முதியவர் சொன்ன அருள்வாக்கை கேலி செய்த இளைஞர்கள்: நடுக்காட்டில் சொன்ன இடத்திலேயே தோண்டியதும் காட்சி தந்த ஐயப்பன்
சிக்காகோ துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி
சுவிஸ் நகரசபை தேர்தலில் இலங்கைத் தமிழ் பெண் போட்டி
கஷோக்கியின் கொலைக்கும் சவுதி இளவரசருக்கும் எவ்வித தொடர்புமில்லை
கஜா புயல் மறுசீரமைப்பிற்கு மத்திய அரசிடம் தமிழக முதல்வர் கோரிக்கை.
கராச்சியில் சீன தூதரகம் மீது தாக்குதல் ; இரு பொலிஸார் பலி
பாக்கிஸ்தானில் மற்றுமொரு குண்டுவெடிப்பு- 25 பேர் பலி
கஜா புயல் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபா
மயிரிழையில் உயிர் தப்பிய விமானப் பயணிகள்
படேல் சிலையை மிஞ்சும் ராமர் சிலை
முதியவர் சொன்ன அருள்வாக்கை கேலி செய்த இளைஞர்கள்: நடுக்காட்டில் சொன்ன இடத்திலேயே தோண்டியதும் காட்சி தந்த ஐயப்பன்
18/11/2018 இந்தியா, வேலூர் அருகேயுள்ள வனப்பகுதியில் ஐயப்பன் சிலையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கும் கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் சிலை கிடைத்துள்ளதால் பக்தர்கள் வியந்து போய் பக்தியில் மூழ்கினர்.

மேலும், வேலூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் ஐயப்பன் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயிலில் ஐயப்பன் மூலவர் சிலை வைப்பதற்காக அருள்வாக்கு சொல்லும் முதியவரிடம் கிராம மக்கள் அருள்வாக்கு கேட்டுள்ளனர்.
இந்நிலையில், முதியவர் ‘கொட்டாவூர் கிராமத்தில் இருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரம் உள்ள ஒடுகத்தூர் வனச்சரகத்திற்குட்பட்ட கருத்தமலைக்கு செல்லுங்கள். அங்கு நடுக்காட்டில் உள்ள பாறை பக்கத்தில் தோண்டி பாருங்கள். ஐயப்பன் சிலை கிடைக்கும்’ என்று அருள்வாக்கு கூறினார்.
இதைக்கேட்ட இளைஞர்கள் சிலர் வேடிக்கையாக முதியவரைக் கிண்டல் செய்துள்ளனர். கிராமத்தில் உள்ள பெரியவர்கள் சிலர் வனப்பகுதிக்குள் சென்று பாறைக்குப் பக்கத்தில் தோண்டிய போதே, அனைவருக்கும் அதிர்ச்சியும், வியப்பும் காத்திருந்தது. சுமார் மூன்று அடி ஆழத்தில் ஒன்றரை அடி உயரமுள்ள ஐயப்பன் கற்சிலை காட்சியளித்துள்ளது. இதுபற்றி தகவலறிந்ததும், ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் காட்டிற்குள் திரண்டு வந்தனர்.
குறித்த ஐயப்பன் சிலை படுத்த நிலையிலேயே இருந்துள்ளது. அச்சுவாமி சிலைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து மாலை அணிவித்து, சிறப்பு பூஜையும் நடத்தினர். இதையறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து ஐயப்பன் சிலையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். நன்றி வீரகேசரி
சிக்காகோ துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி
20/11/2018 அமெரிக்காவின், சிக்காகோவில் உள்ள வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பெண் ஊழியர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

சிக்காகோவில் உள்ள மெர்சி வைத்தியசாலையின் வாகன தரப்பிடத்தல் புகுந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்த ஒரு பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனைப் பார்த்த பொலிஸார் அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் வைத்தியாசலையின் இரண்டு பெண் ஊழியர்கள், ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமி என 4 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கி சூடு நடத்தியவன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், ஒரு பெண்ணை குறிவைத்தே தாக்குதலை நடத்தியுள்ளார். அந்த பெண்ணுக்கும் அவருக்கும் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. ஆனால் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நன்றி வீரகேசரி
சுவிஸ் நகரசபை தேர்தலில் இலங்கைத் தமிழ் பெண் போட்டி
21/11/2018 சுவிற்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி. கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிடுகின்றார்.

தர்ஷிகா கிருஸ்ணானந்தம் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார்.

இதேவேளை, இவர் பிரதேச தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம், கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ஓர் ஆலோசகராக தூண் நகரசபையில் இணைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பொன்றையும் தர்சிகா அண்மையில் மேற்கொண்டிருந்தார்.

கஷோக்கியின் கொலைக்கும் சவுதி இளவரசருக்கும் எவ்வித தொடர்புமில்லை
22/11/2018 சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியின் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சவுதி இளவரசருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என சவுதியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அடோல் அல்-ஜுபேர் தெரிவித்துள்ளார்.

கஷோக்கி கடந்த ஒக்டோபர் இரண்டாம் திகதி துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி தூதரகத்தில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை தன்னால் வெளியிடப்பட்ட அறிக்கையில், கஷோக்கியின் கொடூர படுகொலை குறித்து சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் நன்றாக அறிந்துள்ளதை தன்னால் அறியமுடிவதாக குறிப்பிட்டு அவர் அந்தப் படுகொலைக்கு உத்தரவிட்டோ அன்றி உத்தரவிடாமலோ இருந்திருக்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.
அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவான சி.ஐ.ஏ. இந்தப் படுகொலை குறித்து 100 சதவீதம் உறுதிப்படுத்தவில்லை எனக் கூறியுள்ளது.
ட்ரம்ப் அந்த அறிக்கையில், உலகம் மிகவும் அபாயகரமான இடமாகவுள்ளது. சவூதி அரேபியா, ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் நட்பு நாடாகவும் உள்ளது. ஈரானியர்கள் அமெரிக்கர்கள் பலரையும் அப்பாவி மக்களையும் கொன்று வருகின்ற நிலையில் சவூதி அரேபிய அரசாங்கமானது மத்தியகிழக்கு எங்கும் அடிப்படைவாத மதத் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்காக பில்லியன்கணக்கான பணத்தைச் செலவிட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் இது குறித்து தெரிவித்த சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் அடேல் அல்ஜுபேர்,
எங்கள் தலைமை யாராலும் நீக்கி முடியாத உயரத்தில் உள்ளது. மன்னர் சல்மானும், இளவரசர் முகமது பின் சல்மானும் அவ்வாறான நிலையில் உள்ளவர்கள்.
அதனால் எங்கள் மன்னர் அல்லது பட்டத்து இளவரசரை இகழ்வது போன்ற எந்த விவாதத்தையும் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.
இந்த கொலை தொடர்பான விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணமானவர்களை நாங்கள் தண்டிப்போம்'' என்றும் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
கஜா புயல் மறுசீரமைப்பிற்கு மத்திய அரசிடம் தமிழக முதல்வர் கோரிக்கை.
22/11/2018 இந்தியாவில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பன்னிரண்டு மாவட்டங்களில் மேற்கொள்ளவேண்டிய நிரந்தர சீரமைப்பு பணிகளுக்கு மத்திய அரசிடம் 15,000 கோடி நிதி கோரப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதுதில்லியில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
“தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் கஜா புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
பன்னிரண்டு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிரந்தர சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் 15,000 கோடி நிதி கோரப்பட்டுள்ளது.
கஜா புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள முதல் கட்டமாக 1500 கோடி ரூபாயை இடைக்கால நிவாரணமாகவும் கேட்டுள்ளோம்.
புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய ஆய்வுக்குழுவினரை அனுப்புமாறு அரசின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக மத்திய ஆய்வு குழுவினரை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளார்.” என்றார். நன்றி வீரகேசரி
கராச்சியில் சீன தூதரகம் மீது தாக்குதல் ; இரு பொலிஸார் பலி
23/11/2018 பாகிஸ்தான், கராச்சியிலுள்ள சீனத் தூதரகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரு பொலிஸார் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்படி தூதரகத்தினுள் துப்பாக்கிகளுடன் நுழைய முற்பட்ட 4 பேரை பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸார் தடுத்துள்ளனர். இதன்போதே தாக்குதல் தாரிகள் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனால் இரு பொலிஸார் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந் நிலையில் தூதரகத்திற்கு அருகேயுள்ள பகுதியில் சந்தேக நபர்கள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் போரில் பொலிஸார் சுற்றிவளைப்பு மேற்கொண்டு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். நன்றி வீரகேசரி
பாக்கிஸ்தானில் மற்றுமொரு குண்டுவெடிப்பு- 25 பேர் பலி
23/11/2018 பாக்கிஸ்தானின் வடமேற்குபகுதியில் பொதுமக்கள் அதிகமாக காணப்பட்ட சந்தையொன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களில் 25ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் விழா மற்றும் சந்தைக்காக கூடியிருந்த பகுதிக்குள் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் தன்னை வெடிக்கவைத்துள்ளார்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இடம்பெறும் விழாவொன்றினை இலக்குவைத்து தற்கொலை தாக்குதல் இடம்பெற்றுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பு இடம்பெற்ற பகுதிகளை படையினர் சுற்றிவளைக்கும் காட்சிகளை தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன.
பாக்கிஸ்தானில் இன்று இடம்பெற்றுள்ள இரண்டாவது பாரிய சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
கராச்சியில் உள்ள பாக்கிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சீனாவின் துணைதூதரகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரு காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
துணைதூதரகத்திற்குள் பல ஆயுததாரிகள் நுழைய முயன்றதாகவும் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியவேளை கடும் மோதல் வெடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மோதலின் போது இரு காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மூன்று தற்கொலை குண்டுதாரிகளாவது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இதேவேளை இந்த தாக்குதலிற்கு பலோச்சிஸ்தான் விடுதலை இராணுவம் உரிமை கோரியுள்ளது.
சீனா எங்கள் வளங்களை சூறையாடுகின்றது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே தாக்குதல் இடம்பெற்றன என அந்த அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார் நன்றி வீரகேசரி
கஜா புயல் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபா
23/11/2018 கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து, எங்களின் "த லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்" சார்பாக ஒரு கோடி ரூபா கஜா புயல் நிவாரண நிதியாக வழங்கியுள்ளோம் என சரவணன் தெரிவித்துள்ளார்.

நம் விவசாய நண்பர்கள் கஜா புயலின் தாக்குதலால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கஷ்டம் நஷ்டம் அனைவரின் வாழ்விலும் வரும் போகும், எதுவும் நிரந்தரம் இல்லை. மனவுறுதியுடனும், நம்பிக்கையுடனும் செயற்பட்டால் இவ்வுலகில் வெற்றி பெற்று மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். இதற்கு தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு விவசாயிகளுக்கும் பக்கபலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். நன்றி வீரகேசரி
மயிரிழையில் உயிர் தப்பிய விமானப் பயணிகள்
23/11/2018 பொலிவியாவில் பயணிகள் விமானமொன்று தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பெரு நாட்டிலிருந்து 122 பயணிகள் உட்பட 127 பேருடன் பொலிவியா தலைநகர் லாபோஸ் நோக்கிப் புறப்பட்ட விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

லா போசில் உள்ள எல் ஆல்டோ விமான நிலையத்தில் குறித்த விமானம் தரையிறங்கும்போதே நிறுத்தற் பொறி (லேண்டிங் கியர்) உடைந்ததன் காரணமாகவே கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை விட்டு விபத்துக்குள்ளானது.
எனினும் இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 122 பயணிகளுக்கும், 5 விமான ஊழியர்களுக்கும் எந்த காயமும் இன்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாக ஓடுபாதை உடனடியாக மூடப்பட்டு, சில விமானங்களின் வருனை இரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றதுடன் விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
படேல் சிலையை மிஞ்சும் ராமர் சிலை
25/11/2018 படேல் சிலையை விடவும் உயரம் கொண்டதாக ராமர் சிலையை பிரமாண்டமாக அமைப்பதற்கு உத்தரப் பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது.

குஜராத்தில் உலகிலேயே மிகவும் உயர் கொண்ட (182 மீட்டர்) சர்தார் வல்லபாய் படேல் சிலை இந்திய ரூபாவின் மதிப்பில் மூவாயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டது.
இந் நிலையில், படேல் சிலையை விட ராமர் சிலையை பிரமாண்டமாக அமைப்பதற்கு இந்துவத்துவ அமைப்புக்கள் உத்தரப் பிரதேச அரசை வலியுறுத்தி வந்தன.
இந் நிலையிலேயே ராமர் சிலையை பிரமாண்டாக அமைப்பதற்கு உத்தரப்பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி வெண்கலத்தினால் அமையவிருக்கும் இச் சிலை 221 மீட்டர் உயரம் கொண்டதாக அமைக்கப்படும் என்றும் பாதப் பகுதி 50 மீட்டர் உயரமும், மேல் பகுதி 151 மீட்டர் உயரமும் கொண்டதாக இந்த சிலை அமைக்கப்படும். தலைக்கு மேல் அமையும் சத்ரா என் பகுதி 20 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் குறித்த சிலையின் மாதிரி வடிவமும் புகைப்படமும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே ராமர் கோயிலை கட்டுவதற்கு அவசர சட்டம் கொண்டு வர வலியுறுத்தி அயோத்தியில் இந்துத்துவ அமைப்புகள் இன்று போராட்டம் அறிவித்திருக்கின்றன. இதனால் அயோத்தியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment