கண் திருஷ்டியும் அறிவியலும்! – 3 ச.நாகராஜன்


 

.
திருஷ்டியைப் பற்றி அறிவியல் முத்தாய்ப்பாக என்ன சொல்கிறது என்பதைக் காண்பதற்கு முன்னர் தமிழர் தம் பழக்கங்களைத் தெரிந்து கொள்வோம்.

கண்ணுக்கு அழகூட்டுவதற்காக மட்டும் தமிழ் மங்கையர் மையைத் தீட்டிக் கொள்ளவில்லை. தன்னைத் தீய பார்வையிலிருந்து காத்துக் கொள்வதற்காகவும் மையைத் தீட்டிக் கொள்கின்றனர். குழந்தைகளுக்கு மை தீட்டும் தாய்மார் மறந்து விடாமல் அதே மையினாலேயே குழந்தையின் கன்னத்தில் ஒரு திருஷ்டிப் பொட்டை வைக்க மறக்கமாட்டார்கள்.
சில பொல்லாத கண்களிலிருந்து பாதுகாப்பதற்காகத் தான் இந்த திருஷ்டிப் பொட்டு.

மணமக்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னர் அவர்களை வாசலிலேயே நிறுத்தி வைத்து வீட்டில் அவர்களுக்கு மிகவும் வேண்டியவர்கள், வயதானவர்கள் கற்பூரத்தை ஏற்றி அவர்களைச் சுற்றி திருஷ்டி கழிப்பது பழக்கம்.

தொன்று தொட்டு இருந்து வரும் இந்த தமிழர்களின் பழக்கம் பல இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது.
எடுத்துக் காட்டாக ஒன்றே ஒன்றை மட்டும், சமீப கால இலக்கியத்திலிருந்து இங்கு சுட்டிக் காட்டலாம்.
திருஅருட்பாவை அருளிய அருட்பிரகாச வள்ளலாரின் திருஅருட்பா, ஆறாம் திருமுறையில் 4225ஆம் பாடல் இந்த கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழிக்கும் பழக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது.



“கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால்
கண்ணெச்சில் கழிக்கஎன்றேன் அதனாலோ அன்றி
எற்பூத நிலையவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்”
என்ற வரிகள் கற்பூரத்தைப் பயன்படுத்துவதைச் சுட்டிக் காட்டுவதைக் காணலாம்.

இதன் பொருள் : என் கணவராகிய சிவபிரான் என்னிடம் வந்தருளுவாராயின் அவருக்குக் கண்ணேறு (கண் திருஷ்டி) கழிக்கும் பொருட்டுக் கற்பூரம் கொண்டு வந்து வைப்பீராக என என் செவிலியரிடம் சொன்னேன். அவரது திருவடியின் கீழ்நிலை ஒளியுடைய பூத தத்துவங்களின் நிலையாகும் என்று சொன்னேன். அதனாலோ, வேறு யாது காரணத்தாலோ அவர் வந்திலர்.

இந்தியாவில் அனைத்து மாநில மக்களும் கண் திருஷ்டியைக் கழிக்க நவரத்தினங்களை அணிவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இப்படி தமிழகத்தில் மட்டுமல்ல, உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள மக்கள் திருஷ்டி கழிக்கப் பல்வேறு வழிமுறைகள், தாயத்துக்கள் மணிகள் அணிவது ஆகியவற்றைக் கடைப்பிடித்து வந்திருக்கின்றனர்; வருகின்றனர்.

கி.பி. முதல் ஆறு நூற்றாண்டுகளில் வாழ்ந்த அராபியர்கள் கல், மரம் உள்ளிட்டவற்றால் செய்த தாயத்துகளை பாதுகாப்பிற்காக அணிந்தனர்.

பழைய கால ஹீ ப்ரு, எகிப்திய நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் அணிந்த தாயத்துகளையும் அவர்கள் அணிந்தனர். ஆனால் இன்றைய நவ நாகரீக காலத்திலோ அவர்கள் ஒரு சிறிய பேப்பரில் பிரார்த்தனை மந்திரம் ஒன்றை எழுதி வைத்துக் கொள்கின்றனர். இது குர் ஆன் வசனமாக இருக்கும். இதை ஒரு வயதான ஆன்மீகப் பெரியார், தான் தேர்ந்தெடுத்த பொருள் ஒன்றில், கறுப்பு மையால் எழுதித் தருவார்.

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் தேச மை பேப்பரில் நன்கு ஆழமாகப் பதிவதால் அந்த மைக்கு மவுசு அதிகம்.
இப்படிப் பட்ட தாயத்துக்களை இடது கையிலோ அல்லது கழுத்திலோ அணிவது பாரம்பரிய பழக்கம்.

ஒவ்வொரு நாகரிக மக்களின் தாயத்துக்களை எழுதப் புகுந்தால் அது பெரிய அளவு நூலாக மலரும்.
இனி அறிவியலுக்கு வருவோம்.
உலகம் கண்ட மிகப் பெரும் விஞ்ஞானிகளுள் ஒருவர் ராபர்ட் ஓப்பன்ஹீமர். அணுகுண்டைக் கண்டு பிடித்த அவர் அணுகுண்டின் தந்தை என்று போற்றப்படுகிறார். அது வெடிப்பதை நேரில் பார்த்து மலைத்தவர்.

ஹிந்து மதத் தத்துவத்தின் பால் ஆழ்ந்த மதிப்புக் கொண்ட அவர் அணுகுண்டு வெடிப்பைப் பற்றி கீதையின் சுலோகம் ஒன்றை எடுத்துக்காட்டாகக் கூறினார்.

கண்ணபிரானின் விஸ்வரூப தரிசனத்தை கீதையின் 11வது அத்தியாயம் விளக்குகிறது. அதில் 12வது ஸ்லோகம் “திவி சூர்ய சஹஸ்ரஸ்ய” என்று கூறுகிறது. ஆயிரம் சூரியன் ஒரே சமயத்தில் உதித்தால் எப்படி இருக்குமோ அதே போல அணுகுண்டி வெடிப்பு இருந்தது என்று மலைத்துக் கூறினார் ஓப்பன்ஹீமர்.

ஹிந்து பழக்க வழக்கங்களை நன்கு ஆராய்ந்து அவற்றின் பால் பற்றுக் கொண்டவர் அவர்.
அவரது வாழ்க்கை வரலாற்றை ஆப்ரஹாம் பயஸ் என்பவர் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹீமர் என்ற புத்தகத்தில் விவரிக்கிறார்.

அதில் வரும் ஒரு செய்தி கண் திருஷ்டியைப் பற்றியது.
ராபர்ட் ஓப்பன்ஹீமர் ஹிந்துக்களின் திருஷ்டி கழிக்கும் பழக்கத்தைப் பற்றி ஆராய்ந்தார்.
அதன் முடிவில் பிரமிக்க வைக்கும் ஒரு உண்மையைக் கண்டுபிடித்தார்.
“ஹிந்துக்கள் உப்பை (கடல் உப்பு அல்லது கல் உப்பு, உப்புப் பொடி அல்ல) ஒரு சிறு பாத்திரத்தில் (பழைய கால ஆழாக்கு அல்லது படி) போட்டு இடது புறமும் வலது புறமும் தலையைச் சுற்றி திருஷ்டியைக் கழிக்கின்றனர்.
அப்போது லட்சக்கணக்கான நெகடிவ் ஐயான்கள் (Negaive Ions) அவர்கள் உடம்பை விட்டு வெளியேற்றப்படுகின்றன.”
லட்சக் கணக்கான நெகடிவ் ஐயான்கள் என்ற சொற்றொடர் குறிப்பிடத் தகுந்தது.

ஆக இப்படி உலகின் ஆகப் பெரும் விஞ்ஞானியே ஹிந்துக்களின் திருஷ்டி கழிப்பை அறிவியல் ரீதியாக ஆமோதித்துப் புகழ்கிறார்.

திருஷ்டியைப் பற்றி இவ்வளவு விவரங்களை அறிந்த நீங்கள் எல்லோரிடமும் இதைப் பற்றி அறிவியல் ரீதியாக விளக்கினால், உங்கள் வீட்டார் உங்களுக்குத் திருஷ்டி சுற்றிப் போட வேண்டி வரும்.
என்ன இருந்தாலும் கண் திருஷ்டி பொல்லாதது தானே!
nantri tamilandvedas.com

No comments: