புதிய அமைச்சரவை நியமனம் !
அர்ஜூனவுக்கு பிணை
விகாரைக்கு ஒன்றாக சென்ற மைத்திரியும், மஹிந்தவும்
மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு அவுஸ்திரேலியா இலங்கைக்கு வலியுறுத்தல்!!!
மகிந்த தரப்பிற்கு தாவுவோரிற்கு பல மில்லியன்களாம்- வெளியானது புதிய தகவல்
பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பது பாராளுமன்றமே- மீண்டும் வலியுறுத்தியது அமெரிக்கா
இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலர்கள் - சம்பந்தன் சந்திப்பு
நாட்டின் அரசியல் குழப்பநிலையில் முதல் கட்ட நடவடிக்கையை எடுத்தது அமெரிக்கா
ரணில் மீண்டும் ஆட்சியமைக்க முயன்றால் இராஜினாமா செய்வேன் - ஜனாதிபதி
இலங்கை தனது துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது- அமெரிக்கா
பாராளுமன்ற அமர்வு 14 ஆம் திகதி
புதிய அமைச்சரவை நியமனம் !
29/10/2018 புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைக்கான அமைச்சர்கள் நியமனம் சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
1.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
3.வெளிவிவகார அமைச்சராக சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்.
4.மகிந்த சமரசிங்க துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5.விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
6.மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி அமைச்சராக ரஞ்சித்சியம்பலாப்பிட்டிய சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
7.கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
8.விஜித் விஜேமுனி சொய்சா மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
9.ஆறுமுகன் தொண்டமான் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
10.டக்ளஸ் தேவானந்தா மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அமைச்சராக டக்ளஸ் தேவானந்த சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
11.பைசர் முஸ்தபா மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்றம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
12. வசந்த சேனாநாயக்க சுற்றுலாத்துறை மற்றும் வனசீவராசிகள் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
13. வடிவேல் சுரேஸ் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
14. ஆனந்த அளுத்கமகே சுற்றுலாத்துறை மற்றும் வனசீவராசிகள் பிரதி அமைச்சராக சத்தியப்பிமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த புதிய அமைச்சரவைக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
அர்ஜூனவுக்கு பிணை
29/10/2018 கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொடையில் அமைந்துள்ள பெற்றோலிய கூட்டுத்தாபணத்தின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக சற்றுமுன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அர்ஜூன ரணதுங்கவை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதி மன்றில் ஆஜர்படுத்த போது அவருக்கு பிணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
விகாரைக்கு ஒன்றாக சென்ற மைத்திரியும், மஹிந்தவும்
29/10/2018 ஜனாதிபதியும் பிரதமரும் திஸ்ஸமஹாராம விகாரையில் சமய கிரியைகளில் ஈடுபட்டனர்.
தேசிய ஏர்பூட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று திஸ்ஸமஹாராம சந்தகிரிகொட வயல்வெளியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் திஸ்ஸமஹாராம விகாரைக்குச் சென்று சமய கிரியைகளில் ஈடுபட்டனர்.
திஸ்ஸமஹாராம ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய தேவாலேகம தம்மசேன நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பிரித் பாராயணம் செய்து ஆசீர்வதித்தனர்.
சமல் ராஜபக்ஷ், மஹிந்த அமரவீர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். நன்றி வீரகேசரி
மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு அவுஸ்திரேலியா இலங்கைக்கு வலியுறுத்தல்!!!
31/10/2018 இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையை தொடர்ந்து அவதானித்து வருவதாக அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் மரைஸ் பய்னே தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அரசியல் குழப்ப நிலை தொடர்பாக மரைஸ் பய்னே வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மரைஸ் பய்னேயின் அறிக்கையில் மேலம் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கரமசிங்கவை பதவி நீக்கம் செய்தமை தொடர்பாகவும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்.
இலங்கையின் நீண்டகால நட்பு நாடு என்ற வகையில் நாட்டில் ஏற்படும் அரசியல் மாற்றங்களை அவுஸ்திரேலியா உன்னிப்பாக அவதானித்து வருகிறது. நன்றி வீரகேசரி
மகிந்த தரப்பிற்கு தாவுவோரிற்கு பல மில்லியன்களாம்- வெளியானது புதிய தகவல்
01/11/2018 ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என பிரிட்டனின் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹியுகோ சுவையர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச தரப்பிற்கு ரணில்விக்கிரமசிங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வதை ஊக்குவிப்பதற்காக மில்லியன் பவுனட்ஸ்கள் வழங்கப்படுவதாக வதந்திகள் வெளியாகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெறும் இந்த நடவடிக்கையில் சீனாவின் பங்களிப்பு குறித்து சர்வதேச சமூகம் அச்சமடையவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில நாட்களிற்கு முன்னர் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் ஹியுகோ சுவையர் இலங்கை நிலவரம் குறித்து ஆழ்ந்த கரிசனை வெளியிட்;டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பது பாராளுமன்றமே- மீண்டும் வலியுறுத்தியது அமெரிக்கா
01/11/2018 இலங்கை தனது தலைமைத்துவத்தை தீர்மானிப்பதற்கு அரசமைப்பு நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என அமெரிக்கா மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர்களில் ஒருவரான ரொபேர்ட் பலடினோ இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை தனது தலைமைத்துவத்தை தீர்மானிப்பதற்கு அவசியமான அரசமைப்பு நடைமுறைகள் குறித்தே அமெரிக்கா தற்போது கவனம் செலுத்தி வருகின்றது என ரொபேர்ட் பலடினோ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மீண்டும் நாங்கள் ஜனாதிபதியை சபாநாயகருடன் கலந்தாலோசித்து பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் அரசாங்கத்திற்கு யார் தலைமை தாங்கவேண்டும் என்பதை தீர்மானிக்கும் தங்கள் கடமையை நிறைவேற்ற அனுமதிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசமைப்பு அரசாங்கத்தில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பான ஏற்பாடுகளை கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ள ரொபேர்ட் பலடினோ இலங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிற்கு உள்ள பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பது பாராளுமன்றமே எனவும் அவர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலர்கள் - சம்பந்தன் சந்திப்பு
01/11/2018 இந்தியாவின் முன்ளாள் வெளியுறவுச் செயலர்கள் மற்றும் எதிர்க்கட்சித்தலைவருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலர்களான லலித் மண்சிங் மற்றும் பேராசிரியர் சுக் டியோ முனி ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது நன்றி வீரகேசரி
நாட்டின் அரசியல் குழப்பநிலையில் முதல் கட்ட நடவடிக்கையை எடுத்தது அமெரிக்கா
01/11/2018 இலங்கை விவகாரம் சர்வதேச அரங்கிற்கு சென்றுள்ள நிலையில் இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் நாட்டிற்கு வந்துள்ளார்.
மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவராக நியமிக்கப்பட்ட அலய்னா ரெப்லிட்ஸ் திடீரென நேற்று மாலை இலங்கைகக்கு வந்து சேர்ந்துள்ளார்.
அலய்னா இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்து விட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அரசியல் குழப்ப நிலை தொடர்பாக அரசியல் தலைவர்களை தனித்தனியே அலய்னா சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். நன்றி வீரகேசரி
ரணில் மீண்டும் ஆட்சியமைக்க முயன்றால் இராஜினாமா செய்வேன் - ஜனாதிபதி
01/11/2018 ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் ஆட்சியமைக்க முயன்றால் நான் பதவி விலகுவேன். பதவி விலகி வீதியில் இறங்கி மஹிந்தவுடன் இணைந்து செயற்பட நான் தயாராகவுள்ளேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று நண்பகல் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
கடந்த மூன்றரை வருடங்களாக இடம்பெற்ற ஆட்சியில் பெறுமதியில்லாத நிலையிலேயே நான் இருந்தேன். 2015 ஆம் ஆண்டு மஹிந்தவின் ஆட்சியிலிருந்து எவ்வாறு அதிருப்தியுடன் விலகினேனோ அதனைவிட அதிகமான அதிருப்தியுடனேயே தற்போது அரசாங்கத்திலிருந்து வெளியேறியிக்கின்றோம்.
தற்போது புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மையைக் காண்பித்து ஆட்சி அமைக்க முனைந்தால் எனது பதவியிலிருந்து நான் விலகுவேன். ஏனெனில் தவறு என்று கூறி எந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறினோமோ அந்த அரசாங்கத்துடன் மீண்டும் செயற்படுவது என்பது முடியாத காரியமாகும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் வீதியில் இறங்கி மஹிந்தவுடன் இணைந்து வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு நான் தயாராகவே உள்ளேன்.
எனவே மஹிந்தவுடன் இணைந்து கட்சியை முன்கொண்டு செல்ல நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒன்றுசேர்ந்து பணியாற்ற வேண்டும். கடந்த அரசாங்கத்தில் நாம் உரிய மதிப்பின்றியே நடத்தப்பட்டிருக்கின்றோம். இதனால்தான் நாம் புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்றும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
இலங்கை தனது துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது- அமெரிக்கா
01/11/2018 இலங்கை தனது சொந்த துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது என அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் தெரிவித்துள்ளார்.
சீனாவுடான உடன்படிக்கை காரணமாகவே இலங்கை தனது துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கை சீனாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கை குறித்தே ஜேம்ஸ் மட்டிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் சமாதானத்திற்கான நிலையத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சீனா கடனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றது என்ற கரிசனை நாடுகள் மத்தியில் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.சில நாடுகளால் கடனை திருப்பிசெலுத்த முடியாது என தெரிந்தே சீனா இவ்வாறு நடந்துகொள்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இலங்கையில் என்ன நடந்தது என்பதை பாருங்கள் அவர்கள் தங்கள் துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
பாராளுமன்ற அமர்வு 14 ஆம் திகதி
04/11/2018 பாராளுமன்ற அமர்வினை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
அத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் ஜனாதிபதி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment