படித்தோம் சொல்கின்றோம்: ஜேம்ஸ் அகஸ்தி எழுதிய "முகாமைத்துவமும் மனித மாண்பும்" வாழ்க்கை மீதான தேடுதலில் ஈடுபடுபவர்களின் கேள்விகளுக்கு பதில் தருவதற்கு முனையும் நூல் - முருகபூபதி


ஒவ்வொருவர் மனதிலும் அன்றாடம் பல கேள்விகள் உதயமாகிக்கொண்டேயிருக்கும். அனைத்துக்கும் பதில் கிடைப்பதில்லை. சிலவற்றுக்கு தத்தமது வாழ்வனுபங்கள் பதில் சொல்லும். சிலவற்றுக்கு படித்த நூல்கள் பதில் தரும். சிலவற்றுக்கு அறிஞர்களின் மேற்கோள்கள் உதவும்.  அத்துடன்  மற்றவர்களையும்  நாடுவார்கள். சிலசமயம் பதில் கிடைக்கும், சிலவற்றுக்கு பதில் கிடைக்காமலும் போகலாம்.
கேள்விகளும் முற்றுப்பெறாமல் தொடரும்!
மானுட விழுமியங்கள் தொடர்பாக கேள்விகளையும் எழுப்பி,  அவற்றுக்கு பதில்தேடும் முயற்சியில் இறங்கியிருக்கும்  மெல்பனில் வதியும் ஜேம்ஸ் அகஸ்தி,   முகாமைத்துவமும் மனித மாண்பும் என்ற நூலை எழுதியிருக்கிறார்.  இந்நூலை  ஜேம்ஸ் அகஸ்தி, சற்று வித்தியாசமாக சமர்ப்பணம்  செய்திருக்கிறார்.
"எமக்கு பொன்னும் பொருளும் வேண்டாம். எமது உள்ளத்தின் அடி ஆழத்தில் இருந்து குமுறி எழும் கேள்விகளுக்கு பதில் கிடைத்தாலே போதும், எனும் வேட்கை கொண்டவர்களுக்கு " தனது நூலை சமர்ப்பணம் செய்துள்ளார்.
கேள்விகளின் தொடக்கம் தேடல்தான். அகஸ்தி ஜேம்ஸ் அவர்களுக்கும் பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. அந்தக்கேள்விகளின் அடியொற்றி அவர் தேடலில் ஈடுபட்டு ஆராய்ந்து எழுதியிருப்பதே இந்நூல்.
ஜேம்ஸ் அகஸ்தி வட இலங்கையில், மாதகலில் பிறந்தவர். மாவட்ட அரச செயலகங்களில் பணியாற்றியவர். திருகோணமலை வை. எம். சி.ஏ. யில் இயக்குநராகவும் ஓமானில் பாதுகாப்புப்படை தலைமையகத்திலும் பணியாற்றியிருப்பவர். சிறிதுகாலம் தமிழகத்திலும் அகதியாக வாழ்ந்தவர்.
அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்திற்கு குடிபெயர்ந்ததும், பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இளைஞர் விவகாரம் தொடர்பாக இளம் கலைமாணி பட்டம் பெற்றார். அதனைத்தொடர்ந்து கல்வியியலை  மூலபாடமாகக்கொண்ட முதுகலை பட்டப்படிப்பையும் மேற்கொண்டவர்.

ஐந்து பிள்ளைகளின் தந்தை. எட்டுப்பேரப்பிள்ளைகளின் தாத்தா. இன்னும் இரண்டு வருடங்களில் பவளவிழாக்காலத்திற்கான வயதை நெருங்குபவர். பொதுவாக இந்த வயதில்  மருந்து மாத்திரைகளை எண்ணிக்கொண்டிருப்பவர்களையும் தமக்கிருக்கும் நோய் உபாதைகளைப் பற்றிச்சொல்லிக்கொண்டிருப்பவர்களையும்தான் பார்ப்போம். அல்லது ஆரோக்கியத்திற்கு எந்த உணவை ஏற்கவேண்டும், எதனை தவிர்க்கவேண்டும் என்று காண்பவர்களிடமெல்லாம் மருத்துவ ஆலோசனை சொல்பவர்களைத்தான் சந்திப்போம்.
ஆனால், தனது நூலை சமர்ப்பிப்பதில் காண்பித்திருக்கும் வித்தியாசத்தைப்போன்று,  தமது நீண்ட நாள் தேடல் குறித்து விரிவாக ஆராய்ந்து 382 பக்கங்கள் கொண்ட ஒரு அரிய நூலை எழுதியும் தன்னை சராசரி மனிதர்களிலிருந்து வித்தியாசமாக காண்பித்துள்ளார் ஜேம்ஸ் அகஸ்தி!
படைப்பிலக்கிய நூல்களையே படித்துவந்திருக்கும் எனக்கு இந்த நூல் வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை தந்திருக்கிறது.
சிறில் அலெக்ஸ் இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ள இந்த வரிகள் கவனிப்பிற்குரியன:
"தமிழில் கிறித்தவ எழுத்தாளர்கள் இன்று மிகக்குறைவாகவே உள்ளனர். தமிழ் சிற்றிதழ் இயக்கத்தில் ' அரும்பு ' போன்ற மலர்கள் மிக முக்கியமானவையாக திகழ்ந்த காலங்கள் உண்டு. அவற்றில் இன்று தமிழில் இயங்கும் ஜெயமோகன் உட்பட பல முக்கியமான எழுத்தாளர்களும் எழுதியுள்ளனர். இந்துத்துவ எழுச்சி நம் கண்முன்னே நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் இதன் தாக்கம் தெரிகிறது. அவர்களில் பல இளைஞர்கள் எழுத்தாளர்களாக சிந்தனையாளர்களாக உருவாகி வருகின்றனர். அவர்கள் பரந்த வாசிப்பையும் அயராத உழைப்பையும் கொண்டு செயல்படுகின்றனர். இவர்களை எதிர்கொள்வதே இந்துத்துவ எதிர்ப்பாளர்களின் பெரிய சவால் என்கிறார் ஜெயமோகன்."
இந்த நூலை எழுதியிருக்கும் ஜேம்ஸ் அகஸ்தியை அவரது சிறுவயதிலிருந்தே அலைக்கழித்த கேள்வி இதுதான்:
" ஏன் மேலை நாடுகள் பெரும் முன்னேற்றம் கண்டிருக்கின்றன. எனது நாடான இலங்கை  பின்னடைந்திருக்கிறது?"
 அதனையொட்டி அவர் மேலும் இவ்வாறு சொல்கிறார்: திராவிட , பபிலோனிய , சீன நாகரிகங்கள் மிகப்பழமையும் பிரபல்யமும் வாய்ந்தன. இவைகள் அல்லவா எல்லாத்துறைகளிலும் முன்னணியில் திகழவேண்டும்? காலனி ஆதிக்கம்தான் அதற்கு முதன்மையான காரணம் என்ற பதில் தனக்கு ஏற்புடையதல்ல என்கிறார். காலனித்துவத்தில் ஈடுபடாத கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் சொற்ப காலத்தில் பெரும் வளர்ச்சியைக்கண்டன. அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், அது பிரிட்டனின் காலனித்துவ நாடாக இருந்தது. ஆயினும் 200 வருடங்களில் பிரமிக்கத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளதே! அது எப்படி?
"ஜனநாயக அணுகுமுறை, உயர்கல்வி, சட்டம், ஒழுங்கு, கைத்தொழில் மயமாக்கல்" என்று மேலைநாட்டினர் கூறிய கருத்துக்களை விட வேறு ஏதோ ஒன்று எனது கண்களுக்குப் புலப்படவில்லை. என்ற எண்ணம் என்னை நெருடிக்கொண்டே இருந்தது. அதைத்தேடியாகவேண்டும்." என்கிறார் நூலாசிரியர்.
 அவரது நீண்ட கால தேடுதலின் முடிவுகளை பகிர்ந்துகொள்வதுதான் முகாமைத்துவமும் மனித மாண்பும்.
பரிசுத்த வேதாகமத்திலிருந்து அவரது தேடல் தொடங்குகிறது. எண்ணிறைந்த மேற்கோள்கள், பல அறிஞர்களின் கருத்துக்கள் யாவற்றையும் உள்ளடக்கி எழுதியிருக்கிறார் ஜேம்ஸ் அகஸ்தி.
37 அத்தியாயங்களில் இந்த நூல் பேசுகிறது. அனைத்திலும் நூலாசிரியரின் தேடுதல் துலக்கமானது.
வாசகரின் வாசிப்பு அனுபவத்தில்  ஒரு சிறுகதைத்தொகுதியை எடுத்துக்கொண்டால்,  அதில்  கவனத்திற்குள்ளான ஏதாவது ஒரு கதை அல்லது சில கதைகள் இருக்கலாம். இதே நிலைதான்  கட்டுரைத்தொகுதியிலும். "இதில் இந்தக்கதை முக்கியமானது! இக்கட்டுரை கவனத்திற்குரியது!" எனச்சொல்லும் வாசகர்களை சந்தித்திருப்பீர்கள்.
எனக்கும் இந்த நூலில் இரண்டு அத்தியாயங்கள் கவனத்தில் நிற்கிறது. அவை: 16 ஆவது அத்தியாயம்:  மெய்ஞானத்தின' மொத்த வடிவம் நீதி நியாயம் நிறைந்த வாழ்வு. அத்தியாயம் 24 : பெண்ணின் உள்ளத்தை புரிந்துகொள்ள முடியும் ( ஆண் - பெண் பரிமாணங்கள்)
16 ஆவது அத்தியாயத்தில் ஒரு உண்மைச்சம்பவம் சொல்லப்படுகிறது. அதிலிருக்கும் நீதியுரை  மன்னிப்பை வலியறுத்துகிறது.  சில வருடங்களுக்கு முன்னர் இந்தியா ஒடிஸ்ஸா மாநிலத்தில் தொழுநோயாளர்களை பராமரிக்கவும் மிகப்பின்தங்கிய மக்களுக்கு சேவை செய்யவும் அவுஸ்திரேலியாவிலிருந்து சென்ற கிரகம் ஸ்டீன் என்ற கிறிஸ்தவ  பாதிரியாரையும் அவரது மகன்மார் பிலிப் ( 9 வயது) திமோதி ( வயது 7) ஆகியோரையும் அவர்கள் பயணித்த ஜீப் வண்டியோடு தீவிரவாதக்கும்பல் ஒன்று தீயிட்டு எரித்துக்கொன்றுவிட்டது.
அந்தப்பாதிரியாரின் மனைவி கிளடிஸ் கண்ணீர் உகுத்தவாறு, " யார் மீதும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. இறைவன் சித்தப்படியே எதுவும் நடக்கும். இதுவும் அப்படித்தான் நடந்திருக்கிறது. இவ்வளவு பெரிய துயரத்தைத் தாங்கிக்கொள்ளும் சக்தியையும் அவரே எங்களுக்கு வழங்கியிருக்கிறார். இவ்வளவு காலமும் மக்களுக்குத் தொண்டாற்ற இவ்வளவு நீண்ட ஆயுளை எனது கணவருக்கு தந்ததற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். எனது கணவனதும் பிள்ளைகளினதும் முடிவுக்கு காரணமாக இருந்தவர்களை மன்னித்துவிடவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்" எனச்சொல்லியிருக்கிறார்.
             இதனையறிந்த தமிழ்நாடு நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் தமது இதழில் அந்த அன்னையின் உயர்ந்த மனிதநேயத்தை புகழ்ந்து,                                    " இவரல்லவோ பாரத ரத்னா, பத்மவிபூஷன், பத்மபூசன், இவரல்லவோ மனிதநேயத்தின் கொடுமுடி" என்று பாராட்டியிருந்தார்.
இந்நூலில் 24 ஆம் அத்தியாயம் இவ்வாறு  தொடங்குகிறது: " ஆறு பிரவகிப்பதுபோல் மனித அறிவு பெருகி ஓடினாலும் உலகெங்கும் மனித உறவுகளில் விரிசல் அதிகரித்துச்செல்வதையே நாம் காண்கிறோம். படிக்காதவர்களால் படித்தவர்களை புரிந்துகொள்ள முடிகிறதா? எமது முன்னைய தலைமுறையினரையோ அல்லது அடுத்த தலைமுறையினரையோ எம்மால் புரிந்துகொள்ள முடிகிறதா? ஆண்டாண்டு காலமாக மனிதனின் அறிவு வளர்ந்துகொண்டே சென்றாலும் வாழ்க்கைக்கும் அறிவுக்குமான இடைவெளி தொடர்ந்து மேன்மேலும் வளர்ந்துகொண்டே செல்கிறது.
மனிதனை சந்திர மண்டலத்திற்கு அனுப்பும் திட்டத்திற்கு தலைமை தாங்கிய நாசா தலைவர்  கலாநிதி தோமஸ் ஓ  பெயின் " சந்திரனை அடைந்துவிடலாம். ஆனால், பக்கத்தில் நிற்பவரின் உள்ளத்தை அடைவது இயலாத காரியம்"  என்று ஒருமுறை கூறினார்."
நூலாசிரியர் கலாநிதி தோமஸ் ஓ பெயினின் அக்கூற்றை அடியொற்றி  பின்வரும் சில கேள்விகளை ஜேம்ஸ் அகஸ்தி  எழுப்புகிறார்: " அயலவர்களை புரிந்துகொள்வதை விடுங்கள். எமது குடும்பத்தில் உள்ளவர்களையே எம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடிகிறதா? ஒரே கட்டிலில் படுத்தெழும்பும் கணவன் - மனைவி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறார்களா? ஏன் இவ்வளவு பிரிவினைகள்? சண்டைகள், அடி உதைகள், விவாகரத்துக்கள்? "
இந்த அத்தியாயத்திலும் நூலாசிரியர் ஒரு தகவல் குறிப்பை முன்வைக்கிறார்.
ஆண் - பெண் உறவுகள் குறித்து பல கருத்தரங்குகளை நடத்தியவரும் இருபத்தியைந்தாயிரம்பேருக்கு ஆலோசனைகள் வழங்கியவருமான ஜோன் கிறே என்பவர், ஆண்கள் செவ்வாய் கிரகத்திலிருந்தும் பெண்கள் சுக்கிர கிரகத்திலிருந்து வந்தவர்கள் என்ற கற்பனையை வைத்துக்கொண்டு எழுதிய நூல்: Man are from Mars. Women are from Venus.
இவர்கள் தங்கள் தங்கள் கிரகங்களில் மகிழ்ச்சியாக இருந்தவர்கள் என்றும் பூமி என்ற கிரகத்திற்கு வந்தபின்புதான் பிரச்சினைகள் எழுந்தன என்றும் ஒருவரொருவரின் பின்னணிகள், குணாம்சங்களைப்புரிந்துகொள்ளாததின் விளைவுதான் அப்பிரச்சினைகளுக்கு காரணம் என்றும் சொல்கிறார் ஜோன் கிறே.
சமகாலத்தில்  Me too என்ற இயக்கம் பெண்கள் சார்ந்து அதிர்வலைகளை ஊடகங்களில் எழுப்பியிருக்கிறது. ஆண்களும் விடுவார்களா...? அவர்கள் தரப்பில் We too இயக்கமும் தொடங்கிவிட்டது.
இந்தப்பின்னணிகளுடன் ஜேம்ஸ் அகஸ்தியின் முகாமைத்துவமும் மனித மாண்பும் நூலின் 24 ஆவது அத்தியாயத்தை படித்தேன். பல சுவாரஸ்யங்கள் இதில் நிரம்பியிருக்கின்றன.
சத்தியத்தை அறிந்துகொள்ளுங்கள். அது உங்களை அனைத்துப்பிரச்சினைகளிலுமிருந்தும் விடுதலையாக்கும் என்ற தொனி இந்த நூலில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
"கண்டதையும்  கற்றால் பண்டிதனாவான்" என்பர் முன்னோர்கள். நூலாசிரியர் தான் கற்றதையும் பெற்றதையும் ஆதாரமாகக்கொண்டு வாழ்க்கை மீதான தேடலில் ஈடுபட்டு,  இந்த அரிய நூலை படைத்துள்ளார். அவருடைய நீண்ட கால உழைப்பு இந்த நூலில் தெரிகிறது.
 நூலாசிரியருக்கு எமது  மனமார்ந்த வாழ்த்துக்கள்.
----0---



-->












No comments: