திருப்பம் பல தந்திடட்டும் ! - [ மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா ]             தீபாவளித் தினத்தில்  தித்திப்பு  உண்ணவேண்டும்  
                 கோபமெனும்  குணமகற்றி  கொண்டாடி  மகிழவேண்டும் 
            பாவமென நினைக்கின்ற செயலனைத்தும் துரத்தவேண்டும் 
                 பக்குவமாய் ஒன்றுகூடி பாங்காக மகிழவேண்டும் 

            உள்ளமதில் உண்மைதனை  ஊற்றெடுக்கச்  செய்யவேண்டும் 
                  கள்ளமுடை  எண்ணமதை களைந்தெறியச் செய்யவேண்டும்
            நல்லவர்கள் ஆசிபெற்று நம்வாழ்வு சிறக்கவேண்டும் 
                   நமக்குவாய்க்கும் தீபாவளி நல்வெளிச்சம் காட்டிடட்டும் 

            ஆணவத்தைப் போக்குவென ஆண்டவனை வேண்டிநிற்போம் 
                 அறஞ்செய்யும் எண்ணமதை அகம்நிறைய  வேண்டிடுவோம் 
             அன்னைதந்தை மனம்வருந்தா அனைவருமே நடந்திடுவோம் 
                  அனைவருக்கும் தீபாவளி அமைந்திடுமே அற்புதமாய் 

            ஆதரவு  அற்றோரை  அரவணைத்து  உதவிடுவோம்
                அனாதையெனும் கருத்ததனை அழித்துவிட எண்ணிடுவோம் 
            போதையுடன் உலவுவதை பொறுக்காமல் பொங்கிடுவோம் 
                 நல்பாதையிலே செல்வதற்கு நம்மனதைத் திருப்பிடுவோம் 

            புத்தாடை  உடுத்திடுவோம்  புதுவெடிகள்  வெடித்திடுவோம் 
                 எத்திக்கு  இருந்தாலும்  எல்லோரும்  மகிழ்ந்திடுவோம் 
            தித்திக்கும்  தீபாவளி  திருப்பம்பல  தந்திடட்டும் 
                   அர்த்தமுள்ள  நல்லவற்றை ஆற்றிநின்று  அகமகிழ்வோம் 
                   
                  
            
அவுஸ்திரேலியா தமிழ்முரசு குடும்பத்தினருக்கு அகமார்ந்த
      தீபாவளி நல்வாழ்த்துகள் !

  நலமும் வளமும் பெருகட்டும் 
  நன்மைகள் வந்து இணையட்டும் 
image1.jpeg
          
            
                
              No comments: