இலங்கைச் செய்திகள்


காலி முகத்திடலில் ஆரம்பமான மலையக மக்களின் வாழ்வாதாரத்துக்கான போராட்டம்

தோட்ட தொழிலாளர்க்கு ஆதரவு தெரிவித்து அரசாங்க பொது ஊழியர் சங்கம் போராட்டம்

உதிரத்தினை உரமாக்கும் உறவுகளுக்காக போராடுவோம் ;  கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரி மலையகத்திலிருந்து கொழும்புக்கு பாத யாத்திரை

யாழ் பத்திரிகையாளரை பயங்கரவாத விசாரணை பிரிவினர் தொடர்ச்சியாக துன்புறுத்துகின்றனர்- சர்வதேச அமைப்பு குற்றச்சாட்டு

பிரதமராக பதவியேற்றார் மஹிந்த

பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியுள்ளேன் - ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

மைத்திரியின் அடுத்த அதிரடி உத்தரவு

மஹிந்தவே பிரதமர் : அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவிப்பு

அரசமைப்பை பின்பற்றுங்கள்- அமெரிக்கா வேண்டுகோள்

சிறிசேனவின் நடவடிக்கைக்கு காரணம் என்ன? இந்து நாளிதழ் தகவல்

இலங்கை நிலவரம் குறித்து பல மணி நேர மௌனத்தின் பின் இந்தியா கருத்து

தனது உயிராபத்து குறித்து உணர்வுபூர்வமாக கருத்துரைத்தாராம் ஜனாதிபதி சம்பந்தன் தெரிவிப்பு 


காலி முகத்திடலில் ஆரம்பமான மலையக மக்களின் வாழ்வாதாரத்துக்கான போராட்டம்

24/10/2018 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வினை வலியுறுத்தி  கொழும்பு காலி முகத்திடலில் சமூக வலைத்தளத்தில் ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பினர் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.
வாழ்வாதாரத்திற்கு ஏற்ப அடிப்படை சம்பளத்தை அதிகரித்தல், தீபாவளி முற்பணத்தை உரிய நேரத்தில் வழங்குதல், கூட்டு ஒப்பந்தத்தை உரிய வகையில் நடைமுறைப்படுத்தல், கூட்டு ஒப்பந்தத்தை மீறி உரிமைகளை பரிக்காதிருத்தல் மற்றும் தோட்டத் தொழிலாளர்களை கௌரவமாக நடத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்தே மேற்கண்ட ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் இடம்பெற்ற மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் நிறைவடைந்துள்ள நிலையில் மலையகத்தின் பெரும்பகுதிகளில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  அவற்றுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 
தோட்ட தொழிலாளர்க்கு ஆதரவு தெரிவித்து அரசாங்க பொது ஊழியர் சங்கம் போராட்டம்

23/10/2018 தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து நேற்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியது.
 அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் நடைபெற்ற அப்போராட்டத்தின்போது முதலாளிமார் வசம் உள்ள தோட்டங்களை அரசு சுவீகரித்து  தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதன்போது வலியுறுத்தப்பட்டது  .
நன்றி வீரகேசரி உதிரத்தினை உரமாக்கும் உறவுகளுக்காக போராடுவோம் ;  கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

23/10/2018 தோட்டத்தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
உதிரத்தினை உரமாக்கும் உறவுகளுக்காக போராடுவோம் என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் அனைத்து பகுதி மாணவர்களும் கலந்துகொண்டனர்.
1000ரூபாவுக்கு இந்த பாடா?,காடுமலை ஏறி கால் உதிரமும் கரைந்துபோகுது,சுரண்டாதே சுரண்டாதே ஊதியத்தினை சுரண்டாதே, அட்டைக்கடி படுவோருக்கு நியாயப்படி சம்பளம் கொடு,போராட்டம் போராட்டம் ஊதியத்திற்கான போராட்டம் போன்ற பல்வேறு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருநதனர்.
இதன்போது தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தினை 1000ரூபாவினால் அதிகரிப்பதற்கு தேவையான அழுத்தங்களை அரசாங்கம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையினை மாணவர்கள் முன்வைத்தனர்.
இன்று தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் அனைத்து பல்கலைக்கழங்களிலும் கற்றுவருகின்றனர்.தினமும் ஐந்நூறு ரூபாவுக்கு குறைவான சம்பளத்தினைப்பெற்றுக்கொண்டு தமது பிள்ளைகளையும் கற்பித்துக்கொண்டு அன்றாட தேவையினையும் பல்வேறு கஸ்டங்களிலும் பூர்த்திசெய்துவருகின்றனர்.
இன்று இரண்டாயிரம் ரூபாவினை தினம் உழைப்பவர்கள் கூட இன்றைய நிலையினை தாங்கிக்கொள்ளமுடியாத நிலையில் தமது குறைந்த சம்பளத்தினைக்கொண்டு தோட்டத்தொழிலாளர்கள் தமது வாழ்க்கையினை கழித்துவருவதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்டத்தொழிலாளர்களின் நிலையினை கருத்தில்கொண்டு அவர்களுக்கான சம்பள அதிகரிப்பினைப்பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  நன்றி வீரகேசரி 


தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரி மலையகத்திலிருந்து கொழும்புக்கு பாத யாத்திரை

23/10/2018 பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வழியுறுத்தி ஹட்டன் வெளிஒயா தோட்டபகுதியை சேர்ந்த இளைஞர் குழு ஒன்று பொகவந்தலாவ நகரிலிருந்து தலைநகர் கொழும்பு வரையான பாதயாத்திரை ஒன்றை இன்று செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் ஆரம்பித்தனர். 
இந்த பாதயாத்திரை எதிர்வரும் ஞாயிற்றுகிழமை நிறைவடையும் என எதிர்பார்க்கபடுவதாக குழுவின் தலைவர் ஜேசுதாஸ் தெரிவித்தார்.
இந்த பாதயாத்தியரையானது பொகவந்தலாவ கொட்டியாகலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் ஆரம்பிக்கபட்டு பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் முன்பாக தேங்காய் உடைத்து தனது பாதயாத்திரையை ஆரம்பித்தார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஒருநாள் அடிப்படை சம்பளம் 1200 ரூபாவாக அதிகரிக்கபட வேண்டும் என வழியுறுத்தி இந்த பாதயாத்திரையை முன்னெடுப்பதாகவும், எமது தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கவனம் செலுத்தி தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்கபட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இன்று நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் மலையக மக்களின் வாக்குகளின் ஊடாகவே தான் தெரிவு செய்யபட்டார்கள்.
எனவே தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள விடயத்தில் நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட வேண்டும்.
இந்த பாதயாத்திரையின் போது 13 இளைஞர்கள் கலந்து கொண்டதோடு, கொழும்பு பகுதிக்கு செல்லும் வரையில் மலையக இளைஞர், யுவதிகள் இந்த பாதயாத்திரையில் கலந்து கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்  நன்றி வீரகேசரி யாழ் பத்திரிகையாளரை பயங்கரவாத விசாரணை பிரிவினர் தொடர்ச்சியாக துன்புறுத்துகின்றனர்- சர்வதேச அமைப்பு குற்றச்சாட்டு

25/10/2018 தமிழ் ஊடகவியலாளர் உதயராஜா சாலின் இலங்கையின் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் தொடர்ந்தும் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றார் என எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
உதயராச சாலின் ஆகஸ்ட் மாதம் 22 ம் திகதி விசாரணைக்காக பயங்கரவாதவிசாரணை  பிரிவினரால் அழைக்கப்பட்டார் என எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் யூன் மாதம் இடம்பெற்ற எவ்வித ஆபத்துமற்ற கோயில் திருவிழா குறித்து சாலினிடம் ரிஐடியினர் விசாரணைகளை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு வடக்கிழக்கில் உள்ள தமிழர்களின் தாயகத்தின் பின்னணியாக கொண்ட புகைப்படமொன்று குறித்து குறிப்பாக விசாரணைகள் இடம்பெற்றன எனவும் தெரிவித்துள்ளது.
சாலினிற்கு குறிப்பிட்ட ஆலயத்துடனோ அல்லது அதன்  விழாக்கள் தொடர்பாகவோ எந்த வித தொடர்பும் இல்லாத போதிலும் அதனை அடிப்படையாக வைத்து அவர் துன்புறுத்தலிற்கு உள்ளாக்கப்படுகின்றார் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அவரை முதலில் விசாரைணை செய்தவேளை சாலின் தனது சட்டத்தரணியை கொண்டுவருவதற்கு அனுமதிக்கப்படவில்லை அந்த விசாரணை தொடர்ச்சியான அச்சுறுத்தல்களில் ஓன்றாக காணப்பட்டது எனவும் எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
சாலினை விசாரணை செய்தவர்கள் இதுவே இரண்டு வருடத்திற்கு முன்பாகயிருந்தால் நாங்கள் இப்படி விசாரணை செய்திருக்கமாட்டோம் , தலைகீழாக கட்டி தூக்கிய பின்னர் காணாமல்போகச்செய்திருப்போம்  என தெரிவித்தனர் என அச்சுறுத்தினர் என  எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் அவர் தொடர்ச்சியாக துன்புறுத்தல்களிற்கும் அவமதிப்பிற்கும் உள்ளாகி வருகின்றார், இந்த மாதம் இந்த நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன, எனகுறிப்பிட்டுள்ள எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு இந்த மாதம் அவருடைய சகோதரர் ஜெல்சின் உட்பட உறவினர்களும் நண்பர்களும் டீஐடியினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
செய்தியறிக்கையிடலின் தரத்திற்காகவும் மனித உரிமை மீறல்கள் குறித்து செய்திகளை வெளியிடுவதற்காகவும் சர்வசேத அளவில் மதிக்கப்படும் பத்திரிகையாளர் துன்புறுத்தப்படுவதை உடனடியாக முடிவிற்கு கொண்டுவருமாறு இலங்கை அரசாங்கத்தை எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பின் ஆசியா பசுவிக்கிற்கான தலைவர் டானியல் பாஸ்டர்ட் கேட்டுக்கொண்டுள்ளார்.
உதயராசா சாலினை மௌனமாக்குவதை நோக்கமாக கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த அச்சுறுத்தல்கள் இலங்கையில் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தல்களை எதிர்கொண்ட கடந்த காலங்களை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி பிரதமராக பதவியேற்றார் மஹிந்த

26/10/2018 முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் பிரதமராக சத்தியப் பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.
குறித்த இந்த சத்தியப் பிரமாணத்தை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ‍முன்னிலையிலேயே மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 


பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியுள்ளேன் - ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

26/10/2018 பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
தமக்கு இருக்கும் அதிகாரத்தினை அடிப்படையாகக் கொண்டே பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவித்தால் கடிதத்தை பிரதமர் ரணிலுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
இன்று இரவு பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதையடுத்து ஜனாதிபதி மேற்படி அறிவித்தலை பிரதமர் ரணிலுக்கு அறிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி மைத்திரியின் அடுத்த அதிரடி உத்தரவு

26/10/2018 அனைத்து  அரச ஸ்தாபனங்களிற்கும் இராணுவ பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளதை தொடர்ந்து உருவாகியுள்ள குழப்பநிலைக்கு மத்தியில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 


மஹிந்தவே பிரதமர் : அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவிப்பு

27/10/2018 நாட்டின் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை அப் பதவியில் இருந்து நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்துள்ளதாக அரசாங்கம் வர்த்தமானி மூலம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 

அரசமைப்பை பின்பற்றுங்கள்- அமெரிக்கா வேண்டுகோள்

27/10/2018 இலங்கையின் அனைத்து தரப்பினரும் நாட்டின் அரசமைப்பை பின்பற்றவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் மத்திய தென்னாசியாவிற்கான பணியகம் இந்த  வேண்டுகோளை விடுத்துள்ளது.
இலங்கையில் அனைத்து தரப்பினரும் நாட்டின் அரசமைப்பை பின்பற்றி செயற்படவேண்டும், என தெரிவித்துள்ள வன்முறைகளை தவிர்க்குமாறும் உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் சீர்திருத்தம்,பொறுப்புக்கூறல் நீதி நல்லிணக்கத்திற்கான ஜெனீவா உறுதிமொழிகளை பின்பற்றவேண்டும் எனவும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
நன்றி வீரகேசரிசிறிசேனவின் நடவடிக்கைக்கு காரணம் என்ன? இந்து நாளிதழ் தகவல்

27/10/2018 ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கு சிறிசேன தீர்மானித்தமைக்கு மூன்று சம்பவங்கள் காரணம் என இந்தியாவின் இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றும் மறுப்பொன்றும் செய்தியாளர் மாநாடொன்றுமே சிறிசேன இந்த முடிவை எடுப்பதற்கு காரணம் என முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இந்து நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளதாவது
தேசிய அரசாங்கத்தின் முடிவு ஒருவார காலத்திற்கு முன்னரே நிச்சயமாகி விட்டது என சிரேஸ்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் புதுடில்லியிலிருந்து ரணில்விக்கிரமசிங்க வெளியிட்ட கடுமையான அறிக்கையே இறுதி தருணங்களை தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட அறிக்கை ஜனாதிபதியை இலக்காக கொண்டிருந்தது,இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்கள் தாமதமாவதற்கு ஜனாதிபதியே காரணம் என நேரடியாக குற்றம்சாட்டியது என கொழும்பை தளமாக கொண்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமர் அந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர்  ஜனாதிபதி அலுவலகத்துடன் கலந்தாலேசனை மேற்கொள்ளவில்லை.
அந்த அறிக்கை புதுடில்லியை கூட ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதன் பின்னர் வியாழக்கிழமை இலங்கையின் அரசமைப்பு பேரவை உச்சநீதிமன்றம் மற்றும் மேல்நீதிமன்றத்திற்கான சிறிசேனவின் இரு நியமனங்களை நிராகரித்திருந்தது.
கொலை சதி
வெள்ளிக்கிழமை இலங்கை பொலிஸார் ஜனாதிபதி கொலை சதி முயற்சி குறித்து விசேட செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினர்.
குறிப்பிட்ட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவி;த்த பொலிஸ் பேச்சாளர் நாமல் குமார என்ற நபரி;ன் தொலைபேசி உரையாடலில் கொலை சதி குறித்த எந்த தகவலும் இல்லை என தெரிவித்தார்.
பொலிஸாரின் இந்த கருத்து  இலங்கை ஜனாதிபதியின் உயிருக்கு எந்த வித ஆபத்துமில்லை என்பது போல காணப்பட்டது.
இந்த சம்பவங்கள் அனைத்தினதும் ஒட்டுமொத்த விளைவாகவே சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கினார் என கொழும்பின் முக்கிய அரசியல் வட்டாரத்தை சேர்ந்த  ஒருவர் தெரிவித்தார் என இந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 


இலங்கை நிலவரம் குறித்து பல மணி நேர மௌனத்தின் பின் இந்தியா கருத்து

28/10/2018 இலங்கையில் ஜனநாயக விழுமியங்கள் மதிக்கப்படவேண்டும் என இந்தியா கருத்து வெளியிட்டுள்ளது.
இலங்கையில் திடீர் அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று பல மணிநேரத்தின் பின்னர் இலங்கை நிலவரம் குறித்து  இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரவீஸ் குமார் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தியா இலங்கையில் நடைபெறும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக நாடு என்ற அடிப்படையிலும் நெருங்கிய அயல்நாடு என்ற அடிப்படையிலும் இலங்கையில் ஜனநாயக விழுமியங்களும் அரசமைப்பு நடைமுறையும் பின்பற்றப்படும் என எதிர்பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களிற்கு எங்களது அபிவிருத்தி உதவிகளை தொடர்ந்தும் வழங்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்   நன்றி வீரகேசரி தனது உயிராபத்து குறித்து உணர்வுபூர்வமாக கருத்துரைத்தாராம் ஜனாதிபதி சம்பந்தன் தெரிவிப்பு 

28/10/2018 தனக்கு ஏற்படுத்தப்படவிருந்த உயிராபத்து குறித்து உணர்வு பூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்துரைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தாம் முன்வைத்த விடயங்கள் குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் உறுதியான தீர்மானத்தினை வெளிப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5 மணியளவில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது தேசியப் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை முழமையாக நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களில் கூட்டமைப்புக் கொண்டுள்ள அதீத கரிசனை தொடர்பில் சம்பந்தனால் எடுத்துக் கூறப்பட்டதோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அது தொடர்பில் கூட்டான நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அதனையடுத்து தமக்கு உறுதியான உத்தரவாதத்தினை வழங்க வேண்டும் என்று சம்பந்தன் கோரியதோடு தற்போதைக்கு தாம் எவ்விதமான இறுதியான நிலைப்பாட்டினை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து திடீரென மஹிந்தராஜபக்ஷவுடன் கைகோர்த்தமைக்கான காரணம் தொடர்பில் சம்பந்தன் வினாக்களை தொடுத்தபோது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு ஏற்படவிருந்த உயிராபத்து குறித்து மிகவும் உணர்வு பூர்வமாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாகவும் அதற்கான சாட்சியங்கள் காணப்படுவதாகவும் ஜனாதிபதி கூறியதாக சம்பந்தன் தெரிவித்தார். 
மேலும் ஜனாதிபதியுடன் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதென்றும் அதன்போது தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  நன்றி வீரகேசரி 


No comments: