அஞ்சலிக்குறிப்பு: கலைக்குடும்பத்தில் பிறந்த ஆசிரியை நித்தியகலா கிருஷ்ணராம் (1963 - 2018) - முருகபூபதி


இலங்கையில் வடமேல் மாகாணத்தில் நீர்கொழும்பூர்,   மூவின மக்களும் செறிந்து வாழும் பிரதேசமாகும்.  அங்கு தமிழ்க்கத்தோலிக்க மக்கள் மத்தியில்  இந்து தமிழ் மக்களும் நீண்ட நெடுங்காலமாக வாழ்கின்றமையால் அவர்களுக்கென அங்கு ஆலயங்களும் சமூக அமைப்புகளும் ஒரு இந்துக் கல்லூரியும் இயங்குகின்றன.
நீர்கொழும்பூரின் பெயரையே இணைத்துக்கொண்டு கலை, இலக்கிய வாதியாகத்திகழ்ந்தவர் நீர்கொழும்பூர் முத்துலிங்கம். இவரது மருமகளும்  நீர் - விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் ஆசிரியையுமான சகோதரி திருமதி நித்தியகலா கிருஷ்ணராம் திடீரென மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
1963 ஆம் ஆண்டில் எங்கள் ஊரில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் பயின்று, அங்கேயே ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கும் வேளையில் மறைந்திருக்கிறார்.
இவரை குழந்தைப்பராயத்திலிருந்து தெரிந்துவைத்திருந்தமையால் எனக்கு உடன்பிறவாத சகோதரியாகத் திகழ்ந்தவர். எப்பொழுதும் என்னை அண்ணா, அண்ணா என பாசம் பொங்க அழைக்கும் நித்தியகலாவின்  திடீர் மறைவு தந்திருக்கும் துயரத்தை கடந்துசெல்வதற்கு காலம் செல்லும்.
இவரது பாட்டனார் எங்கள் ஊரில் சிறந்த சிலம்படி கலைஞர். அத்துடன் நாடகங்களும் நடித்திருப்பவர். இவரது தாய் மாமன்மாரான முத்துலிங்கம், கதிர்காமம்  ஆகியோர் நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி நாடகம் முதலான துறைகளில் ஈடுபட்டவர்கள். முத்துலிங்கம் ஈழத்து இலக்கிய உலகில் எழுத்தாளராகவும் நன்கு அறியப்பட்டவர்.

முத்துலிங்கத்தின் புதல்வர் ஜெயகாந்தனும் எழுத்தாளராவார். இத்தகைய கலை, இலக்கியப்பின்னணியில் வளர்ந்திருக்கும்  நித்தியகலா விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் கல்லூரி அபிவிருத்திச்சங்கம் முதலானவற்றிலும் அங்கம் வகித்து கல்லூரியின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்.
நான் 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர் எனது குழந்தைகளுக்கும் ஆசிரியையாக விளங்கியவர். நான் பிறந்த காலத்திலிருந்தே நித்தியகலாவின் குடும்ப அங்கத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரையும் எனக்கு நன்கு தெரியும்.
அதனால் எங்கள் குடும்பத்தில் ஒருவராக இணைந்திருந்த நித்தியகலாவின் திடீர் மறைவு என்னையும் ஆழ்ந்த சோகத்திற்குள்ளாக்கியிருக்கிறது.
நாம் அவுஸ்திரேலியாவிலிருந்து 1988 முதல் இயக்கிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஊடாக விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி மாணவர்கள் பலருக்கும் உதவிவருகின்றோம். அவ்வாறு உதவி பெற்ற மாணவிகள் சிலர்  பல்கலைக்கழகம் பிரவேசித்து  தற்போது ஆசிரியைகளாகவும் கல்வித்திணைக்களத்தில் அதிகாரிகளாகவும் பணியாற்றுகின்றனர்.
இம்மாணவர்களின் கல்வி முன்னேற்றம் பற்றிய விபரங்களை உடனுக்குடன்  வழங்கியவாறு எமது கல்வி நிதியத்தின் தொடர்பாளராகவும் இயங்கியவர்தான் ஆசிரியை நித்தியகலா.
நீர்கொழும்பில் எமது இல்லங்களுக்கு அருகாமையில் நித்தியகலாவும் குடும்பத்தினருடன் வசித்தமையால் நான் இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில் நாள் தவறாமல் சந்திப்போம்.
எமது கல்லூரியின் வைரவிழாவை முன்னிட்டு நெய்தல் என்ற சிறப்பு மலரை தொகுத்து வெளியிட்டபோது அந்த மலரிலும் ஒரு கட்டுரை எழுதியவர். வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் என்ற தலைப்பில் 1954 ஆம் ஆண்டு முதல் சுமார் அறுபது ஆண்டு கால கல்லூரியின் வரலாற்றில் கலை, இலக்கிய கல்வித்துறையில் அடையாளம் பதித்தவர்கள் பற்றிய செய்திகளை எழுதியிருந்தார்.
இக்கல்லூரியிலேயே பயின்று இங்கேயே ஆசிரியப்பணியாற்றுபவர்களின் பெயர்ப்பட்டியலையும் பதிவுசெய்திருந்தார். அதனைப் படித்து பரவசமடைந்துள்ளேன்.
32 குழந்தைகளுடன் 1954 ஆம் ஆண்டு விஜயதசமியன்று தொடங்கப்பட்ட இப்பாடசாலை இதுவரையில் ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கியிருக்கும் செய்தியையும் குறிப்பிட்டு,  அவர்களில் யார் யார் கலை, இலக்கிய கல்வித்துறை சார்ந்து புகழ்பெற்றிருந்தார்கள், புலம் பெயர்ந்து சென்றபின்னரும் கல்லூரியுடன் உறவைப்பேணுகிறார்கள் முதலான தகவல்களுடனும் எழுதியிருந்த நித்தியகலா, அக்கட்டுரையில் ஓரிடத்தில் பின்வருமாறும் குறிப்பிட்டிருந்தார்.
"பலரதும் வாழ்வுக்கு அத்திவாரம் இட்ட எமது கல்லூரி,  இன்றும் அதே இடத்தில் நின்றவாறு உள்நாட்டிலும் உலகெங்கிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் தனது முன்னாள் மாணவச்செல்வங்களை மனதில் நினைத்தவாறு மௌனமாக காட்சியளிக்கிறது.
வழிகாட்டி மரங்களும் நகர்வதில்லை! வழிகாட்டிய கல்லூரிகளும் நகர்வதில்லை. "
சகோதரி நித்தியகலாவின் தீடீர் மறைவு எமது நீர்கொழும்பு தமிழ் சமூகத்தினருக்கும் கல்லூரிக்கும் ஈடுசெய்யப்படவேண்டிய இழப்பு என்றே கருதுகின்றேன்.
எங்கள் ஊருக்கு  விடைகொடுத்திருக்கும் பாசமலர் நித்தியகலாவுக்கு எமது ஆழ்ந்த அஞ்சலி.
---0----->
No comments: