கண்ணீரின் வெப்பம் சுடும் "96" என்னும் அழகிய திரைப்படம்.. (திரைவிமர்சனம்) வித்யாசாகர்!

Trisha and Vijay Sethupathi in 96

னசெல்லாம் மழையில் நனைந்ததைப்போல கண்ணீரில் நனைந்து காதலின் குமுறல்களுள் தவித்துப்போகிறது 96 திரைப்படம் பார்க்கையில். கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பவர்கள் மனதை அதிகம் பார்ப்பதில்லை, மனதைப் பார்ப்பவர்களால் அந்த நாட்களையும் அத்தனை எளிதில் மறந்துவிட முடிவதில்லை. காதல் என்பவர்களுக்கு காதலை மறுப்பவர்களுக்கும் காதலை எதிர்ப்பவர்களுக்கும் இருப்பது காமம் பற்றிய பயம், காதலிப்பவருக்கு மட்டும் தான் அது காதல். காதல் எனில் அன்பு. அன்பு எனில் நினைவின் படிமங்களை சுமந்துக்கொண்டும் உயிருள்ளவரை வாழ்ந்துவிடக் கூடிய எதிர்பார்ப்பிலா அன்பு. தொட வேண்டியதில்லை. தோளில் தாங்கி கொள்ள அவசியம் இல்லை. வெறுமனே மனதில் சுமந்துக் கொள்ளும் அன்பு அது. அந்த அன்பை உணர்வதற்கு இந்த 96  போன்ற படங்களும், விஜய் சேதுபதி திரிஷா மாதிரியான நடிகர்களும் தேவைப்படுகிறார்கள் என்றெண்ணுகிறது மனசு இப்படத்தைக் கண்டுவந்ததும்.


இப்படத்தில் வரும் ராமகிருஷ்ணன் ஜானகி தேவியை விட நிறைய பேருக்கு, அந்த பத்தாங்கிளாஸ் ஜானுவையும் ராமையும் மறந்தே போகாது. திரயரங்கு முழுதும் எல்லோருக்குமே தெரிந்தது ஜானு ராம் என்பதை விட அவரவரின் மனசாட்சியும் அவரவரது முகங்களும் அந்த பத்தாங்கிளாஸ் நினைவுகளும் தான்என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. படம் முழுக்க மனசெல்லாம் அவளின் நினைவுகளால் கருகி கருகி ஜென்மம் தொலைந்துபோன ஒரு உணர்வோடுதான் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திரையரங்கில் அமர்ந்திருந்தனர் என்பதை உடன் அமர்ந்திருந்த நம் எல்லோராலும் உணரமுடிந்திருக்கும்.


கொஞ்சம் இடுப்பை குலுக்கும் பாடலோ, மேலே உடம்பு தெரிய அசையும் ஆட்டமோ நெஞ்சில் ஆசையை மூட்டும் வெப்பமோ ஒன்றுமே இல்லாமல் எனது பரிசுத்த அவளை மட்டும் அவளாகவே காட்ட முடிந்தவொரு கண்ணியம் மிக்க திரைப்படம் இது 96. காதல் என்றாலே, இப்படி காட்டுங்கடா, காதலை இவ்வளவு மனசு கூசாமல் பார்க்க வைய்யுங்கடா, காதல் எனில் உள்ளே நெருப்பெனச் சுடுமொரு கற்பு இயல்பில் இருவருக்குமே உண்டென்று அழுத்தமா சொல்லுங்கடா என்பதைப் போல அத்தனை ஒரு வள்ளுவம் பொதிந்த காதலை காட்டிய கதையாசிரியருக்கும் இயக்குனருக்கும் கைகூப்பும் நன்றி. 


டைரியில் ரோசாப்பூ, சட்டையில் பழைய இங்கு துளிகள், உள்ளே என்றோ எழுதிய கவிதை என்பதிலிருந்து, கிணற்றுக்குள் கால் போட்டு அமர்வது, இரவும் பகலும் அவளின் ஒற்றை நினைவால் தனிமைக்குள் மௌனத்தால் அழுவது வரை என்னை நானாகவே சற்று திரும்பிப் பார்த்துக் கொண்டதைப்போல் இருந்தது எனக்கு இப்படம் பார்க்கும் நேரம்.


ஒரு காட்சியில், நாயகி, என்னை வந்து பார்க்கவே இல்லையே ராம் என்கிறாள், உடனே அவன், நான் தான் வந்தேனே உன்னை கேட்டேனே, உனக்கு அது தெரியாத என்கிறான். இல்லையே, தெரியாதே, எப்போ வந்தாய் என்றதும், அவன் நடந்ததைச் சொல்கிறான். சொல்லி முடிந்ததும், அவள் ஓடுகிறாள், அறைக்குள் ஓடி கதவை அடைத்துக்கொண்டு உள்ளே சென்று கதறுகிறாள், நாயகன் உள்ளேநுழைந்து அவள்முன்னே நின்று அழாதே என்று கெஞ்சுகிறான். அவள் அவனின் மார்மீது சாய்ந்து மன்னித்துக்கொள் ராம் எனக்கு நீ வந்தது தெரியாது ராம் என்று அழுகிறாள், இருவரும் உருகும் அந்த காட்சி ஒரு அழகிய ஐந்து நட்ச்சத்திர ஓட்டலின் கழிவறைக்குள் நடக்கிறது. நமக்கு மனசெல்லாம் ஒரு பத்திருபது வருடத்திற்கு முன் தானே நகர்ந்துபோய் தனது காதலியையும் காதலனையும் தேடி அலையத்துவங்கியது.


முதலில் அவர்கள், சந்திப்பதும், ஆசிரியை அட்டெண்டன்ஸ் எடுப்பதும், அவள் எழுந்து நின்று ஒவ்வொரு முறியும்ம் பல திரைப் பாடல்களை பாடுவதுமெல்லாம் படத்திற்கு பலம் சேர்ப்பது என்றாலும், அவன் அடிக்கடி கேட்க்கும் யமுனை ஆற்றிலே பாடலை பாடும் நேரம் விஜய் சேதுபதிக்கு என்ன செய்வதென்றே தெரியமுடியாத ஒரு கதைச் சூழலை அமைத்து, விஜய் சேதுபதி இருட்டில் ஓடி விளக்கு தேடி மொத்த பொருட்களையும் கீழே தள்ளி உடைத்து பிறகு கடைசியாய் ஒரு மின் விளக்கை கொண்டு எடுத்துக்கொண்டு வந்து இருட்டில் அவள் பாடுகையில் அவளுடைய முகத்தின் முன் வைக்க சட்டென வெட்டுண்ட மின்விளக்கு எரிகிறது, பாடலை நிறுத்துகிறாள் அவள், மனசு திறக்கிறது.. அவன் மனசும் ஆர்ப்பரிக்கிறது.. நமக்கெல்லாம் அங்கிருந்து அந்தப் பாடலை மீண்டும் பாடவோ ஒருமுறை அவள் பாடி கேட்கவோ தோன்றுகிறது. 


ஒரு கலை என்பதன் சிறப்பு இது தான்; சமகாலத்தை தாங்கி நிற்பது, இருப்பதை இருப்பதாக பதிவுசெய்வது, அதன் தன்மையை கெடாமல் படைப்பை உருவாக்குவது போன்றதாகும். அந்த கலையின் இயல்பில் கண்ணியத்தை புகுத்துவதும், மிக அழகிய உணர்வுள்ள மனிதர்களை காண்பித்து அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு பல அறிய குணங்களை பண்புகளைக் காண்பிக்க முயல்வதுமே திரைக்கலையின் பொக்கிஷத் தன்மையை கையாண்டதற்கு சான்றாகிறது. அவ்விதத்தில் இந்த 96 திரைப்படம் மிக அழகிய மனசுல மனிதர்களை ஈரம் குறையாமல் காட்டுகிறது.


பல காட்சிகள் இரசனை மிக்கவை, பல மனிதர்களின் சந்திப்பு இப்படத்தின் வரப்பிரசாதம்,  படத்தில் வந்து செல்லும் ஜனகராஜ், தாடியை மழித்து பள்ளிப்பருவ நாடுகளை தான் பார்த்து வளர்ந்த சின்னப்பையனுக்கு மீண்டும் தர முயலும் பழைய நடிகர் அண்ணன், ராம் மற்றும் ஜானுவின் நண்பர்கள் வளர்ந்துவிட்டதாக காட்டும் பல நடிகர்கள் இப்படத்தில் ஒருசில காட்சிகளில் வந்துசென்றாலும் மனதிற்குள் நீங்காத இடத்தை பிடித்துக் கொள்கின்றனர். 


திரிஷா கடைசி காட்சியில்  ராமை விட்டுச் செல்ல இயலாமல், தவிப்பதும், சற்று இரு வந்துவிடுகிறேன் எனச் சென்று அவன் தனக்குமான ஒரு விமான டிக்கெட் வாங்கி வந்து வா உன்னை விமானம் ஏறும் தளத்திற்கு உள்ளேவரை வந்து விட்டுவருகிறேன் என சேதுபதி சொல்லி திருச்சிக்கு ஒரு பயனச் சீட்டையும் எடுத்துக்கொண்டு வருவதும், ஒரு இரவு முழுதும் இருவரும் ஒன்றாகவே இருந்து சற்றும் கசக்காத காதலை வெறும் கண்ணீரில் பொத்தி பொத்தி பாதுகாத்துக்கொண்டு கண்ணித்தின் எடை குறையாமல் இருவரும் விடைகொள்வதும், இறுதி காட்சியில் ஜானு பார்க்கும் கண்களை உயிர் தீர மீண்டும் அவன் பார்க்க, அப்படி பார்க்காதே ராம் என அவனுடைய கண்களின் மீது கைவைத்து அவள் அழுவதுமெல்லாம் உள்ளே ஒரு இடியை இறக்கி நெஞ்சில் ஈட்டிகளால் குத்தும் ரணத்தோடு ஒரு வலி வரவைக்கும் காட்சிகளாகவே அமைகிறது. உண்மையில் அந்த வலியை எத்தனைப் பேர் உணர்ந்தீர்களோ தெரியாது, அத்தனைப் பேருமே தனது காதலை கண்ணீரோடு கரைத்துக்கொண்டும் முந்தானைக்குள்ளும் கைகுட்டைக்குள்ளும் ஒரு சிவந்த கண்களின் பாரத்திற்குள்ளும் மறைத்துக்கொண்டும்தான் வெளியேறினார் என்பதே உண்மை.


ஒரு அழகி எனும் திரைப்படம் வந்தது, அப்போதென்னவோ அதுதான் கடைசி காதல் பற்றிய அரிய திரைப்படம் என்று எண்ணியிருந்தோம். பிறகு ஒரு ஆட்டோகிராப் வந்தது, அப்போது அது தான் காதலின் தீரா வலியின் படம் என்று எண்ணியிருந்தோம், இப்போது 96 வந்திருக்கிறது, இனி இதுவும் கடைசியில்லை, இதைவிடவும் நம்மால் ஒரு நல்ல திரைப்படத்தை தந்துவிட இயலுமெனும் நம்பிக்கையை இந்த 96  திரைப்படம் தருகிறது. 


நம்மில் பலர் இப்படித்தான் இருக்கிறோம். எத்தனையோ பேரின் காதல் மனசுக்குள்ளேயே அழுந்த போட்ட கல்போல கனத்தே இருக்கிறியாது. ஒரு காட்சியில், திரிசாவைப் பார்த்து விஜய் சேதுபதி "நீ எப்படி இருக்கிறாய், சந்தோசமாக இருக்கிறாயா என்று கேட்க, திரிஷா மிக அழகாக, தன்னைப்பற்றி சில உடலசைவில் சொல்லிவிட்டு, தனது கணவரைப் பற்றி சொல்லும் பண்பு தான் உச்சம்.  பிறகு, அதை விடு நீ ஏன் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. நீ செய்துகொள் ராம், உனக்கும் ஒரு திருமணம் முடிந்து, உனக்கும் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தையின் கண்கள் வழியே எனக்கு உன்னைப் பார்க்கவேண்டுமென கேட்கும் இடம் மிக அழகு. உண்மை என்னவென்றால், ஒரு காதலியாக அவளை பார்க்கும் அதே கண்களில் அவள் ஒரு மனைவியாகவும் அழகாக தெரிகிறாள். தனது மனைவியும் இப்படித்தான் யாரோ ஒருவரின் அன்பை மனதுள் சுமந்துக்கொண்டு நமக்காகவும் புனிதம் கெடாமல் வாழ்கிறாளோ என எண்ணுகையில் பெண்களின் மீதே ஒரு மதிப்பு ஏற்படுகிறது. தனக்காக, தூங்கி தனக்காக எழுந்து, தனது வீடு தனது பெற்றோர் உற்றோர் என முழுக்க முழுக்க தனக்காகவே வளையவரும் மனைவி எத்தனை உயர்வானவள்? தனது உறவுகளை பிரிந்ததோடு மட்டுமல்லாது, இப்படி தனக்குப் பிடித்த ஒருவனையும் விட்டுப்பிரிந்து முகத்திற்கு நேரே சிரிக்கும் இத்திரைப்படத்தின் நாயகியைப் போன்ற பெண்கள் மனைவிகள் எத்தனையோ பேர் நமக்குள்ளும் இல்லாமலில்லை. அவர்களின் மனசும் கண்ணீரும் தான் இந்த 96 திரைப்படம்.


உன்மையில், என்னால் மனதை சமாதனப் படுத்த முடியவேயில்லை. காலம் முழுக்க கண்ணீரோடும், அந்த கண்ணீரை கூட வெளியில் காட்ட பல சமூக திணிப்பின் அழுத்தத்தோடும் தான் நாம் அத்தனைப் பெரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மீண்டும் மீண்டும் இத்திரைப்படத்தின் காட்சிகளூடே எண்ணுகிறேன். மீண்டும் அவளை பார்க்க ஒரு வாய்ப்பு இருந்தே விடாதா என்று எண்ணி வலிகளோடு மட்டுமே செத்துக்கொண்டிருக்கும் இதயங்களுக்கு இதோ இந்த 96 போன்ற திரைப்படங்கள் தான் ஒரு ஆறுதலை தருகிறது.


என்னைக் கேட்டால், காதலித்தால் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்போருக்கு, காதலித்தால் அது காமம் சேர்ந்தது என்போருக்கு, காதலித்தால் அது தீது என்போருக்குமெல்லாம், இந்த படத்தில் வரும் ராம் சுமக்கிறானே நெஞ்சில் முழுக்க முழுக்க அவளை அவளாக மட்டும், அந்த நினைவையும், அந்த ஜானு தீயாய் எரிய எரிய மனதிற்குள் புதைத்துக்கொண்டாற்போல் அவனை புதைத்துக்கொண்டு அழுகிறாளே, அந்த அழையையும், உடம்பை உதறிவிட்டு மனசிரண்டு ஒட்டிக்கொண்டு ஒரு உலகிற்கு புரியாத சத்தியத்தை சுமந்துகொண்டு உனக்கு நான் எனக்கு நீ என்று தனித்து நிற்கிறதே, அந்த நிற்பின் கம்பீரம் தான் காதலின் மகத்துவமும் என்பேன். 


அத்தகு காதலைக் காட்டிய, அவர்களின் இருவரின் சந்திப்பின் வழியே நம் முகத்தை நமக்கே பார்க்கத்தந்த சிறந்தவொரு இயக்குனருக்கும், நடிகர்களுக்கும், இசையமைப்பாளருக்கும் மற்றும் இதர அனைத்து திரைக் கலைஞர்கள் எல்லோருக்குமே காதல் கனக்கும் அன்பிதயங்களின் வலி தீரா நன்றி.. வணக்கம்!!














No comments: