தென்னைமரங்கள் - ருத்ரா


கஜாப்புயல் கொன்று குவித்த
சடலங்கள் லட்சக்கணக்கில்
நீட்டிக்கிடந்தன.

விவசாயிகள் அழுதார்கள்.
எங்களுக்கு
சோறு தண்ணீர் எல்லாம் வேண்டாம்.
இவைகளுக்கு கொஞ்சமாவது
உயிர் இருக்காதா?
108க்கு சொல்லி
எடுத்துக்கொண்டு போங்கள்.
காணச்சகிக்கவில்லை.

"தென்னையைப்பெத்தா  இளநீரு
பிள்ளையப்பெத்தா கண்ணீரு "
மவராசன் நல்லாப்பாடினாரு.

புயலின்
இந்த குருட்சேத்திரத்திலே
தர்மம் அதர்மம்
லேபிள்கள் ஒட்டுவதெல்லாம்
ஏமாத்து வேலை.

இந்த பிள்ளைகள்
எங்களுக்கு தாகம் தணித்தார்கள்.
குடிசைகள் தந்தார்கள்.
பசுமை உயிர் பாய்ச்சினார்கள்.
அந்த அழகிய கீற்றுக்கூந்தலுக்கும்
தினமும்
தலைவாரி சடை போட்டு
பின்னல் வைத்து
கற்பனையின்
சன்னல் திறந்து பார்ப்போம்.
எவ்வளவு அழகு?
கொள்ளை அழகு?
தேங்காய்கள் எனும்
தன் இதயக்குவியல்களை
அள்ளி அள்ளிக்கொடுத்து
எங்களைத் துடிக்கவைத்த‌
இந்த "மூச்சுத்தோப்பு"
மூச்சடங்கிக்கிடக்கிறதே.
அதிகாரிகள் புள்ளிவிவரங்கள்
எடுத்தார்கள்.
இந்த எங்கள் பிள்ளைகளுக்கு
என்ன விலை கொடுக்க முடியும்?
முப்பது ஆண்டுகள் வரை
மூச்சுப்பிடித்து வளர்த்தோமே.
திடீரென்று
நாளை ஒரு தென்னைமரம்
வளர்த்துக்கொடுக்க முடியுமா?
கரன்சிகளைக்கொண்டு
கண்ணீர் ஈரம் துடைக்க முடியுமா?
நியாயம் சொல்லுங்கள்.
நாட்டோரே! நல்லோரே!
புயலுக்கு
யானை குதிரை என்று
எதை வேண்டுமானாலும்
பெயர் வையுங்கள்.
தென்னை என்று மட்டும்
பெயர் வைத்திடாதீர்கள்.
கொடுத்துக் கொடுத்து
நம் உயிர் வளர்க்கும்
தென்னைகள்
கொலைக்காரப்பெயர் தாங்கி
அவை இங்கே வரவேண்டாம்.

No comments: