இன்று நவம்பர் 26 ஆம் திகதி "எஸ்.பொ." நினவுதினம்: சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான்! ஆறுதசாப்த காலத்தையும் கடந்து எழுத்தூழியத்தில் தவமிருந்த எஸ்.பொ. அங்கம் -01 - முருகபூபதிஇலங்கையின்  மூத்த  படைப்பாளி  எஸ்.பொ.  அவுஸ்திரேலியாவில் சிட்னியில்   கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி  மறைந்தார்.  இன்றுடன் அவர் மறைந்து நான்கு ஆண்டுகள் நிறைவாகியுள்ளது.  அன்னாரின் நினைவாக 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான் எழுதிய நீண்ட பதிவிலிருந்து சில பகுதிகளை இங்கு மீண்டும் நனவிடை தோய்கின்றேன்.   இந்த நனவிடை தோய்தல் என்ற சொற்பதத்தையும் அவர்தான் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்.
கடந்த  காலங்களில்  எனக்குத்தெரிந்த -  நான்  நட்புறவுடன்  பழகிய பல  படைப்பாளிகள்  சமூகப்பணியாளர்கள்  குறித்து எழுதிவந்திருக்கின்றேன்.  அவர்கள் வாழ்ந்த  காலத்திலும்  அதிலிருந்த   ஆழமான கணங்களிலும்   எனக்கேற்பட்ட அனுபவங்களையே   நினைவுப்பகிர்வாகவே  தொடர்ந்து  எழுதிவருகின்றேன். காலமும்  கணங்களும்  ஒவ்வொருவர்   வாழ்விலும்  தவிர்க்க முடியாதது.
 ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. வின் நினைவுதினம் இன்றாகும்.

எஸ்.பொ.  அவர்களை  1972  ஆம்  ஆண்டு,  எனது இலக்கியப்பிரவேச தொடக்க காலத்தில்தான்   முதல்  முதலில்  கொழும்பு ஆட்டுப்பட்டித்தெருவில்  ரெயின்போ  அச்சகத்தில்  சந்தித்தேன். அதன்பிறகு  கொழும்பில்  பல  இலக்கியக்கூட்டங்களிலும் சந்தித்திருக்கின்றேன்.   எஸ்.பொ.,   இரசிகமணி   கனக செந்திநாதன் ,  கலைஞர் .ரி. பொன்னுத்துரை  உட்பட  பல  இலக்கியவாதிகள்   எமது நீர்கொழும்பு   இந்து  இளைஞர்  மன்றம்  தொடர்ச்சியாக  மூன்று நாட்கள்  நடத்திய  தமிழ்  விழாவிற்கு  வருகை தந்த காலப்பகுதியில் எனக்கு எட்டு வயதுப்பராயம். அந்த வயதிலேயே அவரது நகைச்சுவையான பேச்சை கேட்டுள்ளேன். மீண்டும் அவரைச்சந்தித்து பேசும்போது எனது வயது 21.  அதன்பின்னர் கொழும்பு -07 இல் அமைந்திருந்த கல்வி வெளியீட்டுத்திணைக்களத்திலும் விவேகானந்தா வித்தியாலயத்திலும் அடிக்கடி சந்தித்து உரையாடியிருக்கின்றேன். அவர் இந்த வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றினார்.

எஸ்.பொ.  1980  களில்  நைஜீரியாவுக்கு  தொழில்  நிமித்தம்  புறப்பட்ட வேளையில்   கொழும்பு -  ஜம்பட்டா  வீதியில்  மலையக  நாடகக் கலைஞரும்   அவள்  ஒரு  ஜீவநதி  திரைப்படத்தின்   தயாரிப்பாளரும் வசனகர்த்தாவுமான   மாத்தளை   கார்த்திகேசுவின்  இல்லத்தில் எஸ்.பொ.வுக்காக    நடந்த   பிரிவுபசார  நிகழ்வில்   உரையாற்றினேன்.


மீண்டும்   அவரை  சில  வருடங்களின்   பின்னர்   1985   இல்   ஒரு விஜயதசமி   நாளில்  வீரகேசரியில்  நடந்த  வைபவத்தின்பொழுது என்னைச்சந்திக்க  வந்த   எஸ்.பொ.வின்   ஆபிரிக்க   அனுபவங்கள் பற்றிய    நேர்காணலை  எழுதி   வெளியிட்டேன்.  1987  இல்  நான் அவுஸ்திரேலியாவுக்கு   வந்த    பின்னர்  -  1989  இல்  எனது  இரண்டாவது  சிறுகதைத்தொகுதி  சமாந்தரங்கள்  நூலின்  வெளியீட்டு  விழாவை  மெல்பனில்  நடத்தியபொழுது  சிட்னியில் மூத்த   புதல்வர்  டொக்டர்   அநுராவிடம்  அவர்   வந்திருப்பது   அறிந்து,  அவரை    பிரதம   பேச்சாளராக   அழைத்தேன்.   அன்றைய   நிகழ்வே அவர்   அவுஸ்திரேலியாவில்   முதல்  முதலில்  தோன்றிய   இலக்கிய பொது நிகழ்வு.
1972 முதல் 2010 வரையில்   சுமார்  38  ஆண்டுகள்  மாத்திரமே அவருக்கும்  எனக்குமிடையிலான  இலக்கிய  உறவு   நீடித்தது.
கலை  இலக்கிய  ஊடகத்துறையில்   ஈடுபடும்  எவரும்  அன்றாடம் சந்திக்கக்கூடிய   அனுபவங்களே    அவர்தம்  வாழ்வின் புத்திக்கொள்முதலாகும்.    எஸ்.பொ.  குறித்து  நானும்  என்னைப்பற்றி அவரும்   ஏற்கனவே   நிறையவே   எழுதிவிட்டோம்.    ஒரு கட்டத்திற்குப்பிறகு    எழுதுவதற்கு   எதுவும்   இல்லை என்றாகிப்போனாலும் , அவர் தொடர்ந்தும் பேசப்படவேண்டியவர்.  அவரது   எழுத்தூழிய   ஆளுமை   தமிழ்    சமூகப்பரப்பில்   தவிர்க்க  முடியாதது.
எழுத்தூழியம் என்ற சொற்பதமும் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான்.
தமிழ் இலக்கிய உலகில்  எஸ்.பொ.  என்ற இரண்டு எழுத்துக்களின் வாயிலாக   மிகுந்த கவனத்திற்குள்ளானவருமான  எஸ்.பொன்னுத்துரை   யாழ்ப்பாணத்தில்  நல்லூரில் சண்முகம்  தம்பதியரின்  மகனாக   04-06-1932   ஆம்    ஆண்டு  பிறந்தார். அவர் சிட்னியில் மறையும்போது      82  வயது.
-->
யாழ்ப்பாணத்தில்  தமது  ஆரம்பக்கல்வியையும்  உயர்கல்வியையும் தொடர்ந்து  - மேற்கல்விக்காக  தமிழ்நாட்டிற்குச்சென்றார்.  அங்கு தாம்பரம்  கிறிஸ்தவக்கல்லூரியில்  பட்டப்படிப்பை நிறைவுசெய்துகொண்ட   எஸ்.பொ. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும்  பயின்றார்.பாடசாலைப்பருவம்  முதல்  தீவிர  வாசிப்பில்  ஈடுபட்டிருந்த பொன்னுத்துரை -  இளம் வயதிலேயே  சிறுகதை,  கட்டுரை, விமர்சனங்கள்  எழுதி   கலை    இலக்கியத்  தேடலை  தவமாகவே தொடர்ந்தவர்.     ஆங்கில  இலக்கியங்களின்  மீதும் ஈடுபாடு காண்பித்தார்.
தமது  13  வயதில்   எழுத   ஆரம்பித்திருப்பவர்.  1940  ஆம்  ஆண்டில் அவரது  மூத்த  சகோதரர்  தம்பையா    ( இவரும் தமிழ்ப்புலமையுள்ளவர்)   மாணவர்   தேர்ச்சிக்கழகத்தின்   சார்பில் ஞானோதயம்   என்ற  கையெழுத்து   சஞ்சிகையை  நடத்தியபொழுது அதன்  பக்கங்களை   நிரப்புவதற்காகவும்  இலக்கியப்படைப்புகளை அதில்    எழுதியிருக்கிறார்.
பெரும்பாலான  இலக்கியவாதிகளை   பாரதியும்  பாரதிதாசனும் ஆரம்பகாலத்தில்   பெரிதும்   பாதித்திருப்பதுபோன்று பொன்னுத்துரைக்கும்  இந்த   இரண்டு   ஆளுமைகளும்  தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்.    அவர்களின்    கவியாற்றலின்  பாதிப்பினால் பொன்னுத்துரை    எழுதிய   முதலாவது    கவிதை   வீரகேசரியில்   வெளியானது.   அதுவே  அச்சில்  வெளிவந்த  அவரது  கன்னிப்படைப்பு.
1947  இன்  பின்னர்  .ராஜகோபால்  என்ற  ஒரு  பெரியவரின் தொடர்பினால்  இந்திய   எழுத்தாளர்களின்  படைப்புகள் பொன்னுத்துரைக்கு    படிக்கக்கிடைத்திருக்கிறது.    குறிப்பிட்ட  ராஜகோபால்தான்    தன்னையும்   இலக்கியத்தின்பால்  திசை திருப்பிவிட்டவர்   என்று    டொமினிக்ஜீவா   குறிப்பிட்டுள்ளார்.
 தமது   பதினைந்து  வயதிலேயே  இந்தியாவின்  புகழ்பூத்த படைப்பாளிகளின்   தீவிர  வாசகராகிவிட்டதனால்  பொன்னுத்துரையும்  இலக்கியப்பிரதிகளை   எழுதத்தொடங்கினார்.
தம்மை    இந்தத்துறையில்  வளர்த்துவிட்ட    . ராஜகோபால் என்பவருக்கே   தமது   தீ   நாவலையும்    சமர்ப்பணம்   செய்தார்.
பொன்னுத்துரையின்   முதலாவது  சிறுகதை  1948  இல்  தந்தை செல்வநாயம்   கொழும்பிலிருந்து  வெளியிட்ட  சுதந்திரன் பத்திரிகையில்   வெளியானது.   இலங்கை  இதழ்களில்  மட்டுமன்றி தமது  17   வயதில்    தமிழக   இதழ்களான   காதல்,  பிரசண்ட  விகடன்,  ஆனந்த போதினி   முதலானவற்றிலும்  எழுதியிருக்கிறார்.
இலங்கையில்  பல  மூத்த  எழுத்தாளர்கள்  ஆரம்பத்தில் - தமிழகத்தின்   சென்னைப் பாதிப்பினால்  தமது  கதைகளின் பின்புலமாக   மெரீனா  பீச்சையும்  மவுண்ட்  ரோட்டையும் சித்திரித்துக்கொண்டிருந்தபொழுது  தாமும்  அவ்வாறு அந்தப்பகைப்புலத்தை   உள்வாங்காமல்    ஈழத்து    மண்வாசனையுடன் படைப்பிலக்கியத்தில்    ஈடுபட்டவர்களின்   வரிசையில் இணைந்துகொண்டவர்   பொன்னுத்துரை.
முழுமையான  கற்பனாவாதத்தை   தவிர்த்து    யதார்த்த   இலக்கிய மரபினைத்தோற்றுவித்து  -  சிறுகதையில் உருவம்,  உள்ளடக்கம்,  உத்திகளில்   மாற்றங்களை   இலங்கையில்   ஏற்படுத்திய   மூலவர்களில்   ஒருவராக    விளங்கியவர்    பொன்னுத்துரை. இலங்கையின்    இலக்கிய    மறுமலர்ச்சிக்காலத்திலிருந்து பொன்னுத்துரையின்   ஆக்க   இலக்கியங்களை    இனம்காணமுடியும். அதனால்   ஏறக்குறைய   ஏழு தசாப்தகாலம்   ( அண்ணளவில் 68 ஆண்டுகள்)   அயராமல்  எழுதிக்கொண்டிருந்தவர்.
அவரது  முதலாவது  நாவல்  தீ   தமிழகத்தில்  சரஸ்வதி  இதழை நடத்திய  விஜயபாஸ்கரனின்   முயற்சியால்    வெளியானது. இந்நாவல்    ஈழத்து   இலக்கிய    வளர்ச்சியில்  திருப்புமுனையை தோற்றுவித்ததுடன்   சர்ச்சைகளையும்   உருவாக்கியது.
தீயை    தீயிட்டுக்கொளுத்துங்கள்    முதலான   குரல்களும்   எழுந்தன. இவ்வாறு   அவரது    முதல்   நாவல்    தீவிர  வாசிப்புக்கும் கவனிப்புக்கும்    சர்ச்சைக்கும்    இலக்கானது   முதல் பொன்னுத்துரையும்    இலக்கிய   உலகில்   சர்ச்சைக்குரிய மனிதராகவே    தென்படலானார்.
தொடர்ச்சியாக    அவர்   பல   தளங்களில்    அவ்வாறே  விளங்கினார். அதனால்  - அவரை  ஒரு  இலக்கிய  கலகக்காரன்  என்றும்  பரீட்சார்த்த  முயற்சிகளில்  ஈடுபடும்  இலக்கியவாதி  என்றும் அழைக்கப்படலானார்.
சூழலில்  அவரது    கருத்துக்களுக்கு   நிகழ்ந்த  எதிர்வினைகளினால் அவர்   தன்னை   தொடர்ந்தும்  பல  நிலைகளிலும்  எதிர்வினைகளை எதிர்நோக்கும்   எழுத்தாளராகவே    இனம்காட்டி    வரலானார்.  தொடக்கத்தில்   அவரும்   அவரது   நண்பர்களும்  யாழ்ப்பாணத்தில் பின்வரும்   புனைபெயர்களில்   தம்மை    அழைத்துக்கொண்டனர்.
இந்த   நண்பர்கள்   கம்யூனிஸக்கொள்கை   கோட்பாடுகளினால் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தவர்கள்.   டானியல்   ( புரட்சி தாசன்)  டொமினிக் ஜீவா             ( புரட்சி   மோகன் ) பொன்னுத்துரை   (புரட்சிப்பித்தன்) 
பொன்னுத்துரை  இவ்வாறு  முற்போக்கு  கூடாரத்தில்  தமது  பெயரை   புரட்சியுடன்   இணைத்துக்கொண்டாலும்கூட    ஒரு கட்டத்தில்    தனது    புனைபெயரை   பழமை தாசன் என்றும் மாற்றிக்கொண்டவர்.
அவர்   அடிக்கடி  புனைபெயர்களில்  எழுதுவதை வழக்கமாகக்கொண்டிருந்தாலும்   இலக்கிய    உலகில்   நிலைத்த பெயர்   எஸ்.பொ.   என்ற   இரண்டு    எழுத்துக்கள்தான்.
1956  இல்  ஆசிரியத்தொழில்சார்ந்து   அவரது  வாழ்வு  கிழக்கு மாகாணம்    நோக்கி   திசை   திரும்பியது.    கருத்து  ரீதியாக முற்போக்கு  எழுத்தாளர்களுடன்  முரண்பட்டு,  1960  களில்  கொழும்பு சாகிராக்கல்லூரியில்  நடந்த  மாநாட்டிலிருந்து  வெளிநடப்புச்செய்தார்.
அப்பொழுது   அவருடன்    இணைந்து   வெளியேறியவர்கள்  இளம்பிறை   ரஹ்மான்,   .. இராசரத்தினம்   உட்பட   வேறும்  சிலர். இவர்களில்   இராசரத்தினம்    மூதூரைச்சேர்ந்த   ஆசிரியர். மறைந்துவிட்டார்.   மற்றவர்    கொழும்பில்   ஆட்டுப்பட்டித் தெருவில் நீண்ட காலம்    ரெயின்போ   என்ற    அச்சகத்தை  நடத்தி   அரசு வெளியீடு   என்ற  பதிப்பகத்தின்  மூலம்  பல   நூல்களையும் இளம்பிறை   என்ற  மாசிகையையும்   வெளியிட்ட  ரஹ்மான்.   இவர் தற்பொழுது    சென்னையில்    கோடம்பாக்கத்தில்   வசிக்கின்றார்.
பொன்னுத்துரையின்    இலக்கியச்செயற்பாடுகளுக்கு  தொடர்ந்தும் உறுதுணையாக   விளங்கியவர்  ரஹ்மான்.   பொன்னுத்துரையின் இலக்கிய  வாழ்வில்  இரண்டறக்கலந்த  இவரின்  தொடர்ச்சியான நட்பினால்தான்   பிற்காலத்தில்   சென்னையில்   மித்ர   பதிப்பகம் உருவானது.   எனவே   ரஹ்மான்    பொன்னுத்துரையின்   வாழ்வில் மிகவும்   முக்கியமான   இலக்கிய சகா.
எஸ்.பொ.   சென்னையில்  மித்ர  பதிப்பகத்தை   உருவாக்குவதற்கு பக்கபலமாக   இருந்தவர்    அவரது   மூத்த   புதல்வன்  டொக்டர் அநுரா.
முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்திலிருந்து  வெளியேறிய பொன்னுத்துரை,  அடுத்த  கட்டமாக  அதற்கு  எதிராக  நற்போக்கு இலக்கிய முகாமை  தோற்றுவிக்க  முனைந்தார்.
முற்போக்குக்கு   எதிராக  பிற்போக்கு  என்று  எதனையும்  தொடங்க முடியாது.   அதனால்    நற்போக்கு    என்பது - முற்போக்கு - (சய) கம்யூனிஸ்ட்    கட்சி.   பிற்போக்கு  முகாம்  அமைக்க முடியாது. அதனால்   நற்போக்கு  எனச்சூட்டிக்கொண்டோம்  என்று  தமது வாக்கு மூலத்தை   பதிவுசெய்துகொண்ட  பொன்னுத்துரை - காலம் கடந்து   மேலும்   விரிவாக    தேடல்  என்ற    நேர்காணல் ( டென்மார்க் தர்மகுலசிங்கம்    எழுதியது)    நூலிலும்   நற்போக்கு   என்ற  நூலிலும்   முற்போக்கு  இலக்கிய   முகாமிலிருந்து   தான் வெளியேறியதற்கான    நியாயங்களை   விரிவாக    பதிவு   செய்துள்ளார்.
 பொன்னுத்துரையிடமிருந்த   ஆழமான   தமிழ்  இலக்கிய   ஆற்றலும் கல்வியினால்   அவர்  பெற்றுக்கொண்ட  ஆங்கில  அறிவுமே பிற்காலத்தில் -   புகழ்பெற்ற  சில  பிறமொழி   இலக்கியப்படைப்புகளை ஆங்கிலமொழி  மூலம்  படித்து  தமிழுக்கு மொழிபெயர்க்கச்செய்திருக்கிறது.
தமிழ்நாட்டிலிருந்து    தமது  பட்டப்படிப்பை  நிறைவு  செய்துகொண்டு திரும்பியவேளையில்  வடமாகாண  தமிழ்   சமூக   அமைப்பு   குறித்த பிரக்ஞை   அவரை   தீவிரமாக    சிந்திக்கவைத்திருக்கிறது. அவ்வேளையில்   அவருடைய   தோழர்களாக    விளங்கிய   பலர் முற்போக்கான    சிந்தனை    உடையவர்களாகவும்   மார்க்ஸீய கோட்பாடுகளை    வரித்துக்கொண்டவர்களாகவும்   விளங்கினர்.
பொன்னுத்துரையின்   மூத்த  சகோதரி  திருமணம்  முடித்த  எம்.ஸி சுப்பிரமணியம்  அவர்கள், வடமாகாண   சிறுபான்மை  வெகுஜன  அமைப்பின் ஸ்தாபகராகவும்  சமூகப்பணியாளராகவும்  விளங்கியவர்.  இலங்கை கம்யூனிஸ்ட்   கட்சியின்   (மாஸ்கோ)   உறுப்பினர்.    பின்னாளில் இலங்கை    நாடாளுமன்றத்தில்    நியமன   எம்.பி.   ஆகவும் பதவியேற்றவர்.
பொன்னுத்துரையின்    குடும்ப  உறவுக்குள்ளும்  அவரது  தோழர்கள் வட்டத்திலும்   சாதி  ஒழிப்புக்குறித்த  எண்ணங்களே பரவலாகியிருந்தமையினால்    பொன்னுத்துரையும்   அவர்களினால் உள்வாங்கப்பட்டார்.    அவர்கள்   மட்டத்தில்    பட்டம்   பெற்ற புலமையாளர்  என்ற    மேலதிக   தகைமையும்  இவருக்கு   கிடைத்தது.
இலங்கையின்    மூத்த  எழுத்தாளர்கள்   கே. டானியல்,  டொமினிக்ஜீவா,  செ. கணேசலிங்கன்    முதலானோருடன்   தினமும்   இலக்கியம் தொடர்பான    உரையாடல்களை   தொடர்ந்தார்.   கணேசலிங்கன்  யாழ். பரமேஸ்வராக்கல்லூரி   மாணவராக   அவ்வேளையில் பயின்றுகொண்டிருந்தார்.
டானியலும்    டொமினிக் ஜீவாவும்   தத்தமது  குடும்பச்சூழல்களினால் படிப்பைத்தொடர    முடியாமல்   தொழில்களில்   ஈடுபட்டனர்.
எனினும்   இவர்கள்   நால்வரும்   அடிக்கடி   சந்தித்து  தமக்குள்   ஒரு இலக்கிய  வட்டத்தையும்   ஏற்படுத்திக்கொண்டனர்.   பொன்னுத்துரை ஆசிரியப்பணியில்   ஈடுபட்டார்.    அவர்   மட்டக்களப்பில்  பணியாற்றிய   காலத்தில்  தம்முடன்  பணியாற்றிய   ஆசிரியையை  காதல்   திருமணம்   செய்துகொண்டார்.
பொதுவாக    எழுத்தாளர்களின்  மனைவிமார்  தமது   கணவரின் கலை  - இலக்கிய   பொதுவாழ்வில்   அந்நியப்பட்டிருப்பவர்கள்.  ஆனால், பொன்னுத்துரையின்  மனைவி  -  மகாகவி   பாரதியின்  கூற்றுப்போன்று  - காதலொருவனைக்   கைப்பிடித்தே   அவன்
காரியம்   யாவிலும்   கைகொடுத்து   வாழ்ந்தவர். 
அவரது  பக்கபலம்  பொன்னுத்துரையின்  படைப்பு  இலக்கிய முயற்சியில்   எதுவித  அயற்சிக்கும்  இடம்கொடுக்கவில்லை. அதனால்தான்    பொன்னுத்துரை   சிறுகதை,    நாவல்,    நாடகம், கட்டுரை,    வாழ்க்கை   வரலாறு,   விமர்சனம்,   ஆய்வு,   மொழிபெயர்ப்பு, சுயசரிதை  முதலான  பல்துறைகளில்   தடம்   பதித்து  பல   நூல்களை  படைக்க முடிந்திருக்கிறது   என்றும்  கருத  இடமுண்டு.  அத்துடன்  சில நூல்களின்   தொகுப்பாசிரியராகவும்   தமது   பணி  தொடர்ந்திருப்பவர்.
பின்வரும்   அவரது   நூல்களே  அதற்கு   ஆதாரம்:
வீ - ஆண்மை -  எஸ்.பொ   கதைகள்  - அவா  (சிறுகதைத் தொகுதிகள்) 
தீ -  சடங்கு  - மாயினி  (நாவல்கள்)
அப்பையா-  கீதை  நிழலில் - அப்பாவும்  மகனும் - வலை -
 முள் - பூ -  தேடல் - முறுவல் - இஸ்லாமும்  தமிழும்
பெருங்காப்பியம்  பத்து (தொகுப்பாசிரியர்)    மத்தாப்பு + சதுரங்கம்
     ? -  (கேள்விக்குறியிலும் ஒரு நூல்)  -  நனவிடை   தோய்தல்
நீலாவணன்   நினைவுகள் -   இனி   ஒரு  விதி  செய்வோம்
வரலாற்றில்  வாழ்தல் (சுயசரிதை - இரண்டு பாகங்கள்)
ஈடு  (நாடகம்)  ( சிட்னி அ.சந்திரஹாசனுடன்  இணைந்து எழுதியது)
மணி மகுடம்  - தீதும் நன்றும்  - காந்தீயக் கதைகள்  - காந்தி தரிசனம்
மகாவம்ச ( மொழிபெயர்ப்பு )
இவை தவிர, பல ஆபிரிக்க இலக்கியப்படைப்புகளையும் மொழிபெயர்த்து தமிழுக்கு வரவாக்கியவர்.
பொன்னுத்துரை கிறிஸ்தவ கல்லூரியில் கற்றதனாலும் கிறிஸ்தவ பாடசாலையில் தொடக்கத்தில் பணியாற்றியதனாலும்தானோ  என்னவோ கிறிஸ்தவர்கள் தமது மதரீதியான சிந்தனையில் அடிக்கடி பயன்படுத்தும் ஊழியக்காரர் என்ற சொற்பதத்தை தமது வாழ்வில் அடிக்கடி பயன்படுத்திவந்திருக்கிறார்.
ஆனால்,  இவர் மதம் சார்ந்து அல்ல,  இலக்கியம் சார்ந்து தன்னை இலக்கிய  எழுத்தூழியக்காரன்  என்றே   குறிப்பிட்டு வந்தவர்.
பொன்னுத்துரைக்கு இலக்கியத்தில் பல்வேறு இஸங்களிலும் ஆபிரிக்க கறுப்பின மக்களின் இலக்கியத்திலும் ஈடுபாடு நீடித்த அதேசமயம் ஆன்மீக  ரீதியான  சிந்தனைகளும்  அவரது  வாழ்வில் தொடர்ந்திருக்கிறது.
(தொடரும்)


-->

No comments: