இருப்பது பேரின்பமன்றோ ! - ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )


               பொட்டுவைத்த பூமுகத்தைத் தேடுகிறேன் 
                    புன்சிரிப்பை மறுபடியும் எண்ணுகிறேன்
image2.JPG              கட்டளகு உடலமைப்பை காணவில்லை
                     கையெல்லாம் நடுங்குவதைக் காணுகின்றேன் 
               சிரித்துநின்ற செவ்வாயை தேடுகிறேன்
                       சிவப்புநிறம் கறுப்பாகி நிற்குதங்கே
               என்றாலும் அவளேயென் இணையேயாவாள் 
                        இருக்கும்வரை அவளைத்தான் சொர்க்கமென்பேன்  ! 

               கருங்கூந்தல் அவளிடத்தில் காணவில்லை
                     கண்கூட  ஒளிமங்கி  வெகுநாளாச்சு 
               முத்துபோன்ற பல்வரிசை எங்கேபோச்சோ 
                      மூச்சுவிட  அவளிப்போ முனுகுகின்றாள் 
                சுவையாக உணவளித்த அவளின்கைகள்
                       சுவைப்பதற்கே முடியாமல் ஆகிப்போச்சு
                அவள்வாயில் ஊட்டிவிடும் ஆசைகொண்டேன்
                         அதுவேயென் வாழ்வில் பேரின்பமாச்சு  ! 

              ஓடியாடித்  திருந்தஅவள் ஓய்ந்தேவிட்டாள் 
                    உதவிக்கு வருவார்கள் யாருமில்லை
               தேடித்தேடி  நான்கண்ட  தேவியிப்போ 
                      செய்திகேட்கும் செவிப்புலனை இழந்தேவிட்டாள் 
               வாடிவிட்ட  நிலையினிலும்  வடிவாயுள்ளாள் 
                         வயிறார உண்பதற்கு இயலாதுள்ளாள்
                என்றாலும் உணவதனை ஊட்டும்போது
                        என்வாழ்வு இனிக்குதென்று எண்ணுகின்றேன் ! 


               பிள்ளைகளோ  எம்மைவிட்டுப்  பிரிந்தேவிட்டார் 
                    தொல்லைகளே  என்றுவெண்ணி  தூரவுள்ளார்
               நல்லபிள்ளை என்றேநாம் வளர்த்தேவிட்டோம்
                    நட்டத்தை எங்களுக்கே தந்தேவிட்டார் 
               அல்லல்தரும் வயோதிபத்தை அடைந்தேவிட்டோம்
                     ஆனாலும் அருகருகே இருக்கின்றோமே 
               எல்லையிலா துன்பமெமை இறுக்கிட்டாலும் 
                      இணைபிரியா இருப்பது பேரின்பமன்றோ ! 
                


                 

                
                     



No comments: