பறக்கும் நினைவுகள் (நடைக்குறிப்பு)- யோகன்


கொஞ்ச நாட்களாக நடை பாதையின் இரு கரையிலுமுள்ள புற்களின் அடியிலெல்லாம் ஒட்டிக்கொண்டிருக்கும் வெண் பஞ்சுக் குவியல்களைக்  காண்கிறேன்.   பொப்லார் மரங்களின் காய்கள் வெடித்ததில் பறக்கும் பஞ்சுக் கூட்டங்கள்  காற்றில் பறந்து வந்து மண்ணில் விழுந்து பனிக்கட்டி மழை பெய்ததைப்  போல கரையெங்கும் படிந்திருந்தன. கொத்துக்  கொத்தாகக் காய்க்கும் இந்த மரங்களின் சிறிய காய்கள் வெடித்து பஞ்சு கொஞ்ச நாள் மரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த பின் பறக்கத் தொடங்கி காற்றில் எங்கும் மிதக்கின்றன.  காரில் போகும்போது  பூச்சிகள் வந்து மோதுவதைப் போல அவை வந்து மோதுகின்றன.
இங்கே பொப்லார் பஞ்சு பறக்கும் காலம் வந்தால் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள்  பரீடசைக்குத் தயாராகும் ஒக்ரொபர், நவம்பர் காலம் என்று அர்த்தம்.  அதே போல அன்சாக் நாள் வந்தால் கன்பெராவில்  வீட்டுக்கு சூடாக்கிகளை போட்டு விட வேண்டும் என்று குளிர் காலத்தை  நினைவு படுத்துவதற்காக சொல்லும் ஒரு வழக்கமும் இங்கே உண்டு.
நினைவு வெளியில் பின்னோக்கிப்  பறந்தால் உடனே நினைவுக்கு வருவது ஊரில் குறிஞ்சாவின் காய்கள் வெடிக்கும் போது பறக்கும் பஞ்சுகள்தான்.  நாகத்தின் தலை போல அந்தக் காய்கள், காய்ந்தால் கிழவனின் தோல் போல காயின் வெளிப்புறம் சுருங்கி விடும்.  அது வெடித்து இருபாதியாகி பிளந்த பின் பாரசூட் மாதிரி விதை கீழே தொங்க பஞ்சு விரிந்து ஒரு அரை வட்டத்  துடைப்பம் போல பறக்க அதன் பின்னால் ஓடுவோம் அதைப்  பிடிக்க.

நான் ஊரில் படித்த பாடசாலையில் நெடிதுயர்ந்து நிழல் தரும்  மகோகனி மரங்கள் பல நின்றன. மண்ணிறமான அதன் காய்கள் தடித்த கடினமான  சுவரொன்றைக் கொண்டிருக்கும். காய் மரத்திலேயே  வெடித்து  உள்ளிருக்கும் அதன் செட்டை  கொண்ட விதைகள்  காற்றில் சுழன்று  சுழன்று  பறந்து செல்லும் அழகைப்  பார்த்திருப்போம்.
இங்கே வந்த பின் அதிகமாக எல்லா இடங்களிலும்  கண்டது சிறிய மஞ்சள்  பூ  டான்டிலியன். அது  பிறகு காய்ந்து   சிறிய பஞ்சுப் பந்து போலாகும்.  நிலத்திலிருந்து அதை பிடுங்கி பிள்ளைகள் வாயால் ஊதி விடுவது ஒரு விளையாட்டு.  ஒரே மூச்சில் ஊதி முழுப் பஞ்சையும் பறக்கப்  பண்ண வேண்டும்.  வளர்ந்தோர் குறிப்பாக காதலர்   மனதில் ஒன்றை நினைத்துக் கொண்டே ஒரே மூச்சில் ஊதிவிட்டால் நினைத்தது நடக்கும் என்றும் இங்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது.
-->
இங்கே பூக்கள் பூக்கும் காலத்தில் காற்றில் பறக்கும்   மரந்தங்களினால் வரும்  ஹே பீவர் காய்ச்சல் , தொய்வு, கண்களில் ஏற்படும் அரிப்பு  போன்ற ஒவ்வாமைகளும் (Alergies) பெருமளவில் மக்களை பாதிக்கும் காலமும் இதுதான். நீண்ட ஒரு கோடையை எதிர்பார்த்திருக்கிறது அவுஸ்திரேலியா.




No comments: