வாழ்வை எழுதுதல் அங்கம் 07 எங்களுக்கு மதிய உணவளித்த பணிஸ் மாமாவின் கதை! இன்று அலரிமாளிகைக்காக அடிபடும் சிங்களத் தலைவர்களுக்கும் இந்தக்கதை சமர்ப்பணம்!! - முருகபூபதி


இவரைத் தெரியுமா?
இலங்கையின் அரசியல் வரலாற்றைத் தெரிந்து வைத்திருக்கும் மூத்ததலைமுறையினருக்கு இவரை நன்கு தெரியும். சமகாலத்தின் இளம் தலைமுறையினர் இவரை அறிந்திருக்கமாட்டார்கள்.
இவரது இயற் பெயர் டொன் விஜயாணந்த தகநாயக்கா. அக்கால பள்ளி மாணவர்கள் இவரை பணிஸ் மாமா எனவும் அழைத்தனர். நானும் மாணவப்பராயத்தில் இவரை அவ்வாறுதான் அழைத்தேன்.

எங்கள் ஊரில் நான் ஆரம்ப வகுப்பு படித்த பாடசாலையில் மதியவேளையில் ஒரு பேக்கரியிலிருந்து ஒருவர் சைக்கிளின் கரியரில் பெரிய பெட்டியை இணைத்து அதில் எடுத்துவரும் சீனிப்பாணி தடவிய பணிஸ் மிகவும் சுவையானது. இடைவேளையில் எமக்கு உண்பதற்கு கிடைக்கும். அத்துடன் அவுஸ்திரேலியா - நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவு பெக்கட்டுகள் தலைமை ஆசிரியரின் அறையில்  அடுக்கப்பட்டிருக்கும். மதியவேளையில் எங்கள் பெரியம்மா உறவுமுறையுள்ளவர் அங்கு வந்து விறகடுப்புமூட்டி பால் காய்ச்சித்தருவார்கள். பெரியம்மாவுக்கு மாதம் முடியும்போது பால் காய்ச்சிய கூலியை பாடசாலை நிருவாகம் வழங்கும்.
மாணவர்களுக்காக இந்த உபயத்தை செய்பவர் கல்வி மந்திரியான தகநாயக்கா அவர்கள்தான்  என்று  ஒருநாள் பெரியம்மாதான் எனக்கும் எனது மாணவப்பராயத்து நண்பர்களுக்கும் சொன்னார்கள். அன்றிலிருந்துதான் அமைச்சர் தகநாயக்காவை பணிஸ் மாமா என அழைக்கத்தொடங்கினோம்.
அவர், தென்னிலங்கையில் காலி என்ற ஊரில்  1902 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி  திரு. திருமதி முகாந்திரம் தியோனிஸ் சேபால பண்டித தகநாயக்கா தம்பதியரின் புதல்வராகப்பிறந்தார். அதுவரையில் இவருடன் இவரது தாயாரின் கருவறையில்  இருந்த மற்றும் ஒரு குழந்தையும் அன்றைய தினம்  பிறந்தது.


இரட்டையர்களான இந்தக்குழந்தைகளில் விஜயானந்த  தகநாயக்கா மாத்திரம் இலங்கை அரசியலில்  பிரபலமானார். 1997 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி,  தான் பிறந்த ஊரிலேயே மறைந்திருக்கும் இவரது வாழ்வைத்தான் இங்கு மீண்டும் எழுதுகின்றேன்.
ஏன் எழுதநேர்ந்துள்ளது என்பதை இந்தப்பதிவை படிப்பதன்மூலம் தெரிந்துகொள்ளமுடியும்.

காலி ரிச்மண்ட் கல்லூரியிலும் கல்கிஸை புனித தோமஸ் கல்லூரியிலும் பயின்றுள்ள தகநாயக்கா ஆசிரியராக பணியாற்றியவர்.

மாணவப்பராயத்திலிருந்து எளிமையாக வாழக்கற்றுக்கொண்டிருக்கும் இவர், இடது சாரி சிந்தனைகளினால் கவரப்பட்டு முதலில் இணைந்தது லங்கா சமமாஜக்கட்சியாகும். மலையகத்தில் பசுமையை துளிர்க்கச்செய்த இந்தியத்தமிழர்களின் வாக்குரிமை பறிப்பு உட்பட பல அநீதியான சட்டங்கள் அமுலுக்கு வந்த சமயங்களில் அம்மக்களுக்காக குரல் கொடுத்தவர்.

அன்றைய அரசாங்க சபைக்கு  பிபிலை தொகுதியிலிருந்து தெரிவானவர். தனக்குச்சரியெனப்பட்டதை துணிந்து பேசுவார். செய்வார். தனக்கு எதிராக ஆளும்தரப்பு நடத்தும் வழக்குகளிலும் தனக்கென வாதாடுவதற்கு சட்டத்தரணிகளை நாடாமால் தமக்குத் தாமே நீதிமன்றில் தோன்றி வாதாடி வெற்றிபெறுவார்.

காலி மாநகர மேயராகவும் பணியாற்றியவர். காலி தொகுதியில் 1947 இலும் 1952 இலும்  வெற்றிபெற்றவர்.  ஒருதடவை அன்றைய அரசு உடுபுடவைகளின் விலையை உயர்த்தியதை கண்டித்து, ஏழை மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு கோவணம் அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்திறங்கினார்.
 ஆனால், சபாநாயகர் அவரை அந்த ஆண்டிகோலத்தில் நாடாளுமன்றின் உள்ளே அனுமதிக்கவில்லை.

ஆனால்,  சமகாலத்தில் தூய வெண்ணிற ஆடைகளை அணிந்து சொகுசு வாகனங்களில் நாடாளுமன்றம் வரும் அரசியல்வாதிகள், அநாகரீகமாக நடந்து அம்மணமாகியிருக்கிறார்கள்.
 அந்த "அம்மணக்காட்சி" களை ஊடகங்களில் பார்த்து வருகின்றோம்.

பண்டாரநாயக்கா உருவாக்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து 1956 இலும் காலி தொகுதியில் தெரிவாகி கல்வி அமைச்சரானார். அக்காலப்பகுதியில்தான் (1956 - 1959) நாம் பாடசாலையில்  சீனிப்பாணி தடவிய பணிஸ் சாப்பிட்டோம். சுவையான பால் அருந்தினோம்.

எதிர்பாராத வகையில் பண்டாரநாயக்கா 1959 செப்டெம்பரில் ஒரு சரஸ்வதி பூசை காலத்தில் கொல்லப்பட்டபோது, அவரால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அன்றைய மகா தேசாதிபதி ஒலிவர் குணதிலக்கா அவர்கள்,  தகநாயக்காவை பிரதமராக்கினார். அந்த இடைக்கால அரசில் இவர் பாதுகாப்பு , வெளிவிவகாரம் உட்பட கல்வி அமைச்சையும் பொறுப்பேற்றிருந்தார்.
எனினும் இவர் அங்கம் வகித்த ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் இவரது தெரிவை விரும்பவில்லை. இவருக்கு இடையூறுகளை செய்தனர்.
 எளிமையை விரும்பியவர், ஊழலுக்கு எதிரானவர். இவர் பிரதமராகவும் முக்கிய அமைச்சுகளுக்கும் பொறுப்பாகவும் இருந்தால் தங்களால் அரசியலைவைத்து பிழைக்கமுடியாது என்பது அந்த எதிர்ப்பாளர்களின்  எண்ணம்.

அவர்களின் இடையூறுகளை பொறுக்கமாட்டாத பிரதமர் தகநாயக்கா அதிரடியாக சில அமைச்சர்களை நீக்கினார். அவர்களின் பதவிகளை தன்னுடன் இணைந்து பணியாற்றக்கூடியவர்களிடம் ஒப்படைக்கப்பார்த்தார்.

எனினும் அது நிரந்தரமாக சாத்தியமாகவில்லை. தாமதிக்காமல் அரசை கலைத்துவிட்டு தேர்தலுக்கு நாள் குறித்தார். அதற்கு முன்னர் இலங்கையில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொகுதிவாரியாக தேர்தல் நடந்தது.
அதனால் பணம் வீண் விரயமாவதை விரும்பாத தகநாயக்கா ஒரே நாளில் நாடு முழுவதற்கும் தேர்தல் நடத்தும் நடைமுறையை அறிமுகப்படுத்தினார்.

அவர் பிரதமராக பதவியிலிருந்த காலம் ஓராண்டுதான். ஆனால், அந்த ஓராண்டிற்குள் அவர் இலங்கை அரசியல் வரலாற்றில் முன்மாதிரியான தலைவர் என்ற பெயரையும் புகழையும் பெற்றார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச்சேர்ந்தவர்களை அமைச்சுப்பதவியிலிருந்து அவர் நீக்கியமையால் வரவிருக்கும் தேர்தலில் இக்கட்சியின் ஆதரவு தனக்கு கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

லங்கா ஜனநாயகக்கட்சியை   (லங்கா பிரஜா தந்திரவாதி) உருவாக்கி அதன் சார்பில் போட்டியிட்டார். எனினும் தேர்தல் முடிவு வரும்வரையில் காபந்து அரசின் பிரதமராக அந்த பதவிக்குரியவரின் அரச வாசஸ்தலமான கொழும்பு கொள்ளுப்பிட்டியில் காலி வீதியில் அமைந்திருக்கும் அலரி மாளிகையில்தான் குடியிருந்தார்.

பண்டாரநாயக்காவின் மறைவுக்குப்பின்னர்,  அவர் பிரதமராக அந்த மாளிகைக்குள்  அடியெடுத்துவைத்தபோது அதுவரையில் அவர் பார்த்திராத பிரதமரின் படுக்கை அறையைப்பார்த்துவிட்டு,  பேராச்சிரியம் கொண்டார். "ஒரு மனிதர் படுத்துறங்குவதற்கு இத்தனை பெரிய அறை தேவைதானா?
 நான் தனிமனிதனாக இங்கே வந்துள்ளேன்.  அத்துடன் பிரம்மச்சாரி. வேறு எந்தத் தொடர்புகளும் இல்லை. படுத்துறங்குவதற்கு ஒரு சிறிய படுக்கை மாத்திரம் போதும் " என்று அதிகாரிகளிடமும் அங்கிருந்த சேவகர்களிடமும்  சொல்லியிருக்கிறார்.

ஆனால், அரசின் நடைமுறைகளை அவர்கள் அவருக்காக மாற்றவில்லை.
படுக்க ஒரு சிறிய படுக்கை - உண்பதற்கு ஒரு தட்டம் - அருந்துவதற்கு ஒரு கோப்பை - அணிவதற்கு சில உடைகள்!   இவைதானே தனக்குத்தேவை. இந்த மாளிகை எனக்கு எதற்கு?  என்று அவர் சொன்னபோதும் நிர்ப்பந்தங்களினால் ஏற்கநேர்ந்தது.

வெளிவிவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டமையால் வெளிநாட்டு தலைவர்கள், அமைச்சர்கள், உள்நாட்டிலிருக்கும் வெளிநாட்டு ராஜ தந்திரிகள் வந்து  சந்திப்பதற்கு இந்த அலரி மாளிகைதான் உங்களுக்கு உகந்தது என அதிகாரிகள் வலியுறுத்தியமையால் அங்கு தங்குவதற்கு முடிவுசெய்தார்.
பொதுத்தேர்தல் அவர் தீர்மானித்தவாறு ஒரே நாளில் நடந்தது. இன்றுபோல் அன்று தொலைக்காட்சியோ இணையத்தளங்களோ இல்லை. இலங்கை வானொலி தொகுதிவாரி தேர்தல் முடிவுகளை நள்ளிரவு முதல் ஒலிபரப்பத்தொடங்கும்.
பிரதமர் தகநாயக்கா அலரிமாளிகையில் இருந்தவாறு முடிவுகளை வானொலியில் செவிமடுத்தார். அதிகாலை விடிவதற்குள் வந்திருந்த முடிவுகளின் பிரகாரம் அவரது தோல்வி நிச்சமாகிவிட்டது.
விடிந்ததும், சபாநாயகருக்கும் மகா தேசாதிபதிக்கும்  தொலைபேசியில் தொடர்புகொண்டு," தனது பதவிக்காலம் முடிந்துவிட்டது. நான் ஊருக்குப்புறப்படுகின்றேன். மீண்டும் கொழும்புவரும் சந்தர்ப்பம் கிடைத்தால் உங்களை சந்திக்கின்றேன்" என்றார்.
"இன்றும் நீங்கள்தான் காபந்து அரசின் பிரதமர். தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியானதும் தேர்தல் ஆணையாளர்  அறிவிக்கும்வரையில் அங்கேயே இருங்கள்.  ஊருக்குச்செல்லவேண்டாம்" என்று அவர்கள் வலியுறுத்திச்சொன்னபோதிலும்,  அவர்களின் வேண்டுகோளை அலட்சியம் செய்து, " இவர்கள் யார் எனக்குச்சொல்வது, மக்கள் சொல்லிவிட்டார்கள். மக்கள்தான் என்னை இங்கே அனுப்பியவர்கள். அதே மக்கள் இன்று தீர்ப்புச்சொல்லிவிட்டார்கள். நான் போகிறேன்" எனச்சொன்னவர்தான் "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்று வாழ்ந்து காண்பித்த தகநாயக்கா அவர்கள்.
தன்னிடமிருந்த ஒரு பழைய சிறிய சூட்கேஸினுள் தனது  ஒரு சில உடைகளை மாத்திரம் எடுத்துக்கொண்டு, அலரிமாளிகையில் பணியிலிருந்த சேவகர்களிடம், " மங் என்னாங் புதாலா" ( நான் வருகிறேன் மக்களே) எனச்சொல்லிவிட்டு அந்த பிரமாண்டமான மாளிகையின் பிரதான வாயிலிலிருந்து வெளியேறி, காலி வீதியை கடந்து எதிர்ப்பக்கம் சென்று கொழும்பு புறக்கோட்டைக்குச்செல்லும் இ.போ. ச. பஸ்ஸில் ஏறிச்சென்று, அங்கிருந்து காலிக்குச்செல்லும் பஸ்கள் வந்து தரிக்கும் இடத்தில் நின்றார்.
லேக்ஹவுஸ், வீரகேசரி, ரைம்ஸ் ஒஃப் சிலோன் பத்திரிகை நிறுவனங்களிலிருந்து தேர்தல் முடிவுகளை வானொலியில் கேட்டு எழுதிக்கொண்டிருந்த ஊடகவியலாளர்கள், காபந்து பிரதமர் தகநாயக்கா அடுத்து என்ன செய்யப்போகிறார்?  என்பதை அறிவதற்கு அலரிமாளிகைக்கு தொடர்பு கொண்டனர்.
                                                         அங்கிருந்து கிடைத்த பதில், " மாத்தயா கமட கியா!" ( அய்யா  ஊருக்குப்போய்விட்டார்)
ஊடகவியலாளர்கள் தாமதமின்றி புறக்கோட்டை பஸ் நிலையத்திற்கு விரைந்தனர்.  தகநாயக்கா பஸ் நடத்துனரிடம் பணம் நீட்டி டிக்கட் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
தன்னைத்தேடி வந்த ஊடகவியலாளர்களிடம், " இனித்தான் உங்களுக்கு அதிகம் வேலை இருக்கும். எதற்காக வீணாக என்னைத்தேடி வந்தீர்கள்.  திருப்பிப்போய்,  செய்யவேண்டிய வேலைகளை கவனியுங்கள், " எனச்சொல்லிக்கொண்டு பஸ்ஸில் ஏறி அமர்ந்தார்.
                                     வெளியே அவரை அதிசயத்துடனும் அதிர்ச்சியுடனும் பார்த்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களிடம், " மங் என்னாங் புதாலா" ( நான் வருகிறேன் மக்களே) எனச்சொல்லிக்கொண்டு விடைபெற்றார் கல்வி மான் எனப்பெயரெடுத்து "பணிஸ்மாமா" வாக அழைக்கப்பட்ட  அந்தக்கனவான்.
மக்களின் நன்மதிப்பும் பேராதரவும் அவருக்கு தொடர்ந்திருந்தது. மீண்டும் மீண்டும் காலி தொகுதியில் வென்று நாடாளு மன்றம் வந்தார். 1989 வரையில் அவர் அங்கு வந்தார். ஆனால், காரில் அல்ல. இ.போ. ச. பஸ்ஸில்தான் வந்து திரும்பினார்.
அவ்வாறு அவர் காலி முகத்திடலுக்கு முன்பாக அமைந்திருந்த முன்னைய நாடாளு மன்றத்திற்கு அவர் வந்து திரும்பும் காட்சிகளை பலதடவைகள் பார்த்திருக்கின்றேன். அக்காலப்பகுதியில்  காலிமுகத்தில் வீதி  அகலமாக்கும் பணியில் சப் ஓவஸீயராக பணியாற்றினேன். 
இது பற்றி எனது சொல்ல மறந்த கதைகள் தொகுப்பிலும் காலிமுகம் என்ற தலைப்பில் எழுதியிருக்கின்றேன். அவரை அங்கு பஸ்தரிப்பிடத்தில், பஸ்ஸை நிறுத்தி,  ஏற்றியும்விட்டிருக்கின்றேன்.
புறப்படும் தருவாயில், " மங் என்னாங் புதே"  என்று கனிவுபொங்கச்சொல்வார்.
1988 வரையில் அன்றைய ஜே. ஆர். அரசில் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.
இந்தக்கதைகளை ஒரு நாள் என்னுடன் ( அவுஸ்திரேலியா மெல்பனில்) பணியாற்றிய காலியைச்சேர்ந்த சிங்கள நண்பரிடம் சொன்னபோது,  அவர், தகநாயக்கா பற்றி மற்றும் ஒரு சுவாரஸ்யமான தகவலைச்சொன்னார்.
அந்த நண்பர் கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த பஸ்ஸில் ஒருநாள் தகநாயக்காவும் பயணித்திருக்கிறார். இடைவழியில் தேனீர் அருந்துவதற்காக அந்த பஸ் ஒரு கடை வாசலில் நிறுத்தப்பட்டதாம். இருவரும் அந்தக்கடையின் பின்புறக் காணியில் சிறுநீர் கழிக்கச்சென்றுள்ளனர்.
தகநாயக்கா ஒரு தென்னை மரத்தின் அருகில் நின்று சிறுநீர் கழித்தவாறு சிங்களத்தில் ராகத்துடன் ஒரு பாடலை பாடினாராம்.
அதன் அர்த்தம்: " தென்னையே, நாம் உனக்கு உவர்ப்பான சிறுநீரைத்தந்தாலும்,  நீயோ எமக்கு சுவையான இளநீரைத்தானே தருகிறாய் ! நீ வாழ்க! உன்னைப்படைத்த  இறைவனும் வாழ்க"
கடந்த ஆண்டு இலங்கை சென்ற சமயத்தில்    இந்த சுவாரஸ்யங்களையும் சேர்த்து தகநாயக்கா பற்றி எனக்குத்தெரிந்த கதைகளை ஒரு சிங்கள நண்பரிடம் சொல்லிவிட்டு, " இறுதிவரையில் அவர் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து மறைந்துவிட்டார் "  என்றேன்.
" ஆனால், அது தவறு அந்திமகாலத்தில் அவர் ஒரு முதிய ஏழை விதவைப்பெண்ணை பதிவுத்திருமணம் செய்ததாகவும் அதற்கும் ஒரு முக்கிய காரணம் இருந்ததாகவும் " அந்த நண்பர் சொல்லி என்னை மேலும் மேலும் திகைப்பில் ஆழ்த்தினார்.
 நீண்டகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர்களுக்கு அரச ஓய்வூதியம் கிடைக்கும். தகநாயக்கா பிரம்மச்சாரி. அதனால் அந்த ஓய்வூதியம் அவரது மறைவுடன் நிறுத்தப்பட்டுவிடும். அவ்வாறு நிறுத்தப்படாமல் யாராவது ஒரு ஏழை விதவைப்பெண்ணுக்கு கிடைத்தால் அவளது குடும்பத்தினருக்கு அது உதவும் என்பதனால், அந்திமகாலத்தில் அவ்வாறும் எவரும் நினைத்தும் பார்த்திருக்க முடியாத ஒரு நல்ல பணியை தீர்க்க தரிசனத்துடன் செய்துவிட்டுத்தான்  எங்கள் தாயகத்தின் கர்மவீரர் தகநாயக்க விடைபெற்றுள்ளார்.
என்னை " புத்தே " என்று அழைத்த அந்த சிங்களத் தந்தைக்கு மாத்திரம் இந்தப்பதிவை சமர்ப்பிக்கவில்லை!
அந்த அலரிமாளிகைக்காக இன்று அடிபடும் இன்றைய இலங்கை சிங்களத்தலைவர்களுக்காகவும் இதனை இங்கு சமர்ப்பிக்கின்றேன்!
letchumanan@gmail.com


 

-->No comments: