உலகச் செய்திகள்


முன்னாள் பிரதமருக்கு 7 ஆண்டுகள் சிறை

இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்து நொருங்குவதற்கு என்ன காரணம்- மர்மம் நீடிக்கின்றது

அன்புக் காதலனை கரம்பிடிக்க அரச குடும்பத்தையே உதறித்தள்ளிய இளவரசி..!: ஏராளமானோரின் ஆசியுடன் நடந்தேறிய திருமணம்

பாகிஸ்தானை விட்டு வெளியேறுகிறார் அசியா


முன்னாள் பிரதமருக்கு 7 ஆண்டுகள் சிறை


29/10/2018 பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவிற்கு ஊழல் குற்றச்சாட்டிற்காக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கலிதா ஜியா பிரதமராக இருந்த காலத்தில் தனது பெயரில் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக நன்கொடையாக  வெளிநாடுகளிலிருந்து பல இலட்சம் அமெரிக்க டொலர்களை முறை கேடாக பெற்றார் என குற்றச்சாட்டு எழுந்தது.
இக் குற்றச்சாட்டு தொடர்பாக கலிதா ஜியா மற்றும் அவரது மகன் தாரிக் ரஹ்மான் உதவியாளர்கள் என பலர் மீது டாக்காவின் சிறப்பு நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையில் கலிதா ஜியா முறைகேடாக 2.5 இலட்சம் அமெரிக்க டொலர்களை பெற்றமை நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த பெப்ரவவரி மாதம் அவருக்கு 5 ஆண்டுகளும் அவரின் மகன் உட்பட உதவியாளர் ஐவருக்கு தலா 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கலிதா ஜியாவிற்கும் அவரது ஆட்சியின் போது செயலாளராக பணியாற்றிய ஹாரிஸ் சவுத்தரி, சவுத்திரியின் உதவியாளர் ஜியாவுல் இஸ்லாம் முன்னா மற்றும் டாக்கா நகர முன்னாள் மேயர் சாதிக் உசேன் கோக்கா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால் மேல் குறித்த அனைவருக்கும் தலா 7 வருடங்கன் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கலிதா ஜியா மீது மேலும் 34 வழக்குகள் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 








இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்து நொருங்குவதற்கு என்ன காரணம்- மர்மம் நீடிக்கின்றது

30/10/2018 இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் கடலில் விழுந்து நொருங்கிய லயன் எயர் விமானத்தில் பயணம் செய்த 189 பேரினதும் உடல்களை  மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்ற அதேவேளை விமானவிபத்திற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது
இந்தோனேசியாவின் தலைநகரிலிருந்து  பங்காவில் உள்ள  பங்கல் பினாங்கிற்கு புறப்பட்ட விமானம்  சிறிது நேரத்தின் பின்னர் விமானநிலையத்திற்கு திரும்புவதற்கான அழைப்பை விடுத்துள்ளது.
எனினும் அவசர நிலை குறித்து எந்த சமிக்ஞையும் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராடர் தரவுகள் விமானம் தனது பயணத்திலிருந்து மீண்டும்  ஜகார்த்தா நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளதை  காண்பித்துள்ளன.
எனினும் சிறிது நேரத்தின் பின்னர் விமான நிலைய கட்டுப்பாட்டறை விமானத்துடனான தொடர்பை இழந்துள்ளது.
விமானத்திலிருந்து அவசரநிலை குறித்து சமிக்ஞைகள் எதுவும் வெளியாகதமை சிந்திக்கவேண்டிய விடயம் என அமெரிக்க விமானச்சேவையை சேர்ந்த முன்னாள் பாதுகாப்பு உத்தியோகத்தார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அவசரநிலை குறித்து எதனையும் தெரிவிக்காமல் நாங்கள் திரும்பி வருகின்றோம்  என மாத்திரம் தெரிவித்தமை  ஆச்சரியமளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை விமானம் மிக வேகமாக தரையை நோக்கி சென்றுள்ளது இதுவும் வித்தியாசமான விடயம் எனஅந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
முதல்நாளிரவு இந்தோனேசிய தலைநகரிற்கு பயணம் செய்தவேளை  விமானத்தில் கோளாறு ஏற்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் பொறியியலாளர்கள் விமானத்தை ஆராய்ந்து அதனை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.
விமானம் அவசரநிலையை எதிர்கொள்கின்றது என எங்களிற்கு சமிக்ஞை வந்திருந்தால் நாங்கள் விமானத்தை எங்கு பாதுகாப்பாக தரையிறக்கலாம் என தெரிவித்திருப்போம் என இந்தோனேசிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
விமானம் விபத்திற்குள்ளானமைக்கு காலநிலை காரணமாகயிருக்காது என தெரிவித்துள்ள அதிகாரியொருவர் விமானம் அவசரமான ஜகார்த்தாவிற்கு திரும்பவில்லை, இதன் காரணமாக திடீர் என ஏதோ நடந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.  நன்றி வீரகேசரி 










அன்புக் காதலனை கரம்பிடிக்க அரச குடும்பத்தையே உதறித்தள்ளிய இளவரசி..!: ஏராளமானோரின் ஆசியுடன் நடந்தேறிய திருமணம்


01/11/2018 ஜப்பான் இளவரசியான அயாகோ. ஜப்பான் பேரரசர் அகிடோவின் உறவினரான டகாமாடோவின் மூன்றாவது மகளான அயாகோ, நிப்பான் யூசென் கப்பல் நிறுவனத்தில் பணிபுரியும் கேய் மோரியா என்பவரை காதலித்தார்.
ஜப்பான் அரச குடும்பத்தின் விதிமுறைகளின்படி, சாமானியக் குடிமகனைத் திருமணம் செய்துகொள்ள இளவரசிகள் விரும்பினால் அவர்கள் அரச குடும்பத்திலிருந்து வெளியேறியாக வேண்டும்.
இந்நிலையில், தன் காதலில் உறுதியாக நின்ற அயாகோ, விதிமுறையைப் பின்பற்றி அரச குடும்பத்திலிருந்து வெளியேறி, தன் காதலரை கரம்பிடித்தார்.
மேலும், டோக்கியோவில் உள்ள மெய்ஜி புனிதத்தலத்தில் திங்கள் கிழமை நடந்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளமையும் குறிப்பிடதக்கது.  நன்றி வீரகேசரி 













பாகிஸ்தானை விட்டு வெளியேறுகிறார் அசியா


02/11/2018 மத அவமதிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட அசியா பீபி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளார். 
பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய அசிய அந் நாட்டின் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். தனது அயல் வீட்டாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது முகமது நபியை இழிவாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு எதிராக மத அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மேற்படி வழக்கை விசாரத்தி நீதிமன்றம் அசிய பீபிக்கு மரண தண்டனை விதித்தது. எனினும் மேன்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் அசியாவை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கண்டித்து நேற்று முதல் பாகிஸ்தானின், ராவல்பிண்டி உள்ளிட்ட இடங்களில் அசியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்போது அசியாவைப் பொது வெளியில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மற்றொரு பக்கம்  பாகிஸ்தானில் அரசியலைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அப்போது அசியா போன்ற அப்பாவிகள் பாதிக்கப்படமாட்டர்கள் என சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்தும் வருகின்றனர்.
இந் நிலையிலேயே வன்முறையாளர்களினால் பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அசியாவின் சகோதரர் ஜேம்ஸ்  கூறும்போது, 
எனது சகோதரிக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை. இந்த நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர அசியாவுக்கு வேறு வழி இல்லை. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அசியாவுக்கு அடைக்கலம் தருவதாக தெரிவித்துள்ளன. அசியாவின் கணவர் அவர்களது குழந்தைகளுடன் பிரித்தானியாவிலிருந்து பாகிஸ்தான் வந்திருக்கிறார். அசியாவின் விடுதலைக்காக அவர்கள் காத்திருக்கின்றனர் என்றார்.
இந் நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் அசியாவின் விடுதலைக்கு எதிராக மதவாத அமைப்புக்களும், கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளதுடன், இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 




No comments: