தமிழ் சினிமா - கடைக்குட்டி சிங்கம் திரை விமர்சனம்

கார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன ராசி என்று தெரியவில்லை. எப்போதும் க்ளிக் ஆகிவிடும். பருத்திவீரனில் தொடங்கி, கொம்பனில் கிராமத்து கதையில் ஒரு படி மேலே சென்றார், தற்போது ஹாட்ரிக் கிராமத்து கதையாக கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார், கார்த்தி ஹாட்ரிக் அடித்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

ஊரிலேயே எல்லோரும் மதிக்கும் பெரிய இடத்து குடும்பத்தலைவராக சத்யராஜ். இவருக்கு 4 பெண் குழந்தைகள் வரிசையாக பிறக்கின்றது.

ஆனால், நமக்கு ஒரு ஆண் பிள்ளையாவது வேண்டும் என தவமாய் தவமிருக்க, கார்த்தி பிறக்கின்றார்.(தனக்கு ஏன் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்கு சத்யராஜ் விரும்புவதற்கு ஒரு காரணம் வைக்கப்பட்டுள்ளது).
சத்யராஜ் குடும்பம் தான் அந்த ஊரே என்பது போல் அவ்வளவு பெரிய குடும்பம், அவருக்கு ஒரே ஒரு ஆசை தான், தன் குடும்பத்தினரை ஒன்றாக நிற்க வைத்து ஒரு குரூப் போட்டோ எடுக்க வேண்டும் என்பது தான்.
இந்த நேரத்தில் கார்த்தி தன் சொந்தத்தில் திருமணம் செய்யாமல், சாயிஷாவை காதலிக்க, இதனால் குடும்பத்தில் பிரச்சனை வெடிக்க, இவர்களை எல்லாம் கார்த்தி எப்படி சமாதானம் செய்து தன் விருப்பத்தை நிறைவேற்றினார் என்பதை எமோஷ்னல் செண்டிமெண்ட் கலந்து சுவாரசியமாக கொடுத்துள்ளார்.

படத்தை பற்றிய அலசல்

கார்த்தி உண்மையாகவே கிராமத்து படம் என்றால் குஷியாகிவிடுவார் போல. பருத்திவீரனில் கூட அழுக்கு லுங்கி, சட்டை அணிந்திருப்பார், கொம்பனில் முரட்டுத்தனமாக கிராமத்து இளைஞன். ஆனால், இதில் சட்டை காலர் கூட அழுக்கு ஆகாமல் செம்ம பந்தாவாக வேஷ்டி சட்டையில் பட்டையை கிளப்புகின்றார். அதிலும் விவசாயிகளுக்காக அவர் கொடுக்கும் குரல் இனி பலரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் தான்.
அதிலும் ஒரு ஸ்டேஜில் கார்த்தி விவசாயிகளின் பெருமையை பேசுகின்றார், அதிலும் பெற்றோர்கள் பிள்ளைகளை இன்ஜினியர் ஆக்க நினைக்கின்றனர், ஏன் நமக்கு சோறு போடும் விவசாயி ஆக்க நினைக்க மறுக்கின்றனர் என அவர் பேசும் காட்சிகள் திரையரங்கமே அதிர்கின்றது.
இவரை தாண்டி சத்யராஜ், பானுப்ரியா, மௌனிகா, விஜி, யுவராணி, சூரி, சரவணன், சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு ஒரு நட்சத்திர பட்டாளத்தையே படத்தில் கொண்டு வந்து பாண்டிராஜ் அசத்திவிட்டார். அதிலும் இத்தனை பேர் இருக்கிறார்கள், மனதில் நிற்பார்களா என்று பார்த்தால் அனைவருமே ஒரு சில இடத்தில் ஸ்கோர் செய்கிறார்கள். சாயிஷா மட்டும் படத்தில் இருந்து விலகியே நிற்கின்றார், பசங்க படத்தில் பார்த்த ஷோபி கண்ணு இதில் மிஸ்ஸிங் பாண்டிராஜ் சார்.
சூரி காமெடி ட்ரைலரில் பெரிதாக எடுப்படவில்லை என்றாலும், படத்தில் அவர் வரும் இடங்களில் எல்லாம் ஒன் லைன் கவுண்டரில் விசில் பறக்க வைக்கின்றார். அதிலும் தன் பாட்டியிடம் மெதுவாக விசிறுங்க குளிருது என நக்கல் அடிக்கும் காட்சியெல்லாம் சிரிப்பு சத்தம் அதிர்கின்றது.
படம் முழுவதும் நட்சத்திரங்கள், குடும்ப உறவுகள், பாசம், நேசம், பிரச்சனை, தீர்வு என நாம் பார்த்து பழகி போன டெம்ப்ளேட், வி.சேகர் படத்தை கொஞ்சம் ஆக்‌ஷனுடன் பார்த்தால் எப்படியிருக்கும், அதே போல் தான் இந்த கடைக்குட்டி சிங்கம், என்ன ஆக்‌ஷன் காட்சிகளில் கார்த்தி அடித்து பறக்கவிடுவது கொஞ்சம் ஓவராக தெரிந்தது. அதிலும் வில்லன் கதாபாத்திரம் அத்தனை வலுவானதாக இல்லை.
வேல்ராஜின் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகை நம் கண்முன் கொண்டு வந்துள்ளனர். அதிலும் அந்த ரேக்ளா ரேஸ் செம்ம விருந்து, டி.இமானும் கிராமத்து படம் என்பதால் குஷியாக தன்னிடம் இருக்கும் டெம்ப்ளேட் கிராமத்து டியூனை மக்களுக்கு பிடிக்கும்படி எப்படியோ கொடுத்துவிட்டார்.

க்ளாப்ஸ்

நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம்.
கார்த்தி-சூரி காட்சிகள் படத்தில் பல இடங்களில் நன்றாக ஒர்க்-அவுட் ஆகியுள்ளது.
பெண்களின் கதாபாத்திரங்களுக்கு பெயர் வைத்த விதம், இப்படியெல்லாம் கூட பெயர் வைக்கலாமா என்று ஆச்சரியப்படுத்தியுள்ளார் பாண்டிராஜ்
ரேக்ளா ரேஸ் காட்சிகள், பல பேர் நேரில் பார்த்திருக்க மாட்டார்கள், அப்படியே கண்முன் கொண்டு வந்துள்ளனர்.
வசனம் மிகவும் ரசிக்க வைக்கின்றது, குறிப்பாக சொத்து சேர்ப்பதை விட சொந்தங்களை சேருங்கள் எமோஷனலாகவும் சரி, தயவு செய்து சொந்தத்தில் மட்டும் பொண்ணு எடுக்காதீங்க என்ற காமெடி வசனங்களும் சரி, ரசிக்க வைக்கின்றது.

பல்ப்ஸ்

வில்லன் கதாபாத்திரம் படத்தில் வலுவானதாக இல்லை, ஏதோ 10 பேரை அவ்வப்போது அனுப்புகின்றார், அவர்களையும் கார்த்தி அடித்து அனுப்புகின்றார், அந்த காட்சிகள் படத்தில் செட் ஆகவில்லை.
இரண்டாம் பாதியில் ஒரே பிரச்சனையை திருப்பி திருப்பி பேசும்படி காட்டியது.
மொத்தத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை சிறப்பாகவும் எடுத்து பாண்டிராஜ், கார்த்திக்கு ஹாட்ரிக் கிராமத்து வெற்றியை கொடுத்துவிட்டார்.
நன்றி CineUlagamNo comments: