26/11/2018 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளில் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். 
பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இப் பிறந்தநாள்நிகழ்வை தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பலரும் மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் நள்ளிரவு வேளையில் பிறந்த நாளை கேக் வெட்டி பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் கொண்டாடியுள்ளனர். 
இதே வேளை அவரின் இன்றைய பிறந்த நாளை முன்னிட்டு பிரபாகரனின் சிந்தனை எனக் குறிப்பிட்டு அவரின் பல சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் வகையில் பல்கலைக்கழகத்திற்குள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
மேலும் நாளை மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிப்பதற்குப் பல இடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற நிலையிலையே பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வும் கொண்டாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 








சிறுபான்மையின கட்சிகளை ஒன்றிணைத்த ஜனாதிபதிக்கு நன்றி - மனோ
26/11/2018 சிறுபான்மையினர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகள் அனைத்தும் இன, மத, மொழி பேதமின்றி ஓரணியாக திரண்டு ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன், இவ்வாறு ஒன்றிணைய வழிவகுத்த ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பு விகாரமகாதேவிப் பூங்காவில் 6 ஆவது நாளாகவும் தொடர்ந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
மேலும் ஜனநாயகம், நீதி, நேர்மை, நியாயம் மற்றும் மக்களாட்சிக்காக உயிரிரைக்கொடுக்கவும் தயாரகவுள்ளோம். தற்போது நாட்டிலே பின்கதவு வழியாக வந்து நீதிக்கு புறம்பான முறையில் ஆட்சி அதிகாரத்தை பிடித்துக்கொண்டுநானே தலைவர் என இருக்கின்றார். இத்தகைய நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 






மாவீரர் துயிலும் இல்ல சூழலில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிப்பு
27/11/2018 மாவீரர் நாளை ஒட்டி கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல சூழலில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் தமிழீழ மாவீரர் நாள் வட கிழக்கு மாகாணங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும் 
உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டு வருகிறது.


இந்நிலையில் இன்று காலை கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக முன்னாள் மா
காணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 
இதன்போது அப்பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், புலனாய்வாளர்கள், பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.  நன்றி வீரகேசரி 












மாவீரர் தினம்
27/11/2018 விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முதல்  முதல் மரணித்த மாவீரான லெப். சங்கர்( சத்தியநாதன்) நினைவாக நவம்பர் 27 திகதியை விடுதலைப்புலிகள்  மாவீரர் நாளாக 1989 ஆம் ஆண்டு பிரகடனம் செய்தனர். அன்று முதல்  நவம்பர் 27 தாயகத்திலும் புலம் பெயர் தேசத்தில் மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கிழக்குப் பல்கலைக் கழகம்
கார்த்திகை 27 மாவீரர் தினம் இன்று செவ்வாய்க்கிழமை கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
கிழக்குப் பல்கலைக் கழக கலை காலசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஈகைச் சுடர் ஏற்றபட்டு உயிர் நீத்த மாவீர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் இரத்த தானமும் நடைபெற்றது
கிளிநொச்சி 
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர்  துயிலுமில்லத்தில் 2018 மாவீரர் நாள் ஆயிக்கணக்கான பொது மக்கள் ஒன்று கூடி உணர்வெழுச்சியுடன் கண்ணீர் மல்க நடந்து முடிந்த விடுதலைப்போராட்டத்தில் மரணித்த  தங்களின் உறவுகளை நினைவு கூர்ந்தனர்.
பிற்பகல் மூன்று மணி முதல் மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் பொது மக்கள் கனகபுரம் துயிலுமில்லம் நோக்கி வருகைதர தொடங்கினார்கள். ஒவ்வொருவரும் அங்குள்ள மூவாயிரத்திற்கு மேற்பட்ட சுடர்களுக்கு முன்னாள் அமைதியாக நின்றிருக்க மாலை 6.05மணிக்கு மணியோசை எழுப்பட்டு  தொடர்ந்து  பொதுச் சுடரை லெப் கேணல் கில்மன், பிரிகேடியர் தீபன் ஆகியே மாவீரர்களின் தந்தையான வேலாயுதபிள்ளை  ஏற்றி வைக்க தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றி வகைப்பட்டது. 
அதனை தொடர்ந்து துயிலுமில்ல பாடலும் ஒலிபரப்பட்டது. இதில்  கலந்துகொண்ட உறவுகள் கண்ணீர் மலக்க உணர்வெழுச்சியுடன் தங்களின் உறவுகளை நினைவு கூர்ந்தனர்.மிகவும் அமைதியாக எவ்வித நெருக்கடிகளும் இன்றி 2018 மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்று முடிந்து . 
வவுணதீவு
கார்த்திகை 27 மாவீரர் தினம் வவுணதீவு, தாண்டியடி துயிலுமில்லம் அருகே உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் சமூக நல அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் மற்றும் மண்முனை மேற்கு பிரதேசசபை தவிசாளர் எஸ்.சண்முகராஜா, பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை இந் நிகழ்வு நடைபெற்ற வேளையில் இராணுவ புலனாய்வாளர்கள், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் அதிகம் காணப்பட்டனர்.
மன்னார்  
மன்னார் மாவட்ட மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் ஆட்காட்டி வெளி மாவீர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது மாலை 6 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.மூன்று மாவீரர்களின் தந்தையான கந்தையா வைரமுத்து என்பவரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள்   போராளிகள்,  அரசியல்வாதிகள் , மத தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மலர்தூவி, ஈகைச் சுடர் ஏற்றி  உணர்வு பூர்வமாக உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
 இம்முறை குறித்த மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு மாவீரர் தின நினைவேந்தல்கள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாகரை
மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை மாவீரர்களின் உறவுகளால் மாவீரர்களின் கல்லறையில் உணர்வு பூர்வமாக ஈகை சுடர் ஏற்றி நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவடி
மட்டக்களப்பு மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வு பூர்வமாக மாவீரர் நினைவு அனுஷ்டிக்கப்பட்டது இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சுடர் ஏற்றி அனுஷ்டித்தனர் 
வவுனியா
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் மாவீரர்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட திருக்கோவிலில் மாவீரர் உறுதியுரை கீதம் இசைக்க மாலை 6 மணி 05 நிமிடத்துக்கு மாதிரிக் கல்லறைகளுக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றலுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.
தமது உறவுகளை நினைத்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதுடன் மேலும் அங்கு அனைவரும் தமது உறவுகளை நினைத்து கண்ணீர் சிந்தி கதறி அழுவதையும் காணக்கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
 கிழக்கு பல்கலைக்கழகம்,  விபுலானந்த அழகிய கற்கை நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் மாவீரர் நினைவேந்தல்கள்
நன்றி வீரகேசரி 






அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நுழைந்தது ஐ.நா.
28/11/2018 நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் மரி யமஷிட்டா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அத்துடன் இலங்கை வந்துள்ள அவர் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஜனாதிபதி மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மரி யமஷிட்டா நேபாளம், ஜப்பான், குரோஷியா மற்றும் அர்மோனியா உட்பட பல நடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 








யாழ் சுவரொட்டிகளில் சபாநாயகர் : “எமக்கும் பெருமை நாட்டிற்கும் பெருமை”
28/11/2018 சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த சுவரொட்டிகள் சபாநாயகரின் புகைப்படத்தையும் “எமக்கும் பெருமை நாட்டிற்கும் பெருமை” என்ற வாசகங்களை தாங்கியுள்ளன.
பாராளுமன்றின் சம்பிரதாயங்கள் அதிகாரங்கள் மற்றும் மக்களின் அபிலாசைகளை துணிகரமாக பாதுகாத்ததுடன் நாட்டின் ஜனநாயகத்தை நிலைநிறுத்த அச்சமின்றி வீரத்துடன் கடமையாற்றிய மேன்மை தாங்கிய சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு நாட்டு மக்களின் ஆசிர்வாதங்கள் எனவும் குறித்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 







பாராளுமன்ற தேர்தலை நடத்தக் கோரி  கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட பேரணி 
28/11/2018 பாராளுமன்ற தேர்தலை நடத்துமாறு தெரிவித்து இன்று கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பேரணி இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி காக்கா கடை சந்தியிலிருந்து ஆரம்பித்து ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி  பஸ் நிலையம் வரை சென்றது. இதன்போது  பாராளுமன்ற தேர்தலை நடதுமாறும், ரணிலை வெளியேறுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினர். 
பேரணியில் வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் தர்மபால செனவிரத்தின உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் தர்மபால செனவிரத்தின உள்ளிட்டோர், பாராளுமன்ற தேர்தலை நடார்த்துமாறும் தெரிவித்தும், கரு ஜேயசூரியவின் செயற்பாடுகளைக் கண்டித்தும் கருத்துக்களைத் தெரிவித்தனர்.   நன்றி வீரகேசரி 








பொதுநலவாய அமைப்பு இலங்கைக்கு விடுத்துள்ள வலியுறுத்தல்
28/11/2018 நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலை குறித்து முக்கிய கவனம் செலுத்துவதுடன் அனைத்துக் கட்சிகளும் அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற சட்டதிட்டங்கள், நீதித்துறை என்பவற்றுக்கு அமைவாக, அவற்றுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் என பொதுநலவாய பாராளுமன்ற சம்மேளனம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் ஆகியன விசேட அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்றக் கூட்டத்தொடர்களின் போது ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் குறிப்பிட்டுள்ள பொதுநலவாய உபகுழுக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்திற்கு முரணான தலையீடுகளில் இருந்து விலகி அரசியலமைப்பிற்கு அமைவான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கடமைப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 







புதிய நாணயக் குற்றிகள் வெளியீடு
28/11/2018 புதிய  நாணயக் குற்றிகளை  வெளியீடும் நிகழ்வு இலங்கை மத்திய வங்கியில் பிரதமர் மஹிந்த ராஜமக்ஷ தலைமையில்  நேற்று இடம்பெற்றது.
அந்த வகையில்  01 ரூபா ,2 ரூபா ,5 ரூபா ,10 ரூபா நாணயக்குற்றிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியின் சமிச்சை படையணியின் 75 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கௌரவிக்கும் முகமாகவும் 75 ஆண்டு காலப்பகுதிக்கு மேலாக நாட்டுக்கு  ஆற்றிய பணிக்கு அங்கிகாரம் அளிக்கும் விதத்திலும் குறித்த நாணயக்குற்றிகளை வெளியிட்டுள்ளன.
பார்வை திறன் குறைபாடுடையவர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்நாணயக்குற்றிகள் டிசம்பர் 03 ஆம் திகதி பாவனைக்கு வரவுள்ளது.
முதல் நாணயங்களை மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி மஹிந்தவிடம் நேற்று (27)  கையளித்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 







முப்­ப­டை­களின் பிர­தானிக்கு விளக்கமறியல்!!!
28/11/2018முப்­ப­டை­களின் அலு­வ­லக பிர­தானி அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்னவை எதிர் வரும் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 








மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய புலனாய்வாளர் : நெகிழ்ச்சியில் தமிழர்கள்
28/11/2018 வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் புலனாய்வாளர் ஒருவர் கலந்து கொண்டு இன்னுயிர் நீத்த மாவீரர்களுக்கு மெழுகுதிரி கொழுத்தி அஞ்சலி செலுத்தியமை அங்கிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டவர்களைப் புகைப்படமெடுத்துக்கொண்டிருந்த புலனாய்வாளர் மாவீரர் உறுதியுரை கீதம் இசைக்க மக்களின் கண்ணீருடன் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தலைக் கண்டு உணர்வுப்பூர்வமாக தனது அஞ்சலியினை செலுத்தியமை காண முடிந்தது.  நன்றி வீரகேசரி 






 நிறைவேறியது வாக்கெடுப்பு ; ஒத்திவைக்கப்பட்டது பாராளுமன்றம்


29/11/2018 பாராளுமன்றத்தில் ரவி கருணாநாயக்கவினால் இன்று கொண்டுவரப்பட்ட பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 123 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 
இதேவேளை, பாராளுமன்றம் நாளை வெள்ளிக்கிழமை (30-11-2018) காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். 

இதேவேளை இன்றைய பாராளுமன்ற அமர்வில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சார்பில் எவரும் பங்கேற்கவில்லை என்பதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ மற்றும் அத்துரலிய ரத்தின தேரர் ஆகியோர் பாராளுமன்றில் விசேட உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 








யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல் ; 8 பேர் கொண்ட கும்பல் அடாவடி
29/11/2018 யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் -  வைமன் வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று  அதிகாலை நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் குறித்த  வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள் தீயில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் இரண்டும் சேதமாக்கப்பட்டுள்ளன.
8 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஒன்றே குறித்த தாக்குதலை மேற்கொண்டது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. 
ஆரியகுளம் சந்தியில் கராஜ் வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவரின் வீட்டிலேயே குறித்த  சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கராஜ் உரிமையாளர் நேற்று இரவு முச்சக்கர வண்டிகள் இரண்டை வீட்டின் முன் நிறுத்தியுள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில், பெரும் சத்தம் கேட்டுள்ளது. 
இந்நிலையில் வீட்டு உரிமையாளர் வெளியே வந்து பார்த்த போது 8 பேர் முகமூடியுடன் வீட்டின் முன்னாள் நின்றுள்ளனர். குறித்த  கும்பல் வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வாகனங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் தெரிவிக்கையில்,
”முச்சக்கரவண்டிகள் இரண்டும் தீ பற்றி எரிந்துள்ளன. இதேவேளை, மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் வாளால் வெட்டப்பட்டு சேதமாக்கப்பட்டதோடு வீட்டின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
நான் எவருடனும் எந்த பிரச்சினைளுக்கும் செல்வதில்லை. யார் இவ்வாறான சம்பவத்தை புரிந்தனெரென்றும் தெரியாது” என வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  நன்றி வீரசேகரி 








முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழை : மக்கள் பாதிப்பு

30/11/2018 முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழையால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாக என முல்லைத்தீவு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
துணுக்காய் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று உதவிகள் வழங்கப்பட்டன.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கில் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தம் ஏற்படும் போது எங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்ளவேண்டிய செயற்பாடுகளில் மக்கள் ஈடுபடவேண்டும். 
தற்காலிக வீடுகளில் இருக்கின்ற மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நிதிவழங்கல் செயற்பாடும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நிவாரண சேவைகள் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளது.
அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற நிதிகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்கள் ஓரளவு மீளக்கூடும் என்று நம்பிக்கை கொள்கின்றேன்' என்றும் அவர் தெரிவித்தார்.  நன்றி வீரசேகரி 








இலங்கை வரும் இரு இந்திய கப்பல்கள் 

30/11/2018 இந்தியக் கரையோர ரோந்துக் கப்பல்களான சி.ஜி.எஸ். சமர் மற்றும் அரய்மன் ஆகியன இலங்கை வரவுள்ளதாக  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
குறித்த இரு ரோந்துக் கப்பல்களும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து 7 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளன.
குறித்த இரு கப்பல்களும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை மாலைதீவில் இடம்பெற்ற இந்திய- இலங்கை-மாலைதீவு முத்தரப்பு ரோந்துப் பயிற்சியில் பங்குபற்றிய பின்னர் கொழும்பு வரவுள்ளன.
இலங்கையில் இரு கப்பல்களும் தரித்து நிற்கும் போது, காலிக்கும் விஜயம் செய்யவுள்ளன. இரண்டு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான செயற்படும் தன்மை என்பவற்றின் மட்டங்களை மேம்படுத்துவதையும் மற்றும் இலங்கையில் கடற்படை ரோந்தின் செயற்றிறனைக் கட்டியெழுப்புவதில் உதவுவதையும் இந்த விஜயம் இலக்காகக் கொண்டுள்ளது.
இதேவேளை, குறித்த விஜயத்தின் போது, இந்திய கரையோர ரோந்துக் கப்பல்கள் தேடுதல் மற்றும் மீட்டல், கப்பல் தேடுதல் நடைமுறை மற்றும் ஆவணப்படுத்துல், மாசுக் கட்டுப்பாடு ஆகிய விடயங்களில் பயிற்சிகளை மேற்கொள்ளும்.
மேலதிகமாக, ஒரு தொடரான தொழில் ரீதியான பரிமாற்றங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் என்பனவும் இரு நாட்டு கடற்படையினருக்குமிடையிலும் மற்றும் இலங்கைக் கரையோரக் காவல் படை வீரர்களுக்குமிடையிலும் கொழும்பு மற்றும் காலியில் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 











"பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை எமக்கில்லை" 

29/11/2018 பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை எனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சட்டவிரோத பாராளுமன்றத்தை நாம் புறக்கணிக்கின்றோம். சபாநாயகர் கருஜயசூரிய சட்டவிரோதமாக பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். 
எனவே தான் இன்றைய பாராளுன்ற அமர்வினையும் நாங்கள் புறக்கணித்தோம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழு  கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.   நன்றி வீரகேசரி 










இரு பொலிஸார் சுட்டுக்கொலை ; ஒருவர்  பொலிஸ் நிலையத்தில் சரண்

01/12/2018 மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று காலை கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார் 
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்வதற்கு பொலிஸார் இடையூறு வழங்கியதனால் பழிவாங்குவதற்காக இக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என கருதி விசாரணைகள் நடைபெற்று வருகின்றது .
நேற்று மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார் இவருடன் பணியாற்றியவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
 இவருடன் கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரும் பணியாரியதாக கூறி நேற்று அவரை கைது செய்வதற்காக கிளிநொச்சிப் பொலிஸ் விசேட குழு ஒன்று தேடுதல் மேற்கொண்டு வந்த நிலையில்  அவர் இன்று காலை  கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் 
சரணடைந்தவர் முன்னாள் போராளியான வட்டக்கச்சிப் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான இராசநாயகம் சர்வானந்தன் (வயது 48) என்பவர் என கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரது வாக்குமூலங்கள்  எடுக்கப்பட்டதன்  பின்னர் குற்றத்தடுப்பு பிரிவினரிடம்  ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது   நன்றி வீரகேசரி 











பொட்டர் உயிருடன் - கருணா பரபரப்பு தகவல்

01/12/2018 விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான்  இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
 ரிவிரவிற்கு  அவர் இதனை தெரிவித்துள்ளார்
மட்டக்களப்பில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காரணமாகயிருக்கலாம் என கருணா தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு மீண்டும் புத்துயுர் ஊட்டும் நடவடிக்கையிது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொட்டு அம்மான் நோர்வேயில் மறைந்து வாழ்கின்றார் என கருணா தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் புலனாய்வு பிரிவை செயலிழக்கச்செய்துள்ளதுடன்  தேசிய பாதுகாப்பை புறக்கணித்து பாதுகாப்பு படையினரிற்கு அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளது என கருணா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்குவது ஆச்சரியமளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள கருணா விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு நானும் உதவியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 











மஹிந்தவிற்கு பெரும்பான்மையில்லை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார் ஜனாதிபதி!!!

01/12/2018 “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாராளுமன்றில் பெரும்பான்மையில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். டிசம்பர் மாதம் 5ஆம் திகதி பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பிடம் ஆட்சியை ஒப்படைக்க தயாராக இருக்கிறேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான 13 கூட்டமைப்பினர் நேற்றிரவு 7 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது அலுவலகத்தில் சந்தித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இச் சந்திப்பில் தொடர்ந்து ஜனாதிபதி கூட்டமைப்பினரிடம்,
“மஹிந்தவை பிரதமராக நியமிக்கும் போது அது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் கலந்தாலோசிக்காமை தவறு என்பதை நான் உணர்கிறேன்.
ஆட்சி மாற்றத்தின் பின் கடந்த 14ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் புதிய அரசிற்கு எதிராக பாராளுமன்றில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சில தீர்மானங்கள் குரல் பதிவு வாக்கெடுப்பு மூலமும் சில தீர்மானங்கள் இலத்திரனியல் வாக்கெடுப்பு மூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
எனினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு குரல் பதிவு வாக்கெடுப்பு மூலம் தான் நடந்துள்ளது.
ஒரு நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் இந்த விடயத்தில் குரல் பதிவு வாக்கெடுப்பு முறையை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
எனவே எதிர் வரும் 5ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது பெயர் கூறி அல்லது இலத்திரனியல் வாக்கெடுப்பை நடாத்தி அதில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கும் தரப்பிடம் ஆட்சியை ஒப்படைக்க நான் தயாராகவுள்ளேன்.
பெரும்பான்மையை பெறும் தரப்பு பிரதமருக்கான பெயரை முன்மொழிகின்ற போது அதனை நான் ஏற்றுக்கொள்வேன்.
இவ் வாக்கெடுப்பின் போது ஒரு வேளை பெரும்பான்மை பலத்தை ஐக்கிய தேசிய முன்னணி பெற்றால் அத் தரப்பினர் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை பரிந்துரை செய்தால் அதனை நான் ஏற்க தயாராக இல்லை. ஐக்கிய தேசிய முன்னணியில் வேறு  பெயர்களை பரிந்துரை செய்தால் அதனை நான் ஏற்பேன்.
ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் கடந்த 3 வருடங்களாக இருந்த போதும் அவருடன் சேர்ந்து பணியாற்றியுள்ளேன்.
ஆனால் அவர் என்னை மதிக்கவில்லை, அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஊழல் மோசடி விடயங்களிலும் அவர் தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுத்தார். அதனால் தான் அவரை பிரதமர் பதவியிலிருந்து நான் அகற்றினேன். இந் நிலையில் மீண்டும் அவரை பிரதமர் பதவியில் நான் எவ்வாறு அமர்த்துவது? என கேள்வியெழுப்பியுள்ளார்.
அதற்கு கூட்டமைப்பினர்,
“ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்தப் போவதில்லை என்று நீங்கள் எடுத்திருக்கும் தீர்மானத்தை நாம் ஏற்றுக்கொள்ளவே மாட்டோம். ஏனெனில்  உங்களை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தியது மட்டுமன்றி உங்கள் வெற்றிக்கு அயராது பாடுபட்டவர்களில் பெரும் பங்கு வகிப்பவர்கள் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி உங்களுக்காக அரும்பாடு பட்டவர்களுக்கு நீங்கள் எந்த வித அறிவித்தலும் விடுக்காமல் நேரில் கலந்துரையாடாமல் அரசியலமைப்பிற்கு முரணாக மக்கள் நிராகரித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபனக்ஷவை பிரதமராக நியமித்தீர்கள்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் உங்களை எதிர்த்து நின்று போட்டியிட்டு படு தோல்வியடைந்தவரை புதிய பிரதமராக எவ்வாறு நாம் ஏற்பது?
மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் மக்கள் உட்பட நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் உங்களுக்கு வாக்களித்து உங்களை ஜனாதிபதியாக்கினார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
புதிய பிரதமர் மஹிந்த தலைமையிலான அரசுக்கு எதிராக பாராளுமன்றில் இது வரை 5 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மஹிந்த மீதான நம்பிக்கையில்லா பிரேரணை மீது மீண்டும் வாக்கெடுப்பு நடாத்த நாம் தயாராகவுள்ளோம்.
உங்கள் வேண்டுகோளின் படி மீண்டும் வெக்கெடுப்பை பெயர் கூறி அல்லது இலத்திரனியல் முறையில் நடாத்துவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய முன்னணியும் மக்கள் விடுதலை முன்னணியம் தயாராகவுள்ளன.
ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெறவே நாம் வாக்களிப்போம். இதனைக் கூட்டமைப்பினராகிய நாம் எழுத்து மூலம் உங்களுக்கு அறிவித்துள்ளோம்.
ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்தில் அவர்கள் பிரதமர் பதவிக்கு முக்மொழிகின்றவரையும் ஆதரிக்க நாம் தயாராகவுள்ளோம்.
எனவே ஐக்கிய தேசிய முன்னணி பிரதமராக முன் மொழிகின்றவரை நீங்கள் பிரதமராக நியமிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
இறுதியாக 5ஆம் திகதி குறிப்பிட்டதைப் போல வாக்கெடுப்பை நடாத்துங்கள் அதன் பின்னர் தீர்மானிக்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 











வவுனியா போராட்ட களத்திற்கு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் வருகை


01/12/2018 வவுனியாவில் கடந்த 648 நாட்களாக தொடர்ந்து சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல்போன உறவுகளின் போராட்ட களத்திற்கு இன்று பிற்பகல் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் விஜயம் மேற்கொண்டு காணாமல்போன உறவுகளின் போராட்டம் தொடர்பாகவும் அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.



ஜரோப்பிய ஒன்றியத்திலுள்ள ஜேர்மன் நாட்டு ஆண் ,பெண் இரு ஊடகவியலாளர்களே இன்றைய தினம் வவுனியா போராட்ட களத்திற்குச் சென்றுள்ளனர். கடந்த ஒருவருடத்திற்கு மேலாக தமது போராட்டங்களின் போது வெளிநாட்டுத்தலையீட்டையே கோரி போராட்டம் மேற்கொண்டு வந்த உறவுகளைச்சந்தித்து அவர்களின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட தொடக்கம் இன்றுவரையிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் புகைப்படம் குரல் என்பன ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
தற்போதைய அரசியல் மாற்றம் புதிய பிரதமர் வருகை என்பனவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முதன்மை சந்தேக நபரான பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தார். 
இந்நிலையில் அது தொடர்பாகவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிடம் கேள்வி எழுப்பிய வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் இக்கைது வெளிநாட்டு தலையீட்டை தடுக்கும் நடவடிக்கையே என்று தமிழர் தயாகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் கே. ராஜ்குமார் மேலும் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 









யாழிலும் மஹிந்தவுக்கு ஆதரவுப் பேரணி

01/12/2018 யாழ்ப்பாணத்தில்  பிரதமர்   மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக  பேரணி  ஒன்று இன்று(1) மாலை  முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணியானது வின்சன் திரையரங்கு வீதியில் இருந்து ஆரம்பமாகி கஸ்தூரியார் வீதியூடாக சென்று  யாழ். மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக நிறைவடைந்தது.
இதன் போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் மக்கள் ஆணைக்கு அனுமதி என்னும் தொனிப்பொருளில்  பல்வேறு கருத்துக்களை ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
நன்றி வீரகேசரி












வவுணதீவு பொலிஸார் கொலை- வெளியாகின புதிய தகவல்கள்

02/12/2018 வவுணதீவில் பொலிஸார் கொலையுடன் தொடர்புபட்டவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வு பிரிவை  சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இவர் மாவீர்தின நிகழ்வுகளிற்காக மட்டக்களப்பிற்கு சென்றிருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்ஃ
மட்டக்களப்பில் காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வட்டக்கச்சியில் முன்னாள் போராளியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராஜநாயகம் சர்வானந்தம்  என்ற 48 வயது முன்னாள் போரளியொருவர் இந்த சம்பவம் தொடர்பில் வட்டக்கச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்
கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் போராளி விசாரணைகளிற்காக மட்டக்களப்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவர் பிரபாகரன் அஜந்தன் என பெயர்கள் வெளியாகியுள்ளன.
இவர்களில் பிரபாகரன் அம்பாறை தம்புலுவிலை சேர்ந்தவர்; என தகவல்கள் வெளியாகியுள்ளன
தாண்டியடியில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பிலேயே இந்த கொலைகள் இடம்பெற்றன என காவல்துறையினரை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
விடுதலைப்புலிகளின் கோட்டையாக விளங்கிய தாண்டியடி என்ற பகுதியில் விசேட அதிரடி படையினரின் முகாம் அமைந்திருந்ததால் பொது மக்கள் மாவீரர் நாளை கொண்டாட முடியாத நிலைகாணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தேசத்தின் வேர்கள் என்ற அமைப்பு இந்த வருட மாவீரர் தினத்தை ஏற்பாடு செய்தது என தெரிவித்துள்ள காவல்துறையினர்  கைதுசெய்யப்பட்டுள்ள பிரபாகரன் இந்த அமைப்பின் தலைவர் எனவும் தெரிவித்துள்ளனர்.
புலம்பெயர் தமிழர்கள் மாவீரர் நாள் நினைவுகளிற்கான நிதியை வழங்கினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் மாவீரர் தின நிகழ்வுகள் முடிவடைந்த பின்னர் காவல்துறையினருக்கும்  நிகழ்வை ஏற்பாடு செய்த சிலரிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்
இதேவேளை வட்டக்கச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் நவம்பர் 26 ம் திகதி தாண்டியடிக்கு சென்று மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் தங்கியிருந்தார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்  நன்றி வீரகேசரி 








இராஜினாமா செய்யப்போவதில்லை- மகிந்த

02/12/2018 தனது பதவியை இராஜினாமா செய்யப்போவதில்லை என ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை அமைக்கும் எண்ணத்தை கைவிடப்போவதுமில்லை  எனது பதவியை இராஜினாமா செய்யப்போவதுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தை கலைத்தமை தொடர்பாக நீதிமன்றம் வெளியிடும் அறிவிப்பை பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 









ரணிலுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன்- மீண்டும் சிறிசேன

02/12/2018 நாடு தற்போது எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடிகளிற்கு டிசம்பர் 31 ம் திகதிக்குள்  தீர்வை காணமுடியாவிட்டால் பொதுத்தேர்தலிற்கு செல்வதே ஒரே வழி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
சிலோன் டுடேயிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
பொதுத்தேர்தலிற்கு செல்வதே உரிய தீர்வாக அமையமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் இடம்பெற்றால் மக்கள் கடந்தகாலங்களில் இடம்பெற்றவைகள் மீள இடம்பெறாத நிலையை ஏற்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ள சிறிசேன மக்கள் தங்கள் வாக்களி;ப்பின் மூலம் ஊழல்வாதிகள் மீண்டும் தெரிவு செய்யப்படாத நிலையை உறுதி செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றவேண்டிய தேவை உருவானால் நான் அவர்களுடன் எவ்வாறு இணைந்து பணியாற்றுவது என்பது குறித்து ஆராய்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் முன்னரும் தெரிவித்திருக்கின்றேன், தற்போதும் தெரிவிக்கின்றேன், எதிர்காலத்திலும் இதனையே தெரிவிப்பேன் - நான் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காண்பிப்பதால் ஒருவர் பிரதமராகமுடியும் என அரசமைப்பில் எங்கும் தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள சிறிசேன ஜனாதிபதியுடன் விருப்பத்துடனேயே ஒருவர் பிரதமராக முடியும் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.
கருஜெயசூரியவும் சஜித் பிரேமதாசவும் என்னை நம்பாததால் பிரதமர் பதவியை நிராகரிக்கவில்லை ரணில் குறித்த அச்சத்தின் காரணமாகவே நிராகரித்தனர் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை கலைக்கும் முடிவை கைவிடுவது குறித்து நான் சிந்திக்கவில்லை எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 









சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் உடல்  நல்லடக்கம் 

02/12/2018 மட்டக்களப்பு வவுணதீவு காவற் சாவடியில் கடந்த 30 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஸ் தினேஸின் இறுதிச்சடங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநரின் பிரசன்னத்துடனும் ஜனாதிபதி, பொலிஸ்  மா அதிபர் ஆகியோரின் இரங்கலுரையுடனும் பொலிஸ் மரியாதையுடனும் அவரது சொந்த ஊரான பெரியநீலாவணை பொது மயானத்தில் இடம்பெற்றது.
குறித்த இறுதிசடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள்  கலந்து கொண்டனர்.
அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட பூதவுடலை பொது மயானத்திற்கருகில் வைத்து பொலிஸார் பொறுப்பேற்றுக் கொண்டு பூரண பொலிஸ் மரியாதையுடன்  39 துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு உடல் நல்லடக்கம்  செய்யப்பட்டது.
இறுதிச்  சடங்கிற்கு கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ர பிரதிப் பொலிஸ் மா அதிபர் கப்பில ஜயசேக்கர அம்பாரை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதசிங்ஹ அம்பாரை பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜேசேக்கர உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.    
இதன் போது  ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவினதும் பொலிஸ் மா அதிபரினதும் இரங்கலுரைகள் வாசிக்கப்பட்டன. 
நன்றி வீரகேசரி










பொலிஸ் உத்தியோகத்தரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை

02/12/2018 மட்டக்களப்பு வவுண தீவு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த வேளையில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் நிரோஷன் இந்திக்க பிரசன்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன இறுதி மரியாதை செலுத்தினார்.
பூதவுடல் வைக்கப்பட்டுள்ள காலி உடுகம பிரதேசத்திலுள்ள அவரது வீட்டிற்கு இன்று (02) முற்பகல் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி உட்பட குடும்ப உறவினர்களுக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி