ஹாலிவுட்டில் தடம் பதித்த தமிழர்-அசோக் அமிர்தராஜ் - திருவேங்கடம் சுவாமிநாதன்.


இன்றைய காலக்கட்டத்தில் படித்து, ஒரு தொழிலிலோ, நல்ல வேலையிலோ அமர்ந்து கௌரவமாக குடும்பத்தை பராமரித்து நல்ல நிலையில் இருப்பது என்பது பெரும் போரட்டமாகவே உள்ளது. தொழில் நஷ்டம், போட்டி, பொறாமை, படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைக்காமை, சாலை விபத்து, புதுப்புது நோய், குடிநோய், வேலியே பயிரை மேயும் குடும்பச் சூழல் என எவ்வளவோ கஷ்டங்களை கடந்தால்தான்  வாழ்வில் மேம்பட முடியும். இந்நிலையில் ஓருவர் மிகவும் சவாலான விளையாட்டுத் துறையில் சர்வதேச அளவில் சாதனை புரிந்து, பின்னர், இடர்பாடுகள் நிறைந்த திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிக் கொடி நாட்டுவது என்பது எளிதானதல்ல. கடின உழைப்பும், ஒழுக்கமும் இருந்தால் சாத்தியம் என்கிறார் இக்கட்டுரையின் நாயகன்.
1956-ல் சென்னையில் பிறந்த அசோக் அமிர்தராஜ் முன்னால் தொழில் முறை டென்னிஸ் விளையாட்டு வீரர் என்பது யாவரும் அறிந்ததே. பின்னர், இந்திய அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளராக உருவெடுத்தார். 'நேஷனல் ஜியாகிராபிக்'; என்கிற திரைப்பட நிறுவனத்தை உருவாக்கி அதன் தலைமைச் செயலதிகாரியாக உள்ளார். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பிறந்து, வளர்ந்த இவர், தனது 9 ஆண்டு கால விளையாட்டு வாழ்க்கையில் இந்தியாவிற்க்காக பல பன்னாட்டு டென்னிஸ் பந்தயங்களில் பங்கேற்று சிறப்பபாக விளையாடி சர்வதேச அளவில் தன் முத்திரையை மிக ஆழமாகப் பதித்துள்ளார்; என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல டென்னிஸ் வீரர்களான விஜய் அமிர்தராஜ், ஆனந்த் அமிர்தராஜ் ஆகியோர் இவரது உடன் பிறந்த சொந்த சகோதரர்கள் ஆவர்.


அசோக் அமிர்தராஜ் நூற்றுக்கும் அதிகமான ஹாலிவுட் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு உள்ளார் என்பது மிகப்பெரிய சாதனையாகும்.
'சோனி' தொலைக்காட்சியில் புதியவர்களை ஊக்குவிக்கும் வகையில் 'கேட்வே' என்கிற நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். தமிழில் பிரசாந்த், ஜஸ்வர்யா ராய் நடித்த 'ஜீன்ஸ்' திரைப்படத்தை சுமார் 20 கோடி பட்ஜெட்டில் தயாரித்தவரும் இவரே. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் டான் பாஸ்கோ பள்ளியில் பள்ளிப் படிப்பையும், தனது பட்டப்படிப்பை லயோலா கல்லூரியிலும் முடித்தவர்;.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த காவல் கிணறு என்கிற சிற்றூர்தான் இவரது பூர்விகமாகும். இவரது தந்தை ராபர்ட் அமிர்தராஜ், தாயார் மாகி அமிர்தராஜ் ஆகிய இருவரும் டென்னிஸ் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால், டென்னிஸ் விளையாட்டு என்பது இவரது ரத்தத்தில் ஊறிய ஒன்று. 1970-களில் விளையாட்டையே தொழிலாகக் கொண்ட குடும்பங்களை நம் நாட்டில் கான்பது அரிதிலும் அரிது. இவர்கள்தான் அதில் முன்னோடி என்றால் மிகையாகாது. இவரது பெற்றோர் விளையாட்டு துறையில் இவர்களை பெரிதும் ஊக்கப்படுத்தியுள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் அசோக் அமிர்தராஜ்-க்கு பிரியா மற்றும் மிலன் என்கிற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவரது மனைவியின் பெயர் சித்ரா. சிறு வயதில்  ஆங்கிலப் படங்களை விரும்பி பார்க்கும் பழக்கம் இவருக்கு இருந்துள்ளது. சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு நாடுகளில் டென்னிஸ் விளையாடியுள்ளார். விம்பிள்டன் ஜூனியர் ஆட்டத்தில் பங்கேற்றது இவரது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் ஆகும். மனிதனுக்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாத குதூகலத்தை சில நிகழ்வுகள் தருகின்றன. 
வாழ்வில் தோல்வி தவிர்க்க முடியாதது. அதில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் . மனிதனுக்கு திறமை மட்டுமே போதுமானதல்ல. அதையும் தாண்டி ஒழுக்கம் மிக மிக அவசியம் என்பதை இவரது பெற்றோர் கற்றுத் தந்துள்ளனர். 
இந்தியாவில் டென்னிஸ் சூப்பர் ஸ்டார்கள் யாருமே இல்லை என்கிற வேதனை சிறு வயதில் இவருக்கு இருந்துள்ளது. பள்ளிப் பருவத்தில் டென்னிஸ் விளையாட்டில் தொடர்ந்து கடும் பயிற்சி பெற்றதால் 1978-ல் விம்பிள்டன் ஜூனியர் போட்டியில் சேம்பியன் ஆனார். சிறு வயதில் அதிக ஹாலிவுட் படங்களை பார்த்ததால் ஹாலிவுட் கனவு இருந்தது.  அந்த நாட்களில் சென்னை 'சபையர்' தியேட்டரில் வெளியாகும் ஆங்கிலப் படங்களை 30 முதல் 40 தடவை பார்க்கும் வழக்கம் உள்ளவர். சிறு வயதில் பெற்றோர்கள் இவரைத் தேடும் போது பெரும்பாலும் சினிமா பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். இதுவே இவருக்கு சினிமாத் துறையில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இன்று ஹாலிவுட்டில் தடம் பதித்த தமிழன் என்ற பெருமையை பெற்றுள்ளார். 
சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் இவரும் ஒருவர். நல்ல கதை அமைந்தால் ரஜினியை வைத்து படம் தயாரிக்க விருப்பம் இவருக்கு உள்ளது. 1988-ல் 'பிளட் ஸ்டொன்' என்கிற ஆங்கிலப் படத்தை ரஜினியை வைத்து எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1975-ல் ஒரு தொழில் முறை டென்னிஸ் வீரராக அமெரிக்காவில் குடியேறியுள்ளார். அப்போது இவர் ஹாலிவுட்டில் கால் பதித்து இந்த அளவிற்கு சாதிப்பார் என்று யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.
1981-ல்தான் முதன் முதலாக ஹாலிவுட்டில் ஒரு தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்துள்ளார். துவக்க காலங்களில் குறைந்த பட்ஜெட் படங்களையே தயாரித்துள்ளார். இருப்பினும் பெரும் சோதனைகளை சந்திக்க வேண்டியிருந்தது. மனம் தளராமல் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வந்தார். டென்னிஸ் விளையாட்டுக்கு ஆதரவு அளித்தவர்கள் கூட ஹாலிவுட் படம் எடுக்க நண்பர்கள் யாரும் உதவ முன்வரவில்லை. 1990-ம் ஆண்டு இவர் தயாரிப்பில் வெளிவந்த 'டபுள் இம்பாக்ட்' என்கிற மெகா ஹிட் திரைப்படம் இவருக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது.   
'ஜீன்ஸ்' தமிழ்ப்படம் எடுத்து பின்பு அடுத்ததாக தொடர்ந்து தமிழ்படம் இவரால் தயாரிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் உள்ளது. 'ஜீன்ஸ்'; படம் தயாரிக்க இவரே நேரில் இருக்க வேண்டிய  அவசியம் இருந்துள்ளது.  18 மாதங்கள் இதற்காக ஒதுக்க வேண்டியது இருந்தது. நேரம் செலவிட முடியவில்லை. 
இவ்வளவு உயரம் தொட்ட நிலையில், அமெரிக்காவில் வசித்து வரும் இவர், இந்திய பண்பாடு சம்பிரதாயங்கனை கடுகளவும் விடாமல் தொடர்ந்து பின்பற்றி வருகிறார் என்பது தனிச்சிறப்பு. இத்தகைய பண்பாடுகளே விளையாட்டுத் துறையிலும், திரைப்படத்துறையிலும் தன்னை வடிவமைத்ததாக நம்புகிறார். வெற்றி பெறுவதற்க்காகத்தான் விளையாடுகிறோம், எனினும், தோல்வியும் தவிர்க்க முடியாததுதான். வெற்றி, தோல்வியை சமமாக பாவித்ததுடன், நல்ல மேட்ச் விளையாடினோம் என்ற உணர்வும் மனநிறைவும்  இவருக்கு எப்போதும் உண்டு.
இவரது தாயார் 90 அகவையை கடந்துள்ளார். இவரும் 62 வயதான நிலையிலும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளார். 1991-ல் ஹாலிவுட்டில் இவரது திரைத்துறை வாழ்க்கை தொடங்கிய நிலையில் இவருக்கு திருமணம் நடந்தது. அப்போது இவர் தயாரித்து வெளியான 'டபுள் இம்பாக்ட்' திரைப்படம் மாபெரும் வெற்றியை ஈட்டியது. இவருடைய வாழ்க்கையில் அது ஒரு மிகப் பெரிய திருப்பு முனையாகும். 
அதுவரை தனது தொலைபேசி எண்னை தூக்கி எறிந்தவர்கள் எல்லாம் அவசர அவசரமாக அதைத் தேடி என்னை திரும்ப அழைத்தார்கள் என்று சிரித்துக் கொண்டே தெரிவிக்கிறார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்து ஸ்டீவ் மார்ட்டின், கேட்பிளான்செ, ப்ரூஸ்வில்லிஸ் உள்ளிட்ட பிரபலங்களை வைத்து வேலை வாங்கும் அளவிற்கு திரைத்துறையில் உயர்ந்தார்.
டென்னிஸ் விளையாட்டு வீரராக சர்வ தேச அளவில் வலம் வந்து பின்னர், ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளராக மாறி காலுன்றியது சாதாரணமானதல்ல. எழுத்தாளர்கள் மீது இவருக்கு அலாதி மரியாதை உள்ளது. எழுத்தாளர்களால் வடிக்கப்பட்ட சக்தி வாய்ந்த வார்த்தைகளுக்கு ஈடு இணையில்லை என்கிறார்.
எழுத்தை பொறுத்த வரை இந்திய இயக்குநர்கள் மற்றும் பிரபல நடிகர்களை சந்திக்கும் தருணங்களில்,  இந்திய திரைப்படத் துறை எழுத்தாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதையே வலியுறுத்தியுள்ளார்;. திரைக்கதை எழுதியவர்கள் பெருமைப்படுத்தப்பட வேண்டும். ஒரு இயக்குநரின் படம் என்பதைவிட, ஒரு எழுத்தாளரின் படம் என்ற நிலையிலேயே தான் படம் பார்க்க விரும்புவதாக தெரிவிக்கிறார். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை மட்டும் ஈர்க்கும் வகையில் இல்லாமல் ஆங்கிலேயர்கள் உள்ளிட்டஅனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கக்கூடிய வகையில் வித்தியாசமான கதையம்சங்களுடன் கூடியதாக இந்திய திரைப்பபங்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறார். இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களை மட்டும் ஈர்க்கக் கூடியதாக இல்லாமல் அதைத் தாண்டி வெளிநாட்டினரையும் கவரக் கூடியதாக இருக்க வேண்டும் என விரும்புபவர்.
திரைப்படம் என்பது ஒரு மாநிலம், ஓரு தேசம் என்பதை கடந்து உலகலாவியதாக அதன் எல்லை விரிவிடைய வேண்டும். இந்தியரல்லாதவர்களையும் சென்றடையும் போதுதான் அதன் சந்தை பெரிதும் விரிவடைகிறது. 
ஜ.நா அமைப்புடன் நெருக்கமாக பணியாற்றியிருக்கிறார். டாக்குமென்டரி படங்கள் எடுத்து அதன் மூலம்  தண்ணீர் தட்டுப்பாடு, பெண்;களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறும்படங்கள் இவரால் வெளியிடப்பட்டுள்ளது. ஜக்கிய நாடுகள் சபையில் நியமிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தூதர்; என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இப்பெருமையினை பெறும் முதல் திரைப்படத் தயாரிப்பாளர் என்பதும் இவருக்குக் கிடைத்த கூடுதல் அங்கீகாரம்.
சென்னையில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழர் பில்லியன் டாலர்களில் முதலீடு செய்து ஹாலிவுட்டில் தயாரிப்பளாராக உயர்ந்தது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம் ஆகும். அதிலும், நூற்றுக்கணக்கான படங்களைத் தயாரித்து பல வெற்றிக் கொடிகளை நாட்டியுள்ளார். இவருடைய தாயார் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ஒப்பற்ற ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதன் வெற்றி பெற கடின உழைப்பும், ஓழுக்கமும் மிகவும் முக்கியம் என வலியுறுத்துகிறார். நுரையிரல் பாதிப்பால் மூச்சிரைப்பு நோயால் பத்து வயது வரை அவதிப்பட்டு வந்த இவரது சகோதரர் விஜய் அமர்தராஜ் விளையாட்டால் அதை வென்றதாக கூறுகிறார். இவரது குடும்பம்  அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலில் வசிக்கிறது. 'ஹைடே பார்க் எண்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் மூலமாக இதுவரை 100 படங்களுக்கு மேல் தயாரித்து உள்ளார். தனது 30 வருட கடின உழைப்பால் சர்வதேச அளவில் புகழ்பெற்ற தயாரிப்பாளராக உயர்ந்துள்ளார் அசோக் அமிர்தராஜ். இவரது வெற்றிகரமான திரைத்துறை வாழ்க்கையில் உலகளாவிய பாராட்டுகளையும், 2 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வசூலையும் அவர் படங்கள் பெற்றுள்ளது. இந்தியாவையும், ஹாவிவுட்டையும் திரைப்படம்  மற்றும் ஊடகம் மூலமாக இணைப்பதில் முன்னோடியாக இருந்தவர் அமிர்தராஜ் என்றால் அது மிகையாகாது. இவரது சுயசரிதையை 2013-ல் வெளியிட்டுள்ளார். இஷ்டப்பட்டு கஷ்டப்படாமல் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது என்பதை இவரது சுயசரிதை மூலம் அறியலாம். சர்வதேச அளவில் விளையாட்டு முதல் ஹாலிவுட் வரை தமிழர்கள் புகழ் பரப்பிய இந்த நாடார்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே. எவ்வளவு உச்சத்தை தொட்டாலும் ஒழுக்கத்தை கைவிட்டு விடக் கூடாது என்பதுதான் இவரது வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம். வாழ்;வில் உன்னத நிலையை அடைந்த பின்னர் ஒழுக்கத்தை கைவிட்டவர்கள் பலர் வாழ்வில் சரிந்து அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளனர் என்பது வரலாறு.




No comments: