பி.பி.ஸி சுந்தா சுந்தரலிங்கம் நினைவுகள்: இன்றுடன் அவர் மறைந்து 16 வருடங்கள் நிறைவு - பேராசிரியர் சி. மௌனகுரு

(என் மனதில் பதிந்த ஆளுமைகளுள் ஒருவர்  அப்பலோ  சுந்தா  எனவும் பி.பி.ஸி சுந்தா எனவும் அழைக்கப்பட்ட  சுந்தரலிங்கம் அவர்கள். சுந்தரலிங்கம்  அவர்களுக்கு 1999 ஆம் ஆண்டு அக்டோபர். மாதம் அவுஸ்திரேலிய வானொலி சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தொலை பேசி  மூலம்  நான்  நிகழ்த்திய உரை. )

இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள மட்டக்களப்பு எனும் நகரில் இருந்து நான் பேசுகிறேன்.
அண்மையில் திறந்த இருதய சத்திரசிகிச்சைக்கு உள்ளாகி மறு உயிர்  பெற்ற நான் முதன் முதலாகச் சுந்தா அண்ணர் பற்றிப் பேச நேர்ந்ததது எனக்கும் அவருக்குமிடையேயுள்ள ஆறாத பந்தத்தின் ஓர் அம்சமாகவே கருதுகிறேன்.
சுந்தா அண்ணரின் வாழ்க்கையை மூன்றாக  வகுக்கலாம்
ஒன்று அவரது  வானொலி வாழ்வு.
இரண்டு  அவரது கலை  வாழ்வு.
மூன்று அவரது சமூக வாழ்வு.
அவரது வானொலி வாழ்வு மூளை என்றால்,
அவரது  கலை வாழ்வு இதயம் எனலாம்.
அவரது சமூக வாழ்வை உடல் எனலாம்.
மூளை,  இதயம்,உடல் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையிற்  சிறப்புடைத்து.
ஒன்று இன்றி ஒன்றில்லை.
அவர் முழுமையான  ஓர் ஆளுமையினர்.
அவரது வாழ்வு அர்த்தம் நிறைந்த வாழ்வு

வானொலி  வாழ்வு
  அவரது  வானொலி வாழ்வு மிகபிரதான வாழ்வு. அன்றிருந்த இலங்கை வானொலி  வர்த்தக சேவையிலும் தேசிய சேவையிலும் அவர் பதித்த முத்திரைகள் அதிகம், விளம்பரம்,  நேரடி  வர்ணனை,நாடகம்,செய்தி வாசிப்பு  என  அவர் சுழன்ற களங்கள் அவரால் இலங்கை வானொலியிலும் பி.பி. ஸி யிலும் புகழ் பெற்றன.
பி.பி.ஸி தமிழோசை நிகழ்ச்சி மூலம் அவர் தமிழ் கூறும் நல்லுலகு  எங்கணும் அறியப்பட்டார்.
அனுபவமும் அறிவும் அடக்கமும் வாய்ந்த மிகப்பெரிய  ஒலிபரப்பாளர் அவர்.
எதையும் புற நிலையில் வைத்து ஒரு சிரிப்போடு பார்க்கும் ஞானி அவர் எனில் அது ஓர் மிகையான கூற்று இல்லை.
 கலை வாழ்வு
அவரது கலை வாழ்வை
 நாடக வாழ்வு , புகைப்படக் கலைஞரான  வாழ்வு, இசை  வாழ்வு, இலக்கிய  வழ்வு என நான்கு  பிரிவுகளுக்குள் அடக்கலாம்.1960 களில் இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாடகம் பழக்குவதில் அரம்பித்த அவரது நாடக வாழ்வு. 1965 இல் சி,வி ராஜசுந்தரம்  தயாரித்த மீனாட்சி கலியாணம் என்கின்ற நாட்டிய நாடகத் தயாரிப்புகளினூடாக தொடர்ந்தது.
1970 களில் தாஸீஸியஸ் ,  சுந்தரலிங்கம்,  மௌனகுரு , பாலேந்திரா, இளைய பத்மனாதன்  போன்றோர்  நாடகம் பழக, பழக்க இவர் வீடே மைய ஸ்தானமாயிற்று.
1970 களில் கொழும்பில்  எழுச்சி பெற்ற தமிழ் நாடக இயக்கத்தின் மிகபெரும் ஆதரவாளராகவும் உயிர் விசைகளுள் ஒருவராகவும் அவர் இருந்தார்.
நா. சுந்தரலிங்கத்தின்  விழிப்பு நாடகத்தின்  மேடை முகாமையாளர் சுந்தா அண்ணரே.
அவர் வீடு  அனைவரையும் இணைக்கும் கலைக்கூடமாயிற்று. பராசக்தி அக்காவின் இன்முகமும் ஆழமான உரையாடலும் சுவையான கோப்பியும் தோசையும் சுந்தா அண்ணரையும் பராசக்தி அக்காவின்  சுந்தா அண்ணரையும்  இளைஞர்களின் உறவினர்களாக்கியது.
திருமணம் செய்த ஆரம்பத்தில் கொழும்பில்  நான் வீடு  தேடி  அலைந்தபோது  அவரே என்னை அழைத்து அங்கு குடியமர்த்தினார்
கொழும்பு  வெள்ளவத்தை பாமன் கடை வீதியில்  அவரது  அந்த பெரிய வீடு   அமைந்திருந்தது. அவ்வீட்டின்  கீழ்  அனக்ஸில் நான் குடியிருந்தேன். என் மகன் சித்தார்த்தன்  அவ்வீட்டில் இருக்கும்போதுதான்  பிறந்தான்.
1974 களில்  என் மகன்  சித்தார்த்தன்  குழந்தை.   அவர்களின் வீட்டில் தான் இக் குழந்தை  வளர்ந்தது.  அவன்   அவர் தோளிலே வளர்ந்த  குழந்தை. அவன் தவளுகையிலும்   தளர் நடைப்  பழகுகையிலும்  அவனோடு தவழ்ந்தும் திரிந்தும்  இக்குழந்தையை  விதம் விதமாகப் படம் பிடித்து என்னிடம் காட்டி என் சிந்தை மகிழ்வித்த அன்பை எப்படி மறப்பேன்?
அந்த வீடு கலைஞர்கள் சந்திக்கும் களமும் ஆயிற்று. நானே அதற்கு நேரடிச் சாட்சி.
புகைப்பட  வாழ்வு
அவரது புகைப்பட வாழ்வு தனித்துவமானது. காணும் காட்சியெல்லாம் கமராவுக்குள் கொணர்ந்துவிடும் அற்புதக்கலைஞர்  அவர். அவரது கண்கள்  கமராக் கண்கள். அவர் எடுத்த புகைப்படங்கள் சஞ்சிகைகளின் அட்டைப்படங்களாக  வந்துள்ளன. அவரது புகைப்படக்  கண்  காட்சி ஒன்றினை   ஒழுங்கு செய்யாதது நாம் செய்த தவறு.
இலக்கிய வாழ்வு
   அவரது இலக்கிய வாழ்வு இன்னொரு வகையிற் சுவராஸ்யமானது.
 அவர் இலக்கிய காரர் இல்லாவிடினும் சிறந்த  தமிழ் இலக்கிய  ரசனையும் விமர்சனப்பார்வையும் கொண்ட பராசக்தி அக்கா அவருக்கு மனைவியாக  வாய்த்திருந்தார். அவருக்கு ஈழத்தினதும் தமிழ் நாட்டினரதும் இலக்கிய காரர்களின் நெருங்கிய தொடர்பு இருந்தது.   சிட்டி சிவபாத சுந்தரம் தொடக்கம்  டொமினிக் ஜீவா வரை அவருக்கு எல்லோரும் நெருங்கிய நண்பர்கள், அவரது வீடு சிறந்த இலக்கிய காரர்கள் கூடும் இடமாக அமைந்தது
வித்தியானந்தன், சிவத்தம்பி,  கைலாசபதி, முருகையன் டொமினிக் ஜீவா, சி.வி ராஜசுந்தரம் , சில்லையூர் செல்வராஜன் போன்றோரை நான் அங்கு அடிக்கடி கண்டுள்ளேன்.  நானும் சித்திரலேகாவும் கூடக் கலந்து கொள்வோம்.


சமூக வாழ்க்கை
உதவி செய்தலின் மறு பெயர் சுந்தா  அண்ணர். தனிப்பட்ட முறையில் நான் அதனால் வெகுவாக பயன் பெற்றேன். அவரது  வாழ்க்கை பற்றிய நோக்கு சுவராஸ்யமானது.  தானும் மகிழ்வார்.  பிறரையும் மகிழ்விப்பார். மகிழ்விக்கக் கூடிய காரியங்களை  திடீர் திடீர் எனப்புரிவார். அவர்  இருக்கும் இடத்தில் கலகலப்பும்  மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். அவர் ஓய்வெடுத்து  இருந்ததை நான் காணவில்லை. இயங்குதல் இயங்குதல் இயங்குதல் என ஓயாது இயங்கிக் கொண்டே இருப்பார்.  சுறு சுறுப்பான தேனீ  அவர்.
கால்களுக்குச்  சக்கரம் பூட்டியுள்ளார் என்று பலர் கூறக்கேட்டுள்ளேன்.
சமய சமூகப் பணிகளில் ஈடுபட்டவர்.  இதனால் அவருக்கு மிக நெருக்கமான சிங்கள இஸ்லாமிய நண்பர்கள் இருந்தனர். பின்னர் அவர் பி.பி.ஸி.  சென்று விட்டார்
இடையில் ஏற்பட்ட விபத்தினால் நடக்க முடியாதவர் ஆகிவிட்டார். எனினும் சென்னைக்கு வந்து அங்கு பி.பி,ஸி  வேலைகளைத் தொடர்ந்தார்.
1998 ஆம் ஆண்டு தமிழகம் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஏறத்தாள 20 வருடங்களுக்குப் பின்னர் சுந்தா பராசக்தி தம்பதியினரை சென்னை அடையாறில் அவர் இல்லத்தில் சந்திக்கிறேன்.
பம்பரமாகச் சுழன்று ஓடி கதைத்து  மகிழ்ந்து பிறரையும் மகிழ்வித்தவர்,  காலிலே  சக்கரம் கட்டியது போலத் திரிந்த  சுந்தா அண்ணர் சக்கர நாற்காலிக்குள் இருக்கிறார்  சக்கரங்களே  கால்களாக.
எமக்கு அவரின் தீவிர செயற்பாடுகள் ஞாபகத்திற்கு வருகின்றன. மனது கனக்கிறது.  எனினும் அந்தப்பழைய பகிடிகளும் கலகலப்பும் அவரை விட்டு அகலவே இல்லை.
உங்கள் வானொலி அனுபவங்களை  எழுதுங்கள் என்கிறேன். "நான் எழுத்தாளன் அல்ல கதைக்கத்தான் எனக்குத் தெரியும்" என்கிறார்
உண்மைதான் எழுத்து அவரது துறையல்ல. பேச்சே அவரது பலம்.
அவரது பலத்தின் அடிப்படையில் நூலை உருவாக்கத் திட்டமிடுகிறோம்.
அவருடைய  பேச்சுகள் ஒலிப்பதிவு செய்யப்படுகின்றன. ஒலிபதிவு நாடாக்களை இங்கு கொண்டு வருகிறோம்.
எனது மாணவரும் சக விரிவுரையாளருமான இன்பமோஹன் அவற்றிற்கு எழுத்துரு தருகின்றார். பராசக்தி அக்காவும் நானுமாக எழுத்துப்படிகளைத் திருத்துகிறோம். பேச்சு நூலாகிறது. அதற்கு மன ஓசை எனப்பெயரிடுகிறோம்.
ஓவியர் மருது  அட்டை வரைந்து தருகிறார். சுந்தா அண்ணாவின் இந்த நூலில் ஒரு தேர்ந்த ஒலிபரப்பாளரின்  மொழி நடையைக் காணலாம்.
அவர் எதனையும் நகைசுவையோடு  அணுகுவார். அவர் நகைச் சுவையாகப் பேசுவார்.  நூலில் அவரது நகைச்சுவையினை ரசிக்கலாம்.
தற்போது சுந்தா அண்ணர் நினைவுகளில் வாழ்கிறார்.No comments: