பறை முழங்க… பிராமணர் ஓத… போய் வா முத்துசாமி!

.

இப்படியோர் இறுதி யாத்திரைச் சிறப்பு இதுபோல் அதியமானுக்குக் கிட்டியிருக்கலாம். முத்துசாமிக்குக் கிட்டிய இந்த இறுதி யாத்திரைச் சிறப்பு, இப்படி இனி எவர்க்கும் கிட்டுமா என்பதும் ஐயம்தான். அவர் அந்தப் ‘புஞ்சை’ பிறந்த, அக்காவிரிச் சீறூரை எழுதியவராக இன்று தோன்றவில்லை. அவ்வூர் தாண்டி மற்று எவ்வூர்ப் புழுதியும் எனதே என்று புரண்டு உருவானதோர் ஊர்நாட்டுத் தெய்வமாக ஆகியிருந்தார்.
வயது 83. கல்யாணச் சாவு. அக்னிக்கு மேற்காக, தலை தெற்காக, ந.முத்துசாமி கிடத்தப்பட்டுக் கிடக்கிறார். அந்தணர் ஓதிவிட்டார். பறையடிப்பவர் அழைக்கிறார், “வாய்க்கரிசி போடுறவங்க வாங்க!”
“நாமகூடப் போகலாமா?” என் அருகில் ஒருவர் வினவுகிறார். அந்தப் பக்கம் இருந்தவர் சொல்கிறார். “அவர் அப்படித்தானே வாழ்ந்தார்? யார் வேண்டுமானாலும் போகலாம்.”
ஒரு நெடிய இளைஞன் அவருக்கு வாய்க்கரிசி போட்ட அக்கணம் தானே உடைந்து கதறுகிறான். அதுவரை சாந்தமாக இருந்த கூட்டத்தின் அத்தனை முகங்களிலும் அழுகைக் கோணல். என் தந்தைக்கு வாய்க்கரிசி போடும் வாய்ப்பு வாய்க்கவில்லை எனக்கு. இன்று, ந.முத்துசாமி என் தந்தையானார். “முத்துசாமி அய்யா... முத்துசாமி அய்யா!” என்று முழக்கம் எழ, அய்யா எரியிடத்துக்கு எடுக்கப்பட்டார்.
நான் சென்னைக்கு வந்த புதிதில், எதிர்ப்பக்கம் ஒரு கூட்டம் பறையடித்துத் துள்ளாட்டம் போட்டுக்கொண்டு போனது. “அது என்ன?” என்று என் பக்கத்தில் நின்றவரைக் கேட்டேன். “ஒரு புள்ள செத்துடுச்சுப்பா... எடுத்துட்டுப் போறாங்க.”
எங்க ஊர்ப் பக்கம் இப்படிக் கிடையாது என்பதால், “இதோடு முடிந்துபோகிற வாழ்வல்ல இது” என்று பறையடித்துத் துள்ளியாடிக் கொண்டாடுகிற இந்தச் சடங்கு அன்று எனக்குப் புரியவில்லை. முத்துசாமி இறுதி ஊர்வலத்தில் புரிந்தது!
- ராஜ சுந்தரராஜன், கவிஞர்.
nantri: tamil.thehindu.com

No comments: