தமிழோடு வாழ்வார் ந.முத்துசாமி

.
நம் காலத்தின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான ந.முத்துசாமி விடைபெற்றுக்கொண்டார். சிறுகதை, நாடகம் என்று இரு தளங்களில், பெரிய சாதனைகள் நிகழ்த்தியவர் பெரிய தொடர்ச்சியை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.
தமிழின் முன்னோடிச் சிற்றிதழான ‘எழுத்து’ முன்னெடுத்த புதுக்கவிதை இயக்கத்தால் உத்வேகம் பெற்றவர் முத்துசாமி. கவிதை மீது பெரிய காதல் இருந்தபோதும் சிறுகதையே அவரது களமானது. ‘யார் துணை’ சிறுகதையின் மூலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவரை அவருடைய முதல் சிறுகதைத் தொகுதியான ‘நீர்மை’ பெரிய உயரத்துக்குக் கொண்டுசென்றது.
வெகு சீக்கிரம் நாடக உலகம் அவரை இழுத்தது. சி.மணியை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘நடை’ சிறுபத்திரிகையில் முதல் நாடகமான ‘காலம் காலமாக’ பிரசுரமானது. அபத்த நாடக வகைமையை வெளிப்படுத்திய அந்த நாடகம், முத்துசாமிக்கு நாடக உலகில் ஒரு தனித்த இடத்தை உருவாக்கியது. காவிரிப் படுகை கிராமங்களின் வாழ்வையும் மரபையும் நன்கு உள்வாங்கி வளர்ந்தவரான முத்துசாமி, தெருக்கூத்தை நவீன நாடக வடிவத்துக்குள் கொண்டுவந்தார். தமிழகத்தின் பாரம்பரிய நிகழ்த்துக் கலைகளின் பண்பையும் நவீன நாடகத்தின் பண்பையும் அரங்கத்தில் பிணைத்தார். தமிழ் நாடக அரங்கை அடுத்த தளத்துக்குக் கொண்டுசெல்லும் கனவின் ஒரு பகுதியாக 1977-ல் அவர் உருவாக்கிய ‘கூத்துப்பட்டறை’ அமைப்பு நாடகத் தயாரிப்புகளில் அவருக்கு என்று தனி இடத்தை உருவாக்கியது. பின்னாளில் தமிழ் சினிமாவுக்குத் தேர்ந்த நடிகர்களை வழங்கும் முகவரிகளில் ஒன்றாகவும் ‘கூத்துப்பட்டறை’ மாறியது.
பாரம்பரிய நிகழ்த்துக் கலைகள் இன்று தமிழகத்தில் பெற்றிருக்கும் மதிப்புக்கு முத்துசாமி வழங்கிய பங்களிப்பு பெரியது. தெருக்கூத்தைச் செவ்வியல் நிகழ்த்துக் கலையாக உலக அளவில் நிலைநிறுத்தியவர். தெருக்கூத்து தொடர்பாக அவர் எழுதிய ‘அன்று பூட்டிய வண்டி’ நூல் முக்கியமானது. அவரது ‘அப்பாவும் பிள்ளையும்’, ‘படுகளம்’, ‘நற்றுணையப்பன் நாடகங்கள்’ சர்வதேச அளவில் புகழ்பெற்றவை. முப்பதாண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் 2004-ல் சிறுகதைக்குள் வந்த முத்துசாமியின் கதைகளில் அவரது நாடக அனுபவங்களும் உள்ளிறங்கின - சிறுகதையின் உள்ளமைப்பை அவை மேலும் செழுமையாக்கின.
சமூக நீதி, சமத்துவ நடைமுறைகளில் மிகுந்த அக்கறை கொண்டவர் முத்துசாமி. தனது பால்யத்தில் பெரியார், அண்ணாவால் ஈர்க்கப்பட்டவர். சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டவர். தன்னுடைய சாத்தியங்களுக்கு எட்டிய வகையில் எல்லாம் சாதியத்துக்கு எதிராக உறுதியாகச் செயல்பட்டவர். தன்னுடைய வீட்டை எல்லோருக்குமானதாக எப்போதும் திறந்து வைத்திருந்தவர். சிறுகதையாசிரியர், நவீன நாடக ஆசிரியர், பாரம்பரிய நிகழ்த்துக் கலைகளைப் புதுப்பித்தவர் என்று தமிழுக்கு முத்துசாமி கொடுத்த கொடைகள் அதிகம். தமிழோடு முத்துசாமி வாழ்வார்.

No comments: