இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களின் ஊடாக பேசிய அரசியல், அறம் ஆகியவை குறித்து தமிழகத்தின் படைப்பாளுமை தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் அவர்கள் எழுதிய நிழல் வெளி நூல் அறிமுக நிகழ்வும் அவருடனான சந்திப்பும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த
25 ஆம் திகதி ஞாயிறன்று மெல்பனில் நடைபெற்றது.
மெல்பனில் வேர்மண் தெற்கு சனசமூக மண்டபத்தில்
இடம்பெற்ற இந்நிகழ்வில், உலகெங்கும்
நிகழ்ந்த போர் அநர்த்தங்களினாலும் இயற்கை பேரிடர்களினாலும் இன்னுயிர்களை இழந்த
மக்களுக்காக மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
சங்கத்தின்
துணைத்தலைவர் மருத்துவர் திருமதி வஜ்னா ரஃபீக், தமிழச்சி சுமதி தங்கபாண்டியனை மலர்க்கொத்து வழங்கி வரவேற்று உரையாற்றினார்.
மெல்பனில் வதியும் கலை இலக்கிய ஆர்வலர்கள் திரளாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடக்கவுரை நிகழ்த்திய
சங்கத்தலைவர், தொடர்ச்சியாக சங்கம் அவுஸ்திரேலியாவில் மேற்கொண்டுவரும் கலை,
இலக்கியப்பணிகளையும் விக்ரோரியா உட்பட ஏனைய மாநிலங்களில் நடத்திய தமிழ் எழுத்தாளர்
விழாக்கள் பற்றியும் விரிவாக உரையாற்றினார்.
நிழல்வெளி
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து
அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர்களின்
வரலாற்றுப்பின்னணியில் அவர்களது சமூக - அரசியல் - வர்க்க வேறுபாடுகளையும் புலம்பெயர்தலில் அவர்கள் எதிர்கொண்டிருந்த சவால்களையும் பல்வேறு பரிணாமங்களின் வாயிலாக ஆய்வு செய்து எழுதிய நூல் நிழல்
வெளி.
இந்த நூல் , தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் தனது முனைவர் பட்டத்துக்காக அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்து பத்து வருடங்களுக்கு முன்னர் மேற்கொண்ட ஆய்வுப்பிரதியின் தமிழ் வடிவமாகும். இந்த ஆய்வு நூலை அவர் "புவிக்கோளத்தின் மூலை முடுக்கெல்லாம் புலம்பெயர்ந்திருக்கின்ற ஈழத்தமிழர்களுக்கும் 2009 முள்ளிவாய்க்கால்
நினைவுக்கும்" சமர்ப்பித்திருக்கிறார்.
கவிதைகள் குறித்த ஆழ்ந்த நேசிப்பும் அளவுகடந்த பாசமும் கொண்டதொரு தாய்மை உணர்வோடு தமிழச்சியின் கவிதைகள் குறித்த தனது நெருக்கமான உணர்வுகளை உள்ளன்போடு சாந்தி பகிர்ந்துகொண்டது மாத்திரமல்லாமல், சில கவிதைகள் எவ்வளவுதூரம் தன்னை தொந்தரவு செய்தன என்றும் நெகிழ்ந்து கூறினார்.
நூலின் முதல் பிரதியை மெல்பன்
கலை இலக்கிய ஆர்வலர் திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தி, தமிழச்சி தங்கபாண்டியனிடம்
பெற்றுக்கொண்டார்.
நிழல்வெளி நூலை அறிமுகப்படுத்தி
உரையாற்றிய சங்கத்தின் துணைத்தலைவர் திரு. சுந்தரேசன், முனைவர் பட்டம் பெறுவதற்காக ஒருவர் ஆய்வு செய்த செறிவான நூலை விமர்சனம் செய்வது அவ்வளவு எளிதல்ல என்பதை இந்த நூலை வாசிக்கத்தொடங்கியபின்னர்தான், தான் உணர்ந்துகொண்டதாக குறிப்பிட்டார்.
நிழல்வெளி நூல் குறித்த நயப்புரையை வழங்கிய எழுத்தாளரும் ஊடகவியலாளருமான தெய்வீகன்,
புலம்பெயர்ந்தவர்கள் புலம்பெயரும் நாட்டில் மேற்கொள்ளும் கலை இலக்கிய முயற்சிகளை
முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்யவேண்டியதன் தேவை குறித்து விளக்கினார்.
அதன் பின்னர், தமிழச்சியின் சுமதி தங்கபாண்டியனின் ஏற்புரை மிகச்சிறப்பாக அமைந்தது. தான் அவுஸ்திரேலியாவுக்கு 2004 இல் முதல் தடவை ஆய்வுப்பணிக்காக
வருகை தந்தபோது எம்மத்தியில் வாழ்ந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை தனக்கு ஆதர்சமாக
விளங்கியதையும், அவர் மறைந்தபின்னர் இங்கு மீண்டும் வருகை தந்து அவரது
நினைவுகளையும் பகிர்ந்து பேச நேர்ந்திருக்கும் சூழலையும் நெகிழ்ச்சியோடு
குறிப்பிட்டார்.
கல்விப்பணியினால் சென்னை
நகரவாசியாக வாழநேரிட்டபோதிலும் இன்றும் தான்
ஒரு கரிசல் காட்டின் தமிழச்சியாகவே வாழ்ந்துகொண்டிருப்பதாகச்சொன்னார். அந்த
வாழ்க்கையே தான் எழுதிய கவிதைகள் என்றார்.
அவர் தமது உரையில் மேலும் பின்வருமாறும்
சொன்னார்:
நினைவைக்கட்டமைப்பது என்
நெஞ்சுக்கு நெருக்கமானதாக எப்போதும் இருந்துவந்துள்ளது. இந்தியாவின் தென்
தமிழ்நாட்டைச்சேர்ந்த கிராமத்து வேளாண்குடியில் பிறந்தேன். கல்வித்துறை வேலையின்
பொருட்டும் வளம் பெறும் பொருட்டும் பெருநகரத் தலைநகர் சென்னைக்குக் குடிபெயர
நேர்ந்தது. பெருநகர பண்பாட்டில் திடீரென்று நுழைந்தது என்னைத் திகைக்கவே வைத்தது. எனது
மூதாதையர் இல்லம், நிலவியல், வறண்டிறுகிய கரிசல் மண். செடி, கொடிகள், கிறீச்சிடும்
பறவைகள், கோழிகள், வெள்ளந்தியான வேளாண் குடியினர் மீதான ஏக்கத்தை சென்னை வாழ்வு
அடிக்கடி ஏற்படுத்தியது.
அந்த
ஏக்கத்தை போக்குவதற்காகவே எனது பூர்வீக மண்ணிற்கு அடிக்கடி செல்வேன்.
இலங்கையில்
நிகழ்ந்த அரசியல் கொந்தளிப்பு என்னையும் பாதித்திருக்கிறது. அங்கிருந்த தமிழ்
மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியமை வேதனைப்படுத்தியது. தென்னிந்திய தமிழர்களாகிய
எமக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்குமிடையே நிலவிய நூற்றாண்டு கால நெருக்கமான
பண்பாட்டு உறவுகளின் இயற்கையான விளைவாலும் எங்கள் புவிசார் அரசியல்
நெருக்கத்தாலும் இது ஆறெனப்பெருகியது.
உணர்வுகள்
ஒருபுறமிருக்க, இலங்கைத்தமிழரின் வரலாற்று நிலைமை ஆங்கிலத்தில் இலக்கிய வெளிப்பாடு
கண்டால்தான் சர்வதேசக் கவனிப்பைப் பெறும் என்பதும் எனது வலுவான நம்பிக்கை. ஆனால்,
இதுவரையிலும் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் என்னும் இரண்டு தரப்பினரிடையேயும்
புறக்கணிப்பே மேலோங்கியிருந்ததையும் அவதானித்தேன்.
இருளில்
நான் துழாவிக்கொண்டிருந்த வேளையில் ஆஸ்திரேலிய இந்தியக்கழகத்தின் கௌரவ 2004
என்னும் நல்கை, சரியான வழித்தடத்தில் என் தேடலைச்செலுத்தியது. இலங்கைத்
தமிழர்களாகக் குடியமர்ந்தவர்களின் நூல்களைக்கண்டு சேகரிக்கும் நிச்சயமான
நம்பிக்கையுடன் நான் ஆஸ்திரேலியாவுக்கு வந்தேன். ஏர்னஸ்ட் தளையசிங்கம்
மக்கின்ரயரின் நாடகங்கள் சார்ந்த படைப்புகள் கிடைத்தன.
அவருடை
நாடகப்பிரதிகள் எனக்கு கிடைத்தபோதிலும் அவற்றின் அரங்காற்றுகைகளை பார்க்கும்
சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தான் தெரிவிக்கின்றேன்.
துருவ
நிலைப்பட்ட அரசியல் வெளிப்பாடுகளின் எல்லைக்கு வெளியே, கலைகளின் மூலமாக, மற்றவரின்
நோக்கு நிலையிலிருந்து இன்னொரு பாதைக்கான தேடலின் விளைவே இந்த நிழல்வெளி நூல்.
நான்
ஆங்கிலத்தில் எழுதிய எனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை, திரு. சா. தேவதாஸ் அவர்கள்
தமிழ்ப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தின் உயிர்மைப் பதிப்பகம் இந்நூலை
வெளியிட்டிருக்கிறது.
எங்கு
வந்து ஆய்வுப்பணியை தொடங்கியிருந்தேனோ, அந்த நாட்டிற்கே மீண்டும் வந்து அதன் நூல் வடிவத்தை அறிமுகப்படுத்துவதற்கு கிடைத்த வாய்ப்பிற்காக
மிகவும் மனம் நிறைவடைகின்றேன்.
இந்த
நிகழ்ச்சியை அழகாக வடிவமைத்து இங்கு வாழும் இலக்கிய ஆர்வலர்களை நான் சந்தித்து
உரையாடுவதற்கு வாய்ப்புத்தந்த ஆஸ்திரேலிய
தமிழ் இலக்கிய கலைச்சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை உள்ளன்போடு
தெரிவிக்கின்றேன்."
ஏற்புரையைத் தொடர்ந்து, சபையோரின் கேள்விகளுக்கு தமிழச்சி
கலந்துரையாடல் பாங்கில் பதில்களை வழங்கினார்.
தேநீர்
விருந்துடன் நிறைவடைந்த இந்நிகழ்வில் சங்கத்தின் செயலாளர் கலாநிதி ஶ்ரீ கௌரிசங்கர்
நன்றி நவின்றார்.
---0---
No comments:
Post a Comment