம் தவிர்ந்த  தமிழ்க்கல்வி அமைச்சின் பொறுப்பு மாகாண ஆளுனர் ஊடாக ஜனாதிபதியினால் செந்தில் தொண்டமானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாகாண கல்வி அமைச்சு மாகாண முதலமைச்சர் பொறுப்பில் மீண்டும் வழங்கப்பட்டதானது கவலையைத் தருகின்றதென்றும் மீண்டும் தான் பலிவாங்கப்படலாமென்றும் பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர். பவானி ஊடகங்களுக்கு அச்சம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமானிடம் வினவிய போது,
“ஊவா மாகாணத்தில் தமிழ்க்கல்விக்கென்று பொறுப்பாக நான் மாகாண தமிழ்க்கல்வி அமைச்சராக இருந்து வருகின்றேன். எனது இவ் அமைச்சு விடயத்தில் வேறு எவரும் தலையிட முடியாது. மாகாண முதலமைச்சரும் தலையிட முடியாது.
எனது ஒப்புதலுக்கேற்ப ஜனாதிபதி, ஆளுனர், இ.தொ.கா. பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் மட்டுமே எனது பொறுப்பிலுள்ள அமைச்சுக்களில் தலையிட முடியும்.
ஊவா மாகாணத்தில் தமிழ் மற்றும் சிங்களம் என்ற வகையில் இரு கல்வி அமைச்சுக்கள் இருந்து வருகின்றன.
ஆகையினால் பலிவாங்கப்படும் நிலை ஏற்படுமோவென்று எவரும் அஞ்சத் தேவையில்லை.
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரைப் பொறுத்தவரையில் அவர் 1000 குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டேயிருப்பார். இவைகள் எல்லாவற்றுக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
முதலமைச்சருக்கும், அதிபருக்குமிடையிலான விவகாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.
இது விடயமாக அதிபர் கருத்துத் தெரிவித்து வருவது நீதமன்றத்தையே அவமதிக்கும் செயலாகும். தொடர்ந்தும் அவர் அதனையே செய்து வருகின்றார்.
வழக்குத் தீர்ப்பு எவ்வகையில் அமையுமோ எனக்குத் தெரியாது. தீர்ப்பு வெளிவந்ததும் பாரபட்சமின்றி நான் நடவடிக்கைகளை எடுப்பேன்.
பண்டாரவளை பிரதேச சபை தலைவர், செயலாளர் தெரிவில் எனக்கும் முதலமைச்சருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருக்கின்றது. எமது சமூகத்திற்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு எச்சந்தர்ப்பத்திலும் தயங்கமாட்டேன். 
அது போன்ற விடயங்களில் தான் முதலமைச்சருக்கும், எனக்கும் அடிக்கடி முறுகல் நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது. பதுளை எம்.பி. வடிவேல் சுரேஸ் மேற்படி வித்தியாலய விவகாரம் குறித்து குரல் கொடுத்து முதலமைச்சரை எதிர்த்து தேர்தலை எதிர்கொண்டார். ஆனால். தேர்தல் முடிவில் முதலமைச்சரை முன்னிலைப்படுத்திய கட்சியினருடன் ஐ.தே.க. இணைந்து பதுளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் பலவற்றில் ஆட்சி அமைத்துள்ளது. 
வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கு முதலமைச்சரை எதிர்க்க வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க முதலமைச்சரின் உதவி தேவையென்ற நிலையிலேயே வடிவேல் சுரேஸ்  உள்ளார். இத்தகைய கேவலமான அரசியலே மேற்கொள்ளப்படுகின்றது” என்றார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரிடம் வினவியபோது, 
“ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சு பகடைக்காயாகவே மாறியுள்ளது. ஊவா மாகாண சபையின் ஆரம்பக்கட்டத்தில் தற்போதைய மாகாண சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன் இருந்தார். அதையடுத்து தமிழ்க் கல்வி அமைச்சின் கண்காணிப்பு அமைச்சராக கே. வேலாயுதம் இருந்தார். பின்னர் முதலமைச்சர் வசம் தமிழ்க்கல்வி அமைச்சு இருந்து வந்தது.
மாகாண சபையின் இறுதிக் கட்டத்தில் தற்போதைய எம்.பி.யான வடிவேல் சுரேஸ் இருந்து வந்தார். பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் விவகாரத்தையடுத்து கல்வி அமைச்சு மாகாண முதலமைச்சரிடமிருந்து பறிக்கப்பட்டது. இவ் விவகாரம் நீதிமன்றம் மட்டும் சென்றுள்ளதால் மாகாண முதலமைச்சரின் பொறுப்பிலிருந்து கல்வி அமைச்சு பறிக்கப்பட்டது. அத்துடன்  ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு செந்தில் தொண்டமானிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
நீதிமன்ற வழக்கு விசாரணைகள் மற்றும் ஏனைய தரப்பு விசாரணைகள் நிறைவுறும் முன்பே மீளவும் மாகாண முதலமைச்சரிடம் தமிழ்க்கல்வி உட்பட கல்வி அமைச்சு ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சிற்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
வழக்குகள் மற்றும் விசாரணைகள் முடியுமுன்பு கல்வி அமைச்சு முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டமையானது திருப்தியற்ற செயற்பாடாகும். எது எப்படியிருந்த போதிலும் பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய விவகாரத்தில் முதலமைச்சர் தலையீடு செய்வது கூடாது” என்றார்.
எமது செய்தியாளர் மேற்படி விடயம் குறித்து அமைச்சர் மனோ கணேசன், இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் ஆகியோருடன் தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் பயன்கிடைக்கவில்லை. நன்றி வீரகேசரி 






No comments: