உலகச் செய்திகள்


உக்ரேனின் மூன்று கப்பல்களை அதிரடியாக கைப்பற்றியது ரஷ்யா

ரஷ்யாவுடன் போரில் ஈடுபடத் தயார் : உக்ரைன் ஜனாதிபதி தெரிவிப்பு

உக்ரேன் - ரஷ்யா மோதலின் எதிரெலி ; சந்திப்பை புறக்கணிப்பாரா ட்ரம்ப்?

ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக உக்ரைனில் 30 நாட்கள் இராணுவ சட்டம் அமுலில் 

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் சிறை தண்டனை இரத்து

தீவிரவாதிகளின் தாக்குதலில் 47  அமெரிக்க ஆதரவு படையினர் பலி

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார்

விமானத்தில் கோளாறு ; ஜி -20 கூட்டத்தில் பங்கேற்க முடியாது திரும்பிய ஜேர்மன் பிரதமர்

அக்கறையற்ற ஆட்சியாளர்கள் உள்ளவரை போர் தொடரும் - ரஷ்யா

மெக்சிக்கோ நாட்டின் புதிய ஜனாதிபதியாக லோபஸ் ஆப்ரதோர் 



உக்ரேனின் மூன்று கப்பல்களை அதிரடியாக கைப்பற்றியது ரஷ்யா

26/11/2018 ரஷ்யாவின் கிரிமியா பிராந்தியத்தில் அத்துமீறி நுழைந்த உக்ரேன் நாட்டின் மூன்று கப்பல்கள் மீது தாக்குதல் மேற்கெண்ட ரஷ்ய கடற்படையினர் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.
ரஷ்யாவின் இந்த தாக்குதல் காரணமாக கைப்பற்றப்பட்ட ஆயுதம் தாங்கிய இரு கப்பல்கள் மற்றும் ஒரு சிறிய கப்பல்களில் இருந்த ஏராளமான உக்ரேன் கடற்படையினர் மற்றும் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரும் பதற்றத்தை உருவாகியுள்ளதுடன், இரு நாடுகளும் ஒன்றின் மீது ஒன்று பழி சுமத்தியுள்ளன.
இந் நிலையில் ரஷ்யாவின் இந்த செயற்பாட்டை கண்டித்து உக்ரேன் தலைநகர் கீவிலுள்ள ரஷ்ய தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  நன்றி வீரகேசரி 










ரஷ்யாவுடன் போரில் ஈடுபடத் தயார் : உக்ரைன் ஜனாதிபதி தெரிவிப்பு

29/11/2018 ரஷ்யாவுடன் முழு போரில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 
கடந்த காலத்தில் ரஷ்யாவை ஒட்டி இருந்த பல நாடுகள் சோவியத் யூனியன் என்ற பெயரில் ரஷியாவுடன் இணைந்து ஒரே நாடாக இருந்தன.
 பின்னர் அந்த நாடுகள் ரஷ்யாவுடன் இருந்து பிரிந்து சென்று விட்டன. அதில், முக்கிய நாடான உக்ரைன் பிரிந்து சென்ற பிறகு இருநாடுகளும் பகை நாடுகளாக மாறி விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை ரஷ்யா வலுக்கட்டாயமாக கைப்பற்றி தன்னுடன் இணைத்து கொண்டது.
அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு  அதிகரித்தது.
இந்நிலையில் ரஷ்ய கடல் பகுதியில் சென்ற உக்ரைனின் 4 கப்பல்களை ரஷ்யா சிறை பிடித்துள்ளது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் வரலாம் என்ற சூழ்நிலை நிலவுகிற நிலையில் உக்ரைன் தனது படைகளை எல்லையில் குவித்து வருகிறது.
பதிலுக்கு ரஷ்யாவும் எல்லையில் அதிக ஆயுதங்களை குவித்து வருகிறது. போர் பதற்றம் நிலவுவதால் உக்ரைனில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி புரோசென்கோ தெரிவித்ததாவது,
 உக்ரைன் கடுமையான மிரட்டலுக்குள்ளாகி இருக்கிறது. தற்போது நடக்கும் நிகழ்வுகள் விளையாட்டுத்தனமான வி‌டயம் அல்ல ரஷ்யா தாக்குதலுக்கு தயாராகி உள்ளது.
எனவே, ரஷ்யாவுடன் நாங்கள் முழு போரில் ஈடுபடும் நிலை ஏற்பட்டு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு உதவும் வகையில் நேட்டோ நாடுகள் தங்கள் நாட்டுக்கு  கப்பல்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 ரஷ்ய ஜனாதிபதி புதின் தெரிவிக்கையில், 
உக்ரைனுடன் மோதும் எண்ணம் எங்களுக்கு இல்லை. உக்ரைனில் நடக்கும் தேர்தலில் ஆதாயம் பெறுவதற்காக அந்த நாட்டு ஜனாதிபதி அச்சுறுத்தி இருப்பதாகவும், போர் நடக்க போகிறது என தெரிவித்து நாடகம் ஆடுகிறார் என தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 










உக்ரேன் - ரஷ்யா மோதலின் எதிரெலி ; சந்திப்பை புறக்கணிப்பாரா ட்ரம்ப்?

28/11/2018 ஜீ -20 மாநாட்டின் போது திட்டமிடப்பட்ட ரஷ்ய நாட்டு ஜனாதிபதி புட்டீனுடனான சந்திப்பினை புறக்கணிக்கக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரேன் நாட்டுடான கடற் பிராந்திய மோதலை ரஷ்யா ஆரம்பித்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானத்தை தாம் எடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை உக்ரேனின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி அவற்றை ரஷ்யா கைப்பற்றியமை குறித்த முழு தகவல் அறிக்கையை படிப்பதற்கு தான் காத்திருக்கின்றேன். 
அந்த அறிக்கை தீர்மானமிக்கதாக அமையும் பட்டசத்தில், ஒருவேளை நான் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆர்ஜெண்டீனாவில் இடம்பெறவுள்ள ஜீ -20 மாநாட்டின் போது, புட்டீனை சந்திக்காமல் போகலாம் எனவும் ரஷ்யாவின் இந்த ஆக்ரமிப்பு தாக்குதல் எனக்கு பிடிக்கவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். 
இந் நிலையில் ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்ட உக்ரேன் கப்பல்களில் இருந்தவர்களின் வாக்குமூலம் ரஷ்ய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதில் ஒருவர் உக்ரேனின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் குறித்து தனக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அவர்களை பொய் வாக்குமூலம் வழங்க ரஷ்ய கடற்படையினரால் வற்புறுத்தப்பட்டிருக்கலாம் என உக்ரேனின் கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 











ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக உக்ரைனில் 30 நாட்கள் இராணுவ சட்டம் அமுலில் 

27/11/2018 உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா நேற்று முன்தினம் கைப்பற்றியது. கிரிமியா அருகே உள்ள கெர்ச் ஜலசந்தியை உக்ரைன் கப்பல்கள் கடந்தபோது, தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி இந்த நடவடிக்கையை ரஷ்ய இராணுவம் எடுத்திருக்கிறது.  
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்தியானது, அஸோவ் கடலுக்கு செல்லும் ஒரே பாதை ஆகும். அந்த பகுதியில் ரஷ்யா தனது டேங்கர் கப்பலை நிறுத்தி உள்ளது. 
அத்துடன் ரஷ்ய போர் விமானங்களும் அந்த பகுதியில் பறக்கின்றன. 
உக்ரைன் கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதால் அசோவ் கடற்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. 
இந்த சூழ்நிலையில், உக்ரைனின் ரஷ்ய எல்லையில்  உள்ள குறிப்பிட்ட பிராந்தியங்களில் இராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கக்கூடிய இராணுவச் சட்டத்தை அமல்படுத்த உக்ரைன் அரசு முடிவு செய்தது.
 இதற்காக பாராளுமன்றத்தில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 
விவாதத்திற்கு பிறகு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது மசோதாவை நிறைவேற்ற 226 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், மசோதாவிற்கு ஆதரவாக 276 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 
இதையடுத்து நாளை காலை 9 மணி முதல் 30 நாட்களுக்கு இராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள மோல்டோவாவின் டிரான்ஸ்னிஸ்டிரியா பிராந்தியம் மற்றும் கருங்கடல் ஓரம் உள்ள பிராந்தியங்கள் மற்றும் அஸோவ் கடல் பகுதியில் இந்த சட்டம் அமலில் இருக்கும். 
இந்த பிராந்தியங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 
பிளவுபட்ட பிராந்தியமான டிரான்ஸ்னிஸ்டிரியாவில் ரஷ்ய படைகள் முகாமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதலில் 60 நாட்களுக்கு இராணுவ சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆணையில் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ கையெழுத்திட்டார். 
அதன்பின்னர், 30 நாட்களாக குறைத்தார். 
இது தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி கூறுகையில், இராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டதால் போர் பிரகடனம் என்று அர்த்தம் அல்ல.  உக்ரைன் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை என அரவர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி 









மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் சிறை தண்டனை இரத்து

26/11/2018 பயங்கரவாத வழக்கு ஒன்றுடன்  தொடர்புப்படுத்தி மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத்-க்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை அந்நாட்டு உயர்நீதிமன்றம்  இன்று இரத்து செய்துள்ளது
மாலைதீவு  முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் (49), கடந்த 2008 ஆம் ஆண்டு அந்நாட்டில் இடம்பெற்ற முதல் பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாவார்.  இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆட்சியை அப்துல்லா யாமீன் என்பவரிடம்  நஷீத், பறிகொடுத்தார். 
அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு முஹம்மது நஷீத் மீது பல்வேறு வழக்குகளைச் சுமத்தியது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிபதியைக் கைது செய்ததாகத் தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் தொடரபுப்பட்ட வழக்கில் அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்தார். 
சிறைவாசத்தின் போது கடும் முதுகுவலியால் சிறையில் அவதிப்பட்ட அவருக்குத் தண்டு வடத்தில் சத்திரசிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அதற்காக இங்கிலாந்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைபெற முடிவு செய்து அரசிடம் அனுமதி கேட்டார்.
அதற்கு மாலத்தீவு அரசு அனுமதி தர மறுத்து விட்டது. வெளிநாடு செல்லும் நஷீத் மீண்டும் திரும்பி வருவார் என அவரது உறவினர்கள் யாராவது உத்திரவாதம் அளித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அரசு அறிவித்து விட்டது. 
அவரது நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து சிகிச்சைக்காக நஷீத் வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு மாலத்தீவு அரசுக்கு அமெரிக்கா, இந்தியா மற்றும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து, சத்திரசிகிச்சைக்காக இங்கிலாந்து நாட்டுக்குச் செல்ல அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த 2016 ஆம்  ஜனவரி மாதம் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்ல மாலத்தீவில் இருந்து முகமது நஷீத் புறப்பட்டுச் சென்றார்.
சிகிச்சைக்குப் பின்னர் அவர் மாலத்தீவுக்குத் திரும்பாமல் இலங்கையில் அரசியல் தஞ்சமடைந்தார்.
மாலைதீவு  ஜனாதிபதி பதவிக்கு செப்டம்பர் 23 ஆம் திகதி தேர்தலில் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்ததையடுத்து புதிய ஜனாதிபதியாக இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் பதவியேற்ற நிலையில் முகமது நஷீத் சமீபத்தில் தாய்நாடு திரும்பினார்.
இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து முன்னர் மாலத்தீவு உயர்நீதிமன்றில் முஹம்மது நஷீத் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு அவரது சட்டத்தரணி ஹிஸான் ஹுஸைன்  ஆஜராகிவந்தார்.
இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி முஹம்மது நஷீதுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறைவாசத்தை இரத்து செய்து உத்தரவிட்டார்  நன்றி வீரகேசரி 











தீவிரவாதிகளின் தாக்குதலில் 47  அமெரிக்க ஆதரவு படையினர் பலி

26/11/2018 சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட  தாக்குதல்களில் அமெரிக்கா ஆதரவு பெற்ற குர்து படையைச் சேர்ந்த 47 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படையினர் (சீரிய ஜனநாயக படை) மற்றும் கிளர்ச்சி படையினர் தொடர் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். 
இந்நிலையில் ஈராக் எல்லையை ஒட்டியுள்ள டீர் எஸ்ஸார் மாகாணத்திலிருந்து ஐஎஸ் தீவிரவாதிகளை அகற்றுவதற்காக தற்போது உக்கிரமான தாக்குதல் மேற்கொண்டு தீவிரவாதிகளை கொன்று வருகின்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஐஎஸ் தீவிரவாதிகளும் அவ்வப்போது தாக்குதல் மேற்கொள்கின்றனர். 
அந்த வகையில், ஆல் பஹ்ரா மற்றும் கரானிஜ் கிராமங்கள் மற்றும் சீரிய ஜனநாயக படையின் கட்டுப்பாட்டில் உள்ள அல் தனக் எண்ணெய் வயல் அருகில் சனிக்கிழமை முதல் ஐஎஸ் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் மேற்கொண்டர். இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 47 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது  நன்றி வீரகேசரி 













அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார்

01/12/2018 பரக் ஒபாமாவுக்கு முன்னர் அமெரிக்காவை ஆட்சி செய்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் தந்தையும் அந்நாட்டின் மற்றொரு அதிபருமான ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) காலமானர்.


அந்நாட்டின் ஜனாதிபதியாக  கடந்த 1989 முதல் 1993 ஆம்  ஆண்டுவரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர். 
அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார்.
இவரது மகனான  ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், அந்நாட்டின் அதிபராக 2001 முதல் 2008 ஆம்  ஆண்டுவரை இருமுறை அந்நாட்டின் ஜனாதிபதியாக  பதவி வகித்துள்ளார். 
வயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்துவந்த ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் தனது 94 வயதில்  நிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். 
கடந்த ஆண்டு கடுமையான உடல்நலக் குறைவால் ஹூஸ்டன் நகரில் உள்ள மெத்தடிஸ்ட் மருத்துவமனையில் சுமார் 15 நாட்கள் சிகிச்சைபெற்ற அவர் ஓரளவுக்கு குணமடைந்து வீடி திரும்பினார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் இன்று காலமானதாக அவரது செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார். 
அவரது இறுதி சடங்குகள் தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 











விமானத்தில் கோளாறு ; ஜி -20 கூட்டத்தில் பங்கேற்க முடியாது திரும்பிய ஜேர்மன் பிரதமர்

30/11/2018 துரதிர்ஷ்டவசமாக ஜி -20 மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் ஜேர்மனி நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெலுக்கு பங்கேற்க முடியாது போயுள்ளது.
ஆர்ஜன்டீனாவில் நடைபெற்று வரும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் சென்ற விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகவே அவருக்கு இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது போயுள்ளது.  
ஏஞ்சலா மெர்க்கெல் பெர்லின் நகரில் இருந்து தனி விமானம் மூலம் குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றார். அவருடன் அரச உயரதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் குழுவும் சென்றது.
இதன்போது நெதர்லாந்து நாட்டு வான் பரப்பு பகுதியில் விமானம் பறக்கும்போது மின்சார சாதனங்கள் சரியாக இயங்காத காரணத்தினால் விமானி, விமானத்தை அங்கிருந்து ஜேர்மனிக்கு திருப்பி வெஸ்ட்பாலியா மாநிலத்திலுள்ள கோல்ன் நகரில் அவசரமாக தரையிறக்கினார். 
இதன் காரணமாகவே ஜி -20 மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்த ஏஞ்சலா மெர்க்கலுக்கு இறுதியில் பங்கேற்க முடியாது போனது. 
ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பில் உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான ஆர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிக்கோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாபிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 







அக்கறையற்ற ஆட்சியாளர்கள் உள்ளவரை போர் தொடரும் - ரஷ்யா

02/12/2018 உக்ரைன் நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அக்கறை காட்டாத ஆட்சியாளர்கள் பதவியில் உள்ள வரை போர் தொடரும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டீன் தெரிவித்துள்ளார்.
உக்ரேனுக்கு சொந்தமான மூன்று படகுகளை ரஷ்யா அண்மையில் கிரிமிய கடற்பரப்பில் வைத்து கைதுசெய்திருந்தது.
இந் நிலையிலேயே இரு நாடுகளுக்குமிடையில் போர் பதற்கம் ஆரம்பமானது. 
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரேன், 16 -60 வயதுக்குட்பட்ட ஆண்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய தடை விதித்து. எனினும் இதற்கு மெளனம் காத்த ரஷ்யா தற்போது உக்ரைன் நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அக்கறை காட்டாத ஆட்சியாளர்கள் பதவியிலிரு உள்ள வரை போர் தொடரும் எனக் கூறியுள்ளது. 
இது தொடர்பில் அர்ஜன்டீனா தலைநர் பியுனஸ் அய்ரெஸ் நகரில் ஊடகவியலாளர் சந்திப்பில் புட்டீன் தெரிவக்கையில்,
ரஷ்யா-உக்ரைன் இடையில் நீண்டுவரும் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதில் அந்நாட்டின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு அக்கறை இல்லை. 
ஆகவே தற்போதுள்ள ஆட்சியாளர்கள் பதவியில் இருக்கும்வரை இருநாடுகளுக்கும் இடையிலான போர் தொடரும் எனத் தெரிவித்துள்ளார். 
உக்ரேனுக்கு சொந்தமான கிரிமியா பகுதியை கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்ததிலிருந்து இரு நாடுகளுக்குமிடையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 










மெக்சிக்கோ நாட்டின் புதிய ஜனாதிபதியாக லோபஸ் ஆப்ரதோர் 

02/12/2018 மெக்சிக்கோ நாட்டின் புதிய ஜனாதிபதியாக லோபஸ் ஆப்ரதோர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்.வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஜானாதி தேர்தல்  பாராளுமன்றம் மற்றும்  3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கு கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி தேர்தல் நடைப்பெற்றது.
அப்போதைய அதிபராக இருந்த பெனா நெய்டோவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்ததால், அவர் சார்ந்துள்ள ஐஆர்பி கட்சி தோல்வியை தழுவும் என கருத்து கணிப்புகள் முன்னரே வெளியாகி இருந்தது
ஐஆர்பி கட்சியில் இருந்து பிரிந்த இடதுசாரி சித்தாந்தங்கள் கொண்ட தேசிய ரீஜெனரேசன் இயக்கம் தொடங்கிய லோபெஸ் ஆப்ரடார் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். 
இவ்வாறு ஜனாதிபதி போட்டியில் போட்டியிட்ட அவர் 53 சதவீதம் வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். 
இதன்மூலம் மெக்சிகோவை கடந்த 89 ஆண்டுகளாக ஆட்சி செய்த  இரு முக்கிய கட்சிகளை தோற்கடித்தவர் என்ற வரலாற்று சாதனையை லோபஸ் ஆப்ரதோர் படைத்தார்.    நன்றி வீரகேசரி 












No comments: