புள்ளினங்காள் ஓ...... புள்ளினங்காள் உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்


கடந்த வருடம் புது வீட்டுக்கு மாறியதில் இருந்து தான் அவதானித்தேன் எங்கள் வீட்டு உறுப்பினர்களை விடப் புதிதாகவும் சிலர் சேர்ந்திருப்பதை. ஆம் அவர்கள் யாருமல்ல இந்தியன் மைனா அல்லது common myna என்று சொல்லக் கூடிய நம்மூர் மைனாக்கள் தான். ஆச்சரியம் என்னவென்றால் கடந்த 23 வருட அவுஸ்திரேலிய வாசத்தில் மைனாவின் வாசனையே இல்லாதிருந்த எமக்கு ஏதோ நம்மூர்க்காரரைக் கண்ட மகிழ்ச்சி.

என்னுடைய இசைக்கூடத்தின் மேற் சாளரத்தின் கண்ணாடிகளின் மறு அந்தத்தின் ஓர இருக்கையில் இரண்டு மைனாக்கள் தவறாது வந்து குந்தியிருக்கும். அவற்றைப் படம் பிடிக்கக் கமராவைத் தூக்கினால் ஊர்மிளா தடுத்து விடுவார், நம் சலனம் கேட்டு அவை ஓடி விடுமென்று. முன் விறாந்தையில் கடித்துத் துப்பிய ஊதா நிறப் பழங்களும் அவற்றின் சாயமும் படர்ந்திருக்கும். புது வீட்டின் முகப்பில் இப்படிச் செய்யலாமா என்ற கரிசனை இந்தப் பறவைகளுக்கு இருக்குமா என்ன என்று ஊர்மிளாவிடம் விசனித்தால் “பரவாயில்லை விடுங்கோ அதுகள் ஆசையில் வந்து ஒதுங்கிப் போற இடம்” என்று சமாதானப்படுத்துவார்.

பின் வளவிலும் இதே கதை தான். கடித்துத் துப்பிய பழங்கள் ஆங்காங்கே சிதறியிருக்கும். அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் நிறை மாதக் கர்ப்பிணி போலத் தம் உடம்பை ஆட்டி ஆட்டி அந்தப் புல்லுப் பாதைகளில் மைனாக் கூட்டம் நடை போட்டுக் கொண்டிருப்பினம். அட வீட்டுக்காரன் வாறான் என்ற பயபக்தி இருக்குதா இவற்றுக்கு என்று ஈகோ என்ற வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொள்ளும்.
இருந்தாலும் நெருக்கமான உறவுகள் இல்லாத இந்த அந்நிய தேசத்தில் வாய் பேசாது வலிய இந்தப் பறவைகள் மேல் பச்சாதாபம் பிறக்கும். கலைத்து விடாமல் தன் பாட்டில் நிற்கட்டும் என்று சந்தடி காட்டாது ஒதுங்கிப் போய் விடுவேன்.
ஆனால் என் ஆசையில் மண் அள்ளிப் போட்டார் பிராண்டன் என்ற வெள்ளைக்காரர், நம் பூந்தோட்டத்தை விரிவு படுத்த வந்தவர் இந்த மைனாக் கூட்டத்தைக் கண்டு இரத்த அழுத்தம் ஏறிய தமிழ்ப் பட வில்லன் போல எகிறினார்.

“பிரபா! உங்களுக்குத் தெரியுமா
இந்த மைனாக்கள் ஆபத்தானவை ஆஸி நாட்டின் மரபு சார் பறவைகளுக்கு இவைகள் எதிரிகள். உணவுச் சுழற்சி முறையில் தம் உணவைப் பகிர்ந்துண்ணும் பழக்கம் இல்லாத இந்த இந்தியன் மைனாக்கள் இந்த நாட்டுக்குக் கேடு. இவற்றை ஒழித்துக் கட்ட அரசாங்கம் முயற்சி எடுக்கிறது” என்று பெரிய விரிவுரையை அடித்து முடித்தார் பிராண்டன். எனக்கோ பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ஊர்மிளாவுக்கோ அந்தக் கருத்து அதிர்ச்சியாக இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்தக் கதையை ஓரம் கட்டினோம்.
இந்த இந்திய மைனாக்கள் குறித்த எச்சரிக்கையை ஆஸி நாட்டின் விலங்கு, பறவைகள் நல அமைப்பும் இங்கே பகிர்ந்திருக்கிறது.


பிராண்டன் வந்து போனதில் இருந்து இசைக் கூடத்தின் சாளரத்தில் அந்தரத்தில் வந்து நிற்கும் மைனாக்களைக் கண்டால் ஏனோ அனுதாபம் பிறக்கும்.

பக்கத்து நகரம் Westmead இலுள்ள ஒரு பூங்காவை விடிகாலை வேளையில் கடக்கும் போது யாரோ ஒரு புண்ணியவான் பாண் (Bread) துண்டுகளைக் கொட்டி விட்டுப் போயிருப்பார். புறாக் கூட்டம் வந்து மொய்த்துக் கொண்டிருக்கும். தினமும் நடக்கும் கூத்து இது.

தாயகத்தில் இருந்த காலத்தில் எங்கோ ஒரு குயிலின் “கூ” ஒலி கேட்டு அதுக்கு எதிர்ப்பாட்டு கூவொலி போட்டுக் காட்டுவேன். அது இன்னும் அழுத்தமாகக் கூ ஒலி போடும். இப்படி மாறி மாறி.
சித்தி வீட்டுக்குப் பின் காணியில் பரமலிங்கம் மாமாவின் திராட்சைப் பழத் தோட்டம் இருந்தது. நிறைய பால்மா ரின்களைக் கட்டி ஒரு கயிற்றில் பிணைத்து விட்டு தோட்டத்தின் மறு முனையில் ஒரு நிழற் பந்தலில் இருந்து கொண்டு அதை ஆட்டுவார் பரமலிங்கம் மாமா. பேணிகள் ஒலிக்கும் சத்தத்தில் திராட்சைப் பழம் திருட வந்த கிளிகள் கூட்டமாக ஓடி வானத்தில் குழுமிப் பிரியும். அந்தத் தோட்டத்தின் பக்கத்தில் இருந்த கிணற்றை ஒட்டி தென்னமரம் ஒன்று இருந்த்து. அந்த மரத்தில் பொந்து ஒன்று திடீரென்று தோன்றியதை சித்தி மகன் ராமா கண்டு விட்டார். ஓரு நாள் அந்த மரத்தில் அவர் ஏறிக் கொண்டிருந்ததை எங்கிருந்தோ இருந்து வந்த தாய்க் கிளி கண்டு விட்டது. மரத்தைச் சுற்றிச் சுற்றி அது வட்டமிடுவதைக் கண்டும் அவர் விடாக் கொண்டனாக முன்னேறிக் கொண்டிருந்தார்.
“ராமா அண்ணா! கிளிப் பொந்துக்குள்ள பாம்பிருக்கும் இறங்குங்கோ இறங்குங்கோ” என்று வெருட்டிய பின்னர் தான் மெல்ல இறங்கினார்.
பிடித்த கிளியை வீட்டுக்குக் கொண்டு போனால் சித்தியிடம் கிழி வாங்க வேண்டும் என்ற நினைப்பும் தோன்றியொருக்கலாம்.

புரட்டாசிச் சனிக்கு அம்மா சோற்றுப் படையலை மதிலில் போட்டு விட்டு நகர்ந்ததும் அவற்றைச் சாப்பிட்டு முடிக்கும் காகத்துக்காகக் காத்திருந்திருக்கிறேன். ஆனால் ஏனோ வீட்டில் பறவைகளைக் கூண்டில் வைத்து அடைத்து வளர்க்கப் பிரியப்படவில்லை நான். நண்பன் வீட்டில் கிளியைப் பேசச் சொல்லிக் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க அதுவோ தன் காலால் முகத்தைப் பிறாண்டிக் கொண்டிருக்கும்.
பெரியம்மாவின் மகன் சுரேஷ் ஒரு லவ் பேர்ட்ஸ் பண்ணையே வைத்திருந்து அவற்றை விற்றுக் காசாக்கிக் கொண்டிருந்தார். இன்றும் யாழ்ப்பாணத்தில் மணிப் புறாக்களை வளர்த்து இலட்ச ரூபாவுக்கு விற்கும் குடிசைக் கைத்தொழில் இருப்பதாக அறிந்து வியந்தேன்.

தேவதேவனின் பறவைக் கவிதை ஒன்றை வாசகர் ஒருவர் எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் படித்த போது அடடா எல்லாருக்கும் ஒரே மன நிலை தான் வாய்க்கும் போல என்று எண்ணிக் கொண்டேன்.

சின்னஞ் சிறு குருவியே
————————–
எத்துணை கொடுத்து வைத்தவள் நீ !
மானுடப் பரப்பில்
உன் மூளை இயங்கிக் கொண்டிருக்கவில்லை
அமைதி அமைதியின்மை அறியாத
பேரமைதியின் புதல்வி நீ.
எளிய தேவைகளுக்கும்கூட
தன் வாணாளைப் பணையம் வைத்துப்
பாடுபட வேண்டிய
விந்தை உலகத்தவனில்லை நீ.
உன் உயிர் தயாரிப்பதற்கான
சிற்றுணவு பஞ்சத்தை
நீ ஒரு நாளும் அறிந்திருக்கவில்லை.
புகழுக்கும் மேலாண்மைக்கு போகத்திற்குமாய்
அல்லலுறும் மானுட உலகையே அறியாது,
வானத்திற்கும் பூமிக்கும் பிறந்தவளாய்
அன்பின் பெருவிரிவில் சிறகுவீசும் என் செல்லம் !
இன்பமும் துன்பமும் உயிரெச்சமும்
அறியாதவன்
என்றாலும் இயற்கைப் பெருவெளியை
உதைக்கும் ஒரு சிறு கீறலுக்கும்
துணுக்குற்று அலறும் ஒரு நுண்ணுயிர் !
உனக்காக,
உனக்காகவேதான் என் கண்ணே,
இந்த ஈனச்சிறு மானுடர்க்காய் அல்ல;
அவர்களுக்காகவெனில்
இவ்வுலகை ஆயிரம்முறை அழிக்கலாம்.
உன் துணுக்குரலாற் துயருற்றே
உனக்காகவேதான் என் செல்லமே
தன்னை சரிசெய்துகொள்ளத் துடிக்கிறது
இப் பேரியற்கை
என் அன்பே !
-தேவதேவன்

இந்த மாதிரிப் பறவைப் புராணம் திடீரென்று எழுவதற்குக் காரணம் இந்த வாரம் நடந்த இரண்டு விடயங்கள். இரண்டுமே இரண்டோடு சம்பந்தப்பட்டவைகள். ரஜினிகாந்தின் நடிப்பில் ஷங்கர் இயக்கிய 2.0 படத்தின் பாடல்கள் பல மாதங்களுக்கு முன்பே வந்திருந்தாலும் அவற்றைக் கேட்பதில் ஆர்வமிருக்கவில்லை.
என்னடா வானொலிக்காரன் இப்படிப் பேசுகிறானே என்று நினைக்காதீர்கள். நான் பழைய பாடல்களோடும் பழைய வாழ்க்கை நினைவுகளோடும் தான் வாழ்ந்து கொண்டிருப்பவன்.

அப்படியிருக்க இந்த இறந்தும் இறவாக் கவிஞன் நா.முத்துக்குமார் 2.0 படத்துக்கு எழுதிய “புள்ளினங்காள்” பாடல் தான் என் இந்த மன அதிர்வலைக்க்கு முக்கிய காரணம்.
பறவைகளோடு மனிதனுக்கு இருக்கும் நேசம் குறித்து இதுவரை திரையிசையில் இவ்வளவு அணுக்கமாக எழுதியதில்லையோ? ( செக்கச் சிவந்த வானம் படத்தில் வரும் மழைக்குருவி பாடல் வேறு தளம்)
இந்த புள்ளினங்காள் பாடலைக் கேட்டு முடித்த பின்னாலும் பாடலில் எழும் பறவை ஒலிகள் அசரீரியாகக் கேட்டுக் கொண்டே இருந்தன.
அவை கிராமத்துத் தோட்டத்துக் கிளிகளாகவோ அன்றி கூக்கூ போட்ட குயில்களாகவோ மனதின் நினைவுகளைச் சுழியோடின.

நேற்று 2.0 படத்தைப் பார்த்த பின் அந்தத் தாக்கம் இன்னும் அதிகமாகி விட்டது. இந்தப் படத்தை விமர்சனத் தளத்தில் இன்னும் பலவேறாக ஆராயலாம் என்றாலும் படத்தில் முக்கியமாகப் பேசப்பட்டது. செல்போன் யுகம் வந்த பின் பறவை இனங்களுக்கு அடிக்கும் சாவு மணி பற்றியது. கதிரலைகளின் தாக்கத்தால் அழியும் சிட்டுக் குருவிகளை இனித் தமிழ்த் திரையிசைப் பாடல்களில் தான் தேடிப் பிடிக்க முடியும் போல. படத்தில் சொல்லப்பட்ட இந்தச் செய்தி அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டதோடு நம் எதிர்காலம் குறித்த பயத்தையும் எழுப்பி விட்டது.
படம் பார்த்து முடித்த பின் பாடலை மீண்டும் கேட்ட போது ஒரு கலவையான உணர்வில் குழம்பி நிற்கிறது மனது.

புள்ளினங்காள்
ஓ...... புள்ளினங்காள்

உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்

"புள்ளினங்காள்
ஓ...... புள்ளினங்காள்

உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்

மொழியில்லை
மதமில்லை
யாதும் ஊரே
என்கிறாய்

புல் பூண்டு அது கூட
உன் சொந்தம்
என்கின்றாய்

காற்றோடு விளையாட
ஊஞ்சல் எங்கே செய்கிறாய்

கடன் வாங்கிச் சிரிக்கின்ற
மானுட நெஞ்சைக்
கொய்கின்றாய்

உயிரே.....
எந்தன் செல்வமே
உன் போல் உள்ளம் வேண்டுமே

உலகம் அழிந்தே போனாலும்
உன்னைக் காக்கத் தோன்றுமே

செல்லும் செல்லும் செல்லும் செல்லும்
எல்லைகள் இல்லை
செல்லும்
செல்லும் செல்லும் செல்லும் செல்லும்
என்னையும் ஏந்திச் செல்லும்


கானா பிரபா
01.12.2018No comments: