பிய்த்தெறிவோம் வாருங்கள் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.... மெல்பேண் ... அவுஸ்திரேலியா



           போதை தலைக்கேறி
           புத்தி  தடுமாறி
           பாதைதனை மறந்து
           பரிதவிக்கும் வேளையிலே
           காதும் அடைத்துவிடும்
           கண்களுமே கட்டிவிடும்
           பேதலித்த மனத்தோடு
           பெருமரமாய் வீழ்ந்திடுவர்
          வேர்த்து விறுவிறுக்க
           வெயிலெல்லாம் திரிந்தலைந்து
           பார்த்து உழைத்தபணம்
           பாதியிலிலே போய்விடுமே
           சோற்றுக்குக் காத்திருப்போர்
           சுகமின்றி படுத்திருப்போர்
           வீட்டிலே காத்திருக்க
           வீதியிலே குடித்துநிற்பார்
           நடுவீதி நாயகராய்
           நாளுமே நிற்பார்கள்
           தெருநாய்கள் கண்டுவிடின்
           தீராத கோபம்கோள்ளும்
           வெறிதலையில் ஏறிவிடின்
           நெறியெல்லாம் கெட்டுவிடும்
           தறிகெட்டுப் போயிடுவார்
           தம்மையே இழந்திடுவார்
           குடிபோதை வந்துவிடின்
          குணமெல்லாம் கெட்டுவிடும்
           மனைகூட அவனுக்கு
           மாறாகத் தெரிந்துவிடும்
           வாய்மையும் ஓடிவிடும்
           வல்லமையும் ஒழிந்துவிடும்
           பெய்கொண்ட மனமங்கே
           பேருருவம் கொண்டுவிடும்
           சிவமாக இருந்தவனோ
           சவமாகப் போயிடுவான்
           உவமானம் சொல்வதென்றால்
           உயிரற்ற பிணம்தானே
           மதியிழந்து கதியிழந்து
           மானமும் இழந்துநிற்கும்
           குடிபோதை நம்வாழ்வில்
           கெடுதியே தந்துவிடும்
           நாகரிகம் என்றெண்ணி
           நன்றாக குடித்திடுவார்
           நாட்டிலே உள்ளவரை
           நாகரிகம் என்னாகும்
          ஆதலால் குடிவிடுவோம்
          அனைவர்க்கும் வாழ்வுவரும்
          பேதலிக்கும் மனக்குரங்கை
           பிய்த்தெறிவோம் வாருங்கள் 


    image1.JPG








No comments: