இலங்கைச் செய்திகள்


மைத்திரிக்கு செக் வைக்கும் கரு ? : வைரலாகிய விடயம் குறித்து சபாநாயகர் காரியாலயம்

35 ஆண்டுகளுக்கு பின் இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் உயர்வு

யுத்தம் முடிவடைவதற்கு சில நாட்களிற்கு முன்னர் விடுதலைப்புலிகள் என்னை தொடர்புகொண்டனர்- அகாசி

மைத்திரிக்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டத்தில் குதித்துள்ள மக்கள்

மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியதாக ஹன்சார்ட்டில் பதிவு

பாராளுமன்றில் இன்று நடந்தது என்ன ? - முழுவிபரம்

 “முஸ்லிம்களின் குடியேற்றங்களினால் வன்னி மக்களின் தமிழ்மண் பறிபோகின்றது”

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர்தின ஏற்பாடுகள் !

அவசர சந்திப்பில் மைத்திரி , மஹிந்த

பிரதமரோ, அரசாங்கமோ இல்லையென ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது - சம்பந்தன்

நான் அரசமைப்பை மீறவில்லை- பொதுநலவாய செயலாளர் நாயகத்திடம் சிறிசேன

சனல் 4 பேட்டியில் ரணில் - மங்கள தெரிவித்திருப்பது என்ன?

மாவீரர் நாள் நிகழ்விற்கே தடை நினைவேந்தலுக்கல்ல : யாழ் நீதவான் நீதிமன்றம் 

அஸ்கிரிய மல்வத்தை பீடாதிபதிகளின் ஆசிகளுடன் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டார் முன்னாள் பிரதமர்

புதிய பிரதமரை நியமிக்க தான் தயார்: ஜனாதிபதியின் அதிரடி முடிவு

 ரணில் ஊழல்பேர்வழி- விசாரணை செய்ய ஆணைக்குழு- கண்ணீர்விட்டழுதார் சிறிசேன
மைத்திரிக்கு செக் வைக்கும் கரு ? : வைரலாகிய விடயம் குறித்து சபாநாயகர் காரியாலயம்

21/11/2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கடமையிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் தவறியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டி பிரதம நீதியரசர் நளின் பெரேராவிற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என சபாநாயகர் காரியாலயம் அறிவித்துள்ளது.
இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பரவிய அக்கடிதத்தில்,
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றில் பெரும்பான்மையை பெற்ற புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமித்திருக்க வேண்டும்.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறினே அதற்கான நடவடிக்கையை எடுக்கத் தவறிவிட்டார். அரசியல் யாப்பின் 37.2 ஆவது சரத்தின் படி ஜனாதிபதி தனது பொறுப்பை நிறைவேற்றாத பட்சத்தில் பிரதம  நீதியரசரின் துணையுடன் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றும் பாதுகாப்பு படையின் கட்டுப்பாடு சபாநாயகருக்கு உரித்தாக்கப்படும் என்ற ஏற்பாடு சபாநாயகரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் இயலாமை தொடர்பாக பெரும்பான்மை கருத்தை அறியுமாறும் பிரதம நீதியரசரிடம் கோரப்பட்டுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் குறித்த கடிதம் தொடர்பாக சபாநாயகர் காரியாலயம் விடுத்துள்ள மறுப்புச் செய்தியில் ,
அவ்வாறானதொரு கடிதம் அவசியமில்லை, நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டால் சபாநாயகரே ஒரே அதிகாரம் மிக்கவர் என அரசியலமைப்பில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த செய்தி எங்கிருந்து? யார்? அனுப்பியது தொடர்பாக எந்த விடயமும் எங்களுக்குத் தெரியாது. ஆனால் சமூக வலைத்தளங்களில் சபாநாயகர் பிரதம நீதியரசருக்கு கடிதம் எழுதியதாக வைரலாக பரவியுள்ளதாக அறிய கிடைத்தது. என குறிப்பிடப்பட்டுள்ளது   நன்றி வீரகேசரி 35 ஆண்டுகளுக்கு பின் இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் உயர்வு

21/11/2018 கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம்  சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்னர் 33 அடி உயர்வடைந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசனக்குளமான இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 36 அடியாகக்காணப்பட்டபோதும், 1984ஆம் ஆண்டு 1983ஆம் ஆண்டு குளத்தின் அணைக்கட்டில் ஏற்பட்ட பாதிப்புக்காரணமாக  30 அடிக்கு மேலான தண்ணீரை சேமிக்கமுடியாத நிலை காணப்பட்டது.
தொடர்ந்தும் குளம் புனரமைக்கப்படாத நிலையில் 2014ஆம் ஆண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டபோதும் 34 அடி 1 அங்குலமாக குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்பட்டாலும் 30அடி வரையிலான தண்ணீரே சேமிக்கப்பட்டது,
1983ஆம் ஆண்டுக்குப் பின்னர்  இவ்வாண்டிலேயே குளத்தில் 33 அடிக்கு மேற்பட்ட தண்ணீர் இன்று தேக்கப்பட்டுள்ளதாகவும் குளத்தில் 36 அடி வரையான தண்ணீரை தேக்கமுடியும் என்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப்பொறியிலாளர் என்.சுதாகரன்  இன்று தெரிவித்துள்ளார்.
அதாவது கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பானக் குளமான இரணைமடுக் குளம் கடந்த 1975 ஆம் ஆண்டுக்கு பின் எவ்வித பாரிய புனரமைப்பு வேலைகளும் முன்னெடுக்கப் படாத நிலையில்  காணப்பட்டது.
கடந்த 2010ஆம் ஆண்டு  யுத்தத்தின் பின்னர் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளின் விளைவாகவும்  இரணைமடு குளத்தின் கீழான 22 கமக்கார அமைப்புக்களும் 7000 ற்கு மேற்பட்ட விவசாயிகளின் இடைவிடாத கோரிக்கையையும் ஏற்று, இலங்கை அரசாங்கம் நிதி வழங்கும் நிறுவனங்களிடம் கேட்டதற்கிணங்க இப்பாரிய திட்டம் முன்னெடுக்கப்ப பட்டது.
அதாவது கடந்த 2016ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கையும் இடைநிறுத்தப்பட்டு வேலைத்திட்டம் முழுமூச்சுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 ஆசிய அபிவிருத்தி வங்கியினது இலகுகடன் திட்டத்தின் கீழ் குளக்கட்டு இரண்டு  அடியால் உயர்த்தி நீர் கொள்ளளவை கூட்டுவதற்கான திட்ட வரைபும் அதனுடன் இணைந்த ஏனைய கட்டுமானங்களும் வான், பாலம் அமைப்பு வேலைகளும் திருவையாறு ஏற்று நீர்ப்பாசன வேலைகளும் சுமார் 2000 மில்லியன் பெறுமதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி யுத்தம் முடிவடைவதற்கு சில நாட்களிற்கு முன்னர் விடுதலைப்புலிகள் என்னை தொடர்புகொண்டனர்- அகாசி

21/11/2018 யுத்தம் முடிவடைவதற்கு சில நாட்களிற்கு முன்னர் கொழும்பு ஹோட்டலில் தங்கியிருந்த என்னை விடுதலைப்புலிகள் தொடர்புகொண்டனர் என ஜப்பான் அரசாங்கத்தின் முன்னாள் விசேட பிரதிநிதி யசூசி அகாசி தெரிவித்துள்ளார்
கொழும்பின் ஆங்கில நாளேடு  ஒன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
எனக்கு விடுதலைப்புலிகளின் தலைவரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது என தெரிவித்துள்ள அவர் 2003 இல் கிளிநொச்சியில் நான் பிரபாகரனை சந்தித்தேன் அது நீண்ட சந்திப்பு  என குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் சமாதானத்திற்கான வாய்ப்புகள் மற்றும் விடுதலைப்புலிகளிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதானம் குறி;த்த எங்கள் எதிர்பார்ப்புகள் குறித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம் எனவும் யசூசி அகாசி தெரிவித்துள்ளார்.
நான் அப்போது காணப்பட்ட வாய்ப்பை பயன்படுத்துமாறு பிரபாகரனை கடுமையாக வலியுறுத்தினேன்,ஆனால் பிரபாகரன் சமாதான பேச்சுவார்த்தைகளை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என்பதை பின்னர் நான் உணர்ந்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் சந்தி;ப்பிற்கு நாங்கள் ஓன்றாக மதியஉணவருந்தினோம் அவ்வேளை பிரபாகரன் சற்று இயல்பான நிலையில் காணப்பட்டார் காலையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தீவிரமானவையாகவும் உத்தியோகபூர்வமானவையாகவும் காணப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதிய உணவிற்கு பின்னர் நாங்கள் உத்தியோகபூர்வமற்ற பேச்சுகளில் ஈடுபட்டோம்,பிரபாகரன் தனது மகன் தனது குடும்பம் தனது எதிர்பார்ப்புகள் குறித்து குறிப்பிட்டார் எனவும் அகாசி தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் தனக்கு வழங்கப்பட்ட பல சந்தர்ப்பங்களை தவறவிட்டார் என்பது குறித்து நான் ஆழ்ந்த கவலைகொண்டுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் முடிவடைவதற்கு சில நாட்களிற்கு முன்னர் கொழும்பு ஹோட்டலில் தங்கியிருந்த என்னை விடுதலைப்புலிகள் தொடர்புகொண்டனர் எனவும் அகாசி தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் யுத்தநிறுத்தத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர் அவர்கள் அதற்காக என்னை தொடர்புகொண்டனர் தான் விடுதலைப்புலிகளின்  அரசியல் பிரிவை சேர்ந்தவர் என என்னை தொடர்புகொண்ட நபர் தெரிவித்தார் எனவும் அகாசி தெரிவித்துள்ளார்.
நான் வெறுமனே யுத்த நிறுத்தம் மாத்திரம் போதுமானதல்ல ஆயுதங்களை கைவிடவேண்டும், பொதுமக்களை விடுவிக்கவேண்டும் என அவரிடம் தெரிவித்தேன் எனவும் அகாசி குறிப்பிட்டுள்ளார்.
அவர் எனது நிலைப்பாட்டை பிரபாகரனிடம்  தெரிவித்த  பின்னர் என்னை தொடர்புகொள்வதாக தெரிவித்தார் ஆனால் பின்னர் என்னைஅவர் தொடர்புகொள்ளவி;ல்லை என்றும் அகாசி குறிப்பிட்டுள்ளார்.
அன்டன் பாலசிங்கம் தமிழ் செல்வன் மற்றும் சர்வதேச மோதல்கள் குறித்த அனுபவமிக்கவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகளிற்கான வாய்ப்புள்ளதா என ஆராய்ந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் பிரபாகரனின் மனது யுத்தவெற்றிகளால் நிரம்பியிருந்தது அவர் அளவுக்கதிகமான தன்னம்பிக்கை கொண்டிருந்தார் என நான்  நினைக்கிறேன் என யசூசி அகாசி தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 


மைத்திரிக்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டத்தில் குதித்துள்ள மக்கள்

21/11/2018 நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு காரணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என கூறியும் ஜனாதிபதியின் ஜனநாயக விரோத செயற்பாட்டை கண்டித்தும் கொழும்பு விகாரமகா தேவி பூங்கா முன்றலில் திரண்ட மக்கள் தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை 4 மணியளவில் ஆரம்பான இப் போராட்டமானது தம்பர அமில தேரரின் உரையோடு ஆரம்பமானது.

பௌத்த மத துறவிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.
இச் சத்தியாகிரக போராட்டத்தை சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற் சங்கங்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப் போராட்டத்தில் ஜனாதிபதிக்கு எதிராக கையெழுத்து வேட்டையும் நடாத்தப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி 
மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியதாக ஹன்சார்ட்டில் பதிவு

21/11/2018 பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியதாக ஹன்சார்ட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அதன் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியினால் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டு புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டது.
இந் நிலையில் இவ்வாறு நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைகள் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணியினரால் கொண்டுவரப்பட்டு பெரும்பான்மை காண்பிக்கப்பட்டது.
இவ்வாறு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பதிவேடான ஹன்சார்டில் பதியப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள ஹன்சார்டில்,
“கடந்த 14 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஆட்சி அரசியலமைப்பின் 48(2)ஆவது சரத்தின் படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. 
மேலும் புதிய பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவை நியமிக்கப்படாமையினால் இன்று முதல் பிரதமரராகவோ அமைச்சர்களாகவோ பிரதி அமைச்சர்களாகவோ இராஜாங்க அமைச்சர்களாகவோ ஆளுங்கட்சியாகவோ எவரையும் அனுமதிக்க முடியாது” என குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி

பாராளுமன்றில் இன்று நடந்தது என்ன ? - முழுவிபரம்

23/11/2018 பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமக்கு அதிக இடம் வழங்கபட வேண்டும் என மஹிந்த தரப்பினரும் ராஜபக்ஷ குழுவினர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்த நிலையில் தம்மை ஆளும் கட்சியென ஒருபோதும் கூற முடியாது எனவும் அதனால் அவர்களுக்கு அதிக இடம் வழங்க முடியாது என ரணில் தரப்பினரும் மோதிக்கொண்டனர். 
இந்நிலையில்  பாராளுமன்றத்தில் கட்சிகளின் பெரும்பான்மை அடிப்படையிலேயே  தெரிவுக்குழு அமைய வேண்டும் என ரணில் தரப்பினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து இதுதொடர்பில் ஆராய இன்று காலை சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் எவ்வித இணக்கப்பாடும் இன்றி கூட்டம் முடிவடைந்ததை அடுத்து இன்று காலை பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.
இதையடுத்து பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் 5 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 5 உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஒரு உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஒரு உறுப்பினரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் மன்றில் அறிவித்திருந்தார்.
இது குறித்து பாராளுமன்றில் அரசியலமைப்புக்கு முரணாக மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டு ஒருமாத காலம் முடிவடையும் நிலையில் இன்னும் பாராளுமன்றில் அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் உள்ளனர். 
அவ்வாறு தமக்கு பெரும்பான்மை இருக்கின்றது என நிரூபித்தாலும் தாம் அவர்களுக்கு இடம்விட்டு விலகியிருக்க தயாராக இருக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறும் அங்கத்தவர்கள் தொடர்பாக மன்றில் இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிய மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரை அரசாங்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிரதமர் என ஒருவர் இல்லை எனவும் சபாநாயகர் ஏற்கனவே அறிவித்திருந்தீர்கள். அதன் அடிப்படையில் ஆட்சியில் இல்லாதவர்களுக்கு எவ்வாறு தெரிவுக்குழுவில் அதிக உறுப்பினர்களை வழங்க முடியும் என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இதேவேளை, சபாநாயகரின் அறிவிப்பை ஏற்க மாட்டோம் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
தெரிவுக்குழுவில் எனக்கும் ஒரு உறுப்புரிமை தேவையென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் டக்ளஸ் தேவானந்த பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.
நான் ஆளுங்கட்சியில் இருக்கின்றேனா அல்லது எதிர்க்கட்சியில் இருக்கின்றேனா என்பது எனது முடிவு.
ஆனால் நான் எனது கட்சியின் மூலமே நான் பாராளுமன்றத்திற்கு தெரிவானேன். அதன்படி எனது கட்சிக்கும் தெரிவுக்குழுவில் உறுப்புரிமை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.
தற்போது அராசாங்கம் என்று ஒன்று இல்லை, தெரிவுக் குழு குறித்து வாக்கெடுப்பை நடத்துங்கள் மக்கள் விடுதலை முன்னணியின் அனுரகுமார திஸாநாயக்க மன்றில் வேண்டுகொள் விடுத்தார்.
இதேவேளை, பாராளுமன்றில் அவநம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்படவில்லையென விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டிருந்தார்.
இன்று மன்றில் தினேஷ் குணவர்தன, லக்ஷ்மன் கிரியெல்ல, டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்தன, அநுரகுமார திஸாநாயக்க, வீமல் வீரவன்ச, அஜித் பெரேரா ஆகியோர் தெரிவுக்குழு தொடர்பில் பல்வேறு கருத்துக்களை மன்றில் முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில், ஆட்சியில் உள்ளவர்களுக்கே பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அதிகமான அங்கத்துவம் வழங்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ  தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் பாராளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியுள்ளமையால் அவர்களின் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சபாநாயகரின் அறிவிப்புக்கமைய பெரும்பான்மையற்றவர்களுக்கு எவ்வாறு அதிகமான அங்கத்துவத்தை வழங்க முடியும் என ஐக்கிய தேசியக் முன்னணியினர் கேள்வியெழுப்பினர். 
இதற்கு மத்தியிலேயே இன்று பாராளுமன்றம் கூடிய போது எழுந்த வாதப் பிரதிவாதங்களால் மஹிந்த அணியினர் வெளிநடப்பு செய்திருந்தனர்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்தவர்கள் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பது தொடர்பில் மன்றில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. ஆகியோர் கோரிக்கை விடுத்தமைக்கு அமைய, சபாநாயகர் இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படுமென அறிவித்தார். 
இதனையடுத்து மஹிந்த தரப்பு வெளிநடப்பு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது லக்ஷ்மன் கிரியெல்ல, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், சரத் பொன்சேகா எம்.பி. உள்ளிட்ட சிலருக்கு இலத்திரனியல் கோளாறு காரணமாக இலத்திரனியல் முறையில் வாக்கை செலுத்த முடியாமல் இருந்தது. அவர்கள் வாய்மூலம் தமது வாக்கை செலுத்தினர்.
தெரிவுக்குழு உறுப்பினர் தொடர்பில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 121 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 
 “முஸ்லிம்களின் குடியேற்றங்களினால் வன்னி மக்களின் தமிழ்மண் பறிபோகின்றது”


23/11/2018 முஸ்லிம்களின் குடியேற்றங்களினால் வன்னிமக்களின் தமிழ்மண் பறிபோய்க்கொண்டிருக்கின்றது என பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். 
இன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் மாவட்ட தலமை காரியாலயம் அதன் தலைவர் பிரபாகணேசனால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், மக்கள் முன்னிலையில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் இணைப்பாளர் வி.ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற  நிகழ்வில் பொதுச்சுடரினை கட்சியின் தலைவர் பிரபா கணேசன் மற்றும் கட்சியின் தேசிய இணைப்பாளர் டி.வை.பிரசாத் மாவட்ட இணைப்பாளர் மாதவராசா மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் தொழில் அதிபர் தெய்வேந்திம் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து மாவட்ட அலுவலகம் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்வில் சிறப்புரையினை  ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன் வன்னியில் முல்லைத்தீவு, வவுனியா மன்னார் மாவட்டங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார நிலை மிக மோசமாகவுள்ளது. 
கிராமங்களில் சென்று மக்களை பார்க்கின்ற பொழுது ஒருவேளை உணவிற்கு கூட கஷ்டமான நிலையில் உள்ளனர்.  கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சிறுநீரக பிரச்சினை, வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இந்த மக்களிடம் இருக்கின்றன.
இவை தீர்க்கப்படுமாக இருந்தால் நேர்மையான ஊழல் அற்ற திறமையான பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இந்த மண்ணுக்கு தேவைப்படுகின்றார்கள்.
குறித்த  மண்ணில் கடந்த 15 ஆண்டு காலமாக எந்த ஒரு தமிழ் அமைச்சர்களும் இங்கு இல்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.
அதுமட்டுமல்ல அரசாங்கத்தின் ஊடாக கிடைக்கப்பெறும் நிதிகள் சரியான முறையில் உள்வாங்கப்பட்டு மக்களுக்கான தேவையினை முன்னெடுக்கவில்லை என்பதும் கவலைக்குரியவிடயமாக இருக்கின்றது.
ஏன் என்றால் இன்று ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகிய எவருமே தமிழ்மக்களுக்கு தேவையானவற்றை கொடுக்கப்போவதில்லை என்பதில் நாம் உறுதி கொள்ளவேண்டும்.
அரசியல் தீர்வினை அவர்கள் ஒருபோதும் வழங்கப்போவதில்லை என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.
சிங்களவர்களின் மொத்த வாக்குகளை அவர்கள் இழக்க தவறுவதால் தமிழ் மக்களுக்கான தேவைகளையும் அரசியல் தீர்வினையும் கொடுக்கப்போவதில்லை. ஆனால் தமிழர்கள் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வரமுடியாத நிலை இருக்கின்றது.
அந்த அடிப்படையில் இங்கு இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் மத்திய அரசாங்கத்திடமிருந்து எவ்வாறு பெற்று மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான விடயமாக நான் பாக்கின்றேன்.
சிரித்தபடி கேட்டுவாங்கக்கூடிய விடயங்களை சிரித்தபடியும், சண்டையிட்டு கேட்டு வாங்கக்கூடிய விடயங்களை சண்டையிட்டு வாங்கியும் எமது மக்களுக்கு தேவையானவற்றை நாங்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும் இதில் நாங்கள் கவனமாக இருக்கவேண்டும்.
அந்த அடிப்படையில் இங்கு கஷ்டப்படும் மக்களுக்கு ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஊடாக முழுமையான ஒரு சேவையினை நான் செய்வதற்கு கடைமைப்பட்டுள்ளேன்.
இன்று மக்கள் ஒரு மாற்றத்தினை எதிர்பார்கிறார்கள். நான் தமிழ்தேசியக்கூட்டமைப்பினரை குறை கூற விரும்பவில்லை தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் உரிமையினை பெற்றுதருவோம் என்றுதான் மக்களிடம் வாக்குகளை வாங்கியுள்ளார்கள். 
அபிவிருத்தி அல்ல ஆகவே அவர்கள் உரிமையினை நூறு ஆண்டுகளுக்கு பிறகாவது தேடி கண்டுபிடித்துக் கொடுக்கட்டும் அதுவரை எமது மக்களின் வாழ்க்கை இல்லாமல் போகச்செய்ய முடியாது ஆகவே அபிவிருத்தி எமக்கு தேவையாக இருக்கின்றது.
உரிமையும் அபிவிருத்தியும் என்ற தண்டவாளத்தினை போன்று சமச்சீராக செல்லவேண்டும். அப்படி சென்றால்தான் எமது மக்களுக்கான தீர்வினை நாம் சரியான முறையில் பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருக்கும் ஆகவே எமது மக்களுக்கு தேவையான வீட்டுத்திட்டத்தை முதலில் செய்துகொடுக்கவேண்டிய கடமைப்பாடு எங்களிடம் இருக்கின்றது.
அந்த அடிப்படையில் வன்னிமாவட்ட மக்களின் எதிர்கால சுபீட்ச வாழ்க்கைக்காக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் உறுதியுடன் செயற்படும். வன்னிமாவட்டத்தில் தமிழ் அமைச்சர்கள் யாரும் இல்லாத காரணத்தால் அரசாங்கத்தில் இருந்து கிடைக்கும் அபிவிருத்திகள் எமது தமிழ்மக்களுக்கு கிடைக்காமல் போகின்றமையினை பார்க்கும் போது கவலையாக இருக்கின்றது.
வன்னிமாவட்டத்தில் அடிமட்டத்தில் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் மக்களிடம் இருந்து முஸ்லிம் அமைச்சர்கள் வாக்குகளை பெற்றுக்கொள்கின்றார்கள்.
தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு அமைச்சர்களாக பதவி ஏற்ற பின்னர் தமது சமூகத்திற்குதான் கருணை காட்டுகின்றார்கள்.
முஸ்லிம் வீட்டுத்திட்டங்களுக்கு சென்றால் அழகான வீடுகள், வீதிகள் ,மசூதிகள் கடைத்தொகுதிகள் கட்டப்பட்டு முழுமையான கிராமமாக அந்த வீட்டுத்திட்டங்கள் காட்சியளிக்கின்றன.
எமது வீட்டுத்திட்டங்களை பார்க்கும் போது மிக மோசமான நிலையில் இருக்கின்றன. எமது மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு தமது சமூகத்தினையே முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இதனைவிடவேறு மாவட்டங்களில் இருந்து குருநாகல், கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் இருந்து முஸ்லிம் குடும்பங்களை குடியேற்றி முஸ்லிம் குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகின்றார்கள் வன்னி மக்களின் தமிழ் மண் பறிபோகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது.
முல்லைத்தீவு நகரத்தில் முஸ்லிம் குடியேற்றம் வவுனியா நகரத்தில் முஸ்லிம் குடியேற்றம் இவை இல்லாது ஒழிக்கப்படவேண்டும் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவனாக நான் செயற்படவில்லை முஸ்லிம் மக்களை தவறாக வழிநடத்தும் முஸ்லிம் அரசியல் வாதிகளை அமைச்சர்களுக்கு எதிராக செயற்படவேண்டிய காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம்.
இதனை தமிழ் மக்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் தமிழர்கள் தமிழர்களுக்குத்தான் வாக்களிக்கவேண்டும் என்ற சிந்தனையினை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர்தின ஏற்பாடுகள் !

23/11/2018 மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபியின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத் தூபியைச்சுற்றி வளைவுச்சுவர்கள் அமைக்கப்பட்டு நினைவுத்தூபி வடிவமைக்கப்பட்டு மாவீரர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகியது.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது இன்னுயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்த முதலாவது மாவீரர் சங்கரின் நினைவாக, அவர் உயிரிழந்த கார்த்திகை 27 ஆம் திகதி, விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனினால் மாவீரர் தினமாக 1987ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.
அன்றிலிருந்து தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் அஞ்சலிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடை கோரி கோப்பாய் பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி அவசர சந்திப்பில் மைத்திரி , மஹிந்த

23/11/2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையிலான அவசர சந்திப்பொன்று இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச் சந்திப்பை தொடர்ந்து ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முக்கிய சில உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.    நன்றி வீரகேசரி 


பிரதமரோ, அரசாங்கமோ இல்லையென ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது - சம்பந்தன்

23/11/2018 இலஞ்சம் கொடுப்பதன் மூலமும், வன்முறைகள் மூலமும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது.  ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வன்முறையான முறையில் நடந்துகொண்டனர். இதனால் நாட்டுக்கும், சட்டவாக்க சபைக்கும் வெட்கம் ஏற்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  
பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை இழந்த ஒருவர் நாட்டின் பிரதமராகவோ அல்லது அமைச்சரவையின் தலைவராகவோ  ஒருபோதும் இருக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசியல் அமைப்பினை மீறி எவரும் செயற்பட இடமளிக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். 
பாராளுமன்றத்தில் இன்று ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 
அவர் மேலும் கூறுகையில், 
கடந்த மாதம் 26 ஆம் திகதிக்கு பின்னர்  இந்த பாராளுமன்றத்தில் என்ன நடந்தது, சபாநாயகர் நாற்காலி பறிக்கப்பட்டு சிலர் தாக்கப்பட்டு, மிளகாய்த்தூள் வீசப்பட்டு ஜனநாயகத்திற்கு முரணான வகையில் சிலர் நடந்துகொண்டனர். 
அரசியல் அமைப்பினை அனைவரும் மதிக்க வேண்டும், அதனை  மீறும் வகையில் எவரும் நடந்துகொள்ளக்கூடாது. இப்போது பிரதமர் ஒன்றுவரும் அரசாங்கம் ஒன்றும் இல்லை என ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது  என்பதே எமது  நிலைப்பாடு என அவர் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 

நான் அரசமைப்பை மீறவில்லை- பொதுநலவாய செயலாளர் நாயகத்திடம் சிறிசேன

23/11/2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் இலங்கையின் அரசமைப்பிற்கு உட்பட்ட விதத்திலேயே செயற்பட்டுள்ளதாக  பொதுநலவாய செயலாளர் நாயகம் பரொனொஸ் பட்றீசியா ஸ்கொட்லாண்டிடம் தெரிவித்துள்ளார்.
நான் தொடர்ந்தும் ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றுவேன் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகத்துடனான தொலைபேசி உரையாடலின் போதே சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜெயசூரியவை நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளை பின்பற்றுமாறு நான் தெளிவாககேட்டுக்கொண்டேன் என தெரிவித்துள்ள சிறிசேன இலத்திரனியல் முறையை பயன்படுத்தி வாக்கெடுப்பை நடத்துமாறும் அல்லது பெயர்மூல வாக்கெடுப்பை நடத்துமாறும் கேட்டுக்கொண்டதாகவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் இலங்கை ஜனநாயகத்தை பின்பற்றுவதை பொதுநலவாயம் முக்கியமான விடயமாக கருதுகின்றது என தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை தற்போதைய நெருக்கடியை உரிய முறையில் தீர்வை காணும் என்ற நம்பிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி சனல் 4 பேட்டியில் ரணில் - மங்கள தெரிவித்திருப்பது என்ன?

24/11/2018 எனக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ளது, பெரும்பான்மையுள்ளவரை என்னை வெளியேற்ற முடியாது நான் பெரும்பான்மையை இழந்தால் மாத்திரமே என்னை வெளியேற்ற முடியும் என ரணில் விக்கிரமசிங்க சனல் 4ற்கு கருத்து  தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம்  உங்களிற்கு எதிராக உள்ள நிலையில் - பலவந்தமாக ஆட்சியதிகாரத்திலிருக்க முயல்வதன் மூலம் நீங்கள் அரசமைப்பை மீறுகின்றீர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவினால் பெரும்பான்மையை நிருபிக்க முடிந்தால் அவரால் மீண்டும் அலரிமாளிகையை பெறமுடியும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வருவதால் எவ்வாறான தாக்கங்கள் ஏற்படலாம் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மங்களசமரவீர ஒரு சொல்லில் அச்சம் என குறிப்பிடலாம் என தெரிவித்துள்ளார்
மகிந்த ராஜபக்சவும் அவரது நிர்வாகத்தவர்களும் இந்த நாட்டை ஆட்சி செய்த  பத்து வருடங்களில் அச்சத்தின் குறியீடுகளாக விளங்கினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் கடந்த மூன்று வாரங்களில் மீண்டும் அச்ச உணர்வை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக செயற்பட்டுள்ள விதமும் அதற்கு அவர் மறைமுகமாக ஆதரவளித்துள்ளமையும் மகிந்த ராஜபக்ச மீண்டும் நிரந்தரமாக பிரதமரானால் எவ்வாறான நிலை காணப்படும் என்பதை மக்களிற்கு உணர்த்தியுள்ளது எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 


மாவீரர் நாள் நிகழ்விற்கே தடை நினைவேந்தலுக்கல்ல : யாழ் நீதவான் நீதிமன்றம் 

24/11/2018 “யாழ்ப்பாணம் கோப்பாயில் 51ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடை விதித்தது.எனினும் நினைவுகூருவதற்கு எந்த தடையையும் நீதிமன்றம் வழங்கவில்லை.
“வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் சின்னங்கள், கொடிகள் மற்றும் வரைபடங்கள் பயன்படுத்தப்பட்டு நிகழ்வு நடத்தப்படவுள்ளதாக பொலிஸாரின் புலன் விசாரணையின் அடிப்படையில் அறியப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் குற்றம் இடம்பெற்றதாக பொலிஸாரால் குறிப்பிடப்படவில்லை.
எனவே வீரசிங்கம் சிறிதரன் மற்றும் அவர் சார்ந்தவர்கள் அந்தக் காணியில், பயங்கரவாத தடைச் சட்டத்தில் ஒழுங்குமுறைகள் வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள், சின்னங்கள் மற்றும் வரை படங்களைப் பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்த தடைவிதிக்கப்படுகிறது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் கட்டளையை வழங்கினார்.
எனினும் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடைவிதிக்கப்படுவதாக நீதிமன்றால் எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.
யாழ்ப்பாணம் கோப்பாயில் 512ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் என்பவரால் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பயங்கரவாத தடைச் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும்.
அந்த அமைப்பில் இருந்து உயிரிழந்த உறுப்பினர்களை நினைகூருவதற்காக நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
எனவே இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தல் என்ற ஏற்பாடுகளின் கீழ் நிகழ்வுக்கு தடை உத்தரவு வழங்க வேண்டும்.
அத்துடன், நிகழ்வில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள், இலச்சினைகள் என்பவையும் பயன்படுத்த தடை உத்தரவை மன்று வழங்கவேண்டும்” கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றல் நேற்றுமுன்தினம் வழக்குத் தாக்கல் செய்தனர்.
அந்த மனு மீதான கட்டளை நேற்று மாலை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் வழங்கினார்.  நன்றி வீரகேசரி 
அஸ்கிரிய மல்வத்தை பீடாதிபதிகளின் ஆசிகளுடன் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டார் முன்னாள் பிரதமர்

24/11/2018 முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பௌத்த மகா பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
கண்டிக்கு விஜயம் செய்த ரணில் விக்ரமசிங்க முதலாவதாக மல்வத்தை மகா விகாரையின் பீடாதிபதி திப்பட்டுவாவே மகாநாமே ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்து தேரரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் அஸ்கிரிய மகா விகாரைக்கு சென்று  அஸ்கிரிய பீடாதிபதி ஸ்ரீ வரகாகொட ஞானரத்ன தேரரை சந்தித்து ஆசிர்வாதமும் பெற்றுக் கொண்டார்.
ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்திருந்த ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கான மக்களின் நீதிக் குரல் என்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டார்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில்; பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாஸ  லக்ஷமன் கிரியெல்ல பாட்டாளி சம்பிக்க ரணவக்க மற்றும் மனோ கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி புதிய பிரதமரை நியமிக்க தான் தயார்: ஜனாதிபதியின் அதிரடி முடிவு

25/11/2018 பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமையவும்,  225 பேரைக் கொண்ட சபையில் பெரும்பான்மையானது நிரூபிக்கப்பட்டால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், மகிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இருந்தால் அவர் எந்த தடையுமின்றி பிரதமராக நீடிக்கலாம். அப்படி அவருக்கு பெரும்பான்மை பலம் இல்லை என நிரூபிக்கப்பட்டால்,
அவரே ஒரு முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்.
ஆனால், ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு வாய்ப்பு இல்லை. நானே பதவியில் இருந்து நீக்கி விட்டு, அவரை நியமிக்க முடியாது, என்பதில் உறுதியாக இருக்கிறேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 


 ரணில் ஊழல்பேர்வழி- விசாரணை செய்ய ஆணைக்குழு- கண்ணீர்விட்டழுதார் சிறிசேன

25/11/2018 பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை  மீண்டும் ஒருபோதும் நியமிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அதிகாரப்போட்டியை தீவிரப்படுத்தியுள்ளார் 
வெளிநாட்டு செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
ரணில்விக்கிரமசிங்க மோசமான ஊழல்பேர்வழி எனவும் சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.
ஐக்கியதேசிய கட்சிக்கு பெரும்பான்மையிருந்தால் கூட அவர்களை ரணில் விக்கிரமசிங்கவை என்முன்னால் நிறுத்தவேண்டாம் நான் அவரை பிரதமராக்க மாட்டேன் என ஐக்கியதேசிய கட்சியினரிடம் தெரிவித்துள்ளேன் என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
எனது வாழ்நாளில் அவரை பிரதமராக நியமிக்கப்போவதில்லை என சிறிசேன தெரிவித்துள்ளார்.
2015ற்கு பின்னர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆணைகுழுவொன்றை அமைக்கப்போவதாக சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவர் ஊழல்மிகுந்தவர்,அவரது பொருளாதார கொள்கைகள் உள்ளுர் தொழில்துறைக்கு பொருத்தமானவையில்லை என சிறிசேன தெரிவித்துள்ளார்.
எங்கள் கலாச்சாரத்திற்கு பொருத்தமில்லாத தீவிரதாரளமயவாத கொள்கையை ரணில் விக்கிரமசிங்க நடைமுறைப்படுத்த முயன்றார் எனவும் சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி தேர்தலில் தோல்வியடைந்தவேளை ரணில் விக்கிரமசிங்கவை  பதவிவிலகுமாறு எவ்வாறு மன்றாடினேன் என விபரித்துள்ள சிறிசேன செய்தியாளர்கள் மத்தியில் கண்ணீர் சிந்தியுள்ளார்.
அவரது பொருளாதார கொள்கைகள் காரணமாகவே நாங்கள் தேர்தலில் தோற்றோம் என அவரிற்கு தெரிவித்தேன்,இந்த அறையில் வைத்து அவரை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டேன் அவர் அதனை ஏற்க மறுத்தார் என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் 100 தடவைக்களிற்கு மேல் வெளிப்படையாக மோதியிருப்போம் எங்கள் மத்தியிலான அதிகாரப்போட்டி குறித்து அமைச்சரவை வெளிப்படையாக அறிந்திருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமராக நியமிக்கப்பட்டவர் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படவேண்டும் என்ற பாரம்பரியமுள்ளது என தெரிவித்துள்ள சிறிசேன என்னால் ரணிலுடன் இணைந்து பணியாற்ற முடியாது ஐக்கியதேசிய கட்சி வேறு எவரையாவது நியமிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி No comments: